தீர்வில்லா தீ
தீர்வில்லா தீ
சிறு சிறு குறும்பு
சின்ன சின்ன கோபம்
அளவான பேச்சு
அழகான உடைநடை
அனைத்தும் நீயென இருக்க
அவளின் ஒவ்வொரு
செயலிலும் உந்தன் பிரதிபலிப்பு
என்ன நான் செய்வேன்
அவள் எனதருகில் அமரும் போதும்
என்னுடன் பயணிக்கும் போதும்
நீயென நினைத்தே
என்னை நான் தொலைப்பது ஏனோ
கடப்பதே தீர்வென
எண்ணும் போதெல்லாம்
அவள் பார்வையும்
அந்த குழந்தை சிரிப்பும்
குறிப்பாக அந்த பட்டு சேலையும்
உன்னையும் என்னையும்
இணைப்பதேனோ
அவள் ரூபத்தில்
சின்ன சின்ன கிண்டல்
விளையாட்டாய் சில வார்த்தை
அவள் ஏதும் அறியாமல் செய்தாலும்
எல்லாம் அறிந்த என்மனமோ
என்னை மீண்டும் தீயில் தள்ளுவதேனோ
பேசாமல் இருக்க முடியாது
பழகாமல் இருக்க முடியாது
பார்க்காமல் இருக்க முடியாது
தவிர்க்கமுடியா சூழலில்
இன்னும் எத்தனை திங்கள்
இந்த வாழ்க்கை
தீர்வில்லா தீயென எரிந்தால்
ஒருகட்டம் மேல் இது என்ன ஆகும்
என்ற ஐயமே என் வாழ்வை
இன்னும் கேள்விக்குறியாக்குகிறதே
நினைவலைகள் இனிதாயினும்
இதுபோன்ற சூழலில்
எம்மை நிற்க வைத்தது ஏனோ
இப்படி தனியே
புலம்பவைத்தது ஏனோ
என் காதலே
கொஞ்சம் விடைதருவாயா ?
எழுத்து சே.இனியன்