தொலைபேசியின் கண்டிப்பு, கைபேசியின் துண்டிப்பு

சார், நீங்கள் இவ்வளவு அருமையாக தமிழில் கவிதை எழுதுகிறீர்கள். பின்னே ஏன் ஆங்கில பேராசியராக பணி செய்கிறீர்கள்?" என்று கேட்டவன், ஆங்கில பேராசிரியர் செல்வனின் மாணவன் ஒருவன். அப்போது மற்ற மாணவர்களின் முகத்தில் கண்ட ஆர்வத்தை கண்டு, வகுப்பில் இருந்த அனைத்து மாணவர்களுமே தன்னிடம் இந்த கேள்வியை கேட்பதை போல செல்வன் உணர்ந்தான். ஒரு மெல்லிய புன்சிரிப்புடன் செல்வன் இதற்கு பதில் அளித்தான் " எப்போதும் நான் கேள்வி கேட்டு உங்களில் ஒரு சிலர் அதற்கு பதில் சொல்வதற்கு பதிலாக இன்று நல்ல ஒரு மாற்றம் என்னவென்றால் உங்களில் ஒருவர் என்னை கேள்வி கேட்டு அதற்கு இப்போது நான் சொல்லப்போகும் பதில்" என்று சொல்லிவிட்டு தொடர்ந்தான் " என் அருமை மாணவர்களே, நான் சிறுவயதிலிருந்து என் அப்பாவை அதிகமாக கவனித்து வந்தவன். அவர் என் வீட்டிற்கு வந்து ஆங்கிலம் கற்றுக்கொள்ளும் மாணவர்களுடன் அதிகமாக ஆங்கிலத்தில் தான் உரையாடுவார். ஆங்கிலத்தில் பதில் கூறுவதற்கு பல மாணவர்கள் சிரமப்பட்டாலும், என் அப்பாவின் இந்த ஆங்கிலம் பேசும் முறையை கண்டு அநேகமான மாணவர்கள் ஆங்கிலத்தில் உரையாடும் திறமையை பெற்றார்கள். என்னிடம் கூட அவ்வப்போது என் தந்தை ஆங்கிலத்தில் தான் உரையாடுவார். இதனால் எனக்கும் ஆங்கில பற்று அதிகமானது. பள்ளியில் படிக்கையில் எனக்கு தமிழ் பாடங்களில் ஒரு தனி பற்று ஏற்பட்டு அதனால் தமிழ் கவிதை கட்டுரை எழுதுவதிலும் ஆர்வம் ஏற்பட்டது. ஆனால் நான் முதலிலிருந்தே ஆசை கொண்டது ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும். இப்போது புரிந்ததா நான் ஏன் ஆங்கில பேராசிரியராக இருக்கிறேன் என்று?" என்று செல்வன் அவனுடைய சிறு விளக்கத்தை முடித்தபோது அனைத்து மாணவர்களும் கைதட்டி ரசித்தனர்.

செல்வனுக்கு தமிழும் ஆங்கிலமும் இரு கண்கள் போலே. அவனுக்கு தாய் மீதும் தாய் மொழி மீதும் அளவற்ற பற்று. அவன் தாயை பற்றி எவரேனும் ஒரு சின்ன குறையை கூட கூறினாலும் செல்வனுக்கு தாங்காது. அவன் தாய் அந்த அளவுக்கு அவன் மீது அன்பை பொழிந்தாள். அவனுடைய தந்தை உயர்நிலை பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணி புரிகையில் அவர் மூலம் ஆங்கிலத்திலும் அவனுக்கு பற்று வளர்ந்தது. இதில் ஒரு வேடிக்கையான விஷயம் என்ன என்றால், தமிழிலும் ஆங்கிலத்திலும் கவிதை எழுதுவதில் ஈடுபாடு அவன் நாற்பது வயதை தாண்டியவுடன் தான் ஏற்பட்டது. ஒரு முறை அவன் நண்பர் ஒருவரின் பிறந்த நாளுக்கு தமிழ் கவிதை ஒன்று சொன்னதை அவன் நண்பர்கள் மிகவும் ஆர்வமுடன் கேட்டு அவனை ஊக்குவித்தார்கள். அதன் பிறகு இன்னொரு நண்பனின் திருமணத்திற்கு செல்வன் கொடுத்த ஆங்கில வாழ்த்து மடலை பலரும் விரும்பி ரசித்து பாராட்டினார்கள். அந்த திருமண நண்பன் " உன்னுடைய இந்த ஆங்கில கவிதை என் திருமணத்திற்கு கிடைத்த மிக அருமையான பரிசு" என்று பாராட்டி வியந்தான். அப்போதிலிருந்து செல்வன் இந்த இரு மொழிகளிலும் க(வி)தை, கட்டுரை, நகைச்சுவை என்று பல பிரிவுகளில் எழுதி வந்தான்.

செல்வன் பாடம் நடத்தும் போது அவன் வகுப்பில் தூங்கும் மாணவர்கள் அனேகமாக யாரும் இருக்க மாட்டார்கள். அனைவரையும் ஈர்க்கும் பேச்சு நடை அவனிடம் இருந்தது. எப்போதாவது எவரேனும் ஒரு மாணவன் அவன் வகுப்பில் தூங்கிவிட்டால் செல்வன் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளமாட்டான். அவன் மாணவர்களிடம் ஒரு நண்பனாகவும் பழகி வந்தான். அதற்கு மெருகூட்டும் வகையில் அமைந்தது அவனது நகைச்சுவை உணர்வு. அவன் மாணவர்களிடம் கூறுவதுண்டு " எனக்கு மூன்று மனைவிகள். முதல் மனைவி ராதா , இரண்டாவது மனைவி தமிழ் மூன்றாவது மனைவி ஆங்கிலம்" என்று.

மனைவியிடம் மிகுந்த அன்பும் அக்கறையும் கொண்டவன் செல்வன். கல்லூரியிலிருந்து வீட்டுக்கு வந்து விட்டால் அவன் குடும்பத்துடன் தான் இருப்பான். மாலை வேளைகளில் அவன் வெளியே செல்வது மிகவும் குறைவே. அப்படி செல்வதென்றாலும் குடும்பத்தோடு தான் செல்வான். அவர்களுக்கு அழகான ஒரு மகள் அறிவான ஒரு மகன். அவன் கல்லூரி மூலம் சென்னை பெரம்பூரில் கிடைத்த தனி ஒரு வீட்டில் வசித்து வந்தான். வீட்டுக்கு
முன்பு அழகான சிறிய பூங்கா ஒன்று. அதில் உள்ள வண்ண வண்ண ரோஜாக்கள் மற்றும் இதர பூக்கள் பார்ப்பதற்கு மிகவும் இனிமையாகவும் மகிழ்ச்சியை கொடுப்பதாகவும் இருந்தது.வீட்டின் பின்புறம் ஒரு தோட்டம். மத்தியில் விசாலமான திறந்தவெளி. அங்கே தான் அவன் குடும்பத்தினருடன் ஷுட்டில் பாட்மிண்டன், கிரிக்கெட் மற்றும் இதர வகை வகையான விளையாட்டுகள் ஆடுவான். வீட்டின் வெளிப்புறத்தை பராமரிக்க ஒரு
தோட்டக்கார பணியாளர் இருந்தார். அதை போல வீட்டை பெருக்கி , தண்ணீரிட்டு சுத்தம் செய்து பாத்திரங்கள் துலக்க அந்த பணியாளரின் மனைவி இருந்தாள். இதனால் ராதாவுக்கு அவள் குழந்தைகளை கவனிக்க நிறைய நேரம் கிடைத்தது. அவள் கம்ப்யூட்டரில் சிறுவர்களுக்கு ஆன்லைனில் நூதன கணிதம் சொல்லிக்கொடுத்து அதன் மூலம் கொஞ்சம் சம்பாத்தியமும் செய்து வந்தாள். இவ்வாறாக செல்வனின் குடும்பத்தில் பொதுவாக எப்போதும் மகிழ்ச்சி நிலவியவண்ணம் இருந்தது.

கல்லூரியில் செல்வனுடன் சில பெண் பேராசிரியர்களும் பணி புரிந்து வந்தார்கள். அவர்களுக்கு செல்வன் மீது நல்ல மரியாதையும் மதிப்பும் இருந்து வந்தது. செல்வனின் நகைச்சுவை பேச்சு அவர்களுக்கு மிகவும் பிடித்த ஒரு விஷயம். கல்லூரியில் ஏதேனும் ஒரு நிகழ்ச்சி அல்லது விழா என்றால் அதில் இரண்டு நிமிடமாவது செல்வனின் பேச்சு இருக்கும். அனேகமாக இப்படிபட்ட தருணங்களில் செல்வன் அந்த நிகழ்ச்சிக்கு ஏற்றவாறு ஒரு தமிழ் அல்லது ஆங்கில கவிதையை வாசித்து விடுவான். இது தவிர அவனுடைய மாணவர்களின் பிறந்த நாளன்று அந்தந்த மாணவனுக்கு என்று பிரத்தியேகமான தமிழ் அல்லது ஆங்கில கவிதை அவர்களுக்கு வழங்குவான்.

ஒரு நாள் அவன் பாடம் எடுத்துக்கொண்டிருக்கையில் ஒரு போன் கால் வந்தது. சத்தம் குறைக்கப்பட்டதால் அவன் வகுப்பு முடிந்தபின் அந்த எண்ணுக்கு போன் செய்தான். அந்த பக்கத்தில் ஒரு பெண் " நீங்கள் பேராசிரியர் செல்வம் தானே" என்று பணிவோடு வினவினாள். செல்வான் " ஆமாம் " என்றதும் " நான் உமா . உங்களை பற்றி உங்கள் கல்லூரியில் சரித்திர பேராசிரியையாக இருக்கும் என் தோழி லதா நிறைய சொல்லி இருக்கிறாள். நான் வில்லிவாக்கத்தில் உள்ள அரிய பெரிய கல்லூரி ஆங்கில பிரிவில் தலைமை பேராசிரியராக பணி புரிகிறேன். வரும் 10 ஆம் தேதி எங்கள் கல்லூரியின் வெள்ளி விழா. இதையொட்டி மூன்று நாட்கள் எங்கள் கல்லூரி வளாகத்தில் சிறப்பு நிகழ்ச்சிகளும் மாணவர்களுக்கான போட்டிகளும் நடைபெற உள்ளன .11 ஆம் தேதி மாலை அன்று மாலை நடக்கவிருக்கும் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு தலைமை தாங்க நீங்கள் வரவேண்டும். முடியுமா?" என்று கேட்டபோது செல்வனுக்கு இன்பமான அதிர்ச்சியாக இருந்தது. இதுவரை அவன் வேறு கல்லூரி விழாவில் அப்போது வரை பங்கு கொண்டது கிடையாது. செல்வன் " இது மிகவும் மகிழ்ச்சி அளிக்கக்கூடிய செய்தி. மாலை 6 மணி என்பதால் நிச்சயமாக நான் வரமுடியும்."என்றான். " மிக்க நன்றி.நான் இதை எங்கள் கல்லூரி முதல்வருக்கும் சொல்லிவிடுகிறேன். உங்களை வீட்டிலிருந்து இங்கு அழைத்து வந்து மீண்டும் உங்கள் வீட்டில் சேர்த்திட நாங்கள் கார் ஏற்பாடு செய்வோம். அதன் தகவல்களை பிறகு தெரிவிக்கிறேன்." என்றாள் உமா.

செல்வன் அரிய பெரிய கல்லூரி பற்றிய நிறைய விஷயங்களை நண்பர்கள் மூலமாகவும் இணை தளங்களின் மூலமும் தெரிந்து கொண்டான். 11 ஆம் தேதி வந்தது. உமா காலையில் போன் செய்து அவனை கூட்டிச்செல்ல வரும் காரின் என்னையும் அதன் ஓட்டுநர் பெயர் மற்றும் அவரது போன் நம்பரையும் தந்து " உங்களை மாலை 6 மணிக்கு எங்கள் கல்லூரி வளாகத்தில் சந்திக்க காத்திருப்பேன் " என்றாள்.
சொல்லிய நேரத்தில் கார் செல்வன் வீட்டிற்கு வந்தது. செல்வன் குளித்து நல்ல உடையணிந்து தயாராக இருந்தான். அடுத்த 45 நிமிடங்களில் அவன் அரிய பெரிய கல்லூரி வளாகத்தில் இருந்தான். அவன் காரிலிருந்து இறங்கியவுடனே ஒரு அழகான பெண் வந்து " மாலை வணக்கம். நல்வரவு. நான் தான் உமா" என்று சொன்னவுடன் செல்வனுக்கு இனிமை கலந்த மகிழ்ச்சியாக இருந்தது. அவள் அவ்வளவு அழகு என்று செல்வன் நினைத்து கூட பார்த்திருக்கமாட்டான். உமா அவனை முதல்வர் அறைக்கு அழைத்து சென்று அவருக்கு பரிச்சயம் செய்து வைத்தாள். பிறகு செல்வனுக்கு சூடான காபி மற்றும் தின்பண்டங்கள் வழங்கப்பட்டது. சுமார் ஆறரை மணி அளவில் முதல்வர் மற்றும் உமா துணை வர செல்வன் சிறப்பு மேடை சென்றடைந்தான். மேடை எதிரே கிட்டத்தட்ட 500 பேருக்கு மேல் மாணவர்களும் வேறு நபர்களும் குழுமி இருந்தார்கள். நவீன சவுண்ட் சிஸ்டம் அமைக்க பட்டிருந்தது. உமா வந்தவர்களுக்கு வரவேற்பு தெரிவித்து செல்வனை பற்றிய முகவுரையை கொடுத்தாள். அதன் பின்னர் கல்லூரி முதல்வர் பேசினார். அடுத்ததாக செல்வன் உரையாற்றினான். அவன் பேச நினைத்தது ஐந்து நிமிடங்களுக்கு தான். ஆனால் மாணவர் கூட்டம் அவன் பேச்சை கேட்டு மிகப்பும் உற்சாகம் பெற்று அவனை தொடர்ந்து கொஞ்ச நேரம் பேச அன்பு கட்டளை விடுத்ததை முதல்வரும் ஆமோதித்ததால், செல்வன் மேலும் 15 நிமிடங்கள் பேசினான். இடையில் அந்த கல்லூரியை பற்றிய ஒரு ஆங்கில கவிதையை படித்தபோது, முதல்வர், உமா உட்பட அங்கிருந்த அனைவரும் கரகோஷம் எழுப்பி அவனை பாராட்டினார்கள். நிகழ்ச்சி முடியும்போது இரவு 9 மணி ஆகிவிட்டது. அதன் பிறகு செல்வனை மீண்டும் வீட்டில் கொண்டு விட கார் வந்தது, செல்வன் வண்டியில் அமர்ந்த உடன் பக்கத்தில் உமாவும் ஏறி அமர்ந்தாள். செல்வனுக்கு மீண்டும் இனிய அதிர்ச்சி. " நீங்கள் உங்கள் வீட்டிற்கு செல்லுங்கள். உங்களுக்கு ஏற்கெனவே தாமதம் ஆகிவிட்டது" என்று அவன் சொன்னவுடன் " உங்கள் வீடு செல்லும் வழியில் தான் என் வீடும்" என்று சொன்னாள் உமா. அவனுடைய உரையையும் மற்றும் கவிதையையும் தான் மிகவும் ரசித்ததாக சொன்னாள். விரைவில் அவனை மீண்டும் தன் கல்லூரியின் விழா ஒன்றில் சந்திக்க ஆவலாக இருப்பதாகவும் உமா சொன்னபோது செல்வன் நெகிழ்ந்து போனான். வீடு வந்ததும் அவள் இறங்கிக்கொண்டு " மிகவும் இரவாகிவிட்டதால் நான் உங்களை என் வீட்டிற்கு இப்போது அழைக்கவில்லை. ஆனால் நீங்கள் நிச்சயம் உங்கள் குடும்பத்துடன் என் வீட்டிற்கு வரவேண்டும்." என்று சொல்லி இரவு வணக்கம் சொல்லி விடை பெற்றாள்.
"நிச்சயமாக வருகிறேன்" என்று சொல்லிவிட்டு செல்வன் காரில் அவன் வீடு போய் சேர்ந்தான். அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை, அவன் குடும்பத்தினருடன் நிதானமாக குதூகலமாக நேரத்தை கழித்தான்.

அடுத்த நாள் காலை கல்லூரிக்கு சென்று முதல் இரண்டு பாடங்களை எடுத்துவிட்டு பேராசிரியர்கள் அறைக்கு வந்து அவனுடைய தினசரி எண்ணங்களை வாட்சப்பில் அவனுடைய வாட்ஸாப்ப் குழுக்களுக்கும் ஏனைய நண்பர்களுக்கும் அனுப்பிக்கொண்டிருக்கையில் ஒரு போன் கால் வந்தது. அந்த போன் கால் செல்வனை மிகவும் துடிப்புடன் ஆக்கியது. உமாவிடமிருந்து தான் அந்த கால். "சும்மா தான் அழைத்தேன் செல்வன் அவர்களே, நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் என்று விசாரிக்க, இப்போது நீங்கள் வேலையாக இருப்பின் மன்னிக்கவும். நான் பிறகு பேசுகிறேன்" என்றாள். " காலை என்னுடைய இரு வகுப்புகள் முடிந்துவிட்டது. இனி உணவு இடைவேளைக்கு பிறகு தான் என் அடுத்த வகுப்பு. எனவே நீங்கள் தாராளமாக பேசலாம்." என்றான் செல்வன். இருவரும் கிட்டத்தட்ட 15 நிமிடங்கள் உரையாடினார்கள். செல்வன் அவளிடம் "நான் என்னுடைய எண்ணங்களை வாரத்தில் நான்கு ஐந்து நாட்கள் என் நண்பர்களுடன் வாட்சப்பில் பகிர்ந்து வருகிறேன். உங்களுக்கு விருப்பம் இருக்குமானால் உங்களுக்கும் என் எண்ணங்களை அனுப்பி வைப்பேன்" என்றபோது உமா " அது என்னுடைய பாக்கியம். நிச்சயமாக அனுப்புங்கள்." என்றாள்.

அதன் பிறகு வாட்சப்பில் செல்வன் உமா தொடர்பு நீடிக்க தொடங்கியது. இரண்டு மாதங்கள் கழித்து உமா செல்வனுக்கு போன் செய்து " எங்களது MBA இரண்டாம் வருட மாணவர்களுக்கு நீங்கள் ஊக்குவிக்கும் ஆங்கில பேச்சை வழங்க வேண்டும். அடுத்த வாரத்தில் மதியம் 2 மணி அளவில் நீங்கள் ஒரு நாள் சொன்னால் நான் அதற்கு ஏற்பாடு செய்கிறேன்" என்றாள். செல்வனுக்கு இரட்டிப்பு குஷி. ஒன்று வேறு கல்லூரி மாணவர்களுக்கு ஊக்குவிப்பு தரும் பேச்சை கொடுப்பது இன்னொன்று மீண்டும் உமாவை நேரில் பார்ப்பது. " அடுத்த வாரம் செவ்வாய் மதியம் நீங்கள் என் பேச்சினை வைத்து கொள்ளலாம். அன்று மதியம் எனக்கு வகுப்புகள் இல்லை." என்று சொல்ல உமா " ரொம்ப மகிழ்ச்சி செல்வன் சார். அன்று போலவே எங்கள் கார் வந்து உங்களை உங்கள் கல்லூரியிலிருந்து அழைத்து வரும், மீண்டும் உங்களை உங்கள் இல்லத்தில் விட்டு விடவும் ஏற்பாடு செய்கிறோம்" என்றாள்.
சொன்னது போல் செவ்வாய் அன்று கார் வந்து செல்வனை அரிய பெரிய கல்லூரிக்கு கூட்டி சென்றது. காரிலிருந்து இறங்கும்போது உமா புன்னகையுடன் செல்வனை வரவேற்றாள். MBA வின் தலைமை பேராசிரியருக்கு அவனை பரிச்சயம் செய்து வைத்தாள். பின்னர் மூவரும் அங்குள்ள அரங்கத்திற்கு சென்றனர். நிகழ்ச்சியை உமா தான் தொடங்கி வைத்தாள். MBA பேராசிரியர் சில வார்த்தைகள் பேசிய பிறகு செல்வன் அவன் உரையை நிகழ்த்தினான். அங்குள்ள மாணவர்களின் உணர்வுகளை புரிந்தவன் போல செல்வன் அவர்களிடம் அவன் எண்ணங்களை பகிர்ந்து கொண்டான். ஒரு நிர்வாகம் எவ்வளவு அற்புதமான பொருளை அல்லது சேவையை வழங்கினாலும் அதனுடைய வெற்றி அந்த நிர்வாகம் எப்படி நிர்வகிக்க படுகிறது என்பதை பொறுத்து தான் அமையும் என்ற கருத்தை மையமாக வைத்து பொருளை விற்பது ஒரு கலை என்றால் வளைத்து போட்ட வாடிக்கையாளர்களை நழுவ விடாமல் வைத்திருப்பது இன்னும் பெரிய கலை என்று அதை புரிய வைக்க தகுந்த உதாரணங்களை சொன்னான். இடையிடையில் மாணவர்கள் அவர்களின் சந்தேகங்களையும் அவரது எண்ணங்களையும் பகிர்ந்து கொள்ள வாய்ப்பும் கொடுத்தான். அதிகப்படியான மாணவர்கள் செல்வனின் ஊக்குவிப்பு உரையை நன்றாகவே ரசித்தனர். அவன் உரையை முடித்தவுடன் பலத்த கரஒலி எழுப்பி அவர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

முடிவில் செல்வனுக்கு தலைமை பேராசிரியர் மலர் செண்டு அளித்து, ஷால் போர்த்தி அவனுக்கு ஒரு சிறிய அன்பளிப்பை வழங்கினார். அதன் பிறகு அவருடைய அறைக்கு அழைத்து அவனுக்கு 2000 ரூபாயை ஒரு கவரில் கொடுத்து " ஒன்றும் தப்பாக நினைக்க வேண்டாம். உங்களின் அருமையான உரைக்கு எங்களது சிறிய காணிக்கை" என்றார். அவனுடைய உற்சாகமான நகைச்சுவை உணர்வுடன் கலந்த உரையை மிகவும் மெச்சினார். மீண்டும் வந்து அக்கல்லூரி மாணவர்களை ஊக்குவிக்க வேண்டும் என்று கேட்டு கொண்டார்.
திரும்பி வருகையில் உமாவும் அவனுடன் காரில் வந்தாள். மற்ற நாட்களில் இரண்டு சக்கர வண்டியில் கல்லூரி சென்று வருவதையும் அன்று ஒரு நாள் மட்டும் வேறு ஒரு தோழியின் இரண்டு சக்கர வண்டியில் அவளுடன் கல்லூரி வந்ததாகவும் கூறினாள். அப்போது செல்வன் " ஓ, அப்போது தானே நான் உங்களுடன் சேர்ந்து வீடு திரும்ப முடியும். அப்படித்தானே" என்று நகைச்சுவை உணர்வோடு கேட்டபோது " உண்மையிலேயே அதற்காகத்தான் நான் இன்று என்னுடைய இரண்டு சக்கர வாகனத்தில் வரவில்லை" என்று உமா சொன்னபோது செல்வனுக்கு நெஞ்சில் ஐஸ் மோர் ஊற்றி வருடி கொடுத்த மாதிரி இருந்தது. இதன் பிறகு இருவருக்கும் இடையே உறவு படிப்படியாக வளர தொடங்கியது. இத்தனைக்கும் இருவருக்கும் இடையே 10 வயது வித்தியாசம். இருவரும் குடும்ப நண்பர்களாக பழக ஆரம்பித்தனர். உமாவின் கணவர் கோபால் ஒரு பாங்கில் வேலை செய்து வந்தார். கடந்த ஒரு ஆண்டுக்கு மேல் அவர் ஒரு கிராமத்து கிளையில் மாற்றம் ஆகி வேலை பார்த்து வந்தார். இன்னும் ஒரு வருடம் அங்குதான் அவர் வேலை செய்யவேண்டும் என்பதும் தெரியவந்தது. உமாவும் ராதாவும் நட்புடன் பழக தொடங்கினார்கள். குடும்ப நண்பர்களாக மட்டும் இல்லாமல் செல்வனும் உமாவும் காதலர்களாகவும் பழக ஆரம்பித்தனர். அந்த வருடம் பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி இருவரும் முதன் முதலில் தனிமையில் சந்தித்தனர். உமாவுக்கு செல்வனின் கற்பனை வளமும் நகைச்சுவையும் மிகவும் பிடித்திருந்தது. செல்வனையோ உமாவின் அழகான பளிங்கு உடல் கிறங்க வைத்தது. அந்த நாள் செல்வன் உமாவுக்கு வண்ண ரோஜா ஒன்றை அவள் தலையில் சூட்டிவிட்டான். பின்னர் இருவரும் ஒருவரை ஒருவர் மென்மையாக முத்தமிட்டுக்கொண்டனர்.
அந்த சம்பவத்திற்கு பிறகு செல்வன் அவன் கல்லூரியில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் உமாவுக்கு போன் செய்து பேசி வந்தான். உமாவும் அதைப்போலவே அவனிடம் தினமும் வாட்சப்பிலும் வாரத்தில் இருமுறையாவது போனிலும் பேசி வந்தாள்.

இப்படி தினங்கள் சென்று கொண்டிருந்தது. இதனிடையில் உமா ஆங்கிலத்தில் ஒரு சிறுகதை புத்தகம் வெளியிட கதைகள் எழுதி வந்தாள். ஆறு மாதங்களில் 25 சிறு கதைகளை எழுதி முடித்தாள். பின்னர் அந்த கதைகளை செம்மையாக்கல் (எடிட்டிங் ) செய்ய செல்வனின் உதவியை நாடினாள். ஒரு முறை கணவர் கோபாலுடன் செல்வன் வீட்டிற்கு சென்றபோது இந்த உதவியை அவள் கேட்டபோது ராதா உற்சாகத்துடன் " நீங்கள் நிச்சயமாக அவளுக்கு உதவ வேண்டும் " என்று செல்வனுக்கு சொல்ல , செல்வனுக்கு மிகுந்த குதூகலம் உண்டானது. அந்த நேரத்தில் இரண்டு ஞாயிற்று கிழமைகள் செல்வன் உமா வீட்டிற்கு சென்று வந்தான். உமாவுக்கு குழந்தைகள் இல்லை. அவள் கணவன் கிராமத்திலிருந்து அந்த ஞாயிற்று கிழமை வரவில்லை. எடிட்டிங் பணி ஆரம்பித்த சிறிது நேரத்தில் இருவரின் மோக ஆட்டமும் மெதுவாக ஆரம்பித்தது. உமா சமையலறை சென்று காபி கலக்கும்போது செல்வன் அவளை பின்னிருந்து ரசித்து பின்னர் அவளை தொட்டு கட்டி அணைத்தான். சூடான காபி பருகுகையில் இருவரின் தேகங்களும் இன்னமும் சூடாகியது. அந்நேரத்தில் ராதா வீட்டிலிருந்து போன் செய்து செல்வனை உணவு சாப்பிட வீட்டிற்கு வருமாறு கூறியவுடன் செல்வன் உமாவிடம் சொல்லிவிட்டு வீடு புறப்பட்டான். மதியம் ஒரு மணிக்குள் வீடு வந்துவிடுவேன் என்று சொன்னதை அவன் மறந்து விட்டான். ஏனெனில் உமாவின் அழகில் அவன் மயங்கி அவனை மறந்து விட்டான்.

அடுத்த ஞாயிற்று கிழமையும் உமா அவனை செம்மையாக்கல் செய்ய வீட்டிற்கு அழைத்தாள். அந்த முறையும் அவள் கணவர் வீட்டிற்கு வரவில்லை. உமா செல்வனுக்கு இது நல்ல வாய்ப்பாக அமைந்தது. இந்த முறை இருவரும் தம்மை மறந்து மோக வலையில் வீழ்ந்து நனைந்தனர். ஒரு மணி எடிட்டிங் வேலைக்கு பின் இருவரும் காதல் லீலைகளில் ஈடுபட்டு காமராஜன் வீசிய அம்புகளில் சிக்கி ஒருவரை இன்னொருவருக்கு சமர்ப்பித்து விட்டனர்.

இந்த நிகழ்ச்சிக்கு பிறகு செல்வனின் அன்றாட வாழ்வில் ராதாவுக்கு கொஞ்சம் மாற்றங்கள் தென்பட்டன. ராதா உமாவிடம் ஒரு முறை கொஞ்சம் தயக்கத்தோடு கேட்டாள் " உமா, நான் கேட்கிறேன் என்று தவறாக நினைக்கவேண்டாம். செல்வன் உன்னிடம் எந்த மாதிரி பழகுகிறார், நீ அவரிடம் எப்படி பழகுகிறாய்?". இந்த கேள்வியை உமா எதிர்பார்க்கவில்லை. " நாங்கள் ஒரு நண்பர்களை போல் தான் பழகுகிறோம்" என்றபோது உமாவின் சொற்களில் ஏனோ உறுதி இல்லை, அவள் குரலில் தெளிவு இல்லை.

இந்த நிகழ்ச்சியை பற்றி உமா செல்வனிடம் அடுத்த நாள் போனில் பேசுகையில் சொன்னாள். செல்வன் " நானும் வீட்டில் எப்போதும் போல இருப்பதில்லை என்று கொஞ்சம் தெரிகிறது. நீ தனிமையில் இருக்கையில் இரண்டு நாள் நான் உன் வீடு வந்தது, கோபால் அப்போது உன் வீட்டில் இல்லை என்பதும் அவளுக்கு தெரியும். இரண்டு முறையும் நான் உன் வீட்டிலிருந்து என் வீடு திரும்ப நேரமாகியதால் அவள் எனக்கு போன் செய்தது, இதையெல்லாம் மனதில் வைத்து அவள் நம் இருவர் மீது சந்தேகம் கொள்ள வாய்ப்பு இருக்கிறது. எனவே இனி நாம் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்" என்று உமாவை எச்சரித்தான்.
அதன் பிறகு ஞாயிற்று கிழமைகளில் உமா வீட்டுக்கு செல்வன் செல்வது நின்றுவிட்டது. ஆனால் மோகமும் காமமும் அவ்வளவு லேசான விஷயங்கள் அல்ல. மாதத்தில் ஒரு முறை செல்வன் கல்லூரியிலிருந்து மதியம் விடுப்பு எடுத்துக்கொண்டு உமா வீட்டிற்கு சென்றான்.உமாவும் அவள் கல்லூரியிலிருந்து விடுப்பு எடுத்து வீடு வந்து விடுவாள். இருவரும் 15 நிமிடங்கள் சிறுகதைகள் எடிட்டிங் செய்துவிட்டு பின்னர் ஒரு மணி நேரத்திற்கு மேல் காதல் கோட்டையில் காம வேட்டை ஆடினார்கள்.

இப்படியாக செல்வனின் வாழ்க்கை கொஞ்சம் வழி தவறி சென்று கொண்டிருந்தது , ஏன், உமாவின் வாழ்வும் தான். ஒரு முறை இருவரும் கொஞ்சி கொண்டிருக்கையில் உமாவுக்கு ஒரு போன் கால் வந்தது. 15 நிமிடங்கள் உமா போனில் பேசிவிட்டு வந்தபோது செல்வன் " என்ன உமா, மிகவும் ரகசியமாக யாருடனோ பேசிவிட்டு வருகிறாயா? கோபாலா? என்று கேட்டபோது உமா " உங்களுக்கு ஒரு விஷயம் இப்போது சொல்லப்போகிறேன். அதிர்ச்சி கோபம் கொள்ளாமல் கேட்பீர்களா? என்றாள்.
" சொல் உமா. நான் நீ எதை சொன்னாலும் அதிர்ச்சியோ கோபமோ கொள்ளாமல் கேட்பேன்" என்றான் செல்வன். " நீங்கள் எனது இரண்டாவது காதலன்" என்று பதட்டம் ஏதும் இல்லாமல் சொன்னாள் உமா . செல்வன் " கோபால் முதல் காதலன்" அப்படித்தானே" என்று நகைச்சுவையாக சொன்னபோது " இல்லை செல்வன். நான் கல்லூரியில் முதுநிலை படித்து வந்தபோது பாண்டே என்பவரை காதலித்தேன்.இவர் மராட்டி மொழி காரர்.என்னைவிட ஒரு வயது சிறியவர்."
செல்வன் " என்ன உமா இப்படி சொல்கிறாய்? சினிமாவில் வருவது போல் இருக்கிறது. இப்போதும் அவர் உன்னிடம் பழகுகிறாரா?
உமா " நேரில் சந்திப்பது மிகவும் குறைவு. அவர் இப்போது பூனாவில் மனைவியுடன் வசித்து வருகிறார். தினமும் வாட்சப்பில் அவர் மெசேஜ் வைப்பார். என் மேல் அவ்வளவு பிரியமாக இருந்தார், என்னை திருமணம் செய்யவும் தயாராக இருந்தார்"
செல்வன் " அப்படி இருந்தால் நீங்கள் இருவரும் ஏன் திருமணம் செய்துகொள்ளவில்லை?"
உமா " பாண்டேக்கு இரு இளைய சகோதரிகள், அவர்களின் திருமணம் முடித்து விட்டு தான் தான் கல்யாணம் செய்வேன் என்று உறுதி மொழி எடுத்திருந்தார். ஆனால் என் பெற்றோர்கள் என்னை எங்கள் ஜாதியில் உள்ளவரை தான் நான் மணக்க வேண்டும் என்று கண்டிப்பாக சொல்லிவிட்டனர். நான் வேறு யாரையேனும் மணந்தால் என் அப்பா அவர் உயிரையே மாய்த்துக்கொள்வார் என்று என்னை பயமுறுத்தியதன் காரணமாக பெற்றோர்கள் விருப்பத்தை பூர்த்திசெய்ய முடிவெடுத்தேன். இதை வேதனையுடன் பாண்டேயிடம் சொன்னபோது " இப்படி நீ சொன்னால் நான் என்ன செய்வது உமா. உன்னையே என் தாரமாக கொள்ள எவ்வளவோ ஆவலுடன் இருந்து வந்தேன். ஆனால் நீ எனது எண்ணங்களில் மண்ணை தூவுகிறாய்" என்று சொல்லி வேதனை அடைந்தார்.
செல்வன் "சரி , நீ வேறு ஒருவரை கல்யாணம் செய்த பின் ஏன் இன்னும் பண்டேயிடம் தொடர்பு வைத்திருக்கிறாய்?"
உமா " உங்களுக்கு தெரியாது செல்வன். பாண்டே என்னிடம் கொண்ட அன்பு சாதாரணமானது அல்ல. என் திருமணம் நடந்து நான்கு வருடங்கள் கழித்து அவரின் பெற்றோர்கள் வற்புறுத்தல் காரணமாக அவர் லேகா என்பவளை திருமணம் செய்து கொண்டார். அதற்கு முன் அவருடைய இரு சகோதரிக்களுக்கும் பாண்டே பண உதவி செய்ததால் இருவருக்கும் நல்லபடியாக கல்யாணம் முடிந்தது. அவர்களுக்கு இப்போது ஒரு குழந்தையும் உள்ளது."
செல்வன் " உன் கல்யாணத்திற்கு பிறகு எத்தனை முறை நீங்கள் இருவரும் சந்தித்தீர்கள்?"
உமா " செல்வன் நீங்கள் குழப்பத்தை அதிகரித்துக்கொண்டே போகிறீர்கள். நாங்கள் இரண்டு முறை சந்தித்திருக்கிறோம். அதுவும் குடும்ப நண்பர்களாக. அவர் மனைவியும் இரண்டு முறை எங்கள் வீட்டிற்கு வந்து சென்றார் ."
செல்வன் " தப்பாக நினைக்காதே உமா. உனக்கு ஒரு கணவர் ஒரு காதலன் ஏற்கெனவே இருக்கும்போது என்னிடம் எப்படி காதல் கொண்டாய்?"
உமா " எனக்கு உங்களை பிடித்திருக்கிறது. உங்கள் சுபாவம் கவிதை நகைச்சுவை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. அதனால் உங்கள் மீது காதலும் வந்தது. இதில் தப்பு இருக்கிறதா செல்வன்?"
செல்வன் இந்த வார்த்தைகளை கேட்டு ஒரு நிமிடம் மௌனமாக இருந்தான். அவனுடைய திருமணத்திற்கு முன் அவனுக்கு நடந்த காதலையும், காதலில் அவன் சந்தித்த தோல்வியையும் நினைவு கூர்ந்தான். பிறகு உமாவிடம் சொன்னான் "உன்னை நான் குறை சொல்ல மாட்டேன் உமா. ஆனால் நான் இனிமேல் உன்னிடம் தொடர்பு வைத்திருப்பது என்னை பொறுத்தவரையில் இயலாத காரியம். எனவே நாம் மீண்டும் பழைய நிலைக்கு சென்று நல்ல நண்பர்களாக மட்டுமே இருப்போம்."
உமா " செல்வன். அவசரத்தில் இப்படி கூறவேண்டாம். பாண்டே என்னை சந்திப்பது மிக மிக குறைவாகத்தான் இருக்கும். உங்களுக்கு கொடுத்த சுதந்திரத்தை நான் அவருக்கு இதுவரை தரவில்லை. எனவே நாம் இப்போது போல் எப்போதும் சந்தோஷமாக இருப்போம். வாருங்கள் இப்போது அருகில் உள்ள முருகன் கோவிலுக்கு சென்று வரலாம்"
பின்னர் இருவரும் கோவிலுக்கு சென்றனர். கோவிலை வலம் வருகையில் உமா " நாம் ஒருவரை ஒருவர் உண்மையிலேயே மனதார விரும்புகிறோம். அடுத்த ஜென்மத்தில் நாம் இருவரும் கணவன் மனைவியாக நிச்சயமாக இருப்போம்" என்றபோது செல்வனுக்கும் அந்த நேரத்தில் அந்த வார்த்தைகள் சரியாகவே பட்டது.
வீட்டிற்கு வந்த பின் செல்வன் இரவில் சரியாக உறங்கவில்லை. அவன் மனதினில் பலவிதமான சிந்தனைகள்." நான் ராதாவுக்கு துரோகம் செய்கிறேனா?அவளிடம் குறை எதுவும் இல்லை. நிறத்தில் கொஞ்சம் குறைவு என்றபோதும் நன்றாக துருதுரு என்றுதான் இருக்கிறாள். அன்பிலும் பண்பிலும் சமையலிலும் கவனிப்பில் அவளிடம் ஒரு குறையும் இல்லை. இருப்பினும் ஏனோ என் மனது உமாவிடம் ஏன் ஓடுகிறது? இன்று அவள் சொன்ன அதிர்ச்சியான செய்தியை கேட்டபின் மீண்டும் அவளிடம் காதல் தொடர்பு வைப்பது சரியான காரியமா?" இவ்வாறு பலவித குழப்பங்களுடன் அவன் உறங்கிப்போனான்.
செல்வனை அறியாமலேயே அவன் உமாவிடம் தொடர்பு கொள்ளும் நேரம் மெல்ல மெல்ல குறைய ஆரம்பித்தது. இது முதலில் செல்வனுக்கே தெரியவில்லை. பிறகு ஒரு நாள் உமா " செல்வன், என்ன உங்களின் போக்கில் நான் வித்தியாசத்தை காண்கிறேன்.எனக்கு மெசேஜ் வைப்பதை என்னுடன் போனில் பேசுவதை குறைத்து விட்டீர்கள்?" செல்வன் சொன்னான்" அப்படி எதுவும் இல்லை உமா. கல்லூரியில் கொஞ்சம் வேலை கூடுதலாக உள்ளது.வீட்டிலும் குழந்தைகளுக்கு கொஞ்சம் உடல்நிலை சரியில்லை. அவ்வளவே தான்" என்றான்.

அதன் பிறகு உமா ஒரு நாள் செல்வனுக்கு போன் செய்தாள் " இன்னும் பத்து நாட்கள் கழித்து பாண்டே அவன் மனைவி குழந்தையுடன் எங்கள் வீட்டிற்கு வரப்போகிறார்கள்."
செல்வன் "ஓ அப்படியா? எவ்வளவு நாட்கள் தங்குவார்கள்?
உமா " ஒரு வாரம். நாங்கள் இருவரும் தனியாக சந்திக்க வாய்ப்புகளும் குறைவே. அப்படி ஒருவேளை அமைந்தாலும் அவர் என்னை கொஞ்சம் உரசலாம், அணைக்கலாம், தொட்டு முத்தமிடலாம். அவ்வளவே.வேறு ஒன்றும் நடக்காது"
செல்வன் " உமா, நீ இதை எல்லாம் என்னிடம் கூறவேண்டிய அவசியமே இல்லை. நீயும் பாண்டேயும் காதலர்கள் என்பதை நான் நன்கு அறிவேன். அவனுடன் நீ சந்தோஷமாக நேரத்தை கழிக்க என் வாழ்த்துக்கள்" என்றான்.
உமா "நன்றி செல்வன். அதற்காக நீங்கள் எனக்கு வாட்சப்பில் மெசேஜ் வைப்பதை குறைக்க வேண்டாம்" என்றாள்.
பத்து நாட்கள் கழித்து உமாவிடமிருந்து ஒரு வாட்ஸாப்ப் மெசேஜ் வந்தது பாண்டே அவன் மனைவி மற்றும் குழந்தையும் தன் வீட்டிற்கு வந்துவிட்டார்கள் என. அந்த நாட்களில் தன் கணவரும் வீட்டில் இருக்கப்போவதாகவும் தெரிவித்தாள்.

அதன் பிறகு செல்வன் அவளுக்கு மெசேஜ் எதுவும் வைக்கவில்லை. உமாவிடமிருந்தும் எந்த ஒரு செய்தியும் இல்லை.
இரண்டு வாரங்கள் கழித்து உமா வாட்சப்பில் மெசேஜ் வைத்தாள். அவள் கணவருக்கு மீண்டும் சென்னைக்கு மாற்றம் கிடைத்துவிட்டது என்று. பாண்டேயை பற்றி ஒன்றும் அவள் குறிப்பிடவில்லை. செல்வனுக்கு கொஞ்சம் பொறுமை இல்லாமல் போய்விட்டது. " உமா ஏன் பாண்டே திரும்பி சென்றதை பற்றி ஒன்றுமே தகவல் கொடுக்கவில்லை" என நினைத்தான். அவனுக்கு மனம் பட பட என்று அடித்து கொண்டது. அதை தாங்க முடியமால் உமாவுக்கு போன் செய்தான் " என்ன உமா, பாண்டே இன்னும் இருக்கிறாரா?" என்று கேட்டான். உமா " பாண்டே சென்று நான்கு நாட்களாகி விட்டது. அவர் இங்கு வந்த அடுத்த நாளே என் கணவருக்கு இங்குள்ள கிளைக்கு மாற்றம் கிடைத்து அவர் வந்துவிட்டார்." செல்வன் " எப்படி இருந்தது பாண்டேயின் வாசம்? நீயும் அவனும் ஒருவரின் ஒருவர் வாசம் கண்டீர்களா ? ஒருவர் வசம் இன்னொருவர் இருந்தீர்களா" என்றான் நகைச்சுவை போல். " இரண்டு முறை நாங்கள் தனிமையில் இருக்க வாய்ப்பு கிடைத்தது. " செல்வன் கேட்டான் " நீ அவனுக்கு பூரண சுதந்திரம் கொடுத்தாயா?
உமா "உங்களிடம் நான் மறைக்க விரும்பவில்லை. ஆமாம்,கொடுத்தேன் செல்வன்.மீண்டும் நாங்கள் எப்போது பாப்போம் அல்லது பார்ப்போமா என்பது கூட தெரியாது. இதை இந்த அளவில் விட்டுவிடுங்கள். நாம் எப்போதும் போல் மீண்டும் பழகலாம்." என்றாள்.
இதை கேட்டபின் செல்வனுக்கு ஏதோ போல இருந்தது. "எனக்கு கொடுத்த அவ்வளவு சுதந்திரத்தையும் உமா பாண்டேக்கும் கொடுத்திருக்கிறாள் என்றால் அவர்களுக்குள் இருந்த நெருக்கத்தை என்னால் யூகிக்கமுடிகிறது" என்று அவன் மனம் வெறுப்புடன் கலங்கி புலம்பியது.

அடுத்த மாதம் பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி செல்வனும் உமாவும் மதியம் ஒரு ஹோட்டலில் சந்தித்தனர்.உணவு அருந்துகையில் செல்வன் " உமா, இதன் பிறகு நான் உன்னுடன் கொஞ்ச நேரம் தனிமையில் இருக்க விரும்புகிறேன். உன் வீட்டிற்கு செல்லலாமா?" என்றான். உமா " மன்னிக்கவும் செல்வன். இரண்டு நாட்கள் முன்பு உங்களுடைய சில வாட்ஸாப்ப் மெசஜ்களை என் கணவர் பார்த்து விட்டார். என்னிடம் உங்களை பற்றி துருவி துருவி விசாரித்தார். எனவே இப்போது என் வீட்டிற்கு நாம் செல்வது நல்லதல்ல என்று சொல்லிக்கொண்டிருக்கும்போது அவளுக்கு போன் வந்தது. உமா கொஞ்சம் நகர்ந்து சென்று பேசிவிட்டு வந்தாள். அவள் முகத்தில் சிறிய கலவரம் தெரிந்தது. " என்னை என் கல்லூரி அருகில் விட்டு விடுங்கள் செல்வம். என் கணவர் அங்கே இன்னும் கொஞ்ச நேரத்தில் வருவதாக போன் செய்தார்."
செல்வனுக்கு மனது டக்கு டக்கு என அடித்துக்கொண்டது. " இன்று உமாவுடன் கொஞ்சம் ஏகாந்தத்தில் இருக்கலாம் என்ற என் கனவு நடக்காமல் போய்விட்டதே" என்று மனதில் புலம்பினான் செல்வன். அதன் பிறகு மீண்டும் அவளுக்கு போன் கால் வந்தது. அவர்கள் இருக்கும் ஹோட்டல் அருகிலேதான் அவள் கணவர் இருப்பதாக உமா கலவரத்துடன் சொன்னாள். செல்வனுக்கு திக்கு திக்கு என்று நெஞ்சு அடித்துக்கொண்டது.
" உமா, கிளம்பு நான் உன்னை உன் கல்லூரியில் விட்டுவிடுகிறேன்" என்று சொல்லி அவசர அவசரமாக ஹோட்டலிலிருந்து கிளம்பி தன் காரில் உமாவை அவள் கல்லூரிக்கு விரைந்து கூட்டி சென்றான். இடையில் அவளுக்கு மூன்று தடவை போன் கால் வந்தது. " அவர் நம்மை பின்தொடர்கிறார் என்று நினைக்கிறன்" என்றாள் உமா மிகுந்த கவலையுடன். கல்லூரிக்கு அருகாமையில் அவளை இறக்கிவிட்டு சுற்றும் முற்றும் பார்த்தான் செல்வன். அவர்களை யாரும் பின்தொடர்ந்த மாதிரி அவனுக்கு தெரியவில்லை. அவளை இறக்கி விட்ட வேகத்திலேயே செல்வன் அங்கிருந்து வேகமாக மறைந்து அவன் கல்லூரி சென்றடைந்தான்.

உமா கல்லூரிக்கு சென்று அவள் கணவனுக்கு போன் செய்தாள். தான் கல்லூரியில் இருப்பதாய் தெரிவித்தாள். செல்வனை தான் சந்திக்கவில்லை என்றும் அவளது தோழி ஒருத்தி தனக்கு ஹோட்டலில் லஞ்ச் பார்ட்டி கொடுத்தாள் என்று சொன்னாள். அதன் பிறகு அவள் கணவன் அவளை ஒன்றுமே கேட்கவில்லை.
அன்று மாலை ராதா இனிப்பு செய்து வைத்து செல்வன் வந்தவுடன் கொடுத்தாள். செல்வன் " இன்று என்ன விசேஷம், இனிப்பெல்லாம் பலமாக இருக்கிறது" என்று வியப்புடன் கேட்டான்.
ராதா " இன்று வாலன்டின்'ஸ் தினம் " அதாவது காதலர்கள் தினம். நாம் கணவன் மனைவியாய் வாழ்ந்தாலும் எப்போதுமே இனிய காதலர்கள் தானே. அந்த மகிழ்ச்சியை கொஞ்சம் இந்த முறை வெளிப்படையாக கொண்டாடலாம் என்று தோன்றியதால் தான் உங்களுக்கு பிடித்த சேமியா கேசரியை செய்தேன்" என்றாள். செல்வனுக்கு எதோ சொல்ல வார்த்தைகள் நெஞ்சுவரை வந்தது. அனால் கடைசி நேரத்தில் அந்த வார்த்தைகள் சிறிதே மாற்றம் பெற்று " ஓ, அப்படியா ராதா! உன் அன்பும் காதலும் எனக்கு தெரியாதா? நான் அவ்வப்போது மாறினாலும் என்றும் மாறாத அன்பு மனம் உன்னுடையது. நான் அவ்வப்போது என்னையும் உன்னையும் அறியாமல் செய்த கொஞ்சம் தவறுகளையும் நீ மன்னித்து விடுவாயா?" என்றபோது ராதா " நீங்கள் ஒரு தவறும் செய்யவில்லை. நானும் பிள்ளைகளும் மகிழ்ச்சியுடன் வாழ நீங்கள்தானே காரணம். மன்னிப்பும் வேண்டாம் ஒரு கவலையும் வேண்டாம். " என்று சிரித்தபடி சொன்னாள்.
ஆனால் ராதா செல்வனிடம் சொல்லாதது, அவள் எப்படியோ உமாவின் கணவரின் செல் போன் நம்பரை அறிந்து அவருடன் மூன்று முறை போனில் உரையாடி செல்வன்-உமாவின் விபரீதமான உறவை துண்டித்து தன் வாழ்விலும் உமாவின் வாழ்விலும் மீண்டும் உண்மை மகிழ்ச்சி நிலைக்கவேண்டும் என்ற நல்லெண்ணத்துடன் உமாவின் கணவரிடம் சொல்லி உமாவுக்கு அன்று மூன்று நான்கு முறை போன் செய்து கொஞ்சம் அவளுக்கு பயத்தை கொடுக்க சொன்னது.

உமா மாலை வீடு திரும்பிய பின் அவள் கணவனும் வீடு திரும்பினான். உமா கேட்டாள் " நீங்கள் இன்று பேங்க் சென்றிருந்தீர்களா?" அவள் கணவன் சொன்னாள் " ஆமாம் உமா. நான் இன்று முழுவதும் பாங்கில் தான் இருந்தேன். எங்கும் வெளியில் கூட செல்லவில்லை"என்றபோது உமாவுக்கு ஒன்றும் புரியவில்லை.
அன்று முதல் உமா செல்வனிடம் பேசுவதையும் வாட்ஸாப்ப் மெசேஜ் செய்வதையும் 90 % குறைத்துவிட்டாள். செல்வனும் 95 % குறைத்து விட்டான்.
அடுத்த இரு மாதங்களில் பாண்டே உமாவுக்கு போன் செய்து அவனுக்கு அமெரிக்காவில் நல்ல ஒரு உத்தியோகம் கிடைத்துள்ளதால் அடுத்த மாதம் குடும்பத்துடன் US செல்லப்போவதாகவும் கூறியபோது உமாவின் மனதிலும் உடலிலும் அதிக மாற்றங்கள் தெரியவில்லை.
கோபாலுக்கு சில மருத்துவ சிகிச்சைகள் செய்யப்பட்டபின் இரண்டு வருடங்களில் அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது.
உமா ராதா நட்புக்கு என்ன ஆயிற்று? ஓரிரு மாத இடைவெளிக்கு பின் இரு குடும்பத்தினரும் மிகவும் ஒற்றுமையாகவு.ம் நட்போடும் மீண்டும் பழக ஆரம்பித்தனர். செல்வனும் உமாவும் ஒருவருக்கொருவர் நல்ல நேர்மையான குடும்ப நண்பர்களாக மட்டுமே பழகி வந்தனர்.
கொஞ்ச நாட்கள் சுரத்தே இல்லாமல் போன செல்வனின் தமிழ் மற்றும் ஆங்கில கவிதைகள் மீண்டும் கல்லூரியிலும் பத்திரிகைகளிலும் வலம் வர ஆரம்பித்தன. தொடர்ந்து ஆன்லைனில் செல்வன் உதவியுடன் உமா அவளது ஆங்கில சிறுகதை புத்தகத்தை வெளியிட்டாள், அவள் குழந்தையின் முதல் ஆண்டு நிறைவு அன்று.

அடுத்த வருடம் கல்லூரியில் புதிதாக சேர்ந்த மாணவர்களிடம் செல்வன் " கொஞ்ச நாள் முன்வரை எனக்கு நான்கு மனைவிகள் ஒன்று ராதா, இரண்டாவது உமா ,மூன்றாவது தமிழ் நான்காவது ஆங்கிலம் என்று நகைச்சுவையாக சொல்ல வந்தவன், அதை மாற்றி இவ்வாறு சொன்னான் " எனக்கு மூன்று மனைவிகள், ஒன்று ராதா, இரண்டாவது மனைவி தமிழ், மூன்றாவது மனைவி ஆங்கிலம்". புது மாணவர்கள் பலத்த கர ஓசை எழுப்பி சிறிது மகிழ்ந்தார்கள். இது செல்வதால் மாணவர்களிடம் பலமுறை பகிரப்பட்ட நகைச்சுவை என்றாலும் இம்முறை இந்த நகைச்சுவை செல்வனுக்கு ஒரு வித வினோதமான சுவையாக இருந்தது.

ஆனந்த ராம்

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (17-Dec-21, 8:28 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 162

மேலே