அறிவாற்றுப்படை

ஒளவைக் கிழவியவள் அமிழ்தான சொற்கிழவி
கொவ்வைப்பழம் போலச் சுவையாகப் பாட்டிசைப்பாள் கள்ளங்கபடமில்லா உள்ளமது கொள்ளை கொள்ளத்
தெள்ளு தமிழினிலே பிள்ளைக் கவியிசைப்பாள்...

ஆத்திசூடி, கொன்றைவேந்தன் வாக்குண்டாம் நல்லவழி
நலமாக நானிலத்தில் நாம்வாழ எழுதி வைத்தாள்
இன்னுமின்னும் எத்தனையோ எமக்களித்த பாட்டியவள்
அரசனையும் ஆண்டியையும் முருகனையும் பாடிவைத்தாள்...

அன்றொருநாள் முருகனுக்கு ஒருபொழுதும் போகவில்லை
ஒளவையுடன் விளையாட அவதார மெடுக்கின்றான்
சிறுவன் வடிவினிலே மயிலேறி வலம்வந்து
நாவல் மரமதிலே நயமாக அமர்கின்றான்...

தாகத்தால் நாவறண்டு சோகத்தால் மனந்துவண்டு
முதுமையினால் உடல் தளர்ந்து பசியதனால் நடைதளர்ந்து
வேகக் கொதிக்கின்ற வெயிலினிலே தான்நடந்து
நாவல் மரநிழலில் வந்துநின்றாள் நம்கிழவி...

ஆற அருகமர்ந்து அண்ணார்ந்து பார்க்கின்றாள்
நூறு பழமதிலே குலைகுலையாய்த் தெரிகிறது
பாலனவன் மேலிருந்து பழமதனைச் சுவைத்தவிதம்
பாட்டியவள் நாவினிலே நீரூறி நனைகிறது...

யாரப்பா நீயிங்கே ஏது புரிகின்றாய்?
ஏனிங்கே வந்தனையோ! என்று வினவுகின்றாள்
சிறுவன் சிரிக்கின்றான் பாட்டியும் சிரிக்கின்றாள்
இருவரின் சிரிப்பொலியில் இன்னிசையே மலர்கிறது...

பழுத்த பழமதனை ருசித்த சிறுவனிடம்
போடப்பா எனக்குமொன்று எனவேண்டி இரக்கின்றான்
கபட மனத்துடனே கண்ணடித்த சிறுமுருகன்
சுட்ட பழம் அதுவோ! சுடாத பழம் தானோ...!
எப்படித்தான் வேண்டுமென்று ஏளனமாய்க் கேடகின்றான்...

சிறுவனது புதிரதனைப் புரியாத கிழவியவள்
இரகசியமும் இதிலுளதோ சுட்டபழம் போடென்றாள்
மறுபடியும் சிரித்தவன் மரக்கிளையை உலுப்பிவிட
முதிர்ந்த பழங்களெல்லாம் பொலபொலவென உதிர்கிறது...

உதிர்ந்த பழத்திலொன்றை வாஞ்சையுடன் குனிந்தெடுத்து
ஒட்டிய மணல்கல் ஊதுகிறாள் வாயதனால்
இதைப்பார்த்த இளமுருகன் இன்னும் சிரித்துவிட்டு
நன்றாகச் சுடுகிறதா? இன்னும் இன்னும் ஊதென்றான்...

சிறுவனது விகடமதைப் புரிந்து கொண்ட பெண்கவி - தன்
அறியாமை தனையுணர்ந்து அவமானம் அடைகின்றாள்
இன்னும் படிப்பதற்கு உலகளவு இருக்கிறது
கற்றது கைம்மண்ணளவு என்பதனை உணர்ந்துகொண்டாள்...

எழுதியவர் : கௌதமன் நீல்ராஜ் (1-Nov-21, 3:55 pm)
சேர்த்தது : கௌதமன் நீல்ராஜ்
பார்வை : 34

மேலே