அழகாய் இருந்தால் கூடுதல் சர்க்கரை வெல்லம்

கண்ணன் ஒரு நல்ல பிள்ளைதான். வெண்ணை திருட மாட்டான்; அம்மாவுக்கு கஷ்டம் கொடுக்க மாட்டான்; அம்மாவை அதிகம் தொந்தரவும் செய்ய மாட்டான். அவனுக்கு தேவை நல்ல சாப்பாடு அதை அவன் அம்மா அவனுக்கு வஞ்சனை இல்லாமல் செய்து போட்டு வந்தாள். அவனுக்கு இருந்த ஒரே பலஹீனம் இளம்பெண்களை கண்டால் பார்த்த வண்ணம் இருப்பான்; அவன் கண்ணுக்கு அழகாய் தெரிந்துவிட்டால் அந்த பெண்களை கண்ணால் மொய்த்த வண்ணம் இருப்பான்; கண்களால் மேய்வான் என்றும் சொல்லலாம். பாவம் சின்ன பிள்ளை; என்ன, சுமார் 21 வயது இருக்கும் சின்ன கண்ணனுக்கு. ஏதோ ஒரு வழியாக பிஏ படிப்பு முடித்து வேலைக்கு தேடிக்கொண்டிருந்தான். வெறும் பிஏ என்றால் அவ்வளவு சுலபமாக எங்கே வேலை கிடைக்கும்.எனவே அவனது அப்பாவின் மளிகை கடையில் அவர் வியாபாரத்திற்கு உதவியாய் இருந்து வந்தான். சர்க்கரையும் வெல்லமும் வியாபாரம் செய்வதென்றால் கண்ணனுக்கு ரொம்ப விருப்பம். எடை பார்க்கையில் சர்க்கரை வெல்லம் கொஞ்சம் கூடுதலாக இருந்தால் அவனே வாயில் போட்டுகொண்டு விடுவான். சர்க்கரை வெல்லம் வாங்குபவர் அழகான இளம் பெண் என்றால், எடைக்கு கொஞ்சம் அதிகமாகவே போட்டு தருவான். எடை போட எணினீ (டிஜிட்டல்) எடை கருவியை உபயோகித்ததால், சர்க்கரை வெல்லம் மற்ற மளிகை சாமான்கள் அளவு இந்த எடை கருவியில் சரியாக தெரியும். இவன் சர்க்கரை வெல்லம் கூடுதலாக கொடுக்கும்போது அதை வாங்கும் பெண்களில் சிலர் இந்த கூடுதல் எடையை கவனிப்பார்கள். சிலர் ஒன்றும் சொல்லாமலே வாங்கி சென்று விடுவார்கள்.சிலர் கண்ணனை 'ஏன் கூடுதலாக கொடுக்கிறீர்கள்' என்று கேட்கவும் செய்வார்கள். அதற்கு கண்ணன் " அட கொஞ்சம் கூட தானே இருக்கு. பரவாயில்லை. அதனால் எனக்கு பெரிய நஷ்டம் வரப்போவதில்லை" என்பான். " நீங்க மீண்டும் சர்க்கரை வெல்லம் வாங்க நம்ம கடைக்குதான் வரவேண்டும்" என்று அசடு வழிவான்.

ஒருதடவை அவன் கடைக்கு ஒரு கிலோ வெல்லம் வாங்க ஒரு இளம்பெண் வந்தாள். அவள் கொஞ்சம் அழகாய் இருந்ததால் கண்ணன் ஒரு கிலோவுக்கு மேல் 200 கிராம் வெல்லத்தை கூடவே போட்டு அவளுக்கு தந்தான். அந்த பெண் இதை கவனித்து விட்டு " ஐயோ, நீங்க 200 கிராம் வெல்லம் கூட போட்டிருக்கீங்க. எனக்கு ஒரு கிலோ தான் வேண்டும்" என்றாள். கண்ணன் " அட நீங்க ஒண்ணு மிஸ், இன்னும் ரெண்டு நாளில் தீபாவளி. கொஞ்சம் இனிப்புகள் அதிகம்க செய்து சாப்பிட்டு தீபாவளியை நன்றாக கொண்டாடுங்கள்" என்றான். அந்த பெண்ணும் " நன்றி உங்களின் வெல்ல பரிசுக்கு" என்று சொல்லிவிட்டு வெல்லத்திற்கான தொகையை கொடுத்து சென்றுவிட்டாள்.

தீபாவளி திருநாளும் வந்தது. கண்ணன் விடி காலையிலேயே எழுந்து எண்ணெய் தேய்த்து குளித்து, புத்தாடை உடுத்தி பட்டாசு விட்டுக்கொண்டிருந்தான். இடையிடையில் அம்மா செய்து வைத்த மைசூர் பாகு, ரவா லட்டு, அல்வா இவைகளை அவ்வப்போது வாயிலிட்டு ருசித்து பதம் பார்த்து கொண்டு இருந்தான். திடீரென வீட்டின் பொது வெராண்டாவில் அவன் இரண்டு பேர்களை கண்டான். அதில் ஒரு பள்ளி படிக்கும் சிறுவன் கண்ணன் வீட்டில் குடியிருக்கும் தம்பதியினரின் மகன். இன்னொருவர் யார் என்று பார்த்தான், மயக்கமும் இன்பமும் ஒருசேர கொண்டான் கண்ணன். அது வேறு யாரும் இல்லை. அவன் கடையில் வெல்லம் வாங்கி சென்ற அழகான இளம்பெண்தான். அந்த பெண்ணும் கண்ணனை கண்டதும் ஆச்சர்யப்பட்டாள். கண்ணன் சமாளித்து கொண்டு " அட நீங்களா, தீபாவளி நல்வாழ்த்துக்கள்" என்றதும் அந்த பெண்ணும் " உங்களுக்கும் தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள்" என்றாள்.

பிறகு என்ன நடந்தது, வெறும் புஷ்வாணமும் சங்குசக்ரமும் கம்பிமத்தாப்பும் மட்டும்தானா ஒளிர்ந்தது. கண்ணனுக்கு கை கால் பிடிபடவில்லை. அம்மாவிடம் கேட்டான் " வாடகை காரர்களுக்கு இனிப்பு பலகாரம் கொடுத்து விட்டாயா" என்று. அம்மா சொன்னாள் " இதோ எடுத்து வைத்துக்கொண்டிருக்கிறேன் இப்போது சென்று கொடுக்க வேண்டும்" என்றாள். கண்ணன் " அம்மா நீ ரொம்பவும் வேலை செய்த வண்ணம் இருக்கிறாய். நான் சென்று கொடுத்துவிட்டு வருகிறேன்." என்று சொல்லிவிட்டு பலகார தட்டுடன் குடித்தனக்காரர்கள் வீட்டில் நுழைந்தான். அழகிய இளம் பெண் தான் அவனை வரவேற்றாள். தட்டிலிருந்து ஒரு ரவா லட்டுவை எடுத்து அவளிடம் கொடுத்து " இது உங்களுக்கு என் ஸ்பெஷல் ஸ்வீட் " என்று சொல்லி கொடுத்தான். கொடுக்கையில் கொஞ்சமாக அவளது கையின் ஸ்பரிசத்தையும் உணர்ந்தான். அவளும் நன்றி சொல்லி லட்டினை எடுத்து கொண்டு தட்டை உள்ளே சென்று கொடுத்து வந்தாள். ரவா லாடடை புட்டு கொஞ்சம் கண்ணனுக்கு கொடுத்தாள். கண்ணன் மெய்மறந்து போனான்.
" இது நான் கூடுதலாக கொடுத்த வெல்லத்திற்கா" என்று புன்சிரிப்புடன் கேட்டான். அவள் " அப்படித்தான் என்று வைத்துக்கொள்ளுங்கள். ஆனால் இது சர்க்கரை போட்ட லட்டு" என்று கனிவாக சொன்னாள்.

அதன் பிறகு அவளை பற்றி சில விஷயங்களை தெரிந்து கொண்டான். அவள் பெயர் ராஜேஸ்வரி. பத்தாவது வரை படித்து இப்போது வீட்டில் சும்மா தான் இருக்கிறாள், அவள் ஊரான கிருஷ்ணகிரியில். அவளுடைய சித்தி சித்தப்பா வீட்டிற்கு வந்து கொஞ்ச நாள் தங்கி பிறகு மீண்டும் ஊர் திரும்புவாள் என தெரிந்து கொண்டான். எந்த ஒரு பொருளானாலும் ராஜேஸ்வரி தான் வந்து கண்ணன் கடையில் வாங்கி செல்வாள். இரண்டு வாரத்திற்குள் கண்ணன் அவளிடம் இன்னும் அதிகம் நெருங்கி பழக ஆரம்பித்தான். அவன் அப்பா கடையில் இல்லாதபோது தான் ராஜேஸ்வரி அவன் கடைக்கு வருவாள். அவளுக்கு மளிகை சாமான்களை கொடுக்கும்போது அவள் கைகளை பற்றியவாறு கொடுப்பான். அவளும் அவனிடம் சிரித்து கலகலப்பாக பேசுவாள். வார விடுமுறையான ஒரு வியாழன் அன்று கண்ணனும் ராஜேஸ்வரியும் அருகில் உள்ள ஒரு பூங்காவுக்கு சென்றனர். ஒரு பெஞ்சில் இருவரும் முதலில் சற்றே ஒதுங்கி உட்கார்ந்துகொண்டனர். ஒரு மணி நேரம் கடந்தது. இருவர் இடையில் உள்ள இடைவெளி குறைந்தது. பின்னர் இருவரும் ஒருவரை ஒருவர் உரசிக்கொண்டு பேசிக்கொண்டனர். கண்ணன் மெல்ல தனது வலது கையை அவளது தோளின் பின்புறம் கொண்டு சென்று அவளின் வலது தோளின் ஸ்பரிசத்தை உணர்ந்து மயங்கினான். அவளும் அவ்வப்போது அவனின் வலது தொடையை தொட்டு தொட்டு விளையாடினாள். யாரும் அங்கே நடமாடாத வேலையில் ஓரிருமுறை கண்ணன் அவளின் தன்பக்கம் இழுத்து நெருக்கி கட்டிக்கொண்டான். ராஜேஸ்வரின் உடல் மிகவும் வெப்பம் என்பதை உணர்ந்தான். இப்படியாக இரண்டு மணி நேரமாகியது. ராஜேஸ்வரி சொன்னாள் " கண்ணா, உன்னை சந்தித்ததில் எனக்கு மிகவும் இன்பம். இன்னும் ஒரு மாதம் நான் இங்கே இருப்பேன். அதன் பிறகு என் அப்பா அம்மா வந்து என்னை மீண்டும் சேலம் கூட்டி சென்றுவிடுவார்கள்" என்றாள். கண்ணன் "ராஜி, அப்படி சொல்லாதே.நீ எப்போதும் இங்கேயே இருக்க வேண்டும். நாம் அடிக்கடி சந்திக்க வேண்டும். சந்தோஷமாக பேச வேண்டும்" என்றான்.

இருவரும் பின்னர் வீடு திரும்பினர். ராஜேஸ்வரி சற்று வேகமாக முதலில் அவள் வீட்டிற்கு சென்றாள். இரு நிமிடங்கள் கழித்து கண்ணனும் வீட்டினில் நுழைந்தான். அவன் அம்மா அவனை கேட்டாள் " கண்ணப்பா, நீ கடையிலும் சரியாக வேலை செய்வதில்லை. வேலையும் தேடவில்லை. இப்படியே இருந்தால் என்ன ஆவது உன் வருங்காலம்" என்றாள். கண்ணன் " நீ கவலை படாதே அம்மா. எனக்கு வருங்காலம் நல்லபடியாகவே அமையும் என்றான்".

ஒரு நாள் கண்ணன் வேலை விஷயமாக வெளியில் சென்றுவிட்டு வீடு திரும்பினான். வீட்டின் கொல்லை புறம் சென்றான் கால்களை கழுவ. அப்போது அவன் கண்ட காட்சி அவனை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ராஜேஸ்வரி தோய்க்கும் கல்லில் அமர்ந்து பின் வீட்டு மாடியை பார்த்த வண்ணம் இருந்தாள். அவனுடைய வீட்டுக்கு பின்வீட்டின் மாடியில் ஒரு இளைஞன் ராஜேஸ்வரியை பார்த்து சைகை மொழியில் ஏதோ சொன்னான். பின் இருவரும் பார்த்து சிரித்து கொண்டனர். கண்ணன் இவர்களை நோக்கியதை அந்த இவர்கள் அறியவில்லை. கண்ணன் ஓசை செய்யமல் கால்களை கழுவிக்கொண்டு வீட்டுக்குள் சென்றான்.

அடுத்த நாளே எப்போதும் போல் மளிகை சாமான்கள் வாங்க ராஜேஸ்வரி இவன் கடைக்கு வந்தாள். ஒன்றும் தெரியாதது போல் கண்ணனும் நடந்து கொண்டான். ஏதோ ஒருமுறை என்று முன்தினம் நடந்ததை மறக்க நினைத்தான். அவளிடம் எப்போதும் போல் நெருங்கி பேசினான். மீண்டும் ஒரு நாள் இருவரும் பூங்கா சென்று வந்தனர். அதன் பிறகு மூன்று நாட்கள் கழித்து கண்ணன் மீண்டும் ஒருமுறை ராஜேஸ்வரியையும் பின் வீடு இளைஞனையும் சிரித்து பழகுவதை கண்டான். ராஜேஸ்வரி வாளியிலிருந்து கொஞ்சம் தண்ணீரை எடுத்து அந்த இளைஞனை நோக்கி வீசினாள். அவன் தன் உடல் மழையில் நனைவது போல் நடித்து ஆஅ ஊஊஊ என்றான். அவன் அவளிடம் ஏதோ கெஞ்சி கேட்க ராஜேஸ்வரி தோய்க்கும் கல்லின் மீது அமர்ந்து மெல்ல தன் பாவாடையை தூக்கி முழங்கால்கள் தெரிகிறமாதிரி வைத்து கொண்டாள். அப்போது அவளை அவள் வீட்டில் யாரோ அழைத்தார்கள். உடனே அந்த இளைஞனை பார்த்து சிரித்து விட்டு வீட்டுக்குள் சென்று விட்டாள். கண்ணன் ஒளிந்திருந்து அவளை கவனித்ததை அவள் அறியவில்லை. ஆனால் நம்ம கண்ணன் நன்கு அறிவானே. அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. ராஜேஸ்வரி ஏன் இப்படி நடந்து கொள்கிறாள் என்று.

இரண்டு நாட்கள் கழித்து ராஜேஸ்வரி கடைக்கு வந்தாள். எப்போதும்போல் பேச தொடங்கினாள். ஆனால் கண்ணனுக்கு அவளுடன் எப்போதும்போல் மகிழ்ச்சியுடனும் குதூகலத்துடனும் பேசமுடியவில்லை. அவளே அவனிடம் கேட்டாள் " கண்ணா, இன்னிக்கு நீ ஏன் உம்முனு இருக்கே. நீ அப்படி பட்ட ஆள் இல்லையே". கண்ணன் " அதெல்லாம் ஒண்ணும் இல்லை ராஜி. உடம்பு கொஞ்சம் சுகம் இல்லாமல் இருக்கிறது" என்றான். ராஜேஸ்வரி சளைத்தவளில்லை"இல்லை கண்ணா உன் மனம் சரியில்லை என்றுதான் எனக்கு நிச்சயமாக தோன்றுகிறது. எதுவானாலும் என்னிடம் மனம் திறந்து சொல்"
கண்ணனுக்கு அதற்கு மேலும் பொறுமை இல்லை. " ராஜி என்று இனி நான் உன்னை ஆசையாக அழைக்க எனக்கு ஒரு மாதிரி இருக்கிறது." " என்ன கண்ணா, இந்த மாதிரி பேசுகிறாய். கொஞ்சம் புரியும்படியாதான் சொல்லேன்". மிகவும் சோகமான தழுதழுத்த குரலில் கண்ணன் அவன் இரண்டு முறை அவள் பின் வீடு இளைஞனிடம் சல்லாபம் செய்ததை பற்றி சொல்லி முடித்தான். ராஜேஸ்வரி அதிகம் முக மாற்றம் இல்லாமல் சொன்னாள் " கண்ணன், நீ சொல்வது அனைத்தும் உண்மையே. ஆனால் ஒரு விஷயம் உனக்கு தெரியாது. அவன் பேரும் கண்ணன்தான். ஒரு முறை அவனது அம்மா எங்க வீட்டுக்கு வந்தாங்க. அவங்க கண்ணனுக்கு கல்யாணமாகி ஒரே வருடத்தில் அவன் மனைவி புற்றுநோய் வந்து இறந்து விட்டாளாம். அந்த அதிர்ச்சியில் கண்ணன் பேசும் சக்தியை இழந்து சித்தபிரமை பிடித்தவன் போல்தான் இருக்கிறானாம். எந்த பெண்ணை பார்த்தாலும் அவன் மனைவி போல் நினைத்து ஏதாவது சைகை மொழியில் சொல்லி கொண்டு இருக்கிறானாம். அதை உறுதி செய்யவே நான் கொல்லை புறத்தில் அவ்வப்போது இருப்பேன். அந்த கண்ணன் நான்கு ஐந்து தடவை மாடிக்கு வந்து என்னை பார்த்து அவன் அம்மா கூறியது போலவே சைகைகள் செய்தான். நம்ம கண்ணன் அப்போது கேட்டான்" கேட்க மிகவும் வருத்தமாக உள்ளது. ஆனால் நீ ஒருமுறை உன் பாவாடையை விலக்கி உன் முழங்கால்களை அவனுக்கு தரிசனம் கொடுத்தாயே. எதற்காக?" ராஜேஸ்வரி சொன்னாள்" கண்ணா, மாடி வீட்டு கண்ணன் சைகையில் அவ்வாறு செய்யுமாறு சொன்னான். நான் அப்படி கால்களை காட்டியபோது அவன் தெய்வத்தை கும்பிடுவது போல் என் கால்களை பார்த்து ஒற்றிக்கொகொண்டான். அதை நீ கவனிக்கவில்லையா". நம்ம கண்ணன் அதை கவனிக்கவில்லை என்பது உண்மையே. கண்ணன் வருத்தத்துடன் கூறினான் " ராஜி , உன் செயல்களின் உள்நோக்கத்தை இப்போது புரிந்து கொண்டேன். ஆனால் நீ இதை என்னிடம் ஏன் மறைத்தாய்? ராஜி சொன்னாள் " கண்ணா, இன்னும் ஒரு வாரத்தில் என் பெற்றோர் வந்து என்னை மீண்டும் ஊருக்கு கூட்டிச்செல்வார்கள். அதன் பிறகு நான் மீண்டும் உன்னை பார்க்க முடியுமா என்று தெரியாது. ஏனெனில் எனக்கு எங்க ஊரிலேயே மாப்பிளை பார்த்து திருமணம் செய்துவைக்க என் பெற்றோர்கள் முடிவு செய்துவிட்டார்கள். அப்படி இருக்கையில் பிறகு ஏன் இந்த விஷயத்தையெல்லாம் சொல்லி உன்னை குழப்பவேண்டும் என்றுதான் உன்னிடம் கூறாமல் இருந்தேன்"
கண்ணன் பதைத்து போனான். " ராஜி உன் பெற்றோர்கள் இங்கு வரும்போது என் பெற்றோர் மூலமாக உன்னை எனக்கு பெண் கேட்க சொல்கிறேன்". ராஜி அதற்கு மறுப்பு தெரிவிக்கவில்லை.
ஒரு வாரத்தில் அவளது பெற்றோர்கள் வந்தனர். கண்ணனின் பெற்றோர்கள் அவர்களை சந்தித்து கண்ணனுக்கு அவர்கள் பெண்ணை கேட்டனர். என்ன ஆயிற்று என்று தெரியவில்லை. அவர்கள் உடனடியாக அதற்கு சம்மதித்தனர். ஆனால் வறுமையின் காரணமாக அவர்களால் வரதட்சணை மற்றும் நகைகள் எதுவும் தர முடியாது என்றபோது, அங்கே இருந்த கண்ணன்" எனக்கு உங்கள் பெண் ராஜேஸ்வரி மட்டும் போதும். வேறு எதுவுமே தேவை இல்லை என்றபோது ராஜேஸ்வரி அவளின் பெற்றோர்கள் மட்டும் அல்ல, கண்ணனின் பெற்றோர்களும் அவனை வெகுவாக பாராட்டினார்கள், எவ்வளவு நல்ல உதவும் மனம் என்று.

அடுத்த இரு மாதங்களில் கண்ணன் ராஜேஸ்வரி திருமணம் இனிய முறையில் நிறைவேறியது. கண்ணனின் பெற்றோர்கள் நிலங்களை கவனிக்க அவர்கள் சொந்த ஊருக்கு செல்லப்போவதாகவும் இனி கண்ணன்தான் மளிகை கடைக்கு சொந்தக்காரன் என்றும் கூறி விட்டனர். அவன் தந்தை அவனிடம் கூறினார்" கண்ணா , எல்லாம் சரிதாம்பா.ஆனால் இனியாவது வரும் போகும் பெண்களுக்கு எடையை காட்டிலும் அதிகமாக வெல்லமோ சர்க்கரையோ கொடுக்காதே" ராஜேஸ்வரியும் கண்ணனும் அவன் தாயும் கூட இதை கேட்டு வாய் விட்டு சிரித்தனர். அவர்களின் முதல் இரவில் ராஜி பாலில் சர்க்கரை போடாமல் கண்ணனுக்கு கொடுத்தாள், அவனை திகைக்க வைக்க. ஆனால் கண்ணன் அவளை விட கில்லாடி தான். பாலை கொஞ்சம் அருந்தி விட்டு தன் சட்டை பையிலிருந்து ஒரு சின்ன பொட்டலத்தை எடுத்து பாலில் கலந்து ராஜிக்கு கொடுத்தான். " குடி ராஜி செல்லமே. கொஞ்சம் பிரவுன் சுகர் தான் கலந்து இருக்கேன். பிரவுன் சுகர் என்றால் போதை பொருள் என்று பயம் வேண்டாம். சாக்லேட் கலரில் இருக்கும் அன்றாடம் உபயோகிக்கும் சர்க்கரை தான் அது."

வாங்க நாமும் இப்போதிலிருந்து பிரவுன் சுகர் போட்டு சூடாக பில்டர் காபி குடிக்கலாம்.

ஆனந்த ராம்

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (25-Oct-21, 7:27 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 180

மேலே