பொய்காட்டி உள்ளம் புரைகாட்ட மேவிநிற்றல் பாமரமென்று ஓர்க பரிந்து - இருப்பு, தருமதீபிகை 916
நேரிசை வெண்பா
பொய்காட்டி உள்ளம் புரைகாட்டப் பூதலத்தில்
மெய்காட்டி ஓர்மகன் மேவிநிற்றல் - கைகாட்டி
மாமரம்போல் ஆமவன்றான் மக்கள் உருவமைந்த
பாமரமென்(று) ஓர்க பரிந்து. 916
- இருப்பு, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்
பொருளுரை:
உள்ளம் புன்மையாய் உணர்வுநலம் இன்றி இவ்வுலகில் ஒருவன் ஓங்கி நிற்பது மனித உருவில் மருவியுள்ள நெடிய ஒரு கைகாட்டி மரத்தின் பாங்கேயாம் என்கிறார் கவிராஜ பண்டிதர்.
மனிதப் பிறவி பெறுதல் அரிதாயினும் அந்தப்பிறப்பை அடைந்து வந்துள்ள மக்கள் பலர் மாக்கள் போலவே இழிந்து உழல்கின்றனர். அறிவுநலம் குன்றி அவல நிலைகளில் அலைந்து கண்டதையே கண்டு உண்டதையே உண்டு வீணே வளர்ந்து நீண்டு பூமிக்குச் சுமைகளாய் நின்று பிறவிப்பயன் யாதும் காணாமல் அழிந்து ஒழிந்து போகின்றார்.
இழிந்த மிருகங்களின் இயல்பும், உயர்ந்த மனித உருவமும் மருவியிருத்தலால் மானிடர் என்று மதிக்க முடியாமலே பலர் ஈனமடைந்து ஊனமாய் உழந்து திரிகின்றனர்.
பலருடைய செயல் இயல்கள் அவருடைய பழவினை நிலைகளை வெளியிடுகின்றன. மனித விலங்குகளாய் இயங்கி வருவது வியந்து காண வருகிறது. மாட்டுப்பாடும் மனிதவாழ்வும் கூட்டுறவுகளாய்க் கூடி நிற்கின்றன. முன்னம் நல்ல அறிவாளிகளை மதித்துப் போற்றாதவர் பின்னர்ப் பொல்லாத மடையர்களாய்ப் புலையடைய நேர்ந்தனர். கரும விளைவுகள் மருமமாய்க் தொடர்ந்து எவ்வழியும் அடர்ந்து படர்கின்றன. விதி எற்றித் தள்ளியபடியே சீவர்கள் வீழ்ந்து வாழ்ந்து வருகின்றனர்.
கலிவிருத்தம்
(விளம் விளம் மா கூவிளம்)
மதிநலம் உடையரை மதித்தி டாதவர்
கதிகலம் இழந்துபின் கடையர் ஆகுவர்;
விதிமுறை ஒழுகிய விழுமி யோர்களைத்
துதிபுரி யாதவர் சுமட ராவரே. 1
அன்னியன் மனைவியை அவாவி நோக்கினான்
மன்னிய தீமையால் மறுபி றப்பினில்
தன்இரு கண்ஒளி இழந்து தாழ்குவான்;
முன்னிய தீவினை முடுகிக் காயுமே. 2
பாலிய விதவையாய்ப் பரிந்து நிற்பவர்
கோலிய பாவமே(து)? என்னின் கொண்டவன்
வேலியாய் இருக்கவும் விலகி வேறொரு
காலியைக் கரவினில் கலந்த தீமையே. 3
களியராய் வளத்தொடு களித்து வாழுங்கால்
அளியராய்ப் பிறர்க்கரு ளாத தீமையால்
எளியராய் இவ்வழி இழிந்து நின்றுளார்
ஒளியராய் உண்மையை உணரின் உய்குவார். 4 கரும கீதை
வினைகளின் விளைவுகளை விளக்கி வந்துள்ள இந்தப் பாசுரங்கள் இங்கே கூர்ந்து சிந்திக்கத்தக்கன. மடமை, சிறுமை, குருடு, வறுமை முதலிய இழிநிலைகளில் அழுந்தி உழல்பவருடைய பழவினை வகைகளை இவை தொகையாய் வரைந்து காட்டியுள்ளன.
நெஞ்சம் நிலை குலைந்து ஒருமுறை இழிந்தவர் பின்பு வருபிறவிகள் தோறும் இழிவடைய நேர்கின்றனர். அதிலிருந்து தெளிந்து உயர்வடைய வேண்டுமாயின் நாளும் நல்ல பழக்கங்களை நன்கு பழகி எங்கும் இனியராய் ஒழுகி வர வேண்டும்.
முயன்று பயின்று வருமளவே மனிதன் உயர்ந்து வருகிறான். முயலாமலும், பயிலாமலும் நின்றுவிடின் அவன் பிறவி பழுதாயிழிந்து படுகிறது. நல்ல மனப்பயிற்சியே எல்லா உயர்ச்சிகளுக்கும் மூலகாரணமாயுள்ளது. எவனுடைய உள்ளம் ஊக்கி உயர்ந்து வருகிறதோ அவனை நோக்கி ஆக்கங்கள் யாவும் விரைந்து வருகின்றன. தருமங்களும் சார்கின்றன.
Constancy is the foundation of virtues, [Bacon)
மனவுறுதி தருமங்களின் ஆதாரமாயுளது என்னும் இது இங்கே அறியவுரியது. மனம் நல்ல நெறிகளில் பழகிக் கருதிய கருமங்களை உறுதியாய் முடித்துவரின் அந்த மனிதன் அதிசய நிலைகளில் உயர்கிறான் உள்ளத்தின்படியே உலகத்தில் யாவரும் உலாவுகின்றனர். அந்தக்கரணங்கள் அற்புத யந்திரங்களாய் அமைந்திருக்கின்றன; அவை நலமாயின் யாவும் நன்மையாம்.
கூரிய அறிவுத் தெளிவும் சீரிய மனப்பண்பும் மனிதனை உன்னத நிலையில் உயர்த்தி ஒளிபெறச் செய்கின்றன. அவை ஒருமையாய் மருவிய அளவே பெருமைகள் பெருகி வருகின்றன. நல்ல நீர்மையிலையேல் பொல்லாப் புலைகளே புகும்.
நேரிசை வெண்பா
மனித வுருவில் மருவி வரினும்
இனிய இயல்கள் இலையேல் - இனியாத
காட்டு விலங்காய்க் கழிவன் கடையான
மாட்டு மரபே மதி.
வீட்டுக்கு விளக்கு ஒளி போல் மனிதக் கூட்டுக்குள் உணர்வு ஒளி புரிகின்றது; அது தெளிவாய் அமையவில்லையானால் அவன் வாழ்வு இளிவாகின்றது. இனிய இயல்பும் உணர்வும் நலமாய்ப் பெருகிவரும் அளவு மடமை இருள் நீங்கி மதி ஒளி ஓங்கும்.