காக்கையாரும் நானும்

காகம் பற்றி ஒரு பதிவு பதிவிட நினைத்திருக்கையில் கூகிளில் ஓராயிரம் கவிதைகள்.

காகத்தை பற்றி வேண்டுமென்றால் ஒரு பதிவு பதிவிடலாம் சரி. கவிதைகள் கூடவா எழுதலாம் என யோசித்த போது தான் இங்கு கவிதைகள் கரைந்து காகங்களானது.

இது ஒரு சங்க இலக்கிய பாடல். என்னுடை பதிவுக்காக எடுத்து வைத்திருந்தேன்.



/////

காலை எழுந்திருத்தல்
காணமலே புணர்தல்
மாலை குளித்து மனை புகுதல் – சால
உற்றாரோடுண்ணல்
உறவாடலிவ் வாறும்
கற்றாயோ காக்கைக் குணம்
.


காகத்திடம் உலக மக்கள் கற்றுக்கொள்ள வேண்டிய 6 விஷயங்களை தமிழ்ப் புலவர்கள் மேலே சொன்ன பாடலில் அழகாகச் சொல்லுகின்றனர்:

1.காலை எழுந்திரு.
2.பிறர் காணாமல் புணர் (மறைவாக செக்ஸ்).
3.மாலையிலும் குளி.
4.பிற பெண்களிடம் போகாமல் உன் மனையில் புகு..
5.கிடைக்கும் உணவைப் பகிர்ந்து உண் (முதலில் எல்லோரையும் அழை).
6.எல்லோருடனும் பாடிப் பேசி மகிழ் (மாலை வேளைகளில் மரங்களில் காககங்கள் கா, கா என்று பேசி மகிழ்வதைக் காணலாம்)

/////



ஒரு முறை எனக்கு மன்னார் என்னும் இடத்தில் வேலை கிடைத்தது. மகிழ்ச்சியோட போன பின்னர் தான் தெரிந்தது அது கழுதைக்கும் காகத்துக்கும் பேர் போன ஊர் என்று.

வீதியோரத்தில் நிற்கும் பரந்து விரிந்த மரத்தில் காகங்கள் நிறைந்து போய் இருக்கும். மறந்து போய் மரந்தின் கீழாக சென்றால் உடுப்பு நாசம். ஒரு வித துர்நாற்றமும் ஒட்டிக்கொண்டதாய் ஓர் உணர்வு இருக்கும்.

அதை விட கொடுமை வீதியில் நடந்து போகும் போதே தாழப்பறந்து வரும் காகங்கள் ஆசையாய் கொட்டிவிட்டு பறந்து போகும். வலியில் தலையை தடவிக்கொண்டே போனால் எதிர்ப்படும் பெருசு
"என்ன தம்பி... காகமா...jQuery17108215969644348429_1630492807942" என்று நக்கலுடன் போவார்.

இப்பிடியாக போன நாட்களில் ஒரு நாள்,
வேலை முடித்து பொழுது சாயும் நேரம் நாங்கள் தங்கியிருந்த வீட்டுக்கு வந்த போது ஒரு ஐம்பது அறுபது காகங்கள் பறந்து கொண்டிருந்தது. என்னவாக இருக்கும் என பயத்துடன் உள்ளே நுழைந்தால் கிணற்றடி அருகில் காகத்தின் குஞ்சு ஒன்று விழுந்து கிடந்தது. அதை வேட்டையாட இரு நாய்கள் முயற்சிக்கின்றன. இதுக்கு தான் இத்தனை ஆர்ப்பாட்டம். கிணற்றடி பக்கமே போகமுடியாது. கிட்ட போக நினைத்தாலே தலையில் கொட்டிய ஞாபகங்கள் வந்து போகும். நாங்கள் நாலைந்து பேர் நீளமான தடி தண்டுகளுடன் போராடி அதன் குஞ்சை வேறொரு உயரமான இடத்திற்கு நகர்த்திய பின்னரே கிணற்றடிக்கு போகமுடிந்தது.




இது இப்படி இருக்க,

முன்னோர் காகத்தை பிதுர்களின் உருவமாய் பார்த்தனர். அந்த வழமை இன்றும் தொடர்கின்றது. ஆடி அமாவாசை, சித்ரா பெளர்ணமி தினங்களில் காகம் தான் கதாநாயகன். அன்று காகம் தான் எமகெல்லாம் எதிரி. ஆறேழு கறி வகைகளுடன் வடை பாயாசத்துடன் விருந்து சமைத்திருப்பார்கள். ஆசையாய் சமையலறை போனால்

"பிதுர்களுக்கு படைக்க வேண்டும்" என்பார்கள்

"சரி" படைக்கட்டும் என்று பொறுமை காத்தால் பிதுர்கள் வந்து சாப்பிடவும் வேண்டுமாம்.

அதான் "காக்கையார் வந்து சாப்பிட்ட பிறகு தான் சாப்பாடு" என்று ஒரு குரல் வரும்.

காகம் எப்ப வந்து, எப்ப சாப்பிட்டு, நாம எப்ப சாப்பிடுறது.

பிறகென்ன மனதுக்குள் காகத்தை திட்டிக் கொண்டே 'கா... கா... கா... கா...' என காகத்தை கூப்பிடுவோம். நமக்கும் பசிக்கும்ல.

காகத்தை சனீஸ்வரனாக நினைத்து புரட்டாதி சனி விரதம்.

அப்புறமென்ன... அதே பல்லவி தான். விரத சாப்பாடு; காகம்; கா கா கா; சாப்பாடு.



ஒவ்வொரு நாளும் இரவு வேளையில் எங்கள் வீட்டு வெளி (படலையில்) கேற்றுக்கு மேலே மின்சார கம்பியில் இரண்டு காகங்கள் படுத்திருக்கும். முன்னோர்கள் காவல் தெய்வங்களாய் வந்திருக்கிறார்கள் என்ற நம்பிக்கை. நம்பிக்கை நம்பிக்கையோடு இருக்கட்டுமேன்.



எங்கள் வீட்டில் ஒவ்வொரு நாளுமே கொஞ்ச சோறு, பாண் துண்டுகள் என காகத்துக்கு உணவிருக்கும். இதனாலேயே ஒன்றோ இரண்டு காகங்கள் வீட்டு வளவுக்குள் பறந்து திரியும். கூடவே மற்றைய பறவைகளும்.

ஒரு நாள்,

எனக்கும் பொழுது போகாமல் காத்திருக்க, காகத்துக்கு பாண் துண்டுகள் போட்டேன். ஒரு காகம் வந்து கொத்திக் கொண்டே கரைய தொடங்கியதும் இன்னும் மூன்று காகங்கள் வந்து சேர்ந்தன. ஆளுக்கு ஒரு துண்டை எடுத்துக் கொண்டு அவையும் கரைய இன்னும் ஒரு காகம் வந்திறங்கியது.

அடடே என்ன ஒரு ஒற்றுமை என வியந்து கரைந்து போனேன்.

வந்த காகம் நின்ற நான்கு காகங்களையும் விரட்டியது. அவர்களும் விலகி நிற்க பாண் துண்டுகளுக்கு அருகில் வந்த காகம் மள மள என்று மீதம் இருந்த பாண் துண்டுகளை கொத்தி கொத்தி தனது நீண்ட கருநிற அலகு முழுதும் நிரப்பிக் கொண்டது. பறந்து சென்றது.

அழைத்த காகங்கள் அருகில் வந்து பார்த்து பாண் துண்டுகள் இல்லாதிருப்பதை கண்டு ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக் கொண்டனர்.

இதனை பார்த்துக் கொண்டிருந்த எனக்கு மனதுக்கு கஷ்டமாக இருந்தது.

அவர்களுக்குள்ளும் மனிதன் இருக்கிறான் என நினைத்துக் கொண்டேன். இறந்து போன முன்னோர்கள் என்பதிலும் சிறு நம்பிக்கை வந்தது.

இன்னும் கொஞ்ச பாண் துண்டுகளை போட்டதும் கொத்திக் கொண்டு மறு திசையில் பறந்து சென்றன.


- பெல்ழி

எழுதியவர் : பெல்ழி (1-Sep-21, 4:06 pm)
சேர்த்தது : மணிவாசன் வாசன்
பார்வை : 205

மேலே