காட்டுத்தீயும் மூன்று ரோஜாக்களும் - 11
பாகம் பதினொன்று
===================
(ஒரு புது புரஜக்ட்.. அதில் கலக்க மூவர் கிளம்பி செல்கின்றனர். இவர்கள் எடுத்து அனுப்பிய முதல் வீடியோ ஒளிபரப்பப்பட்டு தமிழ்நாடே அதிர்ந்து போய் இருந்தது. இளமதி டீமுடன் ப்ளூகிராஸும் சேர்ந்து கொண்டது. அவர்கள் விலங்குகளுக்கான உதவிகளைச் செய்தனர். கூடவே இருந்த வருண், அவனது காலேஜ் நண்பர்கள் பலரை அழைந்திருந்தான். இளமதி டீம் மிரட்டப்பட்டதாய் சாருமதிக்கு மேகலா தெரிவித்தாள். அப்போது பல புது விஷயங்களை வருண் கூறினான். மீண்டும் காட்டுக்கு அவர்கள் கிளம்பினர். அடுத்து நடந்தது என்ன? வாருங்கள் பார்க்கலாம்)
போகும் வழியிலேயே சாருமதி ஒரு லிங்க் அனுப்பியிருந்தாள். அதனை க்ளிக் செய்த மேகலாவிற்கு அதிர்ச்சி. வருண் என்னவெல்லாம் இவர்களிடம் சொன்னானோ, அவையெல்லாம் செய்தியாக்கப் பட்டு ஒளிபரப்பத் தயாராக இருந்தது.
உடனே சாருமதிக்கு கால் செய்தாள்.
"ம்.. உன் கால் வரும்னு எதிர்பார்த்தேன்.."
"எப்படி மேம்.. இவ்ளோ சீக்கிரம்..! எவ்ளோ டீம் எங்கெங்கெல்லாம் வச்சிருக்கீங்க..? எல்லா கட்சிக் காரங்களும் தையத் தையனு குதிக்கப் போறாங்க.."
"குதிக்கட்டும் குதிக்கட்டும்.. ரொம்ப நாளாவே ஒருத்தர் இதப்பத்தி என்கிட்ட சொல்லிட்டே இருந்தார். அவர் சொன்ன தகவல்களையெல்லாம் சேர்த்து வச்சிருந்தேன். இப்ப நீங்க மிரட்டப்படவும், அதையும் இதையும் ரிலேட் செய்து பார்த்தேன்.. சரியா பொருந்தர மாதிரி இருந்துச்சு.. ஆளுங்கட்சிக்கு இத அனுப்பி இப்படி ஒரு செய்தி இருக்கு... தெரியுமா?னு கேட்டேன்.. மொதல்ல அவங்களும் அதிர்ச்சியடைஞ்சாங்க.. அப்படி இருந்தா சரியாத்தான் இருக்கும். எங்களுக்கும் அவங்க மேல பல நாளா சந்தேகம் இருந்துச்சு.. ஆனா காட்டுத்தீக்கும் எங்களுக்கும் தொடர்புனு மட்டும் சொல்லாதீங்க.. மத்தபடி கஞ்சா பிரச்சனைய ஒளிபரப்புங்க.. நாங்களும் உரிய நடவடிக்கைகள் எடுக்கறோம்னு சொன்னாங்க.. அப்பறமாத்தான் இன்னும் கொஞ்சம் எடிட் பண்ணி இத தயார் பண்ணோம்.. அடுத்த வைரல் செய்தி ரெடியாகிடுச்சு.. இனிமே யாரும் வந்து உங்கள மிரட்ட மாட்டாங்க.. அப்படி மிரட்டினா அவங்க பேரெல்லாம் செய்தியா வரும்னு சொல்லி வை.. சரியா?"
"சூப்பர் மேம்... இதுவே எவ்ளோ நல்ல நியூஸ்.. ரொம்ப ஓவராத்தான் பேசினாங்க ரெண்டு பேரும்.. இனி வரட்டும் அவங்களுக்கு இருக்கு.. இந்த நியூஸே பிரியாணி சாப்பிட்ட மாதிரி இருக்கு.. இன்னைக்கு இன்னும் ஹேப்பியா வொர்க் பண்ண முடியும்"
"என்ன நடுவுல பிரியாணியெல்லாம் சொல்ற?"
"ஒரு ப்ளோல வந்துருச்சு மேம்.."
"சரி சரி புரஜக்ட் முடிச்சிட்டு வாங்க.. செவன் ஸ்டார் ஓட்டல்ல டின்னர் பார்ட்டி வச்சிடலாம்"
"தேங்க்யூ மேம்.. சீக்கிரமா செவன் ஸ்டார் ஓட்டல நோக்கி நம்ம பயணம் இருக்கும்"
"ஹ ஹ.. ஓகே.. நல்லா வொர்க் பண்ணுங்க.."
"ஓகே மேம்"
அடுத்த வைரல் நியூஸ் அடுத்த அரைமணி நேரத்தில் இளமதி தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது...
'மிரட்டப்பட்டனர் இளமதி டிவியின் காட்டுத்தீ டீம்..'
'காரணம் என்ன? அலசி ஆராய்ந்ததில் பல கோடி மதிப்புள்ள கஞ்சா செடிகளை காட்டுக்குள் பயிரிட்டு வளர்த்துவரும் மாமனும், மச்சானும்..'
'யார் அவர்கள்?'
'மூட்டை மூட்டையாக கஞ்சாக்கள் இந்தக் காட்டுத்தீயால் எரிந்து போனதா?'
'மீண்டும் பற்றிக்கொண்டது நாடு.. என்ன கஞ்சாத் தோட்டமா...? ஏற்றுமதி செஞ்சு பல மில்லியன் பில்லியன் கோடி டாலர்கள் சம்பாத்தியமா?'
'அரசே.. நடவடிக்கை எடு.. உடனே கிரிமினல் குற்றவாளிகளைக் கைது செய்..'
எங்கெங்கு பார்த்தாலும் காட்டுத்தீயுடன் சேர்ந்து இந்தச் செய்தியும் தீயாய் பற்றிக்கொண்டது.
==
காட்டுக்குள் தீயின் வேகம் வழக்கம் போலவே இருந்தது. காட்டுக்குள் சென்றதும் வருண் அவனது நண்பர்களுடன் சேர்ந்து கொண்டான். சில நண்பர்கள் இரவெல்லாம் அங்கேயே தங்கி இருப்பது அவனது பேச்சின் மூலம் தெரியவந்தது.
அவனது நடவடிக்கைகள், அவனது நண்பர்களது நடவடிக்கைகளை அவ்வப்போது வீடியோ எடுத்துவந்தாள் தர்ஷினி.
ப்ளுகிராஸ் டீமுக்கு வேலை அதிகமாகிக் கொண்டே போனது. அவர்கள் முடிந்த அளவு தீவிரமாக இயங்கிக் கொண்டிருந்தனர். நீலாவதி இவர்களுடன் நன்றாக பழகிக்கொண்டாள். அவள் கொண்டு வந்திருந்த உணவினை இவர்களுக்குப் பகிர்ந்து கொடுத்தாள்.
அப்போது ஒரு பெரிய சத்தம் காட்டுக்குள்ளிருந்து வந்தது.
அது பலர் கத்தும் சத்தம்..
நிச்சயம் அவர்கள் வருணின் நண்பர்களாகத்தான் இருக்கவேண்டும்.
என்ன ஏது என காத்திருந்தவர்களுக்கு ஒரு பேரதிர்ச்சி வந்து சேர்ந்தது.
ஒரு எரிந்து முடிந்திருந்த மரம்.. சாயாமல் நின்று கொண்டு தானிருந்தது. வலுவிழந்து விட்டது போல.. இவர்களது மேல், திடீரென விழுந்து விட்டது. பலருக்கும் காயம்.. வருணுக்கு காலிலும், கையிலும் பலத்த அடி.. அவனைத் தூக்கிக் கொண்டு தான் வந்தனர். உடனே மேகலா காருக்கு அழைத்துச் சென்றாள் அவனை..
நீலாவதி அடிபட்டவர்களுக்கு தன்னாலான முதலுதவிகளைச் செய்தாள். வருணை உடனே ஆஸ்பெட்டலில் அட்மிட் செய்ய வேண்டி இருந்ததால், அவர்கள் உடனே கிளம்பினர். அடிபடாத வருணின் நண்பர்கள் அவர்களது வேலையை தொடர்ந்து செய்து கொண்டிருந்தனர்.
(தொடரும்)
அ.வேளாங்கண்ணி