12 ஆன்மீக வழியில் அமைதி

அத்தியாயம் – 12
ஆன்மீக வழியில் அமைதி......
எழுத்தாளர் : பூ.சுப்ரமணியன்

மனிதர்கள் ஒரு பொருளை விரும்பி அடைவதன் மூலம் கிடைக்கும் இன்பம் அல்லது ஆனந்தம் பற்றி சிந்தித்துப் பாருங்கள். அந்த இன்பம் தரக்கூடிய பொருள் மனிதன் தனக்கு கிடைக்கவேண்டும் என்பதற்காக யாகம் பூஜை தானதர்மங்கள் விரும்பியோ விருப்பமில்லாமல் செய்து கொண்டிருக்கின்றான். அவ்வாறு மனிதர்களாகிய நாம் தேடிய பொருள் மூலம் கிடைக்கும் ஆனந்தம் சுகம் இன்பம் நம்மிடம் நிரந்தரமாக இருப்பது இல்லை. ஒரு பொருளிலிருந்து கிடைக்கும் இன்பம் மகிழ்ச்சி நித்தியமாக இல்லாமல் அநித்தியமாக இருக்கிறது.

ஒரு பொருளை அடைவதால் நமக்கு முற்றிலும் இன்பம் கிடைப்பதில்லை என்று கூற முடியாது. ஒரு பொருளினால் வரக்கூடிய இன்பம் மகிழ்ச்சி ஆனந்தம் நிரந்தரமாகக் நமக்கு கிடைப்பதில்லை. நிரந்தரமாக நம்மிடம் இருப்பதுமில்லை. எந்த ஒரு பொருளை அடைந்தால் இன்பம் என்று கருதி அதனை நாம் அடைந்தோமோ அல்லது வாங்கினமோ அந்தப் பொருள்மூலம் கிடைத்த இன்பம் மகிழ்ச்சி சிலநேரங்களில் சூழ்நிலையின் காரணமாக துன்பமாக முடிந்து விடுகிறது. அவ்வாறு நமக்கு துன்பமாக முடியும்போது நாம் விரும்பிய பொருளையும் அதனால் வரக்கூடிய ஆனந்தத்தை மகிழ்ச்சியையும் வேண்டாமென்று விட்டு விடுகிறோம். நம்மை அறியாமல் மகிழ்ச்சியை இழந்து விடுகிறோம் இது மனித இயல்பு.

எடுத்துக்காட்டாக ஒருவர் நாள்தோறும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்த்துக் கொண்டே இருக்கிறார். அவர் தன்னோட கவலையெல்லாம் மறந்து மனம் அதில் ஆழ்ந்து ஒருவிதமான ஆனந்தத்தை உணர்ந்து மகிழ்ச்சியும் அடைகிறார் என்று வைத்துக் கொள்வோம். அந்த மகிழ்ச்சி அவருக்கு எதுவரை நீடிக்கும் என்று சற்று சிந்தித்துப் பாருங்கள். திடீரென்று கண்பார்வை சிறிது மங்கி விடும்போது, அவர் ஒரு கண்மருத்துவரை நாடுகிறார். மருத்துவர் அவருடைய கண்களை நன்கு பரிசோதனை செய்து பார்க்கிறார்.

பரிசோதனையின் முடிவில் ‘தங்கள் கண்கள் மிகவும் பலவீனமாக இருக்கிறது.
உங்களுடைய கண்கள் பாதிப்பு அடையாமல் இருக்க வேண்டுமானால் மிகுந்த ஒளியைத் தரக்கூடிய தொலைக்காட்சி போன்றவற்றைப் பார்க்கும் பழக்கத்தை முற்றிலும் விட்டுவிட வேண்டும்’ என்று அவரிடம் கண்மருத்துவர் கூறிவிடுகிறார். அந்த நபர் உடனே அதன்பிறகு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்ப்பதையே விட்டு விடுவார். கண்பார்வையை அவர் இழப்பதற்கு விரும்புவதில்லை. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்ப்பதன் மூலம் அந்த நபருக்கு மனதுக்கும் கண்ணுக்கும் எவ்வளவு பெரிய இன்பத்தையும் மகிழ்ச்சியையும் கொடுத்துக் கொண்டு இருந்தது. அதனால் கண்ணுக்குப் பாதிப்பு ஏற்படும் என்று மருத்துவர் அறிவுறுத்தியவுடன் தொலைக்காட்சி போன்றவற்றை இனிமேல் பார்ப்பதில்லை என்று மனதில் உறுதி எடுத்து விடுகிறார்.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்ப்பதால் தான் அனுபவித்த ஒருவிதமான ஆனந்தத்தையும் மகிழ்ச்சியையும் விட்டு விடுவதற்கும் அவர் தயங்குவதில்லை. கண்கள் பாதிப்பு ஏற்பட்டு விடும் என்ற பயத்தின் காரணமாக தொலைகாட்சியைப் பார்ப்பதால் கிடைத்த இன்பத்தை மகிழ்ச்சியைகூட துறக்க தயாராகி விடுகிறோம். ஏன் என்றால் அதனால் நம் கண்களுக்கு பாதிப்பு என்ற துன்பம் வந்து விடும்போது, நமக்கு கிடைத்துக்கொண்டிருந்த இன்பத்தை மகிழ்ச்சியைக்கூட விட்டு விடுகிறோம். இதேபோன்றுதான் உலகில் காணும் பொருள்களினால் கிடைக்கும் இன்பம் மகிழ்ச்சியைப் பற்றி ஆழ்ந்து சிந்தித்துப் பார்த்தால் அந்த இன்பம் மகிழ்ச்சி நித்தியமானதல்ல என்று உணர்ந்து கொள்ள முடியும்.

ஒவ்வொரு ஆனந்தமும் மகிழ்ச்சியும் இதேபோல்தான் ஐம்புலன்கள் மூலம் நமக்குக் கிடைக்கிறது. அந்த ஆனந்தத்தினால் ஐம்புலன்களில் ஏதாவது ஒன்று பாதிப்பு ஏற்படுவதை மருத்துவர் மூலம் அறிந்து கொண்டால் அல்லது தங்கள் அனுபவத்தின் மூலம் தெரிந்தவுடன், அப்பொருளினால் வரக்கூடிய ஆனந்தத்தை மகிழ்ச்சியை விட்டுவிடுவதற்கு நாம் தயக்கம் காட்டுவதில்லை. இத்தகைய இன்பம் மகிழ்ச்சி சுகம் நித்தியமானதல்ல என்பதை அனுபவத்தின் மூலம் உணர்ந்து கொள்கிறோம். ஆன்மிகம் மூலம் நிரந்தரமான இன்பத்தை நாடிச் செல்லும்போது, நாம் தேடும் விரும்பும் அமைதி கிடைக்கும் என்பதை அறிந்து கொள்ளலாம்.

நமது வாழ்வில் துன்பத்திலும் இன்பத்திலும் நாம் எப்படி இருக்க வேண்டும் என்று கம்பராமாயணத்தில் ஒரு காட்சி. இராமன் தனக்கு பட்டாபிஷேகம் நடைபெறப்போகும் நிகழ்வை நினைத்து அவன் துள்ளிக் குதிக்கவில்லை. அதன் பிறகு தந்தையின் கட்டளைப்படி கானகம் செல்லும்போது இராமன் மனம் கலங்கவில்லை. இதனை கைகேயி கூற்றுக்கு முன்பும் பின்பும் செந்தாமரையைப் போல இருந்தது இராமனின் முகம். கைகேயி கூற்றின் பொருள் உணர்ந்தபோதும் அப்பொழுது மலர்ந்த செந்தாமரையினும் மலர்ச்சியுடன் இராமனின் முகம் இருந்தது என்று கம்பர் கூறுகிறார். மனிதன் துன்பத்திலும் இன்பத்திலும் மனதை சமநிலையில் வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை இதன்மூலம் அறிந்து கொள்ளலாம். அவ்வாறு இருக்கும்போது மனிதன் தேடும் மன அமைதி தானாக வந்து சேரும்.

வாழ்க்கையில் ஏதோ ஒரு காரணகாரியத்தினால் ஆனந்தம், மகிழ்ச்சி இன்பம் உங்களிடம் குறைந்து துன்பங்கள் சூழ்வதற்கு ஆரம்பித்தவுடன் தானம் தர்மம் யாகம் எனச் செய்து, அதன்மூலம் வாழ்க்கையில் இழந்த ஆனந்தத்தை அடைய முயற்சி செய்கிறோம். அந்த ஆனந்தம் நிரந்தரமாகக் கிடைப்பதில்லை என்பதை அப்போது உணர்வதில்லை. எந்தப்பொருள் நாம் அடைந்ததால், அனுபவவித்தினால் ஒரு காலத்தில் நமக்கு இன்பத்தை மகிழ்ச்சியை வாழ்க்கையில் சுகத்தைக் கொடுத்ததோ அதேபொருள் சிறிதுகாலத்தில் நமக்கு துன்பத்தைக் கொடுக்கிறது. அதாவது அந்த ஆனந்தம் மகிழ்ச்சி அநித்தியமாக இருக்கிறது. அதாவது எந்தப் பொருள் மூலம் இன்பத்தை அடைந்தாலும் அதன் மூலம் கிடைக்கும் இன்பம் நிரந்தரமானது அல்ல என்பதை நமது அனுபவங்ககளின் மூலம் உணர்ந்து கொள்ளலாம்.

எடுத்துக்காட்டாக பசியாக இருக்கும்போது நாம் ஒரு சுவைமிக்க லட்டை எடுத்து சாப்பிடுகிறோம். அதன் சுவையும் மணமும் நமக்கு இன்பத்தைத் தருகிறது. ஆனால் நாம் தொடர்ந்து லட்டுகளையே சாப்பிட்டுக் கொண்டேயிருந்தால் திகட்டி விடுகிறது. அது நமது உடலுக்கு ஒவ்வாமல் ஒருவித துன்பத்தையும் தருகிறது. நாம் முதல் லட்டு சாப்பிடும்போது கிடைத்த சுவை இன்பத்தை அளித்த லட்டு, அதிக லட்டுகளை சாப்பிடும்போது நமக்கு துன்பமாக மாறி விடுகிறது. இதிலிருந்து நாம் என்ன உணர்ந்து கொள்ள முடிகிறதென்றால், உலகில் எந்தப்பொருளும் இன்பத்தை நிரந்தரமாகத் தருவதில்லை. அதன் மூலம் கிடக்கும் மகிழ்ச்சியும் நிரந்தரமல்ல என்பதை நாம் நாளடைவில் உணர்ந்து விடுகிறோம். எந்தப்பொருள் முதலில் மகிழ்ச்சியாக இருந்ததோ அதே பொருள்தான் நமக்குத் துன்பத்தினைக் கொடுக்கிறது என்பதை இதன் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது..

ஒரு பொருளை அடைவதன்மூலம் அனுபவிப்பதன்மூலம் ஆனந்தம் இன்பம் ஓரளவு இருக்கிறது. அந்தப் பொருளைவிட உலகில் இன்பம் கிடைப்பதற்குரிய வேறொரு பொருள் இருக்கிறது என்று மனம் அறிந்தால், நமது மனம் அந்தப் பொருளினை நாடி விடுகிறது. ஏன் என்றால் ஏற்கனவே அடைந்த பொருளினால் கிடைத்துள்ள இன்பத்தைக்காட்டிலும் மற்றொரு பொருளை அடைவதால் அதிக இன்பம் இருப்பதாக நினைத்துக் கொள்கிறோம்.

எடுத்துக்காட்டாக நாம் ஒரு நடுத்தரமான வசதியுள்ள வீடு ஒன்று விலைக்கு வாங்குகிறோம். அதில் குடியிருந்து சிறிது காலம் மகிழ்ச்சியும் அடைகிறோம். நாம் வாங்கிய வீட்டை விட அதிகமான வசதிகள் உள்ள வீடு உள்ளது என்பதை அறிந்தவுடன் மனம் அதனை நாடுவதொடு, அந்த வசதியான வீடு தனக்குக் கிடைக்கும்வரை வாங்கும் வரை அல்லும்பகலும் மனம் துன்பத்தில் சுழன்று கொண்டு இருக்கிறது. நாம் நடுத்தரமான வீட்டில் குடியிருந்து வரும்போது கிடைத்த மகிழ்ச்சியை அப்போது நம்மை அறியாமல் இழந்து விடுகிறோம்.

இதேபோன்றுதான் வாகனங்கள் வாங்கி மகிழ்வது மற்றும் பலவிதமான உடைகள் அணிந்து மகிழ்ச்சி அடைவது போன்றவையாகும். ஏன் நமது நட்பாகக்கூட இருக்கலாம். ஒருவர் நமக்கு பழகுவதற்கு ஆரம்பத்தில் மிகவும் இனிமையாக இருக்கிறார். நாம் அவருடன் எப்போதும் நட்புடன் பேசி சிரித்து ஆனந்தமாக இருக்கிறோமா என்றால் இல்லை என்றுதான் கூறவேண்டும். அவரிடம் கோபம் என்ற ஒரு குணம் இருந்தால், இருப்பதாகத் தெரிந்தால் அவர் மூலமாக நாம் துன்பம் அடையும் சூழ்நிலை ஏற்பட்டால், அவர் மீது நம்மையும் அறியாமல் ஒருவிதமான வெறுப்பும் வந்து விடுகிறது.

அந்த நண்பர் ஏதோ ஒரு சூழ்நிலையில் கோபப்பட்டு விட்டால், அதனால் நமக்கு மனதில் வருத்தம் ஏற்பட்டு துன்பத்தில் மனம் ஆழ்ந்து விடுகிறது. எந்தஒரு மனிதனுக்கும் அவருடைய நண்பர்களோ உறவினர்களோ எல்லாவிதங்களிலும அனைத்து சூழ்நிலையிலும் அவர் மனம்போல் திருப்தியாக நடந்து கொள்வதற்கு முடிவதில்லை. ஏதேனும் ஒருகுறைபாட்டினை அவர்களிடம் காண்போம் அல்லது மற்றவர்கள் மூலம் கேட்போம். எனவே ஒருவருக்கு உறவுகளோ நண்பர்களோ நிரந்தரமான ஆனந்தத்தை மகிழ்ச்சியை அமைதியை அவருக்கு அளிப்பதற்கு முடிவதில்லை. இதனை நமது அனுபவத்தின் மூலம் நாம் உணர்ந்து கொள்ளலாம். அப்படிப்பட்ட மகிழ்ச்சியானது அநித்தியமான மகிழ்ச்சி ஆகும். அதாவது நிரந்தரமான ஆனந்தம் அல்ல என்பதை நாம் இதன் மூலம் உணர்ந்து கொள்ளலாம். குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை என்று கூறியிருக்கிறார்கள் சுற்றம் மட்டுமல்ல நட்பும் இருப்பதில்லை. அவ்வாறு புரிந்து நமது மனதை தேற்றி செயல்படும்போது சுற்றமும் நட்பும் தொடரும். எனவே நாம் அமைதியை இழந்து விடுவதில்லை. (அமைதி தொடரும்)

எழுத்தாளர் : பூ.சுப்ரமணியன்

எழுதியவர் : பூ.சுப்ரமணியன் (24-Aug-21, 8:17 am)
சேர்த்தது : பூ சுப்ரமணியன்
பார்வை : 60

மேலே