காதல் செய்ய துணிந்த குரங்கு

எனது அலுவலக நண்பர் ஒருவர் என்னிடம் பகிர்ந்து கொண்ட அனுபவத்தை நகைச்சுவை பதிவாக இங்கு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
ராஜு என்பவர் என்னுடன் பணிபுரிந்த ஒரு சக ஊழியர். மிகவும் அமைதியான பணிவான மனிதர். எவ்வளவு பணிவு என்றால் அவர் பேசும்போது அருகே சத்தம் ஏதேனும் இருந்தால் அவர் பேசுவது நம் காதுக்கு விழாது .அவ்வளவு ஒரு மென்மையான குரல். அவர் ஒருமுறை எங்களது தொழில் பயிற்சி மையத்திற்கு ஒரு பயிற்சி வகுப்பை பயில மூன்று நாளுக்கு அங்கே சென்று வந்தார். அந்த பயிற்சி பாடத்தின் பெயர் " பயமின்றி பேசுவது எப்படி?". ராஜுவுடன் இன்னும் 20 சக ஊழியர்களும் பயிற்சி வகுப்பில் பங்கு எடுத்துக்கொண்டனர். ஆனால் ராஜு ஒருவர் தான் அந்த மூன்று நாட்களில் ஒருமுறை கூட வகுப்பில் பேசாமல் இருந்தார். அதாவது பக்கத்தில் உட்கார்ந்திருக்கும் சக ஊழியருடன் ஓரிரு வார்த்தைகள் பேசினார். ஆனால் பயிற்சி அளித்த பயிற்சியாளரிடம் இவர் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. மூன்றாம் நாள் பயிற்சி முடிவில் அந்த பயிற்சியாளர் பொறுமை இழந்து விட்டார் போலும். பயிற்சி நிறைவு விழாவில் பேசுகையில் " இந்த மூன்று நாள் பயிற்சி வகுப்பில் பயமில்லாமல் எப்படி பேசவேண்டும் என்று அனைவரும் கற்றுக்கொண்டு வகுப்பில் என் முன் வந்து நின்று மைக்கில் பேசி பயிற்சியினை நன்கு உபயோகித்துக்கொண்டார்கள் , ஒருவரை தவிர. அவர் தான் திரு ராஜு அவர்கள். மாறாக நான் அவரிடமிருந்து மூன்றுநாள் தொடர்ந்து எப்படி மௌனமாக இருக்க முடியும் என்பதை கண்கூடாக கண்டேன். ஓரளவுக்கு கற்றுக்கொக்ண்டேன். இதற்காக நான் அவரை பாராட்டி தான் ஆக வேண்டும். எப்படி பேசுவது ஒரு கலையோ அதேபோல் பேசாமல் இருப்பதும் ஒரு கலை என்று தான் நான் நினைக்கிறன், திரு ராஜூவை பார்க்கையில்" . அனைவரும் இந்த பேச்சினை ரசித்தார்கள். ராஜு ரசித்தாரா? தெரியாது.

இரண்டாம் நாள் பயிற்சி முடிந்து, சக ஊழியர்கள் அனைவரும் சென்ற பிறகு, ராஜு பயிற்சி மையத்திலிருந்து வெளியே வருகையில் , வாகனங்கள் வைக்கும் இடத்தில மிகவும் அமைதியாக இருந்தது. இவர் தன் ஸ்கூட்டரை எடுக்க சென்றபோது திடீரென ஒரு பெரிய குரங்கு இவர் முன் வந்தது. கொஞ்சமும் இதை எதிர்பார்க்காத ராஜு அரண்டு போய்விட்டார். அருகில் வந்த குரங்கு இவர் முன் வந்து இருகால்களால் எழுந்து நின்று இவரை மறைத்தது. ராஜுவுக்கு உடல் பயத்தால் வெலவெலத்து போய்விட்டது. கையில் வைத்திருந்த புத்தகம் நோட் புத்தகங்களை தன் நெஞ்சோடு இறுக்கி வைத்துக்கொண்டு கண்ணை இந்த பக்கமும் அந்த பக்கமும் ஓடாவிட்டார், எவரேனும் இவரை காப்பாற்ற வருவாரா என்று. அடுத்த கணம் அந்த பெரிய குரங்கு ராஜூவை கட்டி அணைத்து அவர் கால்களை மெல்ல கவ்வியது, அவர் முகத்தை பார்த்து ஏதோ சத்தம் செய்தது, ஆனால் கடிக்கவில்லை. ராஜு நினைத்தார் " இன்று நமக்கு ஆயுள் முடிந்தது" என்று. பிறகு அந்த குரங்குக்கு என்ன தோன்றியது என்று தெரியவில்லை. அவரை கட்டி பிடித்த சுமார் பத்து நொடிகளில் அவரை விட்டுவிட்டு ஒரே பாய்ச்சலாக ஓடி மறைந்து விட்டது. ராஜு ஸ்கூட்டரை கிளப்பி படுவேகத்தில் அவர் வீட்டிற்கு விரைந்து சென்றுவிட்டார். அவர் முகத்தில் உள்ள கலவரத்தை பார்த்து விட்டு அவர் வீட்டில் எல்லோரும் விசாரித்தார்களாம் " என்ன, இன்று பயமில்லாமல் வகுப்பில் பேசிவிட்டீர்களா, முகம் மிகுந்த கலவரத்துடன் காணப்படுகிறது" என்று. பின்னர் ராஜு அவர் குடும்பத்துடன் நடந்த குரங்கு அணைப்பு சம்பவதி கேட்டு அனைவரும் விழுந்து விழுந்து சிரித்தார்களாம். அவர் மனைவி "அந்த குரங்கு உங்களை விரும்புகிறது போலிருக்கிறது. இல்லையெனில் உங்களை கட்டிக்கொண்டது மட்டுமில்லாமல் உங்களை பார்த்து சிரிக்கவும் செய்திருக்கிறது. நாளை மீண்டும் உங்களிடம் கொஞ்ச வரும் என்று நம்புகிறேன்" என்றபோது ராஜுவுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லையாம்.

இதைவிட இன்னும் நகைச்சுவை என்ன என்றால், ராஜு கடைசி நாள் பயிற்சி வகுப்புக்கு செல்லாமல் நேரடியாக அலுவலகம் சென்றுவிட்டார்.அவர் மனைவி சொன்னது பலித்துவிடும், எங்கேயாவது அந்த குரங்கு அன்றும் வந்து அவரை கட்டி அணைத்து முத்தமிட்டு காதலிக்குமோ என்று பயந்து. அலுவலகத்தில் அவரது உயர் அதிகாரி இவரை பார்த்து " எப்படி இன்று அலுவலகம் வந்துவிட்டீர்கள். இன்றும் பயிற்சி வகுப்பு உண்டல்லவா?" என்று கேட்டபோது ராஜு மறைக்காமல் உண்மையை சொல்லிவிட்டார். உயர் அதிகாரி "ராஜு, பயமில்லாமல் பேசவேண்டும் என்றால், குரங்கு நாய் போன்ற விலங்குகளை பார்த்து பயப்படாமல் இருக்க கற்று கொள்ள வேண்டும். எனவே இன்று நீங்கள் பயிற்சி வகுப்புக்கு செல்லுங்கள். உங்களை பயிற்சி வகுப்பு வரை விட்டு வர உங்கள் சக ஊழியர் எவரையேனும் அழைத்து செல்லுங்கள்" என்று அன்புடன் கடிந்து கொண்டதன் பேரில் இன்னொரு சக ஊழியரின் துணையுடன் ராஜு மூன்றாம் நாள் அதாவது கடைசி நாள் பயிற்சிக்கு, ஒரு மணி நேரம் தாமதமாக சென்றார்.

மாலை பயிற்சி முடிந்து வெளியே வரும்போது அவர் மற்ற ஊழியர்கள் சிலருடன் அவசர அவசரமாக வாகனம் வைக்கும் இடம் சென்று, வெகு வேகமாக சுற்றி முற்றி பார்த்துவிட்டு, "அப்பாடா குரங்கு எதுவும் கண்ணனுக்கு தென்படவில்லை" என்று ஆறுதல் கொண்டு அதே நேரத்தில் மிகவும் வேகமாக வண்டியை கிளப்பிக்கொண்டு வீடு சென்று சேர்ந்தார். ராஜு என்னிடம் இதை அவர் முகத்தில் சிறு துளி சிரிப்பும் இன்றி கூறியபோது எனக்கு வந்த சிரிப்பை அடக்க முடியவில்லை. இந்த சம்பவத்தை என் குடும்ப நபர்களுடன் பகிர்ந்து அவர்களுடன் நான் மீண்டும் சிரித்து மகிழ்ந்தேன். என்னை போல நீங்களும் தானே இப்போது சிரித்துக்கொண்டிருக்கிறீர்கள். ஹா ஹா ஹா ஹா ஹா !

ஆனந்த ராம்

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (8-Dec-21, 8:27 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 97

மேலே