இனியவை நாற்பது - முகவுரை
இனியவை நாற்பது முகவுரை
இனியவை நாற்பது நூலாசிரியர் கடவுள் வாழ்த்தில் சிவபெருமானை முற்படக் குறிக்கின்றார். இவர் தாம் கூறும் அறங்களை இனிது என்னும் சொல்லால் குறிக்கின்றார். இனிய பொருள்களை நாற்பது பாடல்களில் இவர் தொகுத்துக் கூறியுள்ளதால் இவரது நூல் 'இனியவை நாற்பது' என வழங்கப் படுகிறது.
இந் நூலில் நான்கு இனிய பொருள்களை எடுத்துக் கூறும் பாடல்கள் நான்கே (1,3,4,5) நான்குதான் உள்ளன. எஞ்சிய எல்லாம் மும்மூன்று இனிய பொருள்களையே சுட்டியுள்ளன. இவற்றில் எல்லாம் முன் இரண்டு அடிகளில் இரு பொருள் களும், பின்இரண்டு அடிகளில் ஒரு பொருளுமாக அமைந்துள்ளன.
மூன்று இனிய பொருள்களை மிகுதியும் எடுத்துக் கூறும் இந் நூல் திரிகடுகத்தோடு ஒத்த பண்பு உடையது. திரிகடுகத்தில் எடுத்தாளப் பெறும் சொற்பொருளமைதிகளை இனியவை நாற்பது பெரிதும் அடியொற்றிச் செல்கிறது.
இவற்றை நோக்கினால், பொருளமைப்பில் திரிகடுகத்தையும், நூல் அமைப்பில் இன்னா நாற்பதையும் இந்த ஆசிரியர் மேற்கொண்டார் எனக் கொள்ள வேண்டும். இந்நூல் திரிகடுகத்திற்குப் பிற்பட்டது எனக் கருதப்படுகிறது.
இந் நூலின் ஆசிரியர் மதுரைத் தமிழாசிரியர் மகனார் பூதஞ்சேந்தனார். சேந்தனார் என்பது இயற் பெயர். பூதன் என்பது இவர் தந்தையார் பெயர். சேந்தன் என்பது முருகனுக்கு உரிய பெயர்களில் ஒன்று ஆகும். பூதஞ்சேந்தனார் சிவனை முதலிலும், அடுத்துத் திருமாலையும், பின்னர்ப் பிரமதேவனையும் தமது கடவுள் வாழ்த்தில் குறிப்பிடுகின்றார்.
பிரமதேவன் வணக்கம் சளுக்கியர் காலத்திலேதான் பிரபலமாகக் காணப்படுகிறது. கி. பி. 9-ஆம் நூற்றாண்டில் இவ் வணக்கம் தமிழ்நாட்டில் புகுந்திருக்கலாம் என ஆராய்ச்சியாளர் சிலர் கருதுகின்றனர்.
'பொலிசை' என இவர் ஆளும் சொல் (39) இலக்கிய வழக்கிலோ சாசன வழக்கிலோ, இக் காலத்திற்கு முன்னர்க் காணப்படவில்லை. சீவக சிந்தாமணி யிலேதான் (2546) இச் சொல் வழக்கு உள்ளது. எனவே, சீவக சிந்தாமணி தோன்றிய காலப் பகுதியில் இனியவைநாற்பதும் தோன்றியிருக்கலாம்.
கடவுள் வாழ்த்து நீங்கலாக நாற்பது பாடல்கள் இந் நூலில் உள்ளன. இவற்றுள், 'ஊரும் கலிமா' எனத் தொடங்கும் பாடல் ஒன்று மட்டும் (8) பஃறொடை வெண்பா. ஏனைய எல்லாம் நாலடி கொண்ட அளவியல் வெண்பாக்கள்.