பெண்மை
பெண்மை
==========
காண்தகதம் கண்ணிமைகள் கருமைக் கூட்டக்
காரிகையர் தீட்டுகின்றக் கண்மை கண்டோம்
சாண்ஏற முழம்சரிவைச் சந்திக் கின்றச்
சங்கடம்சூழ்ந் திடினுமவர் செழுமைக் கண்டோம்
ஆண்நிகர்த்தக் காரியங்கள் ஆற்று வார்தம்
அணிகலனாய் கொள்கின்ற ஆளுமைக் கண்டோம்
தூண்போன்ற அசையாதத் துணிவைக் கொண்டத்
தொலைநோக்கப் பார்வையதன் தூய்மை கண்டோம்
*
தேன்போலப் பேசுகின்றத் தேவதை மாரில்
தித்திப்பாய்க் கிடக்கின்ற வாய்மை கண்டோம்
மான்போல எழில்சிந்தும் மாதர் கொண்ட
மானத்தைக் காக்கின்ற மேன்மை கண்டோம்
வான்போல மழைசிந்தும் மங்கை பேச்சின்
மயக்கத்தில் வாழ்கின்ற மகிமை கண்டோம்
தான்என்னும் அகங்காரம் துளியும் இன்றித்
தரைவாழும் பெண்ணினத்தில் தாய்மை கண்டோம்
*
ஒழுக்கத்தை உயர்வாக ஓம்பு கின்ற
உத்தமியர் வாழ்வினிலே உண்மை கண்டோம்
அழுக்கற்ற உள்ளத்தால் அன்பைக் காட்டி
அரவணைக்கும் தாய்மாரின் அருமை கண்டோம்
இழுக்கற்று வாழ்வதற்கு எண்ணம் வைத்து
இருக்கின்ற பேர்களிடம் ஏழ்மை கண்டோம்
பழுத்தமர மாயடியே பட்டும் வீழாப்
பதிவிரதை மாரிடத்தே பெண்மை கண்டோம்!
**
மெய்யன் நடராஜ்