பெண்ணியம்

பெண்ணியம் நோக்கி பெண்கள் புனிதயாத்திரை சென்றார்கள்..
வழியில் ஒரு ஆசாமி.. கண்கள் பிதுக்கி.. தலை மயிர் சுருட்டி.. தொப்பை குவித்து.. கறுத்த உதடுகளில் சுருட்டுப் புகைத்து..

ஒருவள் சொன்னாள்.. 'இவனிடம் வழி கேட்போமா?'..
'முழியே சரியில்லை' என்றாள் கோமதி..
'நமக்கு தைரியம் வேண்டும்' என்றாள் சுவாதி..
ஒருவாறாக அவர்கள் அவனை நெருங்கினார்கள்..
சுருட்டு வாசம் மூக்கை குடைந்தது..
அறியாமல் தும்மிவிட்டால் பரீதா..
பதிலுக்கு அவனும் முறைத்துக்கொண்டான்..

'நாங்கள் பெண்ணியம் செல்கிறோம், எங்களுக்கு வழி தெரியவேண்டும்' என்கிறாள் ஜெஸ்ஸி..
'பெண்ணியமா? அப்படியென்றால்?' என்கிறான் கரகரத்த குரலில்..

'அது ஒரு முடிவில்லாப் புனித பிரபஞ்சம்.. அதன் வெளிகள் மிகவும் மென்மையானது.. அதில் நாங்கள் பூக்களின் மகரந்தங்களாய் உறங்க முடியும்.. அதன் காற்று எங்கள் சுவாசத்தில் இனிக்கும்.. அதன் அமைதி எங்களை ஆராதித்துக்கொண்டிருக்கிறது..' கோரஸாக பாடினார்கள்..

'ஓ.. அப்படியா, வயிறு குழுங்க சிரித்தான்..
'அப்படியென்றால் அதற்கு இப்படித்தான் செல்ல வேண்டும்'..

அவன் காட்டிய வழியில் தொடர்ந்தது யாத்திரை..

வழியில் கடவுளைக் கண்டார்கள்.. கடவுள்... அவர் கடவுள்தான்...
'பெண்களே.. கூட்டமாக எங்கே செல்கிறீர்கள்'..
'கடவுளே நாங்கள் உனது படைப்புதானா?'..
'அதில் என்ன சந்தேகம்?' கடவுள் புன்முறுவினார்..
'எங்களை இந்த உலகம் கொடுமைப்படுத்துகிறது.. அடிமையாய் பார்க்கிறது..
எங்களுக்கு அங்கு வாழப்பிடிப்பில்லை..
சில நேரம் உன்மீதும் எங்களுக்கு கடுங்கோபம் வருகிறது..
அதனால் நாங்கள் பெண்ணியத்துக்கு போய்க்கொண்டிருக்கிறோம்'..

'அப்படியா? ஆதற்கு ஏன் இந்த வழியால் செல்கிறீர்கள்?..'
'வரும் வழியில் ஒரு ஆசாமிதான் எங்களுக்கு வழிகாட்டினான்'..
கடவுள் சிரித்தார்.. வயிறு குழுங்க சிரித்தார்..
'அப்படியென்றால் உலகம் உங்களைக் கொடுமைப்படுத்துவது நியாயமே.. பெண்ணியத்துக்கான வழி இதுவல்ல.. நீங்கள் வந்த அதே பாதையால் இன்னும் பலஆயிரம் மைல்கள் சென்றிருக்கவேண்டும்'..

கோமதிக்கு தலையில் அரித்தது..
'என்னை என் வீட்டார் சமயலறையின் இடுக்குகளில் தேடிக்கொண்டிருப்பார்கள் நான் வீடு செல்கிறேன்' என்றாள்..
'சரி வாங்கடி.. எல்லோரும் திரும்பி உலகத்திற்கே போவோம், அங்கு பாரதி நமது விடுதலைக்காக பாடுவான், நாம் குனிந்து கும்மியடிப்போம்'..

அவர்கள் திரும்பினார்கள்.. கடவுள் சிரித்துக்கொண்டே இருந்தார்..

எழுதியவர் : றிகாஸ் (2-Jan-22, 9:04 am)
சேர்த்தது : றிகாஸ்
Tanglish : penniam
பார்வை : 1371

மேலே