ஒருவனும் ஒருவளும்
அலையும் கடலுக்கு
தெரியாதிருக்கிறது தான்
அலைவது குறித்து.
மௌனப்பூச்சிகள்
என் பெயரில்
உன் பெயரை
ஒட்டிக்கொண்டு பறக்கிறது
கடலலையை விரட்டும்
காற்றை தன் குரலாக்கி.
நீ பேசுவதெல்லாம்
நீயே கேட்கிறாய்
நான் கேட்பதாக நினைக்கும்
நினைவின் கனவிலிருந்து.
நானோ...
நான் எங்கிருக்கிறேன்
என்பதறியாது போனதும்
காற்றுக்குள் தவிக்கும்
கடல் வாசனையின்
காலடித்தடம் தேடி
உன் கனவில் புகுந்து
என் கனவை
தனியே காண்கிறேன்.
என்னிடம் நான் பேச
எதுவுமின்றி போகிறது.
நாம் கடப்பது
கடல் அல்ல காலம்
என சொல்லிச்சொல்லி
கரை எங்கும் புரளும்
துயரமான இக்கடல்.
கடல்மேனியில் ஒட்டாத
மண்ணெல்லாம் திரண்டு
கல்லறையாகி விட்டது
நம் காலத்துக்கு.
பேசலாம்.
எனினும்...
நாம் இனி
எதை பேசினாலும்
யாரை பேசினாலும்
அது நம்மை பற்றியா
என துடிப்பில் அஞ்சும்
மனதை மட்டும்
எந்த கடலில் ஒளிக்க?
____________________________________________