புலைப்பொருள் தங்கா வெளி - பழமொழி நானூறு 17

நேரிசை வெண்பா

உள்ள தொருவர் ஒருவர்கை வைத்தக்கால்
கொள்ளும் பொழுதே கொடுக்கதாம் - கொள்ளார்
நிலைப்பொரு ளென்றதனை நீட்டித்தல் வேண்டா;
புலைப்பொருள் தங்கா வெளி. 17

- பழமொழி நானூறு

பொருளுரை:

தன்னிடத்துள்ளதொரு பொருளை ஒருவர் ஒருவரிடத்துக் காவல் செய்து தருமாறு கொடுத்தால் அவர் வேண்டிய பொழுது தாம் அகப்படுத்திக் கொள்ளாமல் கொடுக்கக் கடவர்;

நிலைமையான பொருள் என்று கருதிக் கொடாது காலம் நீட்டித்தல் வேண்டா;

புலால் நாறும் பொருள் எங்ஙனம் மறைப்பினும் மறைபடாது வெளிப்பட்டுவிடும் ஆதலான்.

கருத்து:

அடைக்கலப் பொருளைக் கொள்ளாது வேண்டிய பொழுது கொடுத்து விடுங்கள்.

விளக்கம்:

புலைப்பொருள் வெளியாதல் போல, அடைக்கலப் பொருளைக் கரப்பின், மறைபடாது வெளிப்படுதல் உறுதி.

'புலைப்பொருள் தங்கா வெளி' என்பது பழமொழி.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (23-Oct-21, 1:27 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 27

சிறந்த கட்டுரைகள்

மேலே