புரோகிதரை துரத்திய நாய்
என் வாழ்வில் பல நகைச்சுவை சம்பவங்கள் நடந்துள்ளன. நடக்கின்றது கூட.ஆனால் நகைச்சுவை கூட ஒவ்வொருவரிடமும் வித்தியாசப்படுகிறது. நான் நகைச்சுவையாய் கருதும் அனைத்தையும் நீங்கள் நகைச்சுவையாக ஏற்க மாட்டீர்கள். நீங்கள் நகைச்சுவையாக கருதும் அனைத்தையும் நான் நகைச்சுவையாக ஏற்க மாட்டேன். எனவே நான் இங்கே குறிப்பிடும் ஒரு உண்மை நகைச்சுவை சம்பவம் உங்களுக்கு நகைச்சுவையாக இருக்குமா என்று எனக்கு தெரியாது. ஆனால் நான் மிகவும் நகைத்து சிரித்து ரசித்தது . இது நடந்து கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் இருக்கும்.
எங்கள் வீட்டில் மூன்று குடித்தனகாரர்கள் வசித்து வந்தார்கள். இரண்டு குடித்தனக்காரர்கள் எங்கள் வீட்டின் கீழ் பகுதியிலும் இன்னொரு குடித்தனக்காரர் எங்க வீட்டு சின்ன அவுட் ஹவுசில் ( வீட்டிற்கு வெளியே ஆனால் எங்கள் நிலத்தில் இருந்த சிறிய வீடு) வசித்து வந்தனர். ஒருமுறை அவுட் ஹவுஸ் வீட்டில் விமரிசை ஒன்று நடந்தது. அதற்கு அவர்கள் உறவினர் 20 பேருக்கு மேல் வந்திருந்தனர். அந்த விமரிசையை நடத்தி வைக்க எங்கள் வீட்டிற்கு வந்து செல்லும் புரோகிதரை வரவழைத்திருந்தார்கள். அவர் நன்றாக மந்திரங்கள் சொல்லி விமரிசையை நடத்தி முடித்தார். பின்னர் எல்லோருக்கும் விருந்து உணவு பரிமாறப்பட்டது. எங்களுக்கும் தான் (வீடு சொந்தக்காரரை விட்டு கொடுக்க முடியுமா?).
அன்று எங்கள் வீட்டு நாயை தவிர சிறப்பு விருந்தினராக இன்னொரு நண்பர் வளர்க்கும் நாயும் வீட்டின் பழைய தண்ணீர் குழாயில் கட்டப்பட்டு இருந்தது. அது கொஞ்சம் உயர்ந்த இன நாய். மற்ற நாயை விட கொஞ்சம் பெரிதாகவே இருந்தது. அதை ஒரு செயின் போட்டு கட்டி இருந்ததால் அது அங்கிருந்தபடியே வருவோரை போவோரை பார்த்து குரைத்து கொண்டிருந்தது. புரோகிதர் வீட்டிற்குள் வரும்போதே அவரை பார்த்து அது குரைத்தவுடன் அவர் கொஞ்சம் பயந்து போய்விட்டார். பின்னர் அவரிடம் " அதை நன்றாக கட்டி போட்டிருக்கிறது. நீங்கள் கொஞ்சம் நகர்ந்து ஓரமாக பயமின்றி செல்லலாம் என்று என் தங்கை அவரிடம் கூறிய பின் அவர் உள்ளே பயபக்தியுடன் வந்தார். என் தங்கையின் தோழி அந்த நாயை அன்று ஒரு நாள் மட்டும் என் வீட்டில் விட்டு விட்டு பார்த்து கொள்ள சொல்லி விட்டு எங்கோ பக்கத்துக்கு ஊருக்கு சென்று விட்டாள்.
விமரிசை விருந்து சாப்பாட்டுக்கு பின் அனைவரும் கொஞ்சம் பேசி விட்டு எங்க வீடு பெரிய ஹாலில் படுத்து கொண்டனர். மதியம் மூன்று மணி அளவில் அனைவருக்கும் சூடாக காப்பி கொடுக்கப்பட்டது.புரோகிதர் காபியை குடித்துவிட்டு அமர்ந்து மற்றவர்களுடன் அளவளாவியபடி அவர் பெரிய சடைமுடியை அவிழ்த்து சரி செய்துகொண்டிருந்தார். சிறுவனான நான் இதை சுவாரசியமாக கவனித்து கொண்டிருந்தேன்.அந்நேரத்தில் எவரும் எதிர்பார்க்காத வகையில் அந்த புதிய நாய் ஹாலுக்குள் ஓடிவந்தது. இதை சற்றும் எதிர்பார்க்காத புரோகிதர் அவர் உட்கார்ந்திருந்த இடத்தை விட்டு எழுந்து ஓட தொடங்கினர். அந்த நாய் இவர் எழுந்து ஓடுவதை பார்த்து அவர் பின்னாலேயே குரைத்துக்கொண்டு ஓடியது. புரோகிதர் வீட்டின் பின்னால் ஓடினார், நாயும் அங்கே ஓடியது. அவர் அங்கிருந்து வீட்டின் வெளி வழியே வீட்டின் முன்புறத்திற்கு ஓடினார். நாயும் அவர் பின்னாலேயே ஓடியது. மீண்டும் அவர் ஹாலில் நுழைத்தார், நாயும் குரைத்துக்கொண்டே ஹாலில் நுழைத்து அவர் பின்னால் ஓடியது. அவர் ஜடாமுடி முழுவதும் பின்னாமல் பின்னாலிருந்து தூங்கியதால் அச்சத்துடன் அந்த நாய் இன்னும் அவரை துரத்தி அவர் மேல் பாய பார்த்தது. நானும் என் தங்கையும் அந்த நாயை அடக்க முயன்றும் முடியவில்லை. இதுதான் சாக்கு என்று எங்க வீட்டு சாதா நாயும் புது நாயுடன் சேர்ந்து புரோகிதரை புதுமையாக துரத்தியது. அதை கட்டியிருந்த செயின் எப்படியோ கழண்டுவிட்டது. அதனால் அந்த நாய் சுதந்திரமாக ஓட துவங்கியது போலும். அந்நேரத்தில் புரோகிதர் முடியையும் அவர் தாடியையும் கண்டு மிரண்டு போயோ கோபம் கொண்டோ அது அவரை துரத்திய வண்ணம் இருந்தது . வீட்டை சுற்றி புரோஹிதரும் நாயும் ஆறு வலங்கள் வந்தனர் (இதனால் எங்கள் இல்லம் மேலும் புனிதம் அடைந்தது). புரோகிதர் முகத்தில் தெரிந்த பயம் கலவரம் அந்நேரத்தில் எங்களுக்கு அதிகம் சிரிப்பையே வரவழைத்தது. நல்ல வேளையாக என் தங்கை அதற்காக என்று கொடுத்து சென்ற நாய் பிஸ்கட்டை அதற்கு கொடுக்க ( எங்க வீடு நாய்க்கும் ஒன்று கிடைத்தது) நாய்(கள்) புரோகிதரை துரத்துவதை நிறுத்தி கொண்டது. என் தங்கை உடனடியாக மீண்டும் அதற்கு செயின் இட்டு கெட்டியாக வேறு ஒரு ஜன்னல் கம்பியில் கட்டி விட்டாள். இதற்கிடையில் அந்த நீண்ட ஜடாமுடி புரோகிதர் தலையை முடிந்து கொள்ளாமலேயே வீட்டை விட்டு மின்னல் வேகத்தில் வெளியேறினார். அதன் பிறகு என் குடியிருப்பவர் மூலம் நடந்த சம்பவத்திற்கு நாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொண்டோம். இந்த நிகழிச்சிக்கு பிறகு அவர் மூன்று மாதங்கள் வரை எங்கள் வீட்டுக்கு வரவில்லை. இடையில் எங்கள் வீட்டில் ஒரு பூஜைக்கு அவரை கூப்பிட்டோம். அதற்கு அவர் வராமல் வேறு ஒரு புரோகிதரை அனுப்பி வைத்தார். அதன் பிறகு நாங்கள் அந்த நாய் இப்போது எங்கள் வீட்டில் இல்லை என்று சொன்ன பின் தான் மீண்டும் எங்கள் வீட்டிற்கும் குடியிருப்பவர்கள் வீட்டிற்கும் வரத்தொடங்கினர். அவர் வரும்போதெல்லாம் எங்க வீடு நாய் அவரிடம் வால் ஆட்டாமல் வாழை குழைத்து வரவேற்றது.
ஆனந்த ராம்