விண்ணார் பறவைக்கு வேந்தன்முன் பார்மசகம் என்னாம் துறவிக்கு வேந்தன் துரும்பு - துறவு, தருமதீபிகை 955

நேரிசை வெண்பா

எண்ணாத பேரின்பம் எய்தநேர் எண்ணினார்
மண்ணாசை யாவும் மறப்பரே - விண்ணார்
பறவைக்கு வேந்தன்முன் பார்மசகம் என்னாம்
துறவிக்கு வேந்தன் துரும்பு. 955

- துறவு, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

பாரில் யாரும் எண்ணாத பேரின்ப நிலையை நேரே பெற நேர்ந்தவர் இழிந்த மண் ஆசைகள் யாவும் மறந்து விடுவார்; வான வீதியில் பறந்து செல்லும் கருடன் எதிரே கொசுவைப் போல் ஞான வீரர்களான துறவிகள் எதிரே அரசர்கள் துரும்பாவர்; அதிசய நிலையினரான அவரை எவரும் துதிசெய்வர் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

அழியும் இயல்பினவான அவல நிலையிலிருந்து நீங்கி என்றும் அழியாத விழுமிய பேரின்ப நிலையை அடைய நேர்ந்தவர் அதற்கு உரிய தகுதியை உடையராகின்றார். மனம் புனிதமாய் உயர மனிதன் மகானாய்த் தனி நிலையில் உயர்கின்றான். ஞான ஒளியுடையவர் ஈன இழிவுகளை விலகி வானஒளி போல் வையம் தொழ மிளிர்கின்றார். அவரது நிலை தெய்வ நிலையமாயுளது.

நசை வசைகளையே வளர்த்து வருமாதலால் அதனை ஒழித்தவர்களிடம் இசைகள் செழித்து வளர்ந்து வருகின்றன. ஆசையை விட்டவன் அகிலமும் வென்றவனாய் அதிசய நிலையில் உயர்ந்து யாவராலும் துதி செய்யப் பெறுகிறான். அதனை விடாதவன் ஈன அடிமையாயிழிந்து எங்கும் ஊனமாயுழல்கின்றான்.

உள்ளத்தில் நசை ஒழிந்த போதே பேரின்ப வெள்ளத்தில் அவன் மிதந்து உலாவுகிறான் பற்று முற்றுமற்ற பட்டினத்தார் துறவியாய் வெளியேறிய பொழுது உலகம் முழுவதும் அவரை உவந்து தொழுது புகழ்ந்து போற்றின. அவரது துறவு நிலையைக் கேள்விப்பட்டதும் அந்த நாட்டு வேந்தன் அதிசயமடைந்து அவரைக் காண வந்தான். அப்பொழுது அவர் ஒரு குப்பை மேட்டில் சாய்ந்து கால் மேல் காலைப் போட்டுக் கொண்டு ஆன்ம சிந்தனையோடு அமைதியாயிருந்தார். தான் ஏறி வந்த இரதத்தை விட்டு இறங்கி இவரது அருகே வந்து நின்றான். இவர் யாதும் பேசாமல் மிகவும் மவுனமாயிருந்தார்.

முடி மன்னரினும் பெருந்திருவுடையனாயிருந்தவர் யாவும் ஒருங்கே துறந்து கோவணதாரியாய் அமர்ந்திருப்பதை நோக்கி வியந்த அவ்வேந்தன் மிக்க பணிவோடு இவரிடம் வார்த்தையாடினான். உரைகள் பரிவு தோய்ந்து வந்தன.

’குபேர சம்பத்தோடு இருந்த தாங்கள் எல்லாவற்றையும் விட்டு இப்படிக் கந்தைத் துணியைக் கட்டிக் கொண்டிருப்பது எனக்கு மிகவும் விந்தையாயிருக்கிறது. இதில் என்ன சுகத்தை நீங்கள் கண்டீர்கள்?’ என்று அவன் ஆவலோடு கேட்டான்.

அம்மன்னன் வினவியதற்கு இவர் என்ன பதில் சொன்னார்? ‘நீ நிற்க, யாம் இருக்க‘ என்று இன்னவாறு இனிது கூறினார். சுருக்கமாய்க் குறித்த இதில் பெருக்கமான பொருள்கள் விசித்திரமாய்ப் பெருகி யுள்ளன.

முன்னம் போல் நான் செல்வம் உடையனாயிருந்தால் நீ வந்ததும் விரைந்தெழுந்து எதிர் கொண்டு அழைத்து மரியாதையோடு உபசரித்து உன்னை அரியாசனத்தில் இருத்தி நான் வணங்கி நிற்க வேண்டும். எல்லாச் செல்வங்களையும் நேற்றுத் துறந்தேன்; இன்று நீ வந்து என் காலடியில் வணங்கி நிற்கின்றாய்; நான் இறுமாந்து வீற்றிருக்கின்றேன்; துறவின் மகிமையை உன் நிலைமை தெளிவாய் விளக்கியுளது என்பது கூர்ந்து சிக்திக்கவுள்ளது. துறவாத நீ பிறவித் துயரில் நிற்கின்றாய்; துறந்த நான் பிறவாத பேரின்ப நிலையில் இருக்கிறேன் என்பதும் மருமமாய் இங்கே தெரிய வந்தது

ஆசையற்ற துறவி விண்ணில் பறக்கின்ற கருடன் போல் வீறுகொண்டு திரிகிறான்; அவன் எதிரே அரசர் முதல் யாவரும் சிறியராய் அடங்கி எவ்வழியும் ஒடுங்கி வணங்கி நிற்கின்றனர். துறவிக்கு வேந்தன் துரும்பு என்பது பழமொழியாய் வந்துளது.

அலெக்சாண்டர் (Alexander) என்பவன் கிரீஸ் தேசத்துச் சக்கரவர்த்தி; பெரிய போர் வீரன்; மேல் நாடுகளில் பல தேசங்களை வென்று கைக்கொண்டான்; பின்பு நம் இந்தியா மீது படையெடுத்து வந்தான்; அவ்வாறு வந்த போது சிந்து நதிக்கரை அருகே ஒருகாட்டில் கூடாரம் அமைத்துச் சேனைகளோடு தங்கி யிருந்தான்; மறுநாள் மாலையில் தளபதிகளோடு உலாவி வரும் போது ஒரு துறவியைக் கண்டான். யாதொரு துணையுமின்றி யாவும் துறந்து தன்னந்தனியே இருந்த அவரைக் கண்டதும் மன்னன் பெரிதும் வியந்தான்; கிட்ட நெருங்கி உற்று நோக்கினன்; யாதும் பேசாமல் அவர் மவுனமாயிருந்தார்; நீண்ட வேல்கள் ஏந்திய சில போர் வீரர்கள் சூழ மன்னன் வந்து நிற்பதைக் கண்டும் சிறிதும் மதியாமல் உறுதி பூண்டிருக்கும் துறவி மீது அவனுக்குப் பிரியம் நீண்டது: 'நான் பெரிய சக்கரவர்த்தி; என் தேசத்துக்கு நீர் வர வேண்டும்; உம்மை அழைத்துப் போகிறேன்; பொன்னும் பொருளும் நிறையத் தருகிறேன்; சிறந்த அரண்மனையில் அமர்ந்து சுகமாய் வாழலாம்” என்று அவன் உவகையோடு சொன்னான்.

'எனக்கு யாதும் வேண்டாம்; நீ ஒதுங்கிப் போ; அதுவே எனக்குப் போதும்' என்று துறவி சாதுவாய் உரைத்தார். என் வார்த்தைக்கு மாறு கூறுவதா? என்று அவன் சீறிச் சினந்தான்; தனது கூரிய வாளை நேரே நீட்டிக் காட்டி. ’இதனால் உன் தலையைத் துணித்து எறிவேன்’ என்று கொதித்து நின்றான்; கொலை நோக்கோடு உருத்துகின்ற அவனைப் பார்த்து இவர் அமைதியாய்ச் சிரித்தார்; சிரிக்கவே அம்மன்னன் வியந்தான்; மனம் தெளிந்தான்; வணங்கி வாழ்த்தினான். இந்த நிகழ்ச்சி அவனுடைய சரித்திரத்தில் அதிசயமான ஒரு புகழ்ச்சியாய் வந்துள்ளது.

“I will kill you, if you do not come.” (Emperor)

'நீ வரவில்லையானால் உன்னை நான் கொல்லுவேன்' என்று நான் சொன்ன போது அத்துறவி ’என்னை யாராலும் கொல்ல முடியாது; நான் பிறப்பு இறப்பு இல்லாத பேரானந்த நிலையினன்' என்று சிரிப்போடு சொன்னார். அது இன்னும் என் கண்முன் உள்ளது என அம்மன்னன் தன் நாட்டவர்க்கு இந்நாட்டின் ஞான நிலையையும், துறவின் தீரத்தையும் வியந்து கூறியிருக்கிறான். ஞான தீரர்களால் இத்தேசம் தேசு மிகுந்துள்ளது.

துறவு எவ்வளவு பெருமையுடையது! அதனை மருவி நின்றவர் எத்துணை திவ்விய நிலைகளை அடைந்துள்ளனர் என்பதை இங்கே நிகழ்ந்துள்ள நிகழ்ச்சியால் உய்த்துணர்கின்றோம்.

உலக பாசங்களைத் துறந்து ஈசனையே உறவாய்க் கருதி யுருகியிருத்தலால் துறவிகள் வேறு யாரையும் மதியாமல் வீறு கொண்டு நிற்கின்றார். தன்னை வந்து காணும்படி அரசன் அழைத்த பொழுது திருநாவுக்கரசர் அதனை மறுத்து விட்டார். 'நீ வெறும் பொருளுடையவன்; நான் பரம்பொருளுடையவன்; நீ இத்தேசத்துக்கு மட்டும் இன்று அரசன்; நான் எத்தேசங்களுக்கும் என்றும் நித்திய சக்கரவர்த்தி' என நாவரசர் நா வீறோடு அன்று பேசி விடுத்தது அவரது துறவு நிலையை உலகம் அறிய நன்கு உணர்த்தி நின்றது. எல்லாம் வல்ல இறைவனை உறவாய்க் கொண்டமையால் துறவிகள் யாண்டும் யாதும் அஞ்சாமல் அதிசய வைராக்கிய சீலராய் உறுதி பூண்டு நிற்கின்றனர்.

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் - திருத்தாண்டகம்
(காய் காய் மா தேமா அரையடிக்கு)

துறந்தார்க்குத் தூநெறியாய் நின்றான் தன்னைத்
துன்பந் துடைத்தாள வல்லான் தன்னை
இறந்தார் களென்பே யணிந்தான் தன்னை
யெல்லி நடமாட வல்லான் தன்னை
மறந்தார் மதில்மூன்றும் மாய்த்தான் தன்னை
மற்றொருபற் றில்லா அடியேற் கென்றும்
சிறந்தானைத் தென்கூடல் திருவா லவாய்ச்
சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே. 7 - 019 திருஆலவாய்

துறவாதே யாக்கை துறந்தான் தன்னைச்
சோதி முழுமுதலாய் நின்றான் தன்னைப்
பிறவாதே எவ்வுயிர்க்குந் தானே யாகிப்
பெண்ணினோ டாணுருவாய் நின்றான் தன்னை
மறவாதே தன்திறமே வாழ்த்துந் தொண்டர்
மனத்தகத்தே அனவரதம் மன்னி நின்ற
திறலானைத் திருமுதுகுன் றுடையான் தன்னைத்
தீவினையேன் அறியாதே திகைத்த வாறே. 8 - 068 திருமுதுகுன்றம்

நாமார்க்குங் குடியல்லோம் நமனை யஞ்சோம்
நரகத்தி லிடர்ப்படோம் நடலை யில்லோம்
ஏமாப்போம் பிணியறியோம் பணிவோ மல்லோம்
இன்பமே யெந்நாளுந் துன்ப மில்லை
தாமார்க்குங் குடியல்லாத் தன்மை யான
சங்கரன்நற் சங்கவெண் குழையோர் காதிற்
கோமாற்கே நாமென்றும் மீளா ஆளாய்க்
கொய்ம்மலர்ச்சே வடிஇணையே குறுகி னோமே. 1 - 098 பொது

என்றும்நாம் யாவர்க்கும் இடைவோ மல்லோம்
இருநிலத்தில் எமக்கெதிரா வாரு மில்லை
சென்றுநாம் சிறுதெய்வம் சேர்வோ மல்லோம்
சிவபெருமான் திருவடியே சேரப் பெற்றோம்
ஒன்றினாற் குறையுடையோ மல்லோ மன்றே
உறுபிணியார் செறலொழிந்திட் டோடிப் போனார்
பொன்றினார் தலைமாலை யணிந்த சென்னிப்
புண்ணியனை நண்ணியபுண் ணியத்து ளோமே. 5 - 098 பொது, ஆறாம் திருமுறை, திருநாவுக்கரசர் தேவாரம்

பற்றுக்கள் யாவும் துறந்து பரமனையே பற்றி நின்ற அப்பரது துறவு நிலையையும் மனவுறுதியையும் விரத சீலங்களையும் இவ்வுரைகளால் உணர்ந்து கொள்கிறோம். துறந்தான் எனச் சிவபெருமானுக்கு ஒரு பெயரிட்டிருக்கிறார். துறவின் நோக்கம் பிறவியை நீக்குவதே என இவர் துணிந்து மொழிந்துள்ளார்.

கலிவிருத்தம்
(மா கூவிளம் கூவிளம் கூவிளம்)
முதற்சீர் குறிலீற்று மாவாக இருக்கும்.
விருத்தம் நிரையில் தொடங்கினால் 12. எழுத்தெண்ணிக்கை தானே வரும்!
2, 3 சீர்களில் மாச்சீர் வரின் அடுத்த சீர் நிரையில் தொடங்கும்.விளத்தின் இடத்தில் மாங்காய் வருவதும் உண்டு.
(முதலிரண்டு சீர்களுக்கிடையில் 'மாவைத் தொடர்ந்து நேர்' என்ற நேரொன்று ஆசிரியத்தளை அமையும்;
மற்ற இடங்களில் வெண்டளை அமையும்)

துறவி நெஞ்சினர் ஆகிய தொண்டர்காள்,
பிறவி நீங்கப் பிதற்றுமின் பித்தராய்,
மறவ னாய்ப்பார்த்தன் மேல்கணை தொட்ட,எம்
குறவ னார்உறை யும்,குட மூக்கிலே. 6 - 022 திருக்குடமூக்கு, திருக்குறுந்தொகை, ஐந்தாம் திருமுறை, திருநாவுக்கரசர் தேவாரம்

துறவிகளுக்கு இவ்வாறு இவர் புத்தி போதித்திருக்கிறார்.

பொய்யான வைய மையல் அற்றவுடன் மெய்யான பொருளையே யாவரும் மேவி நிiற்கின்றனர். அந்நிலை இயற்கை நியமமாய் இயைந்துள்ளது. மாய மருள் நீங்கிய பொழுது தூய உரிமைப் பொருள் தெரிய வர தேகம் நீங்கும் வரையும் அதனையே நினைந்து நெஞ்சம் கரைந்து நேசம் கனிந்து துறவியர் உருகி உறுதிபூண்டு நிற்கின்றார். அவருடைய நிலை உயிர் பரங்களின் உறவுரிமைகளை உணர்த்தியருளுகிறது.

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(மா மா காய் அரையடிக்கு)

சிந்தைத் துயரென் றொருபாவி
..சினந்து சினந்து போர்முயங்க
நிந்தைக் கிடமாய்ச் சுகவாழ்வை
..நிலையென் றுணர்ந்தே நிற்கின்றேன்
எந்தப் படியுன் அருள்வாய்க்கும்
..எனக்கப் படிநீ அருள்செய்வாய்
பந்தத் துயரற் றவர்க்கெளிய
..பரமா னந்தப் பழம்பொருளே. 7

பொருளைப் பூவைப் பூவையரைப்
..பொருளென் றெண்ணும் ஒருபாவி
இருளைத் துரந்திட் டொளிநெறியை
..என்னுட் பதிப்ப தென்றுகொலோ
தெருளத் தெருள அன்பர் நெஞ்சந்
..தித்தித் துருகத் தெவிட்டாத
அருளைப் பொழியுங் குணமுகிலே
..அறிவா னந்தத் தாரமுதே. 8 - 23. தன்னையொருவர், தாயுமானவர்

இறைவனை நினைந்து தாயுமானவர் இவ்வாறு உருகி உரையாடியிருக்கிறார். பொன், மண், பெண் என்னும் இந்தப் பொய்ப் பொருள்களில் ஆசை வைத்திருப்பவர் மெய்ப் பொருளான ஈசனை அடைய இயலாது, பாச பந்தம் அற்றவர்க்கே அவன் பரமானந்தமாய் எளிதே காட்சியருளுகின்றான் என இங்கே இவர் காட்டியுள்ள உண்மை கருதி யுணர வுரியது.

ஆசை அற்ற துறவி ஈசன் ஒளியாய் இலங்குகிறான் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (18-Jan-22, 4:04 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 36

மேலே