தந்தை மக்களைச் செந்நெறி மேல் நிற்பச் செயல் வேண்டும் - பழமொழி நானூறு 8
நேரிசை வெண்பா
எந்நெறி யானும் இறைவன்றன் மக்களைச்
செந்நெறிமேல் நிற்பச் செயல்வேண்டும் - அந்நெறி
மான்சேர்ந்த நோக்கினாய் ஆங்க வணங்காகும்
தான்செய்த பாவை தனக்கு. 8 - பழமொழி நானூறு
பொருளுரை:
மானை யொத்த பார்வையை உடைய பெண்ணே!
தந்தை தன் குழந்தைகளை எந்த வழிமுறையிலே ஆனாலும் செம்மையாகிய நல்ல வழியில் நிற்குமாறு அறிவுறுத்துதல் வேண்டும்.
அத்தகைய செந்நெறியில் நிற்பச்செய்யும் செயல் தன்னால் நிலை நிறுத்தப்பட்ட படிவம் தனக்கே தெய்வமாகும் தகுதியைப் போலவாம்.
கருத்து:
மக்களுக்கு அறிவு ஊட்டுதல் தந்தை கடனாம்.
விளக்கம்:
தன்னால் நிலைநிறுத்தப்பட்ட பாவை தனக்குத் தெய்வமாய் அமைதல்போல, கற்ற செந்நெறியில் நிற்பான் தந்தையால் போற்றப்படுவான்.
'அணங்காகும் தான் செய்த பாவை தனக்கு' என்பது பழமொழி.