ஒருவழி ஒன்றேயும் இல்லாதான் வாழ்க்கை – நாலடியார் 102
நேரிசை வெண்பா
உருவும் இளமையும் ஒண்பொருளும் உட்கும்
ஒருவழி நில்லாமை கண்டும் - ஒருவழி
ஒன்றேயும் இல்லாதான் வாழ்க்கை உடம்பிட்டு
நின்றுவீழ்ந் தக்க துடைத்து 102
- பழவினை, நாலடியார்
பொருளுரை:
தோற்றமும், இளமை நிலையும், மேன்மை வாய்ந்த செல்வமும், நன்மதிப்பும் எல்லாரிடமும் ஒரே வகையாகப் பொருந்தாமை நேரிற் பார்த்தும் அதற்குக் காரணம் பழவினையே யென்றும்,
ஆகவே, நல்வினைகள் செய்தால் மேற்பிறவிகளில் நன்னிலைமைகள் பொருநதும் போலுமென்றும் அறிந்தொழுகாமல்,
யாதானும் ஒரு வகையால் ஒரு நல்வினையையேனும் செய்யாதவனது உயிர் வாழ்க்கை உடம்பு தோற்றிச் சிலகாலம் பயனில்லாமல் இருந்து பின் இறந்துபோகும் வீண் நிலையினையே யுடையதாகும்.
கருத்து:
நல்வாழ்வுக்குக் காரணம் நல்வினையே யென்றறிந்து அதனை இயன்ற அளவிலாயினுஞ் செய்து பிறவியைப் பயனுடையதாக்குதல் வேண்டும்.
விளக்கம்:
செல்வம், அறம் முதலிய நோக்கங்கட்குப் பயன்படுத்தற்குரியதாகலின், ‘ஒண்பொரு' ளெனப்பட்டது.
நில்லாமை - நின்று பொருந்தாமை. ‘உடம்பு இட்டு' என்பதற்குத் ‘தம்மைப் போல் உடம்பு மாத்திரையாக உணர்ச்சியில்லாச் சில குழந்தைகளைத் தோற்றி' என உணர்த்தலும் ஒன்று.
வீழ்ந்தக்கது என்பது ‘வீழுந்தகையது' என்னும் பொருட்டு; இதனால் உட்கு முதலியன இல்லாத வாழ்க்கை வீண் என்பது பெறப்பட்டது;