காண்டம்

காண்டம்.

உனது மூத்தவன், அவன் தான் விநோதன், இன்று இங்க விளையாட்டுப் போட்டி நாளைக்கு அங்க போட்டி என்று ஒன்றும் சாப்பிடாமலே காலை காலை ஊர்சுற்ற கிளம்பி விடுவான். மற்றவனோ! அவருக்கு கண்ணதாசன் என்ற நினைப்பு. அந்தப் போட்டிக்கு கவிதை எழுதுகிறேன், இந்தப் போட்டிக்கு இன்று தான் கடைசி நாள், என்று சொல்லி நாலு வேளையும் சாப்பிட்டு ஏதாவது வாயில் போட்டு கொறித்தபடி 24 மணித்தியாலமும் வீட்டுக்கு உள்ளேயே அடைந்து கிடக்கிறான். அவனை கொஞ்ச நேரம் கண்ணாடி முன் நிற்கச் சொல். அப்ப ஆவது அவனுக்கு அவனுடைய உடம்பைப் பற்றி அக்கறை வருகுதோ என்று பார். இப்படி எல்லாம் காலையிலேயே காண்டீபன் தன் பிள்ளைகளை வாய்விட்டு நொந்து கொள்வார். ஆனால் இன்றோ, இதெல்லாம் உன் அப்பனிடம் இருந்து வந்தது என்று அவரையும் அறியாமலே அடுக்கி விட்டார்.
வழமையாக தன் பிள்ளைகளைப்பற்றி
காண்டீபன் பேசிக் கேட்டு, அவர் உண்மையைத்தானே சொல்கிறார் என்று நினைத்து தன் கண்களில் கசியும் கண்ணீரை யாரும் பார்க்க முதல் சேலை தலைப்பபால் துடைத்து விட்டபடி மதிய நேரச்
சமையல் வேலையில் இறங்கிவிடுவாள் பார்வதி. இன்று அவளால் அப்படி இருக்க முடியவில்லை. எதற்கு இவர் என் அப்பாவை இதற்குள் இழுக்க வேண்டும் என்று எண்ணி "உங்களைத்தான்" என்று அழைத்தபடியே வந்தவள் முன் காண்டீபன் இல்லை. அவர் வேலைக்கு கிளம்பிப் போய்விட்டார்.
அவளுக்கோ கோபம் உச்சத் தலையில் ஏறி அமர்ந்து கொண்டது. மறுநிமிடம், மதியம் சாப்பிட வருவார்
தானே அப்ப கேட்கிறேன்
அவரை என்றவள், மீண்டும் தன் வேலையை கவனிக்க
ஆரம்பித்தாள்.

மதியம் 1 தாண்டி 2 ஆச்சு.
காண்டீபன் சாப்பிட வீடு வரவில்லை. ஏதோ என்னவோ என்று அவருடைய அலுவலகத்துக்கு போன் பண்ணினாள். காண்டீபன் சார் இன்னும் வேலைக்கு வரவில்லை என்று பதில் வந்தது. அவளுடைய இருதயம் பதை பதைக்க
தொடங்கிவிட்டது. நேரம் 3 மணியிருக்கும். அவருடைய கார் சத்தம் கேட்டது. ஓடிப்போய் வாசலில் நின்றாள். முன்புறத்தில் மூத்தவன் பின்புறத்தில்
ஒரு இளம் பெண். காண்டீபன் அவளிடம் நீ இருவரையும் வீட்டுக்குள் அழைத்து செல் நான் காரை பார்க் பண்ணிவிட்டு வருகிறேன் என்றவர் சில நிமிடம் கழித்து சத்தம் போட்டபடியே வீட்டுக்குள் நுழைந்தார்.

காலையில் வேலைக்கு கிளம்பியபோது இருந்த அதே கடுகடுப்பு அவன் முகத்தில் இருப்பதை அவதானித்தாள். நீங்களாவது இங்கு என்னதான் நடக்கிறது என்று சொல்லுங்களேன். இதுகள் இரண்டும் வாயே திறக்காமல் பிடித்து வைத்த பிள்ளையார் மாதிரி நிற்குதுகள். எனக்கு தலையே சுற்றுகிறது என்றாள். இதைக் கேட்டதும் காண்டீபன் கோபம் தணிந்து பதற்றப் படாதே
நீ முதல் உட்காரு. உனக்கு ஏதும் ஆச்சு என்றால் என்னால் தாங்கமுடியாது
என்று கூறி அவளுடைய கையைப் பிடித்து பார்வதியை உட்கார வைத்துவிட்டு அவள் அருகே அவரும் உட்கார்ந்தார். பின் சிரித்தபடியே டேய் விநோத் நீயும் அப்படி உட்காரடா. அம்மா மலர், உனது பெயர் மலர் சரிதானே என கேட்க அவளும் அதற்க்கு ஆமாம் போட , நீயும் விநோத் அருகில் உட்காரு என்று கதையை
ஆரம்பித்தார்.

இங்கே பார் பார்வதி நடந்தது இதுதான். நான் காலையிலை அலுவலகத்திற்கு போகமுதல் எனது வேலை சம்மந்தமாக ஒருவரைப் பார்க்க போனேன். போனேனோ இல்லையோ இவர்கள் இரண்டு பேரும் சிரித்து பேசிக் கொண்டு அங்கு நிற்பதை நான் பார்த்து விட்டு என்னதான் நடக்கிறது பார்ப்போம் என்று தூரத்தில் காரில் இருந்தபடியே அவதானித்தேன். இப்படி ஒரு அரை மணித்தியாலம் சென்றிருக்கும். சரி வீடு திரும்பியபின் கேட்டால் ஏதாவது கதை விடுவான். நீயும் அவனுக்கு ஒத்தாசை போடுவாய். அது சரிப்பட்டு வராது என்று நினைத்து காரை அவர்கள் அருகில் நிற்பாட்டி , கதவுகளின் கண்ணாடியை இறக்கிவிட்டு, நீங்கள் இரண்டு பேரும் எங்க போகவேண்டும். ஏறுங்கள் உங்களை அங்கு இறக்கி விடுகிறேன் என்று சொல்ல திரும்பிப் பார்த்தான். அப்படி பார்த்தவன் அவளிடம் அப்பா பார்த்திட்டார். இப்ப என்ன செய்கிறது என்று மெதுவாக அவளிடம் கிசு கிசுத்தான். அவளோ என்னிடம் தனது பெயர் மலர்விழி , uncle விநோதன் உங்களிடம் என்னைப்பற்றி ஒன்றும் சொல்லவில்லையா என்று கேட்டாள். அதற்கு நான் காரில் இருந்தபடியே பேசுவோம் ஏறுங்கள் என்றேன்.
எல்லாவற்றையும் விழி வெட்டாமல் கேட்டுக்கோண்டு இருந்த பார்வதி அவளிடம் உனது முழுப் பெயர் அப்ப மலர்விழி. போச்சுடா போங்க என்றாள். அதற்கு காண்டீபன் மிகுதியை இப்ப நான் சொல்லட்டுமா அல்லது அப்புறம் வந்து சொல்லட்டுமா என்று கேட்டார். ஏன் இப்ப உங்களுக்கு என்ன அவசரம். நேரம் 4 க்கு மேல் ஆயிடுச்சு. அலுவலகம் பூட்டுகிற நேரமாச்சு. அதற்கு அவர் தான் காலையில் சந்திக்க இருந்த நபரை போய்ப் பார்த்திட்டு வருகிறேன் என்று சொன்னவர் பதிலுக்கு காத்திராமல் கிளம்பிப் போய்விட்டார்.
வீடு திரும்பிய அவரிடம் பார்வதி எல்லாம் மலரே என்னிடம் சொல்லிச்சு. என்னுடைய காண்டத்தில் சொன்னபடியே தான் நடக்கிறது என்றாள். அதற்கு அவர் நீயும் உனது காண்டமும். அப்படித்தான் என்ன சொன்னான். என்னைப்போல் ஒரு அழகானவன் கிடைத்து இருக்க மாட்டான் என்று அவன் சொல்லி இருப்பான் என்றார். பார்வதியும் விட்டுக்கொடுக்காமல் நீங்கள் தானே அப்பா அம்மாவை வீட்டுக்கு அனுப்பி என்னை பெண் கேட்டு வந்தீர்கள். அதற்கு என்ன இப்ப. நீ உனது காண்டக் கதையை சொல் கேட்கிகறேன்.
விநோதன் உறவுக்குள் திருமணம் செய்வான், அவள் பெயர் மலர்விழி என்றும் சொன்னான். அப்ப மலர்விழியின் அப்பா சிறு வயதில் வீட்டை விட்டு ஓடிய உனது பெரியப்பாவின் மகன். ஆமாம் அப்புறம் என்னவாம். மலர் சொல்கிறது உண்மையென்றால் அவளுடைய தாத்தாவின் பெயர் ஊர்ப்பெயர் எல்லாம் சரியாகத் தான் இருக்கிறது. மலருடைய அப்பாவின் பெயர் எனக்குத் தெரியாது. அவரை நாங்கள் குமார் அண்ணை என்று தான் கூப்பிடுவோம் என்றாள்.
இதை அவர் நாளைக்கு இங்கு வரும்போது நீயே கேட்டு தெரிந்து கொள் என்றார் காண்டீபன். தொடர்ந்து நாளை மாலை 4 க்கு மேல் அவர்கள் இங்கு வருவார்கள், நீயும் அவர்கள் சாப்பிட ஏதாவது செய்து வை என்றார். இதைக் வாய்பிளந்து கேட்ட அவள் இதைப்பற்றி மலர் ஒன்றுமே சொல்லவில்லை என்றாள். அதற்கு அவர் அவளுக்கு அது எப்படித் தெரிந்திருக்கும். இதெல்லாம் சில மணி நேரங்களுக்கு முன் நடந்தேறிய விடயங்கள்.

நான் போய் கதவு மணியை அடிக்க அது யார் என்று பார் விழி. அவர் காண்டீபன் என்றால் அவரை எனது ஆபிஸில் இருக்கச் சொல் . நான் இதோ வந்திட்டேன் என்று சொல்வது காதில் கேட்கவும் கதவும் திறக்க இருவரும் ஒருவரை ஒருவர் வியப்பாக பார்த்துக் கொண்டே நின்றார்கள்.

விழி, ஏன் அவரை வாசலில் நிற்க வைத்தே பேசுகிறாய்.
அவள் சின்னப்பிள்ளை. நீங்கள் அதை தப்பாக எடுக்காதிங்க
காண்டீபன், வாங்கோ உள்ளுக்குள் என்றபடி அங்கு வந்த ராஜ்குமாரிடம், அப்பா இவர்தான் விநோத்தின் ......
என்று சொல்ல ஆரம்பித்தாள்.
ராஜ்குமார் அவரிடம் மலர் எல்லாம் ஒன்றும் விடாமல் சொல்லிச்சு. அதைக் கேட்ட நானும் உங்களைப் பார்க்க வேண்டும் என்று எண்ணி இருந்தேன். எனக்கும் மலருக்கும் cricket என்றால் அப்படி ஒரு பைத்தியம். அதனால் வந்த உறவு தான் அவர்கள் இருவருக்கும் இடையில். ஏன் நான் அப்பாவுடன் கோபித்துக் கொண்டு வீட்டில் இருந்து ஓடி சென்னைக்கு வந்ததே இந்த விளையாட்டால் தான் என்றார். இப்ப பாருங்கள் எனக்கு என்ன குறை. விளையாட்டு
வினையில் முடியும் என்பார்கள். ஆனால் அது எனக்கு வாழ வழி காட்டியுள்ளது. பின்பு தன் மனைவி பாக்கியத்தை அழைத்து காண்டீபனை அறிமுகப்படுத்தி வைத்தார்.
நாங்கள் நாளைக்கு அந்த pavilion கட்டும் விடயமாக பேசுவோம். இப்ப நீங்க ஏதாவது சாப்பிடுகிறிர்களா என்று ராஜ்குமார் கேட்க நேரத்தை பார்த்த காண்டீபன் நாளை தானே நீங்கள் என் வீட்டுக்கு வருகிறீர்கள் என்று கூறிக் கொண்டு எழுந்து விடைபெற்றார்.

மறு நாள் பார்வதிக்கு காலையில் இருந்து கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை. ஒருபுறம் மாலை பெண் வீட்டுக் காரர்கள் மறுபுறம் குமார் அண்ணனை பல வருடங்கள் கழித்து பார்க்க போகிறாள் என்று மனதில் பதற்றத்துடன் கலந்த மகிழ்ச்சி.
மாலை ராஜ்குமார் தன் குடும்பத்தவர்கள் எல்லோரையும் அழைத்து வந்திருந்தார். எல்லோரும் பல காலம் பழகியவர்கள் போல் சிரித்து பேசினார்கள்.
இதற்கிடையில் பாக்கியம் தனது காண்டக் கதையை ஆரம்பிக்க, காண்டீபன் வாங்க ராஜ்குமார் இவர்கள் பேசட்டும் நாங்கள் இருவரும் காற்றோட்டமாக அந்த தோட்டத்தில் போய் உட்காரு வோம் என்று வெளியே அழைத்து வந்தார். சில நிமிடங்கள் கழித்து அவர்கள் இருவரும் அந்த pavilion கட்டும் விடயமாக பேசி ஒரு முடிவுக்கு வந்தார்கள். உள்ளே பார்வதியும் பாக்கியமும் பிள்ளைகளின் திருமணத்தைப் பற்றி பேசி முடிவெடுத்தார்களோ தெரியாது இருவருமே சிரித்தபடி வெளியே வந்து உங்களுடைய வடை தேநீர் எல்லாம் ஆறுது , வாங்க உள்ளுக்கு என்று தங்கள் கணவன் மார்களை அழைத்தார்கள்.

ஆக்கம்
சண்டியூர் பாலன்

எழுதியவர் : சண்டியூர் பாலன் (8-Aug-21, 1:33 pm)
சேர்த்தது : இ க ஜெயபாலன்
பார்வை : 105

மேலே