அரும்புணர்ப்பின் பாடல்சாம் பண்ணறியா தார்முன்னர் – நான்மணிக்கடிகை 45

இன்னிசை வெண்பா

நன்றிசாம் நன்றறியா தார்முன்னர்ச் - சென்ற
விருந்தும் விருப்பிலார் முன்சாம் - அரும்புணர்ப்பின்
பாடல்சாம் பண்ணறியா தார்முன்னர்; ஊடல்சாம்
ஊடல் உணரா ரகத்து 45

- நான்மணிக்கடிகை

பொருளுரை:

பிறர் செய்யும் நன்மைகளை நன்மையெனத் தெரிந்து கொள்ளாதவர்க்கு செய்ந்நன்றி கெடும்;

அன்பில்லாதவரிடத்தில் போன விருந்தினரும் வாடுவர்;

பண்ணிசையை யறியாதாரிடத்தில் அரிய இசை நிரவல்களையுடைய பாட்டுக்கள் கெடும்;

ஊடுதலின் இனிமையைத் தெரிதலில்லாத கணவரிடத்தில் ஊடுதல் கெடும்.

கருத்து:

நன்மையறியாரிடம் செய்ந்நன்றி கெடும்; அன்பில்லாரிடம் செல்லும் விருந்தினர் வாடுவர்; இசையறியார்க்கு அரிய இசைப் பொருத்தங்களுடன் பாடும் பாட்டுப் பயனின்றாம்; புலவியுணராரிடம் புலத்தல் கெடும்.

விளக்கவுரை:

அரும்புணர்ப்பென்றது மிடற்றொலியும், யாழ் முதலிய இசைக் கருவிகளின் ஒலியும், பாடற் பண்ணும் ஒத்திசைக்கும் பொருத்தமும், நுண்ணிய இசை நிரவல்களும் பிறவுமாம்;

‘பாடல் சாம் பண்ணறியாதார் முன்னர்' என்று ஈண்டுக் கூறியது போலவே, ‘பண்ணினது பாடலுணர்வா ரகத்து' என உடம்பாட்டாலும் முன்னுங் (37) கூறினார்.

நன்றிக்குச் சாமென்றது மறப்பை,

ஊடலுணர்தல் - ஊடுதலின் அளவையும் மாட்சிமையையும் அறிந்து ஒழுகுதல்.

ஊடல் - கலவியிற் பிணங்கல்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (8-Jan-22, 1:41 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 13

மேலே