இன்னொரு வெள்ளி

மெக்கா மெதினா
தன்னகம் கொண்ட
அல்லாவின் புண்ணிய பூமி
மன அமைதி தரும்
சவுதி அரேபியா...

வளைகுடா நாட்டு
வெள்ளிக் கிழமையின்
கால்கள் விரைவானவை...
ஞாபகத் தீயில் நினைவுச்
சீனிக்கிழங்குகள் வேகின்றன...

முதல்நாள் மாலை.. ஹோட்டலில்
நண்பர்களோடு சாப்பாடு..
திட்டமிட்டபடி நடக்கும்..
விடுமுறைக்கு முதல்நாள் இரவு
மிகவும் கண்விழிக்காமல்
தூங்கச் செல்லும் இரவுகள்
நல்ல பகல்களைத் தரும்...

நள்ளிரவு தாண்டியும்
இணையத்தோடு இணைந்து
இருக்கும் முதல்நாள் இரவைத்
தொடரும் பகலில் குளறுபடிகள்
கொண்டாட்டம் போடும்...

வெள்ளிக்கிழமை.. இங்கு
அது எனது நாள்...
போர்வை என்னைச்
சிறைப்படுத்தி இருக்கும்...
ஏசிக் குளிர்
எழுந்திருக்க விடாது...

கேம்ப் பாஸ் அக்கறையோடு
போர்வைச் சிறையிலிருந்து
விடுதலை வாங்கித் தருவார்...
காலைச் சிற்றுண்டி
வழங்கும் பணியிலிருந்து அவர்
விடுதலை பெறுவதற்கு...

யோகாவோடு ஆரம்பிக்கும்
நாள் யோகம் மிகுந்த நாள்...
தாமதமாக எழும் நாட்களில்
மதியம் குளித்தாலே
சீக்கிரம் என்று அர்த்தம்...

வீட்டோடு உரையாடலில்
மணிகள் நிமிடங்களாய்க் கரையும்...
நனைய வைத்த துணிகள்
வெயில் மறைந்த வெப்பத்தில்
காய ஆரம்பிக்கும்...

ஒன்றரைக் கிலோமீட்டர்
தொலைவுள்ள ஷாப்பிங் மாலுக்கு
மாலை வேளையில்
எனக்குப் பிடித்த சாலைகளில்
இரண்டும் இரண்டும்
நான்கு கிலோமீட்டர்
நடைப் பயிற்சி...
பலநேரங்களில் கைபேசி
கையில் இருக்காது...
முழுமையாய் நிஜ நினைவுகளில்
நீந்துவது எனக்குப் பிடிக்கும்...

விடுமுறை நாளிலும்
அதிகாலை எழுந்து
மருந்தென ஓய்வு கொண்டு
நேரங்கள் நகர்ந்தால்
விருந்தென எல்லாம் அமையும்...

பாலைவனப் பார்வைகளில்
நந்தவன நினைவுகளை
சேர்க்கத் தெரிந்த
வல்லவனுக்கு புல்லும் கூட
தேவை இல்லை..
பூப்பறிக்க இங்கு ஆயுதம் எதற்கு...
மணற் புயலில் கூட
மனம் தென்றலோடு
உலா போகும்...

நினைவுகளில் தேன்
தடவத் தெரிந்திருந்தால்
வேப்பங்குச்சி இனிக்கும்
பாகற்காய் சுவைக்கும்...

அன்புடன்...
ஆர். சுந்தரராஜன்.
😃👍👏🌹

எழுதியவர் : சுந்தரராஜன் ராஜகோபால் (20-Aug-21, 11:30 am)
சேர்த்தது : இரா சுந்தரராஜன்
Tanglish : innoru velli
பார்வை : 170

மேலே