பாரதியைப் பணிந்து

மாலை மலர்ந்ததடி கண்ணம்மா
மனமோ தவித்ததடி...
மதியும் எழுந்ததடி கண்ணம்மா
மயக்கம் பிறந்ததடி...

தென்றல் தவழ்ந்ததடி கண்ணம்மா
தேகம் கொதித்ததடி...
திங்கள் ஒளியதடி கண்ணம்மா
தீயாய் தகித்ததடி...

அண்டவெளியதடி கண்ணம்மா
அந்நிலவில் குளித்ததடி...
அகத்தில் அலர்ந்தாயடி கண்ணம்மா
அழகால் அணைத்தாயடி...

முகில்கள் நகர்ந்ததடி கண்ணம்மா
முகமதி தெரிந்ததடி...
விண்மீன் ஜொலித்தடி கண்ணம்மா
விழியின் ஒளிதானடி...

அருவிக் கரையிலடி கண்ணம்மா
அமர்ந்து இருந்தேனடி...
ஆடும் அலைகளடி கண்ணம்மா
அன்பேயுன் நடைதானடி...

நீரின் பரப்பிலடி கண்ணம்மா
நின்முகம் கண்டேனடி...
நெஞ்சக் கடலிலடி
நீந்திக் களித்தாயடி...

நந்தவனத்திலடி கண்ணம்மா
நடைநான் பயின்றேனடி...
நறுமுகையின் இதத்திலடி கண்ணம்மா
நானுன்னை நுகர்ந்தேனடி...

சிவந்த பூக்களடி கண்ணம்மா
செவ்விதழாய் விரிந்ததடி...
முல்லை மலர்களடி கண்ணம்மா
முத்துச்சிரிப்பை நிகர்த்ததடி...

வண்ண மலரிலடி கண்ணம்மா
வண்டு அமர்ந்ததடி...
கண்ட காட்சியடி கண்ணம்மா
கருத்தை மயக்குதடி...

கண்ணின் மணிதானடி கண்ணம்மா
காத்துக் களைத்தேனடி...
காதல் தருவாயடி கண்ணம்மா
கலக்கம் தீர்ப்பாயடி...

ஊன் உருகியதடி கண்ணம்மா
உள்ளொளி பெருகியதடி...
உண்மை உணர்வாயடி கண்ணம்மா
உயிரில் கலப்பாயடி...

இரவு சூழ்ந்ததடி கண்ணம்மா
இரக்கம் கொள்வாயடி...
ஏங்கி அழைத்தேனடி கண்ணம்மா
என்னைச் சேர்வாயடி...

உன்னைத் தழுவியடி கண்ணம்மா
உறங்க நினைத்தேனடி...
உயிர் துடிக்குதடி கண்ணம்மா
ஓடி வருவாயடி...

நானே நீதானடி கண்ணம்மா
நம்பிக்கை கொண்டேனடி...
நந்தகோபன் அருள்வானடி கண்ணம்மா
நாயகி ஆவாயடி...

எழுதியவர் : மீரா பரா (13-Dec-21, 1:29 am)
சேர்த்தது : மீரா பரா
பார்வை : 41

மேலே