குற்றமுள்ள மனம்

குற்றமுள்ள மனம்

அம்மாவின் முகம்
அழகாய்த்தான்
இருக்கிறது

வரி வரியாய்
சதை கோடுகள்
கழுத்து வரைக்கும்
இழுவையாய்

காதில் தொங்கும்
கம்மல்கள்
காணாமல் வெறும்
ஓட்டைகளாய்

இவள் முகம்
முழுக்க என்
எச்சில்களால்
முத்தமிட்டிருக்கிறேன்
அது ஒரு காலம்..!

முகம் பார்த்து
பேசுவதற்கு
நேரம் இன்றி

அல்லது
வேண்டுமென்றே
தவிர்த்திருக்கிறேன்

இப்படி அவள்
முகத்தை
அணு அணுவாய்
பார்க்க

எத்தனை முறை
சொல்லி
அனுப்பி இருப்பாள்

இனி உன்னை
அழைக்கமாட்டேன்
சொல்லாமல்
சொல்வது போல்

இதோ உறங்குவது
போல்
படுத்திருக்கிறாள்

பத்து மாதம்
எனை சுமந்த
அவள் வயிற்றின்
மேல்

கற்பூரம் பற்ற
வைக்க சொல்கிறார்கள்
அக்கம் பக்கம்

அடுத்த நிமிடம்
உள்ளிழுக்கும்
அவள் உடல்
முழுவதும் பற்றி
எரியும் தீ….
அம்மா…கதறலுடன்
வெளிப்பட்டாலும்

உள் மனசு
கெக்கலிட்டு
சிரிக்கிறது


நாளை
உனக்கும்…

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (24-Sep-21, 12:23 pm)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 83

மேலே