புதியதோர் உலகம் செய்வோம்…
பொய்மையின் ஆர்ப்பரிப்பில் சுழன்றிடும் உலகமதை
மெய்களின் அரவணைப்பில் மீட்டு வந்திடுவோம்!
வலியவர், தாழ்ந்தவர் பேதங்கள் யாவையுமே
தெளிந்தவர் நாம்நின்று பிடுங்கியே எறிந்திடுவோம்!
மறவழி ஆயுதங்கள் மலிந்துள்ள பூமிதனை
அறவழித் தீயிலே பட்டையும் தீட்டிடுவோம்!
செல்வழி எங்கிலும் சீரிய பண்புகளை
சொல்வழி புகட்டியே சொர்க்கம் நாம் படைத்திடுவோம்!
நவீனப் பேய்களின் நயவஞ்சக ஆட்டத்தை
தீயிலே பொசுக்கி ஆகுதி வளர்த்திடுவோம்!
நச்சுப் புகையிலே கருகிடும் பூமியை
பச்சை மரங்களில் தூக்கியே நிறுத்துவோம்!
மாட்சிமை மிகுந்தவன் மனிதன் என்றே
ஆட்சிகள் விரியட்டும்! அகிலமும் சிறக்கட்டும்!
பேச்சிலும் மூச்சிலும் தருமத்தின் விதைநட்டு
அறவழி சுழன்றிடும் புத்துலகு படைத்திடுவோம்!