Madras நல்ல Madras

நான் பிறந்து, S.S.L.C வரை படித்து, வளர்ந்தது எல்லாம் அரியலூர் என்ற அன்றைய ஒரு சிறு கிராமத்தில்தான். ( அது இன்று பெரிதாய் ஒரு அரியலூர் மாவட்டமாக வளர்ந்துவிட்டது அனைவரும் அறிந்ததே). சிறு வயதில் எனக்கு என் கிராமம் பெரிதாக வளரவேண்டும் என்ற ஆசை. நான் என்பள்ளிப் படிப்பு வரை பார்த்த இருபெரிய நகரங்கள் திருச்சியும், மதுரையுமாகும். அங்கே பல சினிமாக்கொட்டகைகள் இருப்பதைப் பார்த்து நம் ஊர் எப்போது இவ்வளவு பெரிதாக வளர்ந்து பல நிரந்தர சினிமாக் கொட்டகைகள் வரும் என்று ஆசைப்பட்டேன். என்னைப் பொறுத்த வரையில் அன்று தார் ரோடு, சினிமாக் கொட்டகைகள் தான் ஒரு ஊர் பெரிதாவதற்கான அடையாளம். ஏனென்றால் எங்கள் ஊரில் அப்போது பெர்மனன்ட் சினிமாக் கொட்டகைகள் கிடையாது. வெறும் டென்ட் கொட்டகைகள்தான். மெயின் ரோடு தவிர மற்ற ரோடுகளெல்லாம் கப்பி ரோடுகள்தான்.

பிறகு மேல்படிப்புக்குத் திருச்சிக்கும், கோயம்புத்தூருக்கும் போனேன். நான் அது வரையில் சென்னையைப் பார்த்ததில்லை. அங்கே போய்விட்டு வந்த ஓரிரு நண்பரகளும், உறவினர்களும் சென்னையைப் பற்றி சொல்லக் கேட்டிருக்கிறேன். அவ்வாறு கேட்டதிலிருந்து சென்னையின் மீது தீராத ஒரு காதல் கொண்டேன். இது ஒருதலைக்காதலா இல்லை தறுதலைக் காதலா என்று எனக்குத் தெரியாது. என் நண்பர்கள் சொன்னதிலிருந்து சென்னை பீச்சும், மாங்காய், தேங்காய், பட்டாணி சுண்டலும், அந்த அலை ஆர்ப்பரிக்கும் நீலக்கடலும் என் நெஞ்சைக் கொள்ளை கொண்டு, சென்னையை வாழ்நாளில் ஒருமுறையாவது பார்த்துவிட வேண்டும் என்று என் மனம் துடிக்க ஆரம்பித்தது.
**********
திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரியில் அன்றைய இண்டர்மீடியட் படிப்பை முடித்து விட்டு அதற்குமேல் BA(Hons) Maths எடுத்துப் படித்துக்கொண்டிருந்தபோதுதான் என் உறவினர்கள் என்னை இஞ்சினீரிங் படிப்புக்கு அப்ளை செய்யச்சொன்னார்கள். எனக்கு இஞ்சினீரிங் படிப்பதில் கிஞ்சித்தும் இஷ்டமில்லை. ஆனால் இந்தப்படிப்புக்கான செலக்க்ஷன் அப்போது சென்னையில்தான் நடக்கும். எனவே இதை ஒரு சாக்காக வைத்துக்கொண்டு சென்னைக்குப் போகலாமே என்று நினைத்து இஞ்சினீரிங் கல்லூரியில் சீட் கிடைக்கும் என்ற நம்பிக்கை சிறிதுமின்றி அப்ளை செய்தேன். இதனால் எனது பெற்றோர்கள் திருப்தி அடைந்தனர். ஆனால் என்னைப் பொறுத்த வரையில் இந்த இண்டர்வ்யூ ஒரு சாக்கு. அப்படி தப்பித்தவறி இஞ்சினீரிங் சீட் கிடைத்தால் வேண்டாம் என்று சொல்லிவிடலாம் என்ற அசட்டுத் தைரியத்துடனும், நம்பிக்கையுடனும் இண்டர்வ்யூவுக்கு அழைக்கப்பட்ட போது சென்னை கிளம்பினேன். இது குறித்தும் பிறகு என்ன நடந்தது என்பது குறித்தும் ஏற்கனவே நான் “ My engineering college Interview” என்ற என் கட்டுரையில் விவரமாக குறிப்பிட்டுள்ளேன். அது இப்போது தேவை இல்லை.


இண்டர்வ்யூவிற்று சென்னைக்கு வந்ததும் முதலடியாக இண்டர்வ்யூவை அட்டெண்ட் செய்துவிட்டு( அப்படி இல்லை என்றால் என் பெற்றோர்களும், சுற்றத்தினரும் என்னை ஒரு வழி செய்துவிடுவார்கள்) சென்னை மாநகர் சுற்றும் படலத்தை என் நண்பனுடன் ஆரம்பித்தேன்.
“ஆ, எவ்வளவு பெரிய ஊர்?”. ( அன்று சென்னை இப்போதிருக்கும் சென்னையில் மூன்றில் ஒரு பகுதிதான் இருக்கும்) என்ற பிரமிப்பிலிருந்து நான் மீளவில்லை. முதல் வேலையாக
டிராமில் முதல் முறையாக என் நண்பனுடன் பீச்சுக்குப் போனேன். ( அப்போது டிராம் சென்னையில் ஓடிக்கொண்டு இருந்தது. கச்சேரி ரோடு, ராயப்பேட்டா ஹை ரோடிலெல்லாம் டிராம் ஒடிக்கொண்டிருந்தன என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். அது ஓடிக்கொண்டிருக்கும் போதே யார் வேண்டுமானாலும் அதில் ஏறலாம், அதிலிருந்து இறங்கலாம். அவ்வளவு வேகமாக ஓடக்கூடியது. ஒரு மரவட்டை ஊர்வதுபோல் அது ரோட்டில் புதைக்கப்பட்ட தண்டவாளங்களில் ஊரும். அடுத்த ஆண்டே டிராம் நிறுத்தப்பட்டுவிட்டது.) என் அன்றைய உலக மகா ஆசையான கடலும், பீச்சும் என்னை வேறு உலகத்திற்கு எடுத்துச் சென்றன. ஆகா! என்ன அற்புதமான கடல். எவ்வளவு பெரியது? அதில் வரும் அலைகளில் கால் வைத்தபோது நிஜமாகவே நான் சொர்க்கத்தில் மிதந்தேன். அன்றைய நிமிட அனுபவத்தைச்சொல்ல வார்த்தைகள் கிடையாது. சிறு குழந்தைபோல கடற்கரை ஓரம் நின்று என் கால்களைக் கழுவிப்போகும், தழுவிப்போகும் அந்த அலைகள் ஒவ்வொரு முறையும் எனக்கு இன்ப அதிர்ச்சியைத்தந்தன. வெள்ளை வெளேர் என்ற பரந்து விரிந்த மணற்பரப்பு. உலகிலேயே இரண்டாவது பெரிய கடற்கரை என்ற புகழ் எல்லாம் என்னைக் கிரங்க அடித்தன. (அன்று என் உள்ளத்தில் தோன்றிய உணர்வுகளை இன்று மோடி அவர்கள் தன்னுடைய அருமையான கவிதையால் வர்ணித்திருப்பதற்கு அவருக்கு என் மனமார்ந்த நன்றி)
அன்று அங்கு மக்கள் கூட்டம், இன்றைய கூட்டத்தின் கால் அளவு கூட இல்லாமற்போனாலும் எனக்கு அது ஒரு பிரம்மாண்ட கூட்டமாகத் தெரிந்தது.
அப்போது வந்த ஒரு சிறுவனின்” மாங்காய், தேங்காய், பட்டாணி” என்ற குரலைக் கேட்ட மாத்திரத்திலேயே என் நாவில் எச்சில் ஊறியது. உடனே ஆளுக்கு ஒரு பொட்டணம் வாங்கி சுவைக்க ஆரம்பித்தோம். அந்த சுவையும், இன்பமும் இன்று எந்த ஃபைவ் ஸ்டார் ஹோட்டலிலும் கிடைக்காது. என் ஜன்ம சாபல்யம் அடைந்து விட்ட திருப்தியில் இருந்த போது, அங்கே ஒரு வயதானவர் ( எவ்வளவு என்று எனக்குத்தெரியாது. அன்றைய நிலையில் அவரை வயதானவர் என்று தான் நான் கருதினேன்) “ஐயா, சாமி, தர்மம் பண்ணுங்க” என்றபடி ஒரு இடத்தில் அமர்ந்தபடி பிச்சை கேட்டுக் கொண்டிருந்தார். அன்று நான் நினைத்தேன் ” எவ்வளவு அதிருஷ்டம் செய்த பிச்சைக்காரர் இவர். உலகப்புகழ் பெற்ற பீச்சில் இருந்தபடி தினமும் இந்த நீலத்திரைக்கடலைப் பார்த்து அமர்ந்து, அந்த அலை ஓசைகளின் ஊடே பிச்சை எடுக்க எத்தனை அதிருஷ்டம் செய்திருக்க வேண்டும்” என்று. இருந்தால் இந்தப் பிச்சைக்காரரைப்போல இருக்க வேண்டும் என்று நினைத்தேன். (அப்போது எனக்குத் தெரியாது நான் பிறகு பல ஆண்டுகள் இந்த சென்னையில் கிட்டத்தட்ட அந்தப் பிச்சைக்காரனைப்போலவே வாழப்போகிறேன் என்று).
************
சென்னையில் வாழ்க்கைத் துவக்கம்
எதிர்பாராது இஞ்சினீரிங் சீட் கிடைத்தது. கோயம்புத்தூரில் GOVERNMENT COLLEGE OF TECHNOLOGY( GCT)யில் BE படித்தேன். பிறகு PWD யில் Junior Engineer ஆக சில இடங்களில் வேலை பார்த்தேன். அவ்வாறு வேலை பார்க்கும்போது நான் சென்னையிலும் வேலை பார்க்க நேர்ந்தது.
அப்பொழுது நான் மேற்படிப்பிற்காக கிண்டி பொறியியற் கல்லூரியில் சேர்ந்தேன். அந்த கிண்டி கல்லூரிக்கு அருகாமையில் உள்ள ரயில்வே ஸ்டேஷன் கிண்டி கிடையாது. சைதாப்பேட்டைதான். புதாதாக வெளியூரிலிருந்து கிண்டி கல்லூரிக்கு வருபவர்களுக்கு இது தெரியாததால் பல மாணவர்களும் சிரமத்துக்குள்ளாவது வழக்கம். அன்று கிண்டி ஊரின் ஏதோ ஒரு கோடியில் இருப்பதாக நினைப்பு. God forsaken land என்று நாங்கள் கூறுவது வழக்கம்.
அன்றிலிருந்து கிட்டத்தட்ட 57 ஆண்டுகள் தொடர்ந்தது எனக்கும் சென்னைக்குமான உறவு.
திருமணமாகும்வரை சென்னை வாழ்க்கையை நான் நன்றாக ரசித்தேன்.
இன்றைய பிரசிடென்சி கல்லூரிக்கு அடுத்து உள்ள சேப்பாக் மாளிகைதான் எங்கள் PWD ஆபீஸ். கேட்க வேண்டுமா? என்சீட்டிலிருந்து பார்த்தாலே பீச்சும் கடலும் தான். நான் எதைப்பார்க்க சிறுவயதில் மிகவும் ஆசைப்பட்டேனோ அந்த ஆசை நிறைவேறியது.
மற்ற சென்னைவாசிகளெல்லாம் பீச்சை சாயந்திரம் மாத்திரம்தான் பார்ப்பார்கள். ஆனால் நானோ பகல் முழுவதும் அதைப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தேன். ( வேலை செய்யவில்லையா என்று கேட்காதீர்கள். வேலை செய்துகொண்டே பீச்சை ரசிப்பேன்).
சென்னையில் நிறைய தியேட்டர்கள். நிறைய படங்கள். இவை என்சினிமா பார்க்கும் ஆசைக்கு தீனி போட்டுக்கொண்டிருந்தன.

ஆனால் திருமணமானவுடன்தான் சென்னையின் முழு உருவமும் புலப்படலாயிற்று. அப்போது என்னுடைய சம்பளம் மாதம் 216/- ரூபாய் தான். இட்டிலி ஒரு அணாதான். முழுச்சாப்பாடு ( இப்போதுபோல் அளவுச்சாப்பாடு அப்போது கிடையாது) கிட்டத்தட்ட எட்டணாதான். மொத்தமாக மாத டிக்கட் வாங்கிக்கொண்டால் ஒரு மாதத்திற்கு 28 ரூபாய் தான்.சினிமாவுக்கு 6 அணா சீட். நான் போன மிகப்பெரிய வகுப்புக்கு 15 அணாதான்..
அதுவரையில் நான் எனக்கு ஏன் இவ்வளவு சம்பளம் கொடுக்கிறார்கள் என்று நினைத்து ஆச்சரியப்பட்டேன். யாராவது சோகமாக முகத்தை வைத்துக்கொண்டு அவர்கள் குழந்தைக்கு உடல் நலம் சரி இல்லை என்றால் உடனே அவருக்கு முப்பதோ, நாற்பதோ கொடுத்துவிடுவேன். இப்படி பலருக்கு திரும்ப வாராக் கடனாகவும், தானமாகவும் கொடுத்து இருக்கிறேன். பாங்கில் அக்கௌண்ட ஓபன் செய்ய வேண்டும் என்ற எண்ணம்( அறிவு) கூட இல்லாமல் வாழ்க்கை என்னைக்கேட்காமலே அது பாட்டுக்க போய்க் கொண்டிருந்தது. ஆனால் என்னளவில் நான் அனாவசியமான செலவுகள் எதையும் செய்ய மாட்டேன். ஆறணா சினிமாதான் நான் செய்த செலவுகளுக்குள் மிகப் பெரிய தண்டச்செலவு.

கல்யாணமாகி குடும்ப வாழ்க்கை ஆரம்பமானவுடன்தான் தெரிந்தது பணத்தின் அருமை. சென்னையில் வீடு தேடும் படலம் ஆரம்பம் ஆயிற்று. எனக்கான நெருக்கடியும் ஆரம்பம் ஆயிற்று.
***************

திருவல்லிக்கேணி
மிகவும் பிரயாசைப்பட்டு, புரோக்கர்களைப் பிடித்து வீடு வீடாக ஏறி இறங்கி ஒவ்வொரு வீட்டுக்காரரும் போட்ட தலை சுற்ற வைக்கும் கண்டிஷன்களைக்கேட்டு, கடைசியில் ஒரு வழியாக திருவல்லிக்கேணி, பெரிய தெரு என்று சொல்லக்கூடிய ஒரு சிறிய தெருவில் ஒரு போர்ஷன் பிடித்தேன். அந்த வீட்டு சொந்தக்காரரும் பல கண்டிஷன்கள் போட்டார். வீட்டு வாடகைக்கு ரசீது தரமுடியாது என்பது அதில் ஒன்று. ரசீது இல்லாவிட்டால் நான் அரசாங்கத்திடமிருந்து வீட்டு வாடகை அல்லவன்ஸ் பெற முடியாது. எவ்வளவு கெஞ்சியும் அவர் ரசீது தர மறுத்துவிட்டார். உங்களை அரசாங்கமே நம்ப வில்லை என்றால் அதற்கு நான் என்ன செய்ய முடியும் என்றார் அந்தப் பெரிய மனிதர். அவர் அந்தக்காலத்தில் அந்த ஏரியாவில் பிரபலமான காங்கிரஸ்காரர். சொல்லப்போனால் காந்தியவாதியாம்..

வீடு பார்த்து என் மனைவியை மதுரையிலிருந்து அழைத்து வந்து, வீட்டில் அமர்த்தி சேப்பாக் ஆபீசுக்கு பொடிநடையாய் 15 நிமிடங்களில் போய்ச்சேர்ந்த எனக்கு , ஆபீசுக்குப் போய்ச் சேர்ந்ததும் சேராததுமாக ஒரு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. என் ஆபீஸ் நண்பர்கள் “ கங்கிராட்ஸ்” என்றார்கள். என் திருமணத்திற்காக அவ்வாறு வாழ்த்துகிறார்கள் என்று நினைத்தேன். பிறகு தான் தெரிந்தது அவர்கள் நான் சேப்பாக்கத்திலிருந்து கிண்டி பொறியியற் கல்லூரிக்கு மாற்றப் பட்டதற்காக என்னை வாழ்த்தினார்கள் என்று.
நான் விரும்பிய மாற்றம்தான் அது என்றாலும் அது வந்த நேரம் என்னை திகைக்க வைத்துவிட்டது. நாட்கணக்காக ஓடியாடித் தேடி வீடு பார்த்துப் புதுக் குடித்தனம் வைத்து கொஞ்ச நேரம்தான் ஆயிற்று. அதற்குள் டிரான்ஸ்ஃபரா? சேப்பாக் எங்கே?, கிண்டி எங்கே?. இரண்டுக்கும் இடைப்பட்ட தூரம் சுமார் 7 மைல். திருவல்லிக்கேணி பெரிய தெருவிலிருந்து கிண்டிக்குப் பஸ் மாற்றிப்போவதென்பது நடக்காத காரியம். ஏனென்றால் நாங்கள் மற்றக் கல்லூரிகளைப்போல் அல்லாது காலை 8:30 மணிக்கெல்லாம் கல்லூரியில் இருக்க வேண்டும். இந்த பதவி மாற்றம் நான் விரும்பிய மாற்றம் என்றாலும், அன்றைய நிலையில் எனக்கு இது பெருத்த ஏமாற்றமாகவே இருந்தது.

சரி. வேறு வழி இல்லை. நான் இந்த மாற்றத்திற்கு சம்மதித்தாக வேண்டும். எனவே அதற்கு ஏற்றாற்போல் ஒரு இடத்தில் வீடு பார்க்க வேண்டியதாயிற்று. .

ராஜா அண்ணாமலைபுரம்
அப்போது என்னுடன் PWD ஆபீசில் வேலை செய்த ஒருவர் ராஜா அண்ணாமலைபுரத்தில் அவர் வீட்டுக்கு அருகே ஒரு அவுட் ஹவுஸ் இருப்பதாகவும் ( அந்தக்காலத்தில் பிரசித்தியாக இருந்த டென்னிஸ் கிருஷ்ணன் வீட்டுக்குப் பக்கத்தில்) அதை எனக்கு ஏற்பாடு செய்து தருவதாகவும் கூறவே ராஜா அண்ணாமலைபுரம் திருவேங்கடம் தெருவிலிருந்த அந்த அவுட் ஹவுசில் குடியேறினேன். ( வாடகை 60 ரூபாய். என்மாத சம்பளத்தில் நான்கில் ஒரு பங்கிற்கு மேல்) அங்கிருந்து மந்தவெளி வந்து 5B பஸ் பிடித்து நான் கல்லூரி செல்வது எளிதாயிற்று.
அந்த அவுட்ஹவுஸில் குடியேறிய சிலமாதங்களில் என் மனைவியை தலைப்பிரசவத்திற்காக மதுரை அனுப்பநேரிட்டது.. எனவே வீட்டு சொந்தக்காரர்கள் உடனே வீட்டைக்காலி செய்யச் சொல்லி விட்டனர். காரணம் அவர்கள் அந்த அவுட் ஹவுஸில் தனியாக ஒரு ஆண் மட்டும் இருப்பதை விரும்பவில்லை. அவர்கள் வெளிப்படையாகச் சொல்லாவிட்டாலும் நான் தெரிந்து கொண்டது அந்த வீட்டில் அவர்களுக்குக் கல்யாண வயதுப் பெண் இருந்ததுதான். அது நியாயமாகப்படவே, நான் அவுட் ஹவுஸைக் காலி செய்ய சில நாட்கள் டயம் கேட்டேன். அவர்களும் ஒப்புக்கொண்டார்கள்.
*********
மைலாப்பூர்
ரூம் தேடும் படலம்
மனைவியை ஊருக்கு அனுப்பி ராஜா அண்ணாமலைபுரம் வீட்டைக் காலி செய்த பின் இப்போது நான் ஒண்டிக்கட்டையாக இருப்பதால், அடுத்தபடியாக ரூம் வேட்டையாடும் படலம் ஆரம்பமாகியது.
மைலாப்பூரை சல்லடை போட்டு சலித்து, கடைசியில் ஒரு வழியாக நான் தெற்கு மாட வீதியில் ( கிழக்குமாட வீதி சேரும் இடத்தில்) முதல் மாடியில் அறை எடுத்து மறுபடியும் பேசலர் வாழ்க்கையைத் துவங்கினேன். அங்கு ஓராண்டு இருந்தேன். (என்மனைவியின் உடல் நிலை காரணமாக அவள் மதுரையில் பல மாதங்கள் தங்க நேரிட்டது). எனவே ஒரு ஆண்டு முழுவதும் என் பேச்சலர் வாழ்க்கை தொடர்ந்தது.
அந்த ரூம் அந்த வீட்டின் மாடியின் ஒரு பகுதி. மற்றப் பகுதியில் வீட்டுக்கார ரும் அவர் குடும்பமும் குடி இருந்தார்கள்.
அந்த வீட்டின் சொந்தக்காரர் ஒரு வைஷ்ணவச்செட்டியார். நல்ல மனிதர். ஆனால் அவர் ஒரு அதி தீவிர வைஷ்ணவர். அந்தத் தெரு முக்கில் பல நாட்கள் கபாலீஸ்வரர் கோயிலிலிருந்தும், கேசவப்பெருமாள் கோயிலிலிருந்தும் சுவாமி ஊர்வலங்கள் வருவதுண்டு. அப்படி ஒரு நாள் ஒரு ஊர்வலம் வரும்போது அவர் பயபக்தியுடன் கைகளைக் கூப்பிக் கும்பிட்டபடி மாடி பால்கனிக்கு வந்து கன்னத்தில் போட்டுக்கொண்டவர் திகைத்தவராக “ அடேடே, இது பெருமாள் இல்லையா? கபாலிகோயில் சாமியா? “ என்றபடி ஏதோ பெரிய தப்புப் பண்ணிவிட்டவர்போல தன் கன்னங்களைத் துடைத்துக்கொண்டு விருட்டென்று உள்ளே போனார். என்ன ஆயிற்று என்று கேட்டதற்கு , இது கபாலீஸ்வர ்கோயில் சாமி, இந்த சைவ சாமியை நாங்கள் கும்பிடமாட்டோம் என்றார். அதைக் கேட்டவுடன் இந்தக்காலத்திலும் இப்படி ஒருத்தரா என்று ஆச்சரியப்பட்டேன். என்னை அறியாமல் ஏனோ எனக்கு ஆழ்வார்க்கடியான் நினைவுக்கு வந்தது.
அப்போது வந்த மார்கழிமாதம் முழுவதும் காலையில் ஒரு கோஷ்டி விஷ்ணு சகஸ்ர நாம பஜனை செய்வது என்காதில் கேட்கும். எட்டிப்பார்த்ததில் தெரிந்துகொண்டது அது பாபநாசம் சிவன் தலைமையிலான பஜனை கோஷ்டி என்று. பாப நாசம் சிவன் நடித்த சில சினிமாப் படங்களைப் பார்த்து இருக்கிறேன். அவர் சினிமாப்பாடல்கள் மிகப் பிரசித்தம். அவர் நான் பார்த்தபோது குடுகுடு கிழவராக இருந்தார். அவ்வளவு வயதிலும் குரல் நடுங்க மார்கழி மாத குளிரில் விடியற்காலை நேரம் பஜனை செய்தபடி நான்கு மாட வீதிகளிலும் நாள் தவறாமல் வந்தது அவர் மீது என் மதிப்பை உயர்த்தியது.
இன்று போலவே அன்றும் தெற்கு மாட வீதியை தெருவோர காய்கறிக்கடைகள் ஆக்கிரமித்துக்கொண்டிருந்தன.
காலை பிரேக்ஃபாஸ்ட உடுப்பி ( இப்போது அங்கு சங்கீதா) மத்தியானம் கல்லூரி கேண்டீன். இரவு சாப்பாடு லஸ் கார்னரிலிருந்த முருடீஸ் ஓட்டல். அருமையான சாப்பாடு. டிக்கெட் வாங்கிக் கொண்டால் மாதம், இருவேளை சாப்பாடுக்கு 28/- ரூபாய். இன்று அந்த ஒரு வேளை சாப்பாடு 150/- ரூபாயாவது இருக்கும்.
வடக்குமாட வீதி முழுவதும் வக்கீல்களின் வீடுகளாக இருந்தன. ஒன்றிரண்டு கடைகள் இருந்தன.
அன்று இருந்த காமதேனு தியேட்டர் இன்று கல்யாணமண்டபமாக மாறிவிட்டது.
அந்த ஒரு ஆண்டில் நான் நிறைய தமிழ் அமெச்சூர் நாடகங்ளைப் பார்த்தேன். சோ, பாலசந்தர் எல்லாம் பிரபலமாகாத நேரம்.
*****************
நடுத்தெரு
என்மனைவி மறுபடியும் கைக்குழந்தையுடன் சென்னை வருகையை ஒட்டி இப்போது மறுபடியும் வீடு தேடும் படலம் தொடங்கியது. வழக்கம்போன்ற அனுபவங்கள். ஆனால் இப்பொழுது எனக்கு என் நண்பர்களின் உதவி கிடைத்தபடியால், புரோக்கர்ளை நாட அவசியமில்லாது போயிற்று. கடைசியாக ஒரு வழியாக மைலாப்பூரில் நடுத்தெருவில் ஒரு போர்ஷன் கிடைத்தது. ஆமாம். மைலாப்பூரிலுள்ள நடுத்தெரு என்ற பெயர் கொண்ட தெருவில்ஒரு போர்ஷனில் குடி புகுந்தோம்.
“அட டா! கடைசியிலே நீ இப்படி நடுத்தெருவுக்கு வந்துட்டியே” என்று என் நண்பர்களும், உறவினர்களும் என்னைக் கேலி செய்தனர். அங்கே ஓராண்டு இருந்தோம். அந்த வீட்டு ஓனர் செய்த அட்டகாசங்கள் தாங்காமல் வேறு வீடு பார்க்க ஆரம்பித்தோம்.
இந்த நேரத்தில் தினமும் கோவிலுக்குப்போக முடிந்தது ஒரு உற்சாகத்தை ஏற்படுத்தியது. கோவிலில் அன்று நடந்த எல்லா விசேஷங்களையும் பார்க்கவும், பங்கு கொள்ளவும் முடிந்ததை ஒரு பாக்கியமாக்க்கருதினேன்.
அவசரத்திற்கு கேசவப்பெருமாள்கோயில் கிழக்குத்தெருவில், கொஞ்சம்கூட சௌகரியம் இல்லாமல் கிச்சன் கீழேயும், ஒரு அறை, மற்றும் ஹால் மேலேயும் இருந்த ஒரு வீட்டில் குடி புகுந்து, அங்கேயும் ஒரு வருடம் படாத பாடு பட்டோம்.
அப்போதுதான் புரிந்தது நான் மாதம் ஒரு நாள் கைநீட்டி சம்பளப்பிச்சை வாங்கும் ஓரு கௌரவப்பிச்சைக்காரன். இந்த வாழ்க்கை அந்த பீச் பிச்சைக்காரனின் வாழ்க்கையே விட எந்த விதத்திலும் சிறந்தது இல்லை” என்று.
******
அடையாரில் பிளாட்
ஒவ்வொரு வீட்டுச் சொந்தக்காரர்களும் தங்களை ஜமீந்தார்களாகவே எண்ணிக்கொண்டு போடும் கண்டிஷன்களும், செய்யும் அரட்டல்களும் எனக்கு எப்படியும் இந்த சென்னையில் மானத்துடனும், கௌரவத்துடனும் வாழவேண்டுமென்றால் நமக்கு என்று ஒரு தனி வீடு வேண்டும் என்ற ஞானோதயம் உதித்தது,
இதற்கிடையில் பிளாட்( plot) வாங்கி வீடு கட்டிக் கொள்ளலாம், இந்த வீட்டு சொந்தக்காரர்களின் தொந்திரவிலிருந்து தப்பலாம் என்ற நப்பாசையில் பிளாட் பார்க்க ஆரம்பித்தேன். அப்போது அடையார் வளர ஆரம்பித்த நேரம். இந்திரா நகர் பற்றிய ஹவுசிங் போர்டு விளம்பரம் வர ஆரம்பித்த நேரம்.
நான் இனி சென்னையில் தான் நிரந்தரமாக இருக்கவேண்டும் என்ற நிலை காரணமாக எத்தனை நாள் வாடகை வீட்டில் இருப்பது, நமக்கென்று ஒரு தனி வீடு அவசியம் என்று தோன்றிய படியால் நான் இப்பொழுது சொந்த வீடு அல்லது பிளாட் வாங்குவதற்கான முயற்சியில் ஈடுபட்டேன்.
எனவே ஆரம்பித்தது அடுத்த வேட்டை. ப்ளாட்டுகள் (plots)எங்கே கிடைக்கும் என்று தேட ஆரம்பித்தேன். அன்று ஃப்ளாட்டுகள்( Flats) பாப்புலர் ஆகவில்லை. நானும் பல இடங்களில் தேடி கடைசியாக அன்று டெவலப் ஆகிக்கொண்டிருந்த அடையாரில் காமராஜ் அவென்யூவின் எக்ஸ்டென்ஷனான வெங்கடரத்னம் நகர் பகுதியில் சுமார் 2 கிரௌண்ட் நிலத்தை 11000/- ரூபாய்க்கு வாங்கினேன். . அதற்கு சற்று எதிர்த்தாற்போல், சுமார் 500 அடி தள்ளி வீட்டு வசதி வாரிய குடிசைகள் இருந்தன. ( நான் ஏமாந்து போய் 11,000/- ரூபாய் கொடுத்து வாங்கிவிட்டேன், அந்த இடம் 8000/- ரூபாய் கூடப் பொறாது என்று என் நண்பர்கள் கூறினர்). அது இந்திராநகர் தோன்றிக்கொண்டிருந்த காலம். அப்போது அப்பகுதியில் தனியார் வீடுகள் வர ஆரம்பிக்கவில்லை. வாங்கிய பிறகுதான் தெரிந்தது அந்தப்பகுதி லிட்டிகேஷனில் இருப்பது. அந்த நிலத்தை விற்றவரின் மைனர் பையன் மேஜராகும் வரையில்( 18 வயதை அடையும் வரையில்) அங்கு வீடு கட்டுவது என்பது தற்கொலைக்குச்சமானமாகும் என்று.
பணம் கொடுத்தோம், இடம் வாங்கினோம் என்பது கடையில் சாமான் வாங்குவது போல என்று தான் நினைத்திருந்தேன். இதிலுள்ள தில்லுமுல்லுகள், ஏமாற்றங்கள், சட்டச் சிக்கல்களெல்லாம் நான் படித்த எந்தப்பாடத்திலும் வரவில்லை. என்ன செய்ய?
எனவே வாங்கின பிளாட்டை அப்படியே போட்டுவிட்டு, மாதம் ஒருமுறை அங்கே சென்று “நம்ம பிளாட்” பத்திரமாக இருக்கிறதா என்று போய்ப்பார்ப்பேன். முடிந்தால் என் பிளாட் என்று உரிமை கொண்டாடி அந்த நிலத்தில் ஒரு அரைமணி நேரம் படுத்திருப்பேன். ஆனால் அது ஒரே அழுக்காக சிறு சிறு முட்செடிகள் இருந்ததனால் அவ்வாறு செய்யவில்லை. எல்லோரும் பயமுறுத்தினார்கள் என்க்ரோச்மெண்ட் பற்றி. அங்கே ஹவுசிங் போர்டு குடிசைகள் இருப்பதால் என்க்ரோச்மென்ட் ஆகாமல் இருக்க வேண்டுமே என்ற கவலை வந்து விட்டது. இப்படி வீட்டுக்காரர்கள் அவஸ்தை போய், ஒரு புது அவஸ்தை ஆரம்பம் ஆயிற்று.
இந்தக்காலகட்டத்தில் எனக்கு ஏற்பட்ட அனுபவங்களை எல்லாம் வைத்துத்தான் நான் “வீடும் பாடும்” என்ற முக்கால் மணி நேரம் ஓடும் ஒரு ஹாஸ்ய நாடகத்தை எழுதினேன்.
அதென்ன பெயர்? வீடாவது பாடவாவது என்று சிலர் கேட்டனர். வீடும் அதைத்தேடி நான்பட்ட பாடும் எனபதைக்குறிக்கவே அவ்வாறு பெயர் வைத்தேன். அதில் விவரமாக எனக்கு ஏற்பட்ட பல அனுபவங்களையும் நகைச்சுவையாக எழுதி இருந்தேன். அதற்குப் பிறகு பல தமிழ்ப்படங்களிலும் அத்தகைய காட்்சிகள் இடம் பெற்றுவிட்ட படியால் நான் அவற்றையெல்லாம் இங்கு விவரிக்கவில்லை. இந்த நாடகம் பம்பாயில் ஒரு முறையும், சென்னையில் இரண்டு முறையும் மேடை ஏறின. எனக்கு சரியான பின்புலமும், பணபலமும், நாடகக் குழுவும், பிற வசதிகளும, இல்லாததால் நான் நாடகத்துறையில் ஈடுபட இயலவில்லை. மேலும் அந்த நேரம் பாலசந்தர், சோ போன்றவர்கள் சென்னை நாடக மேடைகளை ஆக்கிரமித்துக் கொண்டிருந்தனர்.
——————
மந்தைவெளி
இப்போதைக்கு வீடு கட்டிக்குடியேற முடியாது என்ற நிலையில் பிறகு நாங்கள் அங்கிருந்து மந்தைவெளி ராமகிருஷ்ணா மடம் தெருவில் இருந்த ஒரு முதல் மாடி போர்ஷனில் குடியேறினோம். இங்கு கிட்டத்தட்ட 9 வருடங்கள் இருந்தேன். அப்போது அங்கு மூன்றாம் மாடியில் சிவன் சார் ( பரமாச்சாரியாரின் பூர்வாசிரம தம்பி) தங்கி இருந்தார். இதனால் அவரை அடிக்கடி பார்க்கும் பாக்கியமும், பேசும், பழகும் வாய்ப்பும் எங்களுக்குக் கிட்டியது. இதை வாழ்நாளில் எனக்குக்கிடைத்த மிகப்பெரிய பாக்கியமாகவே நான் கருதுகிறேன். அப்போது எதிர் வீட்டில் சன்னியாசியைப் போல் வாழ்ந்து கொண்டிருந்த ஏகநாதராவ் என்ற ஒரு பெரியவருடன் பழகும் பாக்கியமும் ஏற்பட்டது. அவரின் தந்தையாருக்கு விவேகானந்தர் எழுதிய கடிதத்தை அவர் பத்திரப்படுத்தி வைத்திருந்தார். அதை எங்களுக்கு ஒரு நாள் காட்டினார். அதைப் பார்த்தவுடன் விவேகானந்தரை நேரில் பார்த்தது போல ஒரு மகிழ்ச்சி எனக்கு. கொஞ்ச காலம் வீடு தேடி களைத்துப்போன எனக்கு இந்த மாறுதல் பெரும் ஆறுதலாக இருந்தது.
********
பெசண்ட் நகர் ( இது பற்றி விவரமாக Besant Nagar fiasco என்ற தலைப்பில் ஏற்கனவே எழுதி இருக்கிறேன்)
அப்போது வீட்டு வசதி வாரியத்தின் கீழ் பெசண்ட் நகர் என்ற புத்தம்புதிய நகர் வந்து கொண்டிருந்தது. அது புதிதாக கடற்கரை அருகில் வந்துகொண்டிருக்கும் ஹவுசிங்போர்டு காலனி என்பதால் அதை மானசீகமாகக் காதலிக்க ஆரம்பித்தேன்.
நான் வாங்கிய அடையாறு பிளாட் லிடிகேஷனில் இருந்ததாலும் அங்கு, இப்போதைக்கு வீடு கட்ட முடியாது என்று தோன்றியதாலும், நான் பெசன்ட் நகர் Middle Income Group ( MIG) ஃப்ளாட்டுக்கு ( flat) ஒரு கால்கடுதாசியில் அப்ளை செய்தேன். ஹவுசிங் போர்டில் கட்டிடமோ இடமோ வாங்க, அப்ளை செய்பவர் பெயரில் இந்த உலகத்திலேயே எந்த இடத்திலும் சொந்தமாக ஒரு இடமோ, வீடோ இருக்கக்கூடாது என்பது ஒரு நிபந்தனை. ( அதாவது கிட்டத்தட்ட பிச்சைக்காரராக இருக்கவேண்டும். நான் ஏற்கனவே சென்னையில் கிட்டத்தட்ட அதே நிலையில் தான் இருந்தேன்). என் அடையார் பிளாட்டை என் அப்பா பெயருக்கு மாற்றி விட்டேன். (நான் சட்டத்தை 100 க்கு 200 சதவீதம் மதிப்பவன்.) என் பெயரில் எதுவும் கிடையாது.

அந்த நேரத்தில் எதிர்பாராத விதமாக நான் அப்ளை செய்த மூன்றாவது மாதமே எனக்கு ஹவுசிங் போர்டிலிருந்து ஒரு MIG flat ஒன்று முதல் மெயின்ரோடில் ஒதுக்கப்பட்டதாக ஒரு கடிதம் வந்தது. அது ஊரூர் குப்பத்தைச்சேர்ந்த பகுதி. நான் என் கல்லூரி மாணவர்களை அங்கிருந்த ஒரு Infiltration gallery என்ற குடிநீர் வழங்கும் அமைப்பைப் பார்க்க அழைத்துச் சென்றபோது அங்கு அப்பகுதியில் ஒரு இடுகாடு, மற்றும் சுடுகாடு இருப்பதைப் பார்த்திருக்கிறேன். எனவே நான் ஒரு துண்டுக்காகிதத்தில் அப்ளை செய்து எனக்கு அல்லாட்ஆன அந்த இடம் சுடுகாட்டுக்கு அருகாமையில்தான் இருக்கும் என்று ஊகித்தேன். இதை என்மனைவியிடமும், நண்பர்களிடமும் தெரிவித்த போது “அது எப்படி , அவ்வளவு பெரிய இடத்தில் உன் பிளாட் சுடுகாட்டுக்கு அருகில் இருக்கும் என்று நீயாக ஏன் நினைக்கிறாய்? இது Negative thinking” என்று positive thinking உள்ள என் நண்பர்கள் அனைவரும் கேலி செய்தனர்.
ஒரு நாள் நான் என் நண்பனோடு அங்கே என் ஃப்ளாட்டைப் பார்த்து விட்டு வரலாம் என்று சென்றபோது நான் பயந்தது போலவே அது கிட்டத்தட்ட அந்த சுடுகாட்டின் நேர் எதிரில் இருப்பது தெரிந்தது. போதாததற்கு நாங்கள் அங்கே சென்ற நேரம் ஒரு ஆள் தன் சைக்கிளில் இருந்து ஒரு அட்டைப்பெட்டியை எடுத்து அதனுள்ளிருந்த இறந்துபோன தன் குழந்தையின் சடலத்தை எடுத்து அங்கே புதைத்துக் கொண்டிருப்பதைப்பார்த்தோம். எனக்கு பக்கென்றாகிவிட்டது.
****************
அந்த ஃப்ளாட் வேண்டாம், வேறு ஃப்ளாட் தாருங்கள் என்று ஹவுசிங் போர்டு ஆபீசில் கேட்டதற்கு ஒரு அதிகாரி” உங்களுக்கு மந்திரி அல்லது வேறு பெரிய அதிகாரிகளைத்தெரியுமா? “ என்று கேட்டதற்கு, நான் “ எனக்கு யாரையும் தெரியாது”
என்றேன். உடனே அவர் “ நானே அந்த இடத்தில்தான் வாழ்ந்துகொண்டு இருக்கிறேன். நானே வாழும்போது உங்களால் அங்கு வாழ முடியாதா? முடியாது என்றால் இந்த ஃப்ளாட் வேண்டாம் என்று எழுதிக் கொடுத்துப் போய்க்கொண்டே இருங்கள்” என்றார். அப்படி எழுதிக் கொடுத்தால் வேறே ஒரு இடத்தில் ஃப்ளாட் தருவீர்களா? என்று கேட்டதற்கு “சொன்னாப்புரியாதா உங்களுக்கு? அதெல்லாம் கிடையாது” என்று மறுத்துவிட்டார்.

. வேறு ஒரு சம்பந்தப்பட்ட அதிகாரியைப் பார்த்த போது “ நீங்க ஏன் சார் கவலைப்படறீங்க?. அங்கே நாங்கள் கட்டிடங்களைக் கட்டி முடிப்பதற்குள் அந்த சுடுகாட்டை அங்கிருந்து எடுத்துவிடுவோம்” என்று சொன்னார்கள்.
அதற்கேற்றாற்போல் சில மாதங்கள் கழித்து அந்த சுடுகாடு நுழைவு வாயிலில் “ இந்த சுடுகாடு இடம் மாற்றப்பட்டுள்ளது. எனவே இங்கு யாரும் சடலத்தை எரிக்கவோ புதைக்கவோ கூடாது. மீறினால் தண்டிக்கப்படுவார்கள்” என்று ஒரு பெரிய போர்டை மாட்டினார்கள்.

அந்த நேரத்தில் என்னுடைய .ஃப்ளாட்டும் ரெடியாகவே நான் அங்கு குடியேறினேன்.
(அந்த ஃப்ளாட்டின் அன்றைய விலை 28,000/- ரூபாய். 670/-ரூ மாதாந்திர தவணை. முதலில் செலுத்திய அட்வான்ஸ் 7000/- ரூ).

குடியேறிய மறுநாளே அந்த சுடுகாட்டை நோக்கி ஒரு பிணம் வந்தது. கேட் பூட்டப்பட்டதைப் பார்த்து இறந்தவரின் உறவினர்கள் ஆவேசம் கொண்டு கேட்டை உடைக்கமுடியாமல் கேட்டின் வாசலிலேயே பிணத்தை எறித்து “ இது எங்கள் பரம்பரை சுடுகாடு. இதை நாங்கள் பயன்படுத்தக்கூடாது என்று சொல்லி எவரும் எங்களைத் தடுக்க முடியாது” என்று ஆர்ப்பரித்தனர். பிறகு என்ன நடந்ததோ தெரியாது. அங்கு சுடுகாடு நிலைத்து நின்று விட்டது. அந்தத் தெருவின்பெயர் 1st Main road என்று இருந்ததை நான் 1st மயான் ரோடு என்று கூப்பிட ஆரம்பித்தேன். அங்கு இருப்பவர்களுக்கு ஒரு பெரிய வசதி. உடம்பு ரொம்பவும் சீரியஸ் ஆனால் நேராக சுடுகாட்டுக்கே சென்று படுத்துக்கொள்ளலாம். சிக்கனமாக சாக நல்ல இடம்.

பிறகு தினமும் ஒன்றோ அல்லது இரண்டோ பிணங்கள் வர ஆரம்பித்தன. நான் அங்கிருந்த நான்கு மாதங்களில் 99 தலைகளை எண்ணிவிட்டேன். 1000 தலைவாங்கி அபூர்வ சிந்தாமணி 1000 மாவது தலைக்காக ஆவலுடன் காத்திருந்தவள் போல் 100 வது தலைக்கு நான் காத்துக்கொண்டிருந்தேன். போதாததற்கு பிணம் எரிக்கப்படும்போது (இன்று போல் அப்போது எலக்டிரிக் கிரிமடோரியம் கிடையாது) எங்கள் வீடு முழுவதுமாக யார் யாருடைய சாம்பலோ வந்து படிந்தது. வாழ்க்கையே வெறுத்துவிட்டது. இது தவிர ரோட்டில் யாராவது நான்குபேரோ அதற்குமேலோ போனால் அவர்கள் தோளில் ஏதாவது பிணத்தை சுமந்து கொண்டு போகிறார்களோ என்ற சந்தேகம் வர ஆரம்பித்தது. நிமிடத்திற்கு நிமிடம் என் நிம்மதி குலைந்து நானே கிட்டத்தட்ட ஒரு நடை பிணமானேன்.
( நல்ல வேளையாக இது வேறு யாருக்கும் தெரியாததால் அவர்கள் என்னை அங்கே புதைக்காமலோ எரிக்காமலோ விட்டார்கள்.)
&*********
போதாததற்கு நான் சுற்றுச்சூழல் பொறி இயல் ஆசிரியர். என் மாணவர்களுக்கு இப்போது நீர், நிலம், மற்றும் காற்று மாசு ( Land, water and air pollution) பற்றி பாடம் சொல்லித்தருபவன். எனவே இது மற்றவர்களுக்கு அவ்வளவு பெரிய விஷயமாகத் தெரியாவிட்டாலும் எனக்கு அந்த சூழல் மனதளவிலும், உடலளவிலும் பொறுத்துக் கொள்ளக்கூடியதாக இல்லை.

நான் அதற்கு மேல் அங்கே உட்கார்ந்து கொண்டு சுடுகாட்டிற்கு வரும் தலைகளை எண்ணத் திராணியின்றி தூக்கம் இழந்து , அந்த .ஃப்ளாட்டை ஹவுசிங் போர்டிடமே சரண்டர் செய்தேன். ஏற்கனவே பணமுடையில் இருந்த நான் இதனால் 4000/- ரூபாய் நஷ்டப்பட்டேன் . ( இப்போதும் அங்கே பலர் குடியும் குடித்தனமுமாக ஆனந்தமாக வாழ்கிறார்கள். ஆனால் என்னால் அப்படி அங்கு இருக்கமுடியவில்லை.)
*********************
அயோத்தியா ஃப்ளாட்ஸ்
பிறகு வழக்கம் போல் மறுபடியும் வீடு தேடும்படலம் ஆரம்பமாகியது. South Bank Canal Road, மந்தவெளியிலுள்ள ஒரு அபார்ட்மென்ட்ஸில் ஒரு ஃப்ளாட் கிடைத்தது. ஃப்ளாட் மிக நன்றாக இருந்தது. அப்போது என்மனம் இருந்த நிலையில் நான் அந்த சுற்றுச் சூழலை கவனிக்கவில்லை.
எதிரில் இருந்த பரந்த திறந்தவெளி கார்ப்பரேஷன் குப்பை கொட்டும் இடமாக சென்னை மாநரகம், மன்னிக்கவும், சென்னை மாநகரம் பயன் படுத்தி வந்தது. . தினமும் பல குப்பை லாரிகள் தங்கள் குப்பை கொட்டும் கடமையை தவறாது செய்து வந்தன. மெட்ராஸில் இந்த குப்பை கொட்டின அனுபவத்தை என்னால் மறக்கமுடியாது. யாரும் என்னை மெட்ராஸுக்குப்போய் என்ன குப்பை கொட்டினாய் என்று கேட்க முடியாது.

குப்பை கொட்டுவது தினமும் ஒரு சில மணி நேரம்தான் என்றாலும் அந்தக் குப்பையின் துர்நாற்றம் இரவு பகலாக எங்களை பாடய் படுத்தியது. சர்வம் சிவமயம் என்பதைக் கேள்விப பட்டிருப்பீர்கள். ஆனால் இங்கோ சர்வம் ஈக்கள் மயம். பகல் வேளையில் வீட்டினுள்ளே வெள்ளைச் சுவற்றைப் பார்க்கவே முடியாது. சுவர்கள் முழுவதும் ஈக்கள் அப்படி அப்பிக் கொண்டிருக்கும். எங்கு பார்த்தாலும், எதைப்பார்த்தாலும் அங்கிங்கெனாதபடி எங்கும் ஈக்கள். ஈக்கள். ஈக்கள். நம் கைகளாலேயே பத்துப் பதினைந்து ஈக்களை கப்பென்று பிடித்துவிடலாம் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன் அதன் பாபுலேஷன் எவ்வளவு இருக்குமென்று.
சமைப்பதிலிருந்து சாப்பிடுவது வரை பெரும் பிரச்சினை ஆகிவிட்டது. நான் இந்த ஈக்களின் தொல்லையைப்பற்றி சொல்லிக்கொண்டிருக்கும்போது அதைக் கேட்டுக்கொண்டுருந்த ஒருவர் “ என்ன சார், ஈக்குப் போய் இப்படிப் பயப்படுறீங்களே. கொசுன்னா சொல்லுங்க. அது கடிக்கும். நம்ம தூக்கத்தைக் கெடுக்கும். பாவம் ஈ தேமேனு அதுபாட்டு இருக்கும்.” என்றாரே பார்க்கலாம். வாயிலே ஈ போனது தெரியாம பேசுறியே என்பார்கள். ஆனால் இங்கோ வாயிலே ஈ போவதைத் தெரிந்தே பேச நேரும்.
&&&₹………….
இரு குழந்தைகள்வேறு. எந்த வியாதியும் வரலாம் என்ற நிலை. நான்கைந்து மாதங்கள் பொறுமையாக இருந்தோம். இதற்கு மேலும் பொறுக்க முடியாது போகவே “பொறுத்தது போதும், பொங்கி எழு” என்று மனோகரா ஸ்டைலில் என்மனம் கட்டளை இட்டது. ஆனால் அன்றிருந்த நிலையில் என்னால் பொங்கி எழ முடியவில்லை. பொங்கி அழத்தான் முடிந்தது. இதற்கு மேலும் தாமதம் செய்தால் எங்கள் அனைவரின் உடலுக்குமே ஏதாவது தீராத நோய் வந்துவிடும் என்ற பயம் வந்தது. எனவே மறுபடியும் வீடு தேடும் படலம் தொடங்கியது.


&&&&&&&&&&&&&&
நான் அங்கு இருந்த போது அருகில் வெங்கடகிருஷ்ணா சாலையில் PA Construction என்ற ஒரு கட்டுமான கம்பெனியைத் துவக்கி ஃப்ளாட்டுகள் பல இடங்களிலும் கட்டி விற்றுக் கொண்டிருந்தனர்.
அப்போது என் உறவினருக்காக நானும் என் மனைவியும் விசாரிக்கச் சென்றிருந்தோம். என் மனைவி இந்த கம்பெனி மைலாப்பூரிலும் வீடுகள் கட்டுவதால் நாமும் ஏதாவது ஒரு .ஃப்ளாட்டை புக் செய்யலாம் என்றாள்.
எனக்கு என் அதிருஷ்டத்தில் கொஞ்சம்கூட நம்பிக்கை இல்லை என்பதால் “ நீயே பார்த்துப் பிடித்திருந்தால் சொல்லு, ஆனல் எதுவாக இருந்தாலும் வீடு என்பெயரில் இருக்கக்கூடாது. உன் பெயரில் வாங்கலாம்” என்று கூறினேன்.
எனவே மறுபடியும் வீடு தேடும் படலம் ஆரம்பம் ஆயிற்று. ஆனால் வாடகைக்கு அல்ல. சொந்தமாக இருப்பதற்கு.
லஸ் சர்ச் ரோட்டில் ஆள்வார்ப்பேட்டை ஜங்க்‌ஷனின் அருகே வந்த ஃப்ளாட்டை புக் செய்தோம். 1000 ச.அடி .ஃப்ளாட் 1,00,000 ரூபாய் இதற்கு வேண்டிய பகுதி பணத்திற்காக அடையார் பிளாட்டை விற்கத் தீர்மானித்தேன். அப்பொழுது என் சக ஊழியர் என்னுடைய அடையார் பிளாட்டை வாங்கிக்கொள்வதாக கூறினார். எனக்கு அன்று இருந்த மன நிலையில் அந்தப் பிளாட்டை அவருக்கு 22,000/- ரூபாய்க்கு விற்றேன். நான் விற்ற கொஞ்ச நாளிலேயே அந்த இடத்தில் இருந்த வில்லங்கம் நீங்கியது. ( இதைத்தான் என் அதிர்ஷ்டம் என்று சொல்வது) என்நண்பர் அங்கு தனி வீடு கட்டிக்கொண்டு குடியேறினார் ( இன்று அந்த 2 கிரவுண்ட நிலத்தின்விலை மட்டும் 8 கோடியாகும். நான் விற்ற விலை 22,000/- ரூபாய்.)

அப்போதுதான் HDFC யில் ஃப்ளாட்டுக்கு லோன் கொடுக்க ஆரம்பித்து இருந்தார்கள். அதில் லோன் எடுத்து, அடையாறு ஃப்ளாட்டை விற்ற பணத்தையும் கையில் இருந்த சொற்ப தொகையையும்,. போட்டு 1978 ல் என் மனைவியின் பெயரில் புக் செய்தேன். அப்போது அதன் விலை ஒரு சதுர அடி ரூ100/- . 1982 வரையில் கட்டி முடிக்கப்படவில்லை. அப்போதைய விலை ஒரு ச.அடிக்கு 300/- ரூபாய் ஆகிவிட்டது. . அதன்படி அந்த ஃப்ளாட் மதிப்பு 3,00,000/- . உடனே என் உறவினர்களில் ஒரு சிலர் “இந்த ஃ்ப்ளாட்டின் இப்போதைய விலை 3 லட்சம்.. நீ புக் செய்தது 1 லட்சத்திற்கு. எனவே இன்னும் 2 லட்சம்கட்டினால்தான் அந்த ஃப்ளாட்டை நீ வாங்க முடியும் என்று என்னைப் பயமுறுத்துவதில் மகிழ்ச்சி அடைந்தார்கள்.

நானும் நம்பிக்கையை இழந்தவாறு அந்த கட்டுமான கம்பெனியின் மேனேஜரைப் போய்ப்பார்த்து என் கவலையைச் சொன்னபோது, “ சார், நீங்க கவலைப்படாதீங்க. நீங்க எந்த ரேட்டுலே புக் பண்ணினீங்களோ, உங்களுக்கு அந்த ரேட்டிலேயே கொடுப்போம். உங்களுடன் புக் செய்தவர்களுக்கும் ரேட்டை ஏற்ற மாட்டோம் “ என்று சமாதானப்படுத்தினார். ஏற்கனவே என்தங்கைக்காக எக்மோரில் அந்த கம்பனி ஃப்ளாட் ஒன்றை புக் செய்திருந்ததால் எங்களுக்குள் ஒரு பரிச்சயம்.
அதில் எதிர்பாராத ஒரு அதிசயம், நான் எங்கள் கிராமத்தை விட்டு வெளியேறிய பிறகு அந்த மேனேஜர் எங்கள் ஊரில் பல காலம் வாழ்ந்தவர். எனவே ஊர்ப்பாசம். ஆனால் விலையைப்பொறுத்த வரையில் அவரால் ஒன்றும் செய்ய இயலாது. அவர் அந்தக்கம்பெனியில் ஃப்ளாட் விற்பனைகளை செய்யும் ஒரு மேனேஜர். அவ்வளவுதான்.
*******ஐஐஐஐஐஐஐ
லஸ்சர்ச் ரோடு
1982ல் என் ஃப்ளாட் ரெடி ஆனது. அந்த மேனேஜர் சொன்னது போல நான் அந்த வீட்டை ஆக்கிரமித்துக் கொண்ட போது என்னிடம் அதற்கு மேல் ஒரு சல்லிக்காசு கூட கூடக் கேட்கவில்லை. தரும மிகு சென்னையில் இப்படியும் சில கம்பெனிகளா என்று என் சென்னை வாழ்க்கையில் முதன்முறையாக நான் மகிழ்ந்து போனேன்.
அந்த இடத்துக்கு ஒரு சரித்திரம் உண்டு. அந்த இடம் பாஷ்யம் ஐயங்கார் என்று அந்தக்காலத்தில் பிரபலமான வக்கீல் ஒருவரின் வீடு. அந்த வீட்டிற்கு மகாத்மா காந்தி ஒரு தரம் விஜயம் செய்திருக்கிறாராம். அதைக் கேள்விப்பட்டதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி.

அந்த ஃப்ளாட்டில் நான் கிட்டத்தட்ட 31 ஆண்டுகள் வாழ்ந்தேன், வீட்டுச் சொந்தக்காரருடைய பிக்கல், பிடுங்கல் இல்லாமல். அவ்வப்பொழுது சிறு சிறு பிராப்ளங்கள் தோன்றின. ஆனால் அவை எல்லாம் சென்னை வீட்டு சொந்தக்காரர்கள் போடும் கண்டிஷனுக்கு முன் ஒன்றும் இல்லை. சென்னை பாஷையில் சொல்வதானால் பிஸ்ஸாத்து. இங்கு முதல்மாடியில் என்ஃப்ளாட் இருந்தது. அங்கு லிஃப்ட் ஏதும்கிடையாது. ஒரு பக்கம் டிரினிட்டி ஆஸ்பத்திரி. இன்னொரு பக்கம் லைஃப் ஸ்டைல் என்ற பிரம்மாண்டமான கடை. அங்கு( 2012ம் ஆண்டிலிருந்து காவிரி மருத்துவமனை வந்து விட்டது) பக்கத்தில் அன்றைய தேவகி ஆஸ்பத்திரி. அதற்கு அருகில் இசபெல் ஆஸ்பத்திரி. ஒரு 5 நிமிட நடையில் நாரத கான சபா. பத்து நிமிட நடையில் மைலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸ். வீட்டுக்கு மிக அருகிலேயே ஓட்டல்கள். பக்கத்தில் ஒரு பிரசித்தி பெற்ற சின்ன ஹனுமார் கோயில்.
இவ்வளவு இருந்தும் என் மனைவிக்கு இருந்த ஆர்த்ரைட்டிஸ், மற்றும் இதயக் கோளாற்றைச் சரி செய்ய கோயம்புத்தூரிலிருந்து பிரம்மானந்த சுவாமிகள் என்ற சித்த வைத்தியர் சென்னைக்கு வரவேண்டியதாயிற்று. இதை என்னவென்று சொல்வது? அவர்தான் என்மனைவிக்கு வைத்தியம் பார்ப்பார். ஏனென்றால் என் மனைவிக்கு அல்லோபதியில் நம்பிக்கை இல்லை. ஆயுள் முழுவதும் ஆயுர்வேத, சித்த மருந்துகளையே உட்கொண்டாள். என்னைச்சுற்றியுள்ள ஆஸ்பத்திரிகள் யாவும் என்னை ஏளனமாகப் பார்த்து சிரிப்பது போல் தெரிந்தது.
கோவை சித்த வைத்தியர் இடைப்பட்ட காலத்தில் காலமானார். எனவே அவசரத்துக்கு அல்லோபதி ஆஸ்பத்திரிகைகளுக்குச் செல்ல நேரிட்டது. அவை எவ்வளவு அருகிலிருந்தாலும் என் மனைவி ஒரு மாடி ஏறி, இறங்குவது தவிர்க்க முடியாததாகிவிட்டது. நாளாக ஆக என்மனைவிக்கு மாடி ஏறுவது பெரும் பிரச்சினை ஆகிவிட்டது. அதனால் இவ்வளவு சௌகரியமான இடத்திலிருந்து லிஃப்ட் இருக்கும் வீடு தேவைப்பட்டது.
எஎஎஎஎஎ
திருவான்மியூர்
எனவே கிட்டத்தட்ட 32 ஆண்டுகளுக்குப்பிறகு மறுபடியும் வீடு தேடும் படலம் ஆரம்பம் ஆயிற்று. இப்பொழுது கொஞ்சம் வசதி வந்து விட்ட படியாலும், மகனோ, மகளோ குடும்பத்துடன் வரும்போது அவர்கள் தங்கவும் 3 பெட்ரூம் ஃப்ளாட் வேண்டியதாயிற்று. அதற்காக மைலாப்பூர், மந்தைவெளி, அடையார் என்று எங்கு தேடியும் எங்கள் எதிர்பார்ப்பிற்கேற்ற வீடு கிடைக்கவில்லை.

கடைசியில் புதிதாகக் கட்டப்பட்டுக் கொண்டிருந்த ஒரு ஃ்ளாட்டை புக் பண்ணினோம். இதில் வேடிக்கை என்னவென்றால் மயிலாப்பூர் முதல் மாடி ஏறமுடியாத என்மனைவி இப்போது திருவான்மியூரில் நான்காவது மாடி வீட்டில் வசிக்கும்படி நேரிட்டது. ( லிஃப்ட் இருக்கும் தைரியத்தில்)

வீடு மாற்றும் போது சில அசம்பாவிதங்கள் ஏற்பட்டன. மைலாப்பூரில் சுவாமி படங்களை வைத்து ஒரு மரவேலைப்பாடு செய்த பூஜை அலமாரி ஒன்று இருந்தது. வீடு மாற்றும்போது புது வீட்டிற்குக் உள்ளே நுழைகையில் அந்த பூஜை அலமாரி சுவற்றில் இடித்து சேதம் அடைந்தது. என்மனைவிக்கு இவற்றிலெல்லாம் நம்பிக்கை மிக அதிகம். எனவே அவள் கவலையுற்றாள். நான் வேலையாட்களின் கவனக்குறைவால் ஏற்பட்டதற்கு நீ இவ்வளவு அனாவசியமாக வருத்தப்படக்கூடாது என்று ஆறுதல் சொன்னேன்.

இங்கு வந்த 9 மாதங்களில் கான்சரினால் என் மறைவி இறந்து போனாள். அதிலும் மிகவும் சோகமான நிகழ்ச்சி என்னவென்றால் என் மனைவி கீமோதிராபிக்கு நாங்கள் இதற்கு முன்பு வாழ்ந்த எந்த லஸ் சர்ச் சாலையில் எங்கள் பழைய வீட்டிலிருந்து 5 நிமிட நடை தூரத்திலிருந்த மீனாட்சி ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரி ( பழைய தேவகி ஆஸ்பத்திரி) இருந்ததோ, அந்த ஆஸ்பத்திரிக்கே இப்போது அவளை திருவான்மியூரிலிருந்து வாரம் ஒரு முறை அழைத்துச் செல்ல வேண்டி இருந்தது.

அமெரிக்கா
என் மனைவியின் மறைவுக்குப்பின் நான் இந்தத்துயரத்தைச்சுமந்து என் மகளுடன் வாழ அமெரிக்கா செல்ல நேர்ந்தது. இவ்வாறாக என் வாழ்க்கையின் வீடு தேடும் படலம் முடிவடைந்தது என்று நினைத்திருந்தேன்.
ஆனால் அங்கும் அது தொடர்ந்தது.
அமெரிக்கா சென்ற பிறகும் இந்த வீடு தேடும் படலம் ஓயவில்லை. ஆனால் எனக்குப்பதிலாக என் மகள் இப்போது அந்தப் படலத்தை ஆரம்பித்து வைத்தாள். இதுவரை ஆறு வீடுகள் மாறி ஆயிற்று. இப்பொழுதும் வேறு வீடு பார்த்துக் கொண்டிருக்கிறாள்.
ஆனால் இந்த ஊர் வீடுதேடும் படலம் நம்ம ஊர் மாதிரி இல்லை. எனவே இதில் நம் ஊர் போல த்ரில் கிடையாது. ஒரு ஆபீஸ் வேலை மாதிரி அதுபாட்டுக்க நடக்கும்.

இதேபோல என் மகனுடன் நானும் என் மனைவியும் அங்கு இருந்தபோது முதலில், ஹூஸ்டனில் ஒரு வாடகை அபார்ட்மெண்டில் இருந்தோம். . பிறகு ஒரு புது வீடு கட்டிக்கொண்டு புதுமனை புகுந்தோம். இப்படி வீடு தேடும் படலமும் வீடு மாறும் படலமும் என் வாழ்க்கையின் இன்றியமையாத ஓர் அம்சமாகிவிட்டது.

லண்டனிலும் என் மகனுடைய ஃப்ளாட்டிலிருந்து அவன் புக் செய்த ஒரு புது ஃப்ளாட் கட்டப்பட்டுக்கொண்டிருந்ததைப் பார்க்க நேர்ந்தது. இப்படி இந்த அனுபவங்கள் வெளி நாட்டிலும் தொடர்கின்றன.

எனக்கு சென்னையில் வீடு தேடும்போதும், மற்ற சமயங்களிலும, ஏற்பட்ட அனுபவங்களை எல்லாம் எழுதுவது என்றால் இயலாத காரியம். அவற்றை எல்லாம் வைத்துத்தான் வீடும் பாடும் என்ற தனி நாடகத்தை எழுதினேன். எனவே அவற்றை எல்லாம் தவிர்த்து, சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளை மாத்திரம் மிகவும் சுருக்கமாக இங்கே தந்திருக்கிறேன்.

ஆனாலும், சென்னையில் எவ்வளவோ கஷ்டங்களை அனுபவித்து இருந்தாலும், சென்னையில் வாழ்ந்த அந்த நாட்கள் என்னால் மறக்கமுடியாதவை. இன்றும் எனக்கு கனவில் வருவது சென்னை வாழ்க்கைதான். அது என்னவோ தெரியவில்லை சென்னையின்
கலாசாரம், அதன் கோயில்கள், அதன் மக்கள், அதன் பாரம்பரியம் இவை எல்லாம் என் உள்ளத்தைக்கொள்ளை கொண்டு விட்டன.
சார்லஸ் லேம்ப் Superannuated manல் “the wood has entered into my soul” என்று சொன்னது போல
எனக்கு “Chennai has entered into my soul”- சென்னை என் ஆத்மாவினுள் நுழைந்துவிட்டது என்றுதான் கூறவேண்டும்.
நான் உயிர்வாழும் வரையில் என்னால் என் சென்னை வாழ்க்கையை மறக்கமுடியாது. அதிலும் குறிப்பாக நான் மைலாப்பூரில் வாழ்ந்த நாட்களை மறக்க முடியாது. மறக்கவே முடியாது.
நான் என்வாழ்வில் மறக்க முடியாதது சென்னை;
அதிலிருந்து பிரித்துப் பார்க்க முடியாது என்னை
Madras நல்ல Madrasதான்.

எழுதியவர் : ரா. குருசுவாமி (17-Nov-21, 7:16 am)
சேர்த்தது : ரா குருசுவாமி
பார்வை : 51

மேலே