நளிர்வரைமேல் கற்கிள்ளிக் கையுய்ந்தார் இல் - பழமொழி நானூறு 36
இன்னிசை வெண்பா
மிக்குடையர் ஆகி மிகமதிக்கப் பட்டாரை
ஒற்கப் படமுயறும் என்றல் இழுக்காகும்
நற்கெளி தாகி விடினும் நளிர்வரைமேல்
கற்கிள்ளிக் கையுய்ந்தார் இல். 36
- பழமொழி நானூறு
பொருளுரை:
விளங்குகின்ற மலைமேல் உள்ள கல்லைக் கிள்ளுதலைச் செய்து கை வருந்துதலைத் தப்பினார் இல்லை,
ஆதலால், செல்வம் மிக உடையவர்களாகி அறிவுடைமையால் மிகவும் மதிக்கப்பட்டாரை அவர்கள் வருந்துமாறு தீய செயல்களைச் செய்வோம் என்று நினைத்தல் மிகவும் எளிமையானாலும் செயலிற் செய்தால் மிக்க துன்பமே உண்டாகும்.
கருத்து:
அறிவு செல்வம் என்றிவை உடையாரைத் துன்புறுத்தலாகாது.
விளக்கம்:
அறிவு செல்வம் என்ற இரண்டும் உடையாரைத் துன்புறுத்த நினைப்பாராயின், கல்லைக் கிள்ளிக் கைவருந்தினார் போல, நினைத்துச் செய்பவர் துன்புறுவரேயன்றி அவர்க்கு ஊறு உண்டாவது இல்லை.
முயல் + தும் - முயறும்: தன்மைப் பன்மைமுற்று, நன்கு என்பது நற்கு என வலிந்து நின்றது.
கல்வி, செல்வம் என்ற இரண்டனுள் ஒன்றே உடையாரை ஒரு வேளை நலிய நினைப்பின் கைகூடினும் கூடும்.
இரண்டும் உடையாரை எஞ்ஞான்றும் துன்புறுத்த இயலாது என்பார், 'மிக்குடையராகி மிக மதிக்கப் பட்டாரை' என்றார்.
'கல் கிள்ளிக் கைஉய்ந்தார் இல்' இஃது இச்செய்யுளில் வந்த பழமொழி