காட்டுத்தீயும் மூன்று ரோஜாக்களும் நெடுங்கதை

காட்டுத்தீயும் மூன்று ரோஜாக்களும் 1

பாகம் ஒன்று
=============

நகரின் பிரதான வீதி.

'இளமதி' தொலைக்காட்சி நிறுவனத்தின் எட்டு மாடிக்கட்டிடம். வழக்கம் போல பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது.

கட்டிடத்தின் முக்கியமான பல அறைகளில் அடுத்தடுத்த வாரங்களில் ஒளிபரப்பாக இருக்கின்ற பல கேம் ஷோக்கள், சமையல் நிகழ்ச்சிகள், குழந்தைகள் நிகழ்ச்சிகள், டான்ஸ் ஷோக்கள், காமெடி ஷோக்கள் இவற்றின் படப்பிடிப்புக்கான தயாரிப்புகள் விறுவிறுவென நடந்து கொண்டிருந்தன.

மற்றும் சில அறைகளில் படப்பிடிப்பு முடிந்தவற்றின் போஸ்ட் புரெடக் ஷன் வேலைகள் நடந்து கொண்டிருந்தன.

அப்பொழுது கட்டிடத்தின் நுழைவு வாயிலில் ஒரு புதுப்பரபரப்பு தொற்றிக் கொண்டது.

தொலைக்காட்டி நிறுவனத்தின் ஹெட்/தலைமை அதிகாரி 'சாருமதி' உள்ளே வந்து கொண்டிருந்தாள். இந்தியாவில் வளர்ந்து வரும் தொழிலதிபர்களில் எட்டாம் இடத்தில் இருப்பவள்.

தனது தந்தை நிலாவண்ணனின் மறைவிற்குப் பின் கடந்த பத்து வருடங்களுக்கு முன்னாள் இந் நிறுவனத்தின் தலைமை பொறுப்பிற்கு வந்து, புது ரத்தம் பாய்ச்சி, புதுப் புது சிந்தனைகளுக்கு உருவம் கொடுத்து, இன்று அசுர வளர்ச்சியில் இருக்கும் 'இளமதி' தொலைக்காட்சியை வழி நடத்தி வருபவள். பார்க்க நடிகை தேவயானியை ஞாபகப்படுத்தும் தோற்றம். சேலை கட்டிய தேவயானி அல்ல, மாடர்ன் டிரஸ் தேவயானி.

இன்னும் திருமண பந்தத்தில் தன்னை இணைத்துக் கொள்ளவில்லை. அதில் நம்பிக்கையில்லை என்று கூறி வருபவள்.

சாருமதி எங்கு சென்றாலும் திருமண காதல் அம்புகள் எல்லாத் திசைகளிலும் இருந்து பாயக் காத்திருக்கும். ஆனாலும் தன் பார்வையை அதனைத் தடுக்கும் கேடயமாகப் பயன்படுத்தும் கலையில் தேர்ச்சி பெற்றிருந்தாள்.

நிறுவனத்தின் வளர்ச்சி கண்டு, அதனைச் சீர்குலைக்கவும் எல்லா விதமான சக்திகளும் இயங்கிக் கொண்டு தான் இருந்தன. ஆனால் தனது புத்திசாலித்தனத்தினால் எதிரியினைப் போலவும் சிந்திக்கும் திறன் பெற்றிருந்த சாருமதி, எதிரி.. அணுகுண்டுக்கான தீயை வைக்கும்முன், அதன் பியூசை பிடுக்கிவிடும் அளவுக்கு திறமை பெற்றிருந்தாள். எனவே எதிரி நிறுவனங்களும் இப்பொழுதெல்லாம் அதிகமாய் மோதும் போக்கை கடைபிடிப்பதில்லை. அதனால் 'இளமதி' தொலைக்காட்சி நிறுவனத்தின் வளர்ச்சி எவரெஸ்ட் உச்சிக்கு வளர்ந்து கொண்டிருந்தது.

அதனை மேலும் மேலும் எப்படி முன்னேற்றலாம் என்ற சிந்தனைக்கு தன்னை முற்றிலும் அர்ப்பணித்துக் கொண்ட சாருமதி, வழியெங்கும் வாரி வழங்கப்பட்ட குட்மார்னிங்களை புன்னகையுடன் வாங்கிக் கொண்டு, தனது ஏ.சி. அறைக்குள் நுழைந்து கம்பீரமாய் அமர்தவள், பி.ஏ. ரூபாவை இன்டர்காம் மூலமாக அழைத்தாள்.

"குட் மார்னிங் மேம்"

"குட் மார்னிங் ரூபா.. ஷாலினி, தர்ஷினி, மேகலா மூனு பேரும் வந்துட்டாங்களா?"

"எஸ் மேம்.. வந்துட்டாங்க"

"சரி.. அவங்கள உடனடியா என்னைப் பார்க்க வரச்சொல்லு"



"ஓகே மேம்"



போனை வைத்துவிட்டு, எல் ஈ டிவியை ஆன் செய்தாள். கொரோனா செய்திகள் ஓடிக் கொண்டிருந்தது.



சுவாரஸ்யமில்லாமல் பார்த்துக் கொண்டிருக்கும் போதே.. மூவரும் வந்துவிட்டனர்.



"குட் மார்னிங் மேம்"

"குட் மார்னிங்.. குட் மார்னிங்.. வாங்க.. எப்படி இருக்கீங்க மூனு பேரும்?"


"எங்களுக்கென மேம்.. சூப்பர இருக்கோம்.. எப்படா அடுத்த புரஜக்ட் கிடைக்கும்.. அப்படீனு வெயிட் பண்ணிட்டு இருக்கோம்.." இது ஷாலினி..



"போன தடவை பண்ணின ஆலை திறப்பு போராட்டம் கிரேட் சக்ஸச்.. நாம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தொழிலாளி வீட்டுக்கும் போய் போட்ட அப்டேட் எல்லாம் செம வைரலா போச்சு.. எங்கெங்கேயோ இருக்கற விஐபிஸ் எல்லாம் கூட எங்கள கான்டக்ட் பண்ணி கங்க்ராட்ஸ் பண்ணாங்க.. இன்னும் அந்த புரஜக்ட் பண்ண நாட்கள மறக்க முடியல மேம்.." இது தர்ஷினி.



"மேம்.. இனி எதாவது புரஜக்ட்னா பாரீன் அனுப்புங்க.. உள்ளூர்ல போதுமான அளவு சுத்திப்பார்த்தாச்சு.. என்ன சொல்றீங்க.. ஷாலு.. தர்ஷீ..?"



மூவரும் சாருமதியைப் பார்த்து புன்னகைத்தபடியே அமர்ந்திருக்க.. அதே புன்னகையுடன் மூவருக்கும் பதிலுரைத்தாள் சாரு..



"இப்ப என்ன..? பாரீன் புரஜக்ட் வேணும்.. அவ்ளோ தானே..! என்னோட பெஸ்ட் டீம் நீங்க.. உங்களுக்கு இல்லாததா..! கூடிய சீக்கிரம் உங்களத் தேடி வரும் அந்த பாரீன் புரஜக்.. ஆனா அதுக்கு முன்னாடி ஒரு முக்கியமான விஷயம்.. அதப்பத்தி டிஸ்கஸ் பண்ணத்தான் உங்கள கூப்பிட்டேன்""



"தமிழ் நாட்டுல மிக அடர்த்தியான காடுகள் உள்ள பகுதி மேற்குத் தொடர்ச்சி மலை. தமிழகம், கர்நாடகா, கேரளானு மூன்று எல்லைகளும் அதனைச் சூழ்ந்து இருக்கும். அங்க ஒரு கிராமத்துல என்னோட காலேஜ் ப்ரண்ட் ஒருத்தி ஒரு காலாண்டு இதழ்ல வேலை பார்க்கறவ‌.. பத்திரிக்கைச் செய்தி சேகரிக்கப் போயிருக்கா.. நேத்து அவ ஒரு விஷயம் எங்கூட பகிர்ந்துகிட்ட.. அதச் சொல்லத்தான் உங்கள வரவழைச்சேன்"



"சொல்லுங்க மேடம். அவங்க சொன்ன விஷயம் என்ன?"



"அங்க இருக்கற அடர்த்தியான காட்டுல காட்டுத்தீ ஒரு அஞ்சு நாளைக்கு முன்னாடி பத்திக்கிச்சாம். அது இப்ப அளவுக்கதிகமா பரவிட்டு வருதாம். முதல்ல எடுக்கப்பட்ட எல்லா முயற்சிகளையும் தகர்த்து எரிஞ்சிட்டு இப்ப அது படுவேகமா பரவிட்டு வருதாம். ஆனா அரசாங்கம் அத இன்னும் ஒரு நியூசா வெளிய சொல்லல. சொன்னா கெட்ட பேருனு இன்னும் சொல்லாம மறைக்கறாங்களாம். அத நாம மக்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டனும். அது உங்க மூனு பேரால முடியும்னு எனக்கு கண்டிப்பாத் தெரியும்"



"நிச்சயம் மேடம். எப்பக் கெளம்பணும்?"



"இன்னைக்கே.. இப்பவே.. நாளைக்கு ஈவ்னிங்குக்குள்ள ஒரு லைவ் ஷோவோ.. இல்ல ஹாட் நியூஸோ போட்டு தமிழ் நாட்டையே அலற விடுவோம்"



"எரியும் தீ பரப்பும் புகை அதன் தூசு பல நாட்களுக்கு சுத்திட்டே இருக்கும். அதை சுவாசிச்சா எல்லாத்துக்கும் ஆபத்து. போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பண்ணிக்கோங்க. வழியில் என்ன பிரச்சனைனாலும் டைரக்டா என் மொபைலுக்கு கால் பண்ணுங்க"



"மேகலா.. வழக்கம் போல டிரைவிங்ல கலக்குங்க.. ரெண்டு பேருக்கும் உரிய பாதுகாப்பா இருங்க.. தற்காப்பு கலைய ரொம்ப நல்லா கத்துக்கிட்டவங்க நீங்க.. தர்ஷினி.. கேமரா உங்க கைல விளையாடும். வேற சேனலுக்குப் போக இருந்த உங்கள வலுக்கட்டாயம நம்ம சேனலுக்கு வரவழைச்சு அதன் பலன அனுபவிச்சுட்டு இருக்கறேன்.. அசத்துங்க.. ஷாலினி.. உங்க வாய்ஸால இதுவரைக்கும் எப்படி மக்கள கட்டிப்போட்டு வச்சு இருக்கீங்களோ.. அத இன்னும் சிறப்பா செய்ங்க.. விட்டா கோலிவுட்ல இறங்கி பாடகியாவோ, டப்பிங்க ஆர்ட்டிஸ்டாவோ கலக்கற திறமை உங்ககிட்ட இருக்கு.. பின்னுங்க.. சரியா?"



"ஷ்யூர் மேடம்.. உங்க எதிர்பார்ப்ப நாங்க எப்போதும் போல காப்பாத்துவோம்.. நாளைக்கு உங்கள நோக்கி ஒரு குட் நியூஸ் வரும். இப்ப நாங்க கெளம்பறோம் மேடம்"



"ஓ.கே. குட் லக்..", எனச் சொல்லி மூவருக்கும் கை கொடுத்து அவர்களை அனுப்பிவைத்தாள் சாருமதி.



உடனடியாக மேற்குத் தொடர்ச்சி மலைக் காடுகளை நோக்கி.. ஒரு கார் புறப்பட்டது.



நாளை முதல் செய்திச் சேனல்களில் ஒரு புதிய செய்தி வந்து மக்களை மிரள வைக்கப்போகிறது. அரசாங்கத்தைக் கேள்வி கேட்கப் போகிறது.



சரி.. இனி நாமும் அவர்களோடு சேர்ந்து பயணிப்போம்..



(தொடரும்)



அ.வேளாங்கண்ணி





காட்டுத்தீயும் மூன்று ரோஜாக்களும் - 2


பாகம் இரண்டு
==============

கார் சீராகச் சென்று கொண்டிருந்தது.



மாலை கடந்து இரவு மெல்ல ஆக்ரமித்த நேரம்.



சற்று முன்னர் தான் சாலையோர டீக்கடையில் டீ, பிஸ்கட்டை எடுத்துக்கொண்டனர்.



'இது ஒரு பொன் மாலைப்பொழுது', என்ற வைரமுத்துவின் முதல் பாடலை எஸ்பிபி உருகி உருகி பாடிக் கொண்டிருக்க, இளையராஜாவுடன் தொடர்ந்து கொண்டிருந்தது பயணம்.



"என்னடி மேகலா.. உங்க வீட்டுல உடனே ஒத்துக்கிட்டாங்களா?"



"என்னைப்பத்தி எங்க வீட்டுல நல்லாத் தெரியும்டி, கூடவே உங்களைப் பத்தியும். உங்க கூடத்தான் போறேனு சொன்னப்பறம் எப்படி விடாம இருப்பாங்க!? உங்க வீட்டுல என்னடி சொன்னாங்க ஷாலினி?"



"அம்மா தான் மூஞ்சியத் தூக்கி வச்சுக்கிச்சு.. நாளைக்கு என்னோட பர்த்டே.. அதுக்கு பல பேர கூப்பிட்டு பெரிய விருந்துக்கெல்லாம் ஏற்பாடு பண்ணிடுச்சுப் போல.. திடீர்னு பத்து, பனிரெண்டு நாள் வெளியூர் போறேனு சொன்னா கோவம் வராது!? வந்தவுடனே அந்த செலிபரேசன வச்சுக்கலாம்னு சொல்லி சமாளிச்சிட்டு வந்திருக்கேன். திரும்பி வந்தா தான் அவங்க கோபத்தோட கரெக்ட்டான பவர் தெரியும்.. நீ உங்க வீட்டு கதையச் சொல்லு தர்ஷூ"



"எங்கதையா.. ஹா ஹா ஹா.. தப்பிச்சேன் பிழைச்சேனு ஓடி வந்திருக்கேன்"



"என்னது.. தப்பிச்சேன்.. பிழைச்சேனா.. என்னடி சொல்ற?"



"ஆமான்டி.. இன்னும் ரெண்டு நாள்ல என்னை பொண்ணு பார்க்க ஒருத்தவங்கள கூட்டிட்டு வர்றதா புரோக்கர் சொல்லி இருக்கார். இன்னும் எவ்வளவோ சாதிக்க வேண்டியது இருக்கு.. இப்போதைக்கு கல்யாணம் வேண்டாம். இன்னும் கொஞ்சம் நாளாகட்டும்னு சொன்னா கேட்டாத்தானே..! இப்பப் பாரு.. மாட்டிக்கிட்டாங்க.. இப்ப சாரி சொல்லிடுங்க.. நான் வந்தப்பறம் பார்க்க வரச் சொல்லுங்கனு சொல்லிட்டு, அந்தப்பையன் நம்பர மட்டும் வாங்கிட்டு வந்திருக்கேன்..."



"நம்பரா.. அத ஏன்டி இப்பவே வாங்கின!?"



"சும்மா... இருக்கட்டுமே.. இன்னும் எத்தனை பேரு என்னை பொண்ணு பார்க்க வருவாங்களோ.. இவன் ஹஸ்பன்டா வருவானானே தெரியாது... எப்பவாவது போர் அடிச்சா... எதாவது மெசேஜ் பண்ணி கலாய்க்கலாம்னு தான்.."



"இருந்தாலும் இது ரொம்ப ஓவர்டி"



"என்னடி இது? திடீர்னு இப்ப வானம் இருளுது?", என மேகலா சொல்ல.. அப்போது தான் இருவரும் கவனித்தனர்.



"அடைமழை, சூறாவளி, புயல்னு எந்த நியூஸும் நான் பார்க்கலையே..!"



"இப்படி மீடியா இருந்துக்கிட்டே நாம, மீடியாவ கலாய்க்கறதுல கூட ஒரு சுகம் தான்.. அப்ப செம மழை கண்டிப்பா இருக்கு.." என தர்ஷினி சொல்லிக்கொண்டிருக்கும் போதே ஷாலினியின் மொபைல் "தூரிகா.. தூரிகா..." எனப் பாட ஆரம்பித்தது.



"வாவ்.. வாவ்.. வாட் எ சாங்", என தர்ஷினி பாடலை ரசிக்க ஆரம்பிக்க.. அந்தக் காலை அட்டென்ட் செய்து அவளது ரசனைக்கு முற்றுப்புள்ளி வைத்தாள் ஷாலினி.



"ஹலோ.. குட் ஈவ்னிங் மேம்"



சாருமதியின் அழைப்பு எனத் தெரிந்ததும் காரின் பாட்டுச் சத்தத்தைக் குறைத்து வைத்தாள் மேகலா.



"எப்படி போயிட்டிருக்கு பயணம்?"



"செமயா என் ஜாய் பண்ணிட்டு இருக்கோம் மேம்.. இன்னும் ஒரு 150 கிலோமீட்டர் இருக்கும் போல.. சோ.. வழியில நைட் எங்கேயாவது ஸ்டே பண்ணிட்டு நாளைக்கு அதிகாலைல கிளம்பி ஸ்பாட்டுக்கு சீக்கிரமா போக முயற்சிக்கிறோம்.."



"ஓகே.. வழியில எதாவது பிரச்சனை!?"



"அப்படியெல்லாம் எதுவும் இல்ல மேம்.. இப்பத்தான் வானம் மேகமூட்டமா இருக்கு.. மழை வந்தாலும் வரலாம்"



அடுத்து வரும் பிரச்சனை தெரியாமல் ஷாலினி இப்படி பேசுகிறாளே என யோசித்ததோ என்னவோ வானம்.. "சட் சட்"டென மழையை உடனடியாக அனுப்ப.. உடனே வைப்பரை ஆன் செய்தாள் மேகலா...



"மேம்.. மழை வந்திருச்சு.. நாங்க அப்பறம் பேசறோம்"



"ஓகே. ஓகே..", என சாருமதி போனைக் கட் செய்ய.. இங்கு பிடித்துக் கொண்டது அடைமழை.



காரின் வேகத்தைக் குறைத்த மேகலாவிற்கு.. சூழலின் திடீர் மாற்றம் ஆச்சரியம் கொடுத்தது.



"என்னடி.. வர்ற மாதிரி இருக்குனு நீ சொல்லச் சொல்ல.. மழை இப்படி பிடிச்சுக்கிச்சு..!?"



"மேகமும், வானமும் நாம பேசறத ஒட்டுக்கேட்டிருக்கும்னு தோணுதுடி"



"ஓ.. அதுக்குள்ள 'பேகாசஸ்' ஸ்பைவேர கடவுள் இன்ஸ்டால் பண்ணியிருப்பாரோ!"



"பேகாசஸ்.. இந்தப் பேரக் கேட்டாலே சும்மா அதிருதுல்ல‌.. இப்ப இந்தியாவே அதிர்ந்து போய் இருக்கு.. இந்தியா மட்டுமில்ல.. முழு உலகம் கூட... எத்தன பேரோட செல்‍போன் பேச்சுக்கள‌ ரெக்கார்ட் பண்ணி வச்சிருக்கு... அதச் சரியா இப்ப மேகத்துக்கும், வானத்துக்கும் பொருத்தின பாரு சூப்பர்டி.."



அதே சமயம் அடைமழை மிக அதிகமான அடைமழையானது. காற்று தன் ரூபம் காட்டத் துவங்கியது. வழியெங்குமிருந்த மரங்கள் சாமியாட ஆரம்பிக்க.. வழியில் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கையும் குறைய ஆரம்பித்தது. பைக் ஆசாமிகள் கண்ணிலேயே படவில்லை.



சட்டென கரண்ட் கட்டாக, சாலையோர‌ மின் கம்பங்கள் விழியிழந்தன.



அப்போது காருக்குள் "மழை வருது மழை வருது குடை கொண்டு வா" பாடல் வர..



"வாவ்.. வாட் எ டைமிங்", என மூவரும் ரசித்த வேளை.. 'டமார்' என்ற பயங்கரமானச் சத்தம்.



'ஆ'வென இவர்கள் கத்த.. ஒரு டயரின் வெடிப்பில் அதிர்ந்த கார்.. சாலையை இரண்டு மூன்று முறைச் சுற்றி.. நிலை தடுமாறி ஒரு சரிவின் விளிம்பில் போய் நின்றது.



நல்ல வேளையாக ஒரு பெரிய மரம் அந்தக் காரினை மேலும் எங்கும் போக விடாமல் தடுத்து நிறுத்தியிருந்தது.



மூவரும் பெருத்த அதிர்ச்சிக்கு உள்ளாயினர். அடைமழை, ஆள் நடமாட்டமில்லாச் சாலை, பஞ்சரானக் கார், பேய்க்காற்று, மூன்று இளம்பெண்கள்.. இப்படியெல்லாம் அவர்கள் நினைக்கும் ஆட்கள் இல்லை.



உடனே.. காரை விட்டு வெளியே வந்தனர். அக்கம்பக்கம் யாருடைய உதவியாவது கிடைக்குமா என அங்குமிங்கும் கண்களால் துளாவிப்பார்த்தனர். யாருமே கண்ணில் அகப்படவில்லை. அப்போது தூரத்தில் ஒரு வட்ட வடிவ வெளிச்சம் சட்டெனத் தோன்றியது.



அது மெல்ல மெல்ல அவர்களை நோக்கி முன்னேறி வந்து கொண்டிருந்தது.



பக்கத்தில் வர வர அது டார்ச் லைட் எனத் தெரிந்தது. இன்னொரு கையில் குடைபிடித்தபடி அய்யனார் சாமி வடிவாய் மீசை வைத்த ஒருவன் அவர்கள் முன்னால் வந்து நின்றான்..



"என்னாச்சுங்க மேடம்? கார் மாட்டிக்கிச்சா..!?"



அவனை முதல்முதலாகப் பார்த்தால்.. பேசுவதா வேண்டாமா என்ற தயக்கம் ஆண்களுக்கே எட்டிப்பார்க்கும். ஆனால் மேகலா முன்னே வந்தாள்.



"ஆமாங்க.. ஒரு டயர் வெடிச்சிருச்சு.. கார் மெல்லமா வந்ததால.. இப்படியே சுத்தி சுத்தி இங்க வந்து நின்னுடுச்சு.. பக்கத்துல யாராவது மெக்கானிக் இருக்காங்களா?"



"நானே கார் மெக்கானிக் தாங்க.. அந்த டமார் சத்தம் கேட்டுத்தான் நானும் வந்தேன். கொஞ்சம் மழை நிற்கட்டும். அப்பறம் காரை சரி பண்ணித் தரேன்.. இந்தாங்க இந்தக் குடையை பிடிச்சுக்கங்க.. பக்கத்துல தான் என் வீடு.. மழை நிக்கற வரைக்கும் அங்க ரெஸ்ட் எடுங்க.. நான் இன்னும் ரெண்டு பேரை கூப்பிட்டுக்கறேன்.. அவங்க வந்தப்பறம் காரத்தள்ளி வெளிய எடுத்து சரி பண்ணிடலாம். சரிங்களா?"



அவனது கடா மீசைக்கும் இந்தக் கனிவான பேச்சுக்கும் துளியும் சம்பந்தமேயில்லை. மூவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.



காரிலிருந்த அவர்களது எந்தப் பொருளுக்கும் அதிகமான பாதிப்புகள் இல்லை. மிக மெதுவாகத்தானே கார் சுற்றி வந்து மாட்டியது.



"என்னடி சொல்றீங்க? போலாமா? மழை விடட்டும்.. அது வரைக்கும் இங்கேயே நிக்கறதும் நல்லாப் படல", என மேகலா சொல்லிவிட்டு முன்னே நடக்க, சரியென்று தலையாட்டி விட்டு ஷாலினியும், தர்ஷினியும்... விட்டு விட்டு வந்த மின்னல் வெளிச்சத்தில் அவனைப் பின் தொடர்ந்து நடக்க ஆரம்பித்தனர்.



(தொடரும்)



அ.வேளாங்கண்ணி



காட்டுத்தீயும் மூன்று ரோஜாக்களும் - 3


பாகம் மூன்று
=============


ஒரு 500 அடி தூரம் சென்றதும் ஒரு குறுகலான சந்து வந்தது. அதற்குள் நுழைந்தான் அந்த அய்யனார் மீசை ஆசாமி.



இதுவரை பேசாமல் வந்தவன், இப்போது பேச ஆரம்பித்தான்.



"என்னங்க மேடம்.. மூனு பேரும் எதுவுமே பேசாம அமைதியா வர்றீங்க..! இப்படி ஒரு புது ஊர்ல.. ராத்திரி நேரத்துல அன்னிய தேசத்துக்காரனாட்டம் இருக்கற, இந்த மீசக்காரங்கிட்ட வந்து மாட்டிக்கிட்டோமேனு பயமா இருக்கா!"



"அப்படியெல்லாம் இல்லீங்க.. நீங்க உதவி செய்யத்தானே அழைச்சிட்டுப் போறீங்க.. இதெல்லாம் எங்களுக்குப் பழக்கந்தான்.. நாங்க அடிக்கடி ஊர் சுத்தற ஆளுங்க தான்... கராத்தே, தற்காப்புக்கலைனு எல்லாமே தெரிஞ்சு வச்சிருக்கோம்.. இல்லடி..", என மேகலா அவனுக்கு பதிலுரைத்தாள்.



"ஓகோ", என்பதாய் தலையாட்டியவன்.. "இதோ வந்துட்டோம்.. இந்த வீடு தான்", என்றான்.



"பூங்காவனம்.. பூங்காவனம்"



அன்பே உருவான ஒரு அமைதியான உருவம் கதவைத் திறந்தது. இவர்களைப் பார்த்ததும் திடுக்கிட்டவளாய்..



"யாருங்க.. இவங்க.. ? இந்த நேரத்துல‌.."



"அடியே.. முதல்ல உள்ள வர வழிய விடு.. உனக்கு விளக்கமாச் சொல்றேன்"



அப்போது வீட்டுக்குள்ளிருந்த ஒரு இளம்பெண்.. இவர்களது மகளாக இருக்க வேண்டும். இவர்கள் முன் வந்தாள்.



"அம்மா.. யாரு வந்திருக்கா? யாரு இவங்க?"



"தெரியல மயில்... அப்பாத்தான் கூட்டிட்டு வந்தார்"



அவள் என்னவென்று விசாரிக்கும் முன் இவரே நடந்தவற்றைச் சொல்ல ஆரம்பித்தார்.



"ஓ.. அப்படியா.. விஷயம்! ஒன்னும் பிரச்சனை இல்லேங்க.. இவர் கார சரி பண்ற வரைக்கும் நீங்க மூனு பேரும் இங்க தாராளமா ரெஸ்ட் எடுக்கலாம்", எனச் சொன்ன பூங்காவனம் இவர்கள் அமர சேர் எடுத்துவந்து போட்டாள்.



நன்றாக உலர்த்தப்பட்ட மூன்று துண்டுகளை எடுத்துவந்து இவர்கள் துடைத்துக்கொள்ள கொடுத்தாள் மயில்.



"என்னது நீ மயிலா..?"



"ஆமாங்கா.. மயில்விழி"



"ஆகா.. என்ன ஒரு பேர்! நீ என்ன மயில் பண்ற? எங்க உன் தோகை..? இந்த ராத்திரி நேரத்திலேயும் ஆடுமயிலாட்டம் இவ்ளோ ப்ரஷ்ஷா இருக்க?"



"ஏன்னா.. அவளுக்கு நாளைக்கு பர்த்டே..", என பூங்காவனம் சொல்ல..



"ஆமாக்கா. அதான் காரணம்.. நாளைக்கு எனக்கு 18 பொறக்குது. அதான் நைட்டு கேக் வெட்டி கொண்டாடலாம்னு இருக்கோம். சர்ப்ரைஸா மூனு அக்காங்க.. கெஸ்ட் ரோல் பண்ண வந்துட்டீங்க.. நான் செம ஹேப்பிக்கா..."



"வாவ்.. மயில்.. என் பேரு ஷாலினி.. எனக்கும் நாளைக்குத் தான் பர்த்டே தெரியுமா?"



"அப்படியாக்கா.. வாவ்.. வாவ்..", என்று கூறி மயில் ஷாலினியின் கையைப் பிடித்து குலுக்க...



"சரி பேசிட்டு இருங்க.. எதுவும் தப்பா நினைக்கலேனா.. நைட் சாப்பாடு இங்கேயே சாப்பிட்டிருங்க.. மழை கொஞ்சம் விட்ட மாதிரி இருக்கு.. நான் கூப்பிட்ட பசங்க ஸ்பாட்டுக்கு வந்துட்டாங்க போல.. எனக்கு கால் பண்ணிட்டே இருக்கானுங்க.. சரி.. பூங்கா.. நான் போய் கார சரி பண்ணிட்டு வரேன்", எனச் சொல்லிவிட்டு அந்த அய்யனாரு மீசைக்காரர் கிளம்ப..



மயிலுடனும், பூங்காவுடனும் பேசியபடியே மூன்று பேரும் சகஜமாயினர்.



மயில் எழுந்து சென்று ஒரு போன் பேசிவிட்டு வந்து அமர்ந்தாள்.



இப்போது தான் வீட்டை மூவரும் பார்வையால் அலசினார்கள்.



அனைத்துப் பொருட்களும் அதனதன் இடத்தில் சரியாக வைக்கப்பட்டிருந்தன‌. அருகிலிருந்த ஒரு ஷெல்ப்பில் நூறு, இருநூறு புத்தகங்கள் சரியாக அடிக்கி வைக்கப்பட்டிருந்தன.



"வாவ்.. இவ்ளோ புத்தகம் வச்சிருக்கீங்க!""



"எல்லாம் அவரோட கலெக்சன் தான்.. வீட்டுக்கு வந்தார்னா எப்பவுமே படிப்பு தான். நல்லா படிப்பார்.. நல்லா எழுதுவார்.. தமிழ் அவருக்கு அவ்வளவு பிடிக்கும். அதான் இவ பேரு 'மயில்விழி'.. இப்ப இவளையும் பி.ஏ (தமிழ்) தான் சேர்த்து விட்டிருக்கார்"



"குட்.. குட்.. சூப்பருங்க.. 'பொன்னியின் செல்வன்' 'வேள்பாரி' எல்லாம் கூட வாங்கி வச்சிருக்காரே!"



"அதாங்க.. அவரு சம்பாதிக்கறதெல்லாம் இதுக்குத்தான் அப்படீனு சொல்லிட்டே இருப்பாரு.



"மயில்.. நீ கூட இந்த புத்தகமெல்லாம் படிப்பியா!?"



"நானும் படிப்பேன்கா.. அம்மாவும் படிப்பாங்க", என மயில் சொல்லிக் கொண்டிருக்கும் போதே கதவு தட்டப்பட்டது.



கதவைத் திறக்கச் சென்ற பூங்காவனம், இரண்டு இளைஞிகளை அழைத்து வந்தாள்.



"ஹாய்.. மயில்..", என்ற படியே அவர்கள் வந்தனர்.



"ஹாய் தேவி.. ஹாய் கவிதா"



"அக்கா... இவங்க ரெண்டு பேரும் என்னோட குளோஸ் ப்ரண்ட்ஸ்.. பர்த்டே கொண்டாட வந்திருக்காங்க"



இதற்குள் தேவி தன் கையிலிருந்த கேக் பேக்கிங்கை அருகிலிருந்த டேபிள் மேல் வைத்தாள்.



"நாங்கதான் பர்த்டே கேக் வாங்கிட்டு வருவோம்னு ஒரே அடம். பக்கத்துல தான் வீடு", என மேலும் தொடர்ந்தது அவர்களுக்கான அறிமுகப் படலம்.



"தேவி.. கவிதா.. இவங்க மூனு பேரும் எங்களோட சர்ப்ரைஸ் கெஸ்ட்ஸ்"



"அதான் போன்லேயே சொன்னியேடி"



"சரி.. சரி.. அப்பா வர லேட்டாகும் போல.. இவங்க சீக்கிரமா வீட்டுக்கு வேற திரும்பி போகனும் இல்லையா! அதனால கேக்க இப்ப கட் பண்ணிடலாமா?"



"என்னம்மா... அப்பா இல்லாமலா? கொஞ்சம் வெயிட் பண்ணுவோம்.. அப்பா வந்திடட்டும்"



"ஆமாங்க.. இவ்ளோ ஏற்பாடெல்லாம் பண்ணியிருக்கீங்க.. கொஞ்சம் வெயிட் பண்ணலாமே!", என தர்ஷினி சொல்ல..



சரியெனத் தலையாட்டினாள் பூங்காவனம்.



இதற்குள் ஏழு பேரும் சகஜமாகி தங்களுக்குள்ளே பேச ஆரம்பித்தனர்.



சற்றுமுன் அவர்களது காரின் டயர் வெடித்து, கார் சரிவில் மாட்டிக்கொண்டு, வழி தெரியாமல் விழி பிதுங்கி மழையில் தவித்தபடி இவர்கள் மூவரும் நின்றிருந்தனர் என யாராவது சொன்னால் ஒருவரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.



சிரிப்பு சிரிப்பு அவ்வளவு சிரிப்பு..



அப்போது மயிலின் அப்பாவும் வந்து சேர்ந்தார்.



"வாம்மா கண்ணுங்களா.. எப்படி இருக்கீங்க?"



"நாங்க ரொம்ப சூப்பரா இருக்கோம் அங்கிள்"



"என்ன பூங்கா.. இன்னுமா கேக் வெட்டாம இருக்கீங்க?"



"நீங்க வந்த பின்னாடிதான்னு எல்லோரும் சொல்லிட்டாங்க.. சரி நீங்க போன விஷயத்த சொல்லுங்க.. கார சரி பண்ணியாச்சா..?"



"அட ஆமால்ல... அத சொல்ல மறந்துட்டேன்.. ஸ்பாட்லயே ஆக வேண்டியதெல்லாம் பார்த்து இப்ப கார சரியான கன்டிஷனுக்கு கொண்டு வந்தாச்சு"



இதைக் கேட்டதும் மூவரின் முகங்களும் பிரகாசமாக மாறியது.



"இந்த ஒரு இக்கட்டான நிலையில தானா வந்து யாருனே தெரியாதவங்களுக்கெல்லாம் உதவி செய்யறதெல்லாம் வேற லெவலுங்க.. ரொம்ப ரொம்ப நன்றிங்க.. மொத்தம் எவ்ளோ ஆச்சுனு சொல்லுங்க?"



"அத அப்பறமா சொல்றேங்க.. இப்ப கேக் கட் பண்ணலாமா?"



படபடவெனெ டேபிள்.. ஹாலின் நடுவே தூக்கிவந்து வைக்கப்பட்டு, அதன் மேல் ஒரு அழகிய துண்டு விரிக்கப்பட்டு, கேக் பேக்கிங் அதன் மேல் வைக்கப்பட்டது.



அதனை ஓப்பன் செய்தாள் மயில்.



அதில் பார்வையை ஓட விட்ட ஷாலினிக்கு ஒரு ஷர்ப்ரைஸ்..



அதில் எழுதப்பட்டிருந்தது...



"ஹேப்பி பர்த்டே.. மயில் அன்டு ஷாலினி" என்று



ஷாலினிக்கு கண்கள் கலங்கிவிட்ட‌து.



மயிலை அப்படியே கட்டிப்பிடித்துக் கொண்டாள்.



"இத நீதான சொன்ன", எனக் கேட்பதாய் அந்த அணைப்பு இருந்தது.. "ஆமா.. நான் தான் சொன்னே", எனச் சொல்வதாய் மயிலின் அணைப்பு இருந்தது.



இந்த அற்புதமான தருணத்தை மொபையில் படம்பிடித்து பத்திரப்படுத்திக் கொண்டாள் மேகலா.



கேக் வெட்டப்ப்ட்டு, மயில் மற்றும் ஷாலினியின் முகத்தில் அப்பப்பட்டு மிகவும் குதூகலமாய் கழிந்தன நிமிடங்கள்.



இரவுச்சாப்பாடும் தனித்துவமாய் ஒவ்வொரு டிஷ்ஷையும் தனித்தனியாய் புகழும்படி இருந்தது. மூன்று பேரும் பூங்காவனத்தை புகழ்ந்து தள்ளிவிட்டனர்.



"இப்ப நல்லா இருட்டிடுச்சு.. உடனே நீங்க கிளம்ப வேண்டாம். எதுவும் ஆட்சேபனை இல்லேனா இங்கேயே தங்கிட்டு காலைல சீக்கிரமா கிளம்பி போலாமே!", என மயிலின் அப்பா கேட்க.. இவர்களுக்கும் அது சரியாகவேப் பட்டது.



சாப்பாடு முடிந்ததும் தேவியும், கவிதாவும் கிளம்பிச் சென்றனர்.



மகிழ்வில் நிறைந்திருந்த இவர்களது மனம் தூக்கத்தை தூரமாய் தள்ளி வைத்திருந்தது. பூரிப்பாய் சிந்தித்தபடியே தூங்கிய அவர்கள்.. அலாரம் அடித்த காலை ஐந்து மணிக்குத்தான் எழுந்தனர்.



எழுந்ததும் விறுவிறுவெனக் கிளம்பினர்.



கிளம்பும் போது பல நாள் பழகிய உறவாய் தோன்றினர் பூங்காவனமும், மயிலும்..



"எங்களுடைய கஷ்டமான நாள, எங்களுக்குப் பிடிச்ச மிக இஷ்டமான நாளா மாத்தின உங்க மூனு பேருக்கும் ரொம்ப ரொம்ப நன்றி", என்று கூறி பிரியாவிடை பெற்றனர்.



அப்போது தான் மூவருக்குமே ஒன்று தோன்றியது.



எல்லோருடைய பேரையும் தெரிஞ்சுக்கிட்டோம். ஆனா இந்த அய்யனார் மீசை ஆசாமி, கடாமீசைக்காரர், பூங்காவனம் ஹஸ்பன்டு, கார் மெக்கானிக், மயிலோட அப்பானு பல ரூபங்களில் கண்ணுக்குத் தெரியற இவரோட பேரக் கேட்காம இருக்கோமே என்று.."



"ஐயா.. உங்க பேரு என்னாது தெரிஞ்சுக்கலாமா?"



"அப்பாப்பேரு 'சின்னவன்'", என மயில் சொல்ல..



"என்ன சின்னவனா!? பேரு தாங்க சின்னவன்.. ஆனா மனதால நீங்க ரொம்ப ரொம்ப பெரியவங்க..", என மானசீகமாக நன்றி சொல்லித் தங்கள் காருக்குத் திரும்பினர்.



அதிகாலைச் சூரியன் பல்விலக்கிவிட்டு அவசரமாய் வெளியே வர மலைக்குப் பின்னிருந்து எட்டிப்பார்க்க ஆரம்பித்திருந்தது.



மேற்கு தொடர்ச்சி மலை நோக்கிய தன் பயணத்தை மீண்டும் ஆரம்பித்தது அக்கார்.



"காலை நேரப் பூங்குயில்

கவிதை பாடப் போகுது

கலைந்து போகும் மேகங்கள்

கவனமாகக் கேட்குது"



என்ற இளையராஜாவின் பாடலுடன் தொடர்ந்தது அப்பயணம்.


(தொடரும்)


அ.வேளாங்கண்ணி



காட்டுத்தீயும் மூன்று ரோஜாக்களும் 4


பாகம் நான்கு
============

"அப்பப்பா.. என்ன மாதிரியான மனிதர்கள்..! காரோட டயர் மட்டும் வெடிக்கலேனா இவ்ளோ சுவாரஸ்யமான மனிதர்களைச் சந்திக்க வாய்ப்பே இல்லாம போயிருக்கும்"



"ஆமாண்டி.. சின்னவன், பூங்காவனம், மயில்விழி...இவங்கள எல்லாம் மறக்க முடியுமா?"



"சின்னவன்.. ஆளுக்கும் பேருக்கும் சம்பந்தமேயில்ல.. அவரோட தோற்றத்துக்கும் பண்புக்கும் தொடர்பே இல்ல.. பூங்காவனம்.. ஒரு தெய்வீகமான உருவம். அவங்க சமையல்.. அடடா... டாப் நோட்ச்... திரும்பி வரும் போது ஒரு பிடிபிடிக்கணும்.. மயில்.. குயீட்டான குட்டிப்பாப்பா.. அப்படியே அன்பு மழைல நம்ம நனைச்சிட்டா.."



"அருமையான குடும்பம்.. அற்புதமான பண்பு.. அறிவான செயல்பாடுகள்.. அப்பறம் அவங்க வீட்டுல இருந்த புத்தகங்கள்.. அட அட.. இந்தக்காலத்திலேயும் இப்படி படிக்கறவங்க இருக்காங்களானு எண்ணிப்பார்க்கத் தோணுது.. நீ படிச்சிருக்கியாடி.. பொன்னியின் செல்வன்.. வேள்பாரி நாவல்கள்.."



"பொன்னியின் செல்வன் ரொம்ப முன்னாடி படிச்சது.. ஆகா என்ன ஒரு மொழிவளம்.. ஆயிரம் வருஷத்துக்கு முன்னாடியே கூட்டிட்டுப் போயிடுவார் கல்கி.. அதுல வர்ற கேரக்டர்கள் ஒவ்வொன்னும் அடடா.. அடடா... தான் போ.."



"ஆமா.. இப்பக்கூட மணிரத்னம் அத படமா எடுத்திட்டு இருக்கார்"



"படம் நல்லா பிரமாண்டமா பாகுபலி மாதிரி இருக்கணும்.. இங்க மட்டுமில்லாம இந்தியா முழுதும் நல்லா ஓடணும்.. இன்னும் உலக லெவல்லேயும் ஜெயிச்சா.. நம்ம தமிழர் பெருமை இன்னும் நல்லா எல்லாப்பக்கமும் பரவும். எப்படி படம் எடுக்கணும்னு சொல்லித்தரவே வேண்டாம்.. தெரியும்.. ரொம்ப நல்லாவேத் தெரியும் அவருக்கு.. நிச்சயமா படம் கலக்கும்னு நம்பலாம்..."



"ம்.. கலக்கினா சரிதான்.. இந்த வேள்பாரி நாவல்.. யாருடி படிச்சிருக்கீங்க? ஆனந்த விகடன்ல 100 வாரத்துக்கு மேல தொடரா வந்துச்சு.. இப்ப மதுரை பாராளுமன்ற உறுப்பினரா இருக்கற எழுத்தாளர் உயர்திரு.. சு.வெங்கடேசன் அவர்கள் எழுதினது"



"நான் படிச்சிருக்கேன்டி.. அப்பப்பா.. என்ன ஒரு எழுத்து நடை.. எத்தனை எத்தனை அறிய செய்திகள்.. எத்தனை எத்தனை அதிசய விலங்குகள், பறவைகள், தாவரங்கள். எத்தனை வித்தியாசமான மனிதர்கள்னு நாவல் முழுதும் நாம எண்ணிப்பார்க்க முடியாத வர்ணனைகள், விபரங்கள்.. பல ஆதிகால தமிழ் இனங்கள் பற்றிய தகவல்கள், அவர்களுடைய கதைகள்னு.. சும்மா கலக்கு கலக்குனு கலக்கியிருப்பார்.. சுவாரஸ்யமோ சுவாரஸ்யம்..", என மேகலா சொல்ல...



"ம்.. சூப்பர்.. இந்த புரஜக்ட் முடிச்சிட்டு.. திரும்ப போனவுடனே நான் படிக்க முயற்சிக்கிறேன்..", என ஷாலினி சொன்ன வேளை.. அவளது செல்போன்.. "தூரிகா'வை அழைக்க ஆரம்பித்தது.



"ஹே... விழும் இதயம் ஏந்திப்பிடி

ஹே.. அதில் கனவை அள்ளிக்குடி

ஹே.. குறுஞ்சிறகு கோடி விரி

வா.. என் இதழில் ஏறிச் சிரி



கிட்டார் கம்பி மேலே நின்று

கீச்சும் கிளியானாய்

வண்ணம் இல்லா என் வாழ்விலே

வர்ணம் மீட்டுகிறாய்



தூரிகா.. என் தூரிகா.."



சென்ற தடவை மாதிரியில்லாமல் இம்முறை முழுதும் பாடலை ஒலிக்க விட்டே அட்டன்ட் செய்தால் ஷாலினி.



"குட்மார்னிங் மேம்"



"குட்மார்னிங் ஷாலினி.. பயணம் எப்படி இருக்கு? ஸ்பாட்டுக்கு போயிட்டீங்களா?"



"பயணம் தொடருது மேடம்.. ஆனா நேற்றிரவு ஒரு சம்பவம்"



"என்ன சம்பவமா?"



"ஆமா மேடம்.. ஆனாலும் அது ஒரு ஸ்வீட் சம்பவம்.. வந்தவுடன அதப்பத்தி விரிவாச் சொல்றோம்.. இப்ப பக்கத்துல வந்துட்டோம் மேம்.. இன்னும் பத்து கிலோ மீட்டர்ல மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவார கிராமத்துக்கு போயிடுவோம்.. அங்க போயிட்டு கொஞ்சம் செட்டில் ஆகிட்டு உங்களுக்குப் போன் பண்றோம் மேம்.."



"ஓகே.. ஷாலினி.. உங்களோட‌ வாட்ஸ் அப்புக்கு என்னோட காலேஜ் ப்ரண்டோட போன் நம்பர அனுப்பியிருக்கேன்.. அவளே கால் பண்ணுவா.. இல்லேனா நீங்க கூட கால் பண்ணிப் பேசுங்க.. சரியா.. இன்னிக்கே ஒரு முக்கிய அப்டேட்ட எதிர்பார்க்கறேன்..."



"ஷ்யூர் மேம்.. அங்க போனவுடனே பரபரப்பா இயங்கி.. உங்களுக்கு நைஸ் அப்டேட் சீக்கிரமா அனுப்பி வைக்கறோம்"



"குட்.. சரி நான் அப்டேட்டுக்காக எதிர்பார்த்து காத்திருப்பேன். பாதுகாப்பா செயல்படுங்க.. கலக்குங்க.. இப்ப போன வைக்கறேன்"



"எஸ் மேம்... தேங்க்யூ..."



ஷாலினி போனை வைத்த வேளை.. குளுகுளு காற்றுடன் தலையை அசைத்து சாலையோர மரங்கள் இவர்களை வரவேற்றன.



அந்த கிராமம் 'வனமேடு'



அதிகமான வீடுகள் இல்லை.. ஊரின் ஆரம்பத்தில் இரண்டு மூன்று கடைகள் கண்ணில் பட்டன. அதில் ஒரு டீக்கடையைக் கண்டதும் அதன் முன் காரை நிறுத்தினாள் மேனகா.



மூவரும் இறங்கினர்.



மூவரையும் ஒருவித ஆச்சரியத்தோடு பார்த்தனர் அங்கிருந்த பெஞ்சில் அமர்ந்து அளவளாவியபடி டீ அருந்திக் கொண்டிருந்த ஊர் பெருசுகள்.



கடையில் டீ போட்டுக் கொண்டிருந்த இளம்பெண் இவர்கள் கண்ணில் பட்டாள்.



பார்த்ததும் திரும்பவும் பார்க்கவைக்கும் முகம். முகத்தில் எப்போதும் படர்ந்திருக்கும் புன்னகையென, அவளைக் கண்டதும் மூவருக்கும் 'அட' இங்க ஒரு 'மயில்விழி' என்பதாகவே தோன்றியது.



அவளும் இவர்களைக் கண்டதும் ஒரு புன்னகை பூத்தாள், கல்லாப்பெட்டியில் ஒரு அம்மா அமர்ந்திருந்தாள். அவளுக்கும் இவளின் முகச்சாடை.. இல்லையில்லை அந்த அம்மாவின் முகச்சாடையில் தான் இந்தப்பெண்.



"மூனு டீ கொடும்மா..", என மேகலா சொல்ல ஆர்வமாய் டீ போட ஆரம்பித்தாள் அப்பெண்.



இவர்களது மாடர்ன் டிரஸ்ஸையும், மாடர்ன் முகங்களையும் மேய்ந்தபடியே இருந்தது ஊராரின் கண்கள்.



'டீ' அற்புத சுவையுடன் இருந்தது. சர்க்கரைக்குப் பதில் கருப்பட்டி போட்டிருந்தாள்.



டீ குடித்தபடியே அவளுடன் பேச்சுக்கொடுக்க ஆரம்பித்தாள் மேகலா.



"டீ.. செம சூப்பரா இருக்கு.. ஆகா ஆகா.. என்ன ஒரு சுவை"



"தேங்க்யூ அக்கா"



"இந்தக் கிராமத்துல நாங்க சில நாள் தங்க வந்திருக்கோம்"



"அப்படியா!?"



"எதாவது வீடு சில நாளுக்கு வாடகைக்கு கிடைக்குமா?"



தன் அம்மாவைத் திரும்பிப் பார்த்தாள் அப்பெண்.



அதற்கு முன்பே எழுந்து இவளிடத்தில் வந்திருந்தாள் அந்த அம்மா.



"என்ன.. இங்க தங்கப் போறீங்களா.. என்ன விஷயம்னு தெரிஞ்சுக்கலாமா?"



டீக்கடைக்காரர்கள் போலவே இல்லை அவர்களது பேச்சு.. நன்றாகப் படித்தவர்களாக நடந்து கொண்டனர்.



"நாங்க ஒரு டி.வி. சேனல்ல இருந்து வந்திருக்கோம். இந்தக் காட்டுக்குள்ள சில வீடியோக்கள் எடுத்து சேனல்ல போடணும்.. அதான்"



"அப்படியா.. அடிக்கடி ரொம்ப பேரு இந்த மாதிரி எங்க கிராமத்துக்கு வந்து தங்கறது வழக்கம் தான்.. அதுக்காகவே ஊருக்குள்ள சிலர் நல்ல நல்ல வீடுகள கட்டி வச்சிருக்காங்க.. என்ன வாடகை மட்டும் கொஞ்சம் ஜாஸ்தியா இருக்கும்.. உங்களுக்குப் பரவாயில்லையா!"



"அதெல்லாம் பரவால்லேங்க"



"அப்பச் சரி.. பாரஸ்ட் டிபார்ட்மென்ட்ல எல்லாம் பர்மிஷன் வாங்கிட்டீங்களா?"



"ம்... எங்க ஹெட் வாங்கியிருப்பாங்க" (சொல்லிவிட்டு மற்ற இருவரையும் பார்த்து மர்மமாய் புன்னகைத்தாள் மேனகா.. நிச்சயமாக வாங்கியிருக்க வாய்ப்பில்லை என்பது இவர்கள் மூவருக்குமே தெரியும்)


(தொடரும்)

அ.வேளாங்கண்ணி


காட்டுத்தீயும் மூன்று ரோஜாக்களும் - 5


பாகம் ஐந்து
============


"ஒன்னு ரெண்டு வீடு இருக்கு.. நான் அவங்ககிட்ட போன்ல பேசிடறேன்.. அப்பறம் எம் பொண்ணு உங்கள அங்கப்போய் விட்டுடுவா... சரிங்களா?"



"சரிங்க", என மேகலா சொல்ல..



அப்பெண்ணின் அம்மா செல்போனில் யாருக்கோ ரிங் செய்து பேச ஆரம்பித்தாள்.



மூவரும் அவளது முக ஓட்டத்தினை தொடர்ந்து கவனிக்க ஆரம்பித்தனர். அவ்விளம்பெண் தனது பணியில் தன்னை இணைத்துக் கொண்டு தொடர்ந்து அதில் மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்தாள்.



புன்னகைத்த படியே போனை வைத்த அந்த அம்மா...



"பிருந்தா", எனக் கூப்பிட..



"சொல்லும்மா..", என்ற படியே அந்த இளம்பெண் வந்தாள்.



"உங்க மாமா வீட்டுல போயி இவங்கள விட்டுட்டு வா"



இதைக்கேட்டதும் அவளுக்குள் ஒரு குதூகலச் சிரிப்பு வந்தது.



"நாந்தான் இங்க பிஸியா இருக்கேனே.. நீ போனா என்னம்மா?"



"என்னடி.. புதுசா பேசற? எப்பவுமே அங்க போறேன்.. அங்க போறேனு ஓடுறவ நீ.. ஒழுங்க போயி இவங்கள விட்டுட்டு வா.. அது வரைக்கும் நான் இங்க பார்த்துக்கறேன்."



"ம்.. நீ சொன்னா சரிம்மா.. வாங்க போகலாம்.. இங்க பக்கத்துல தான் வீடு இருக்கு"



"நடந்து போற தூரமா?"



"ஆமா... ரொம்ப பக்கம்.. நீங்க கார எடுத்துட்டு வாங்க.. நான் அப்படியே மொல்லமா முன்னாடி நடக்கறேன். ஒரு நாலு நிமிஷத்துல போயிடலாம்", எனச் சொன்ன பிருந்தா.. உடனே முன்னே நடக்க ஆரம்பித்தாள்.



மேகலா காரை எடுத்துக்கொண்டு அவளைப் பின் தொடர, இரண்டு மூன்று நிமிடங்களில் ஒரு சிறிய மாடிவீட்டை அடைந்தனர்.



அங்கே சென்றதும், "மாமா.. அத்தை", எனச் சத்தமிட்டுக் கூப்பிட்டாள் பிருந்தா.



ஆனால் வெளியே ஒரு இளைஞன் வந்தான்.



"என்ன பிருந்தா வெளியவே நின்னுட்டு கத்திட்டு இருக்கற.. அதுவும் இவ்ளோ காலைல.. அத்த விடமாட்டாங்களே..!", எனப் பேசியபடியே வந்தவன் வெளியே புதிதாய் நிற்கும் மூவரைக் கண்டதும் சட்டென அமைதியானான்.



"டே.. வருண்.. மாமா அத்தை இல்ல.."



"ம்.. ம்.. இருக்காங்களே..", என்ற படி.. "அப்பா.. அம்மா.. அப்பா அம்மா", என கத்த ஆரம்பித்தான்.



உள்ளேயிருந்து இருவர் வந்தனர்.



இவர்களையும் கவனித்த படியே வந்த அவர்கள் முகத்தில் அளவாய் புன்னகை.



இவர்களும் அவர்களைப் பார்த்து புன்னகைத்தனர்.



"ஏண்டா இப்படி கத்தற? ஓ பிருந்தாவா.. இப்பத்தான் தங்கச்சி போன் பண்ணுச்சு.. இந்தா மாடி போர்ஷன் சாவி.. நீயே இவங்கள கூட்டிட்டுப் போய் வீட்டக் காட்டிட்டு வா"



"சரி.. கொடுங்க மாமா", என பிருந்தா சாவியை வாங்கிக்கொள்ள மூவரும் அவளுடன் மேலே சென்றனர்.



இரண்டு நாளைக்கு முன்பு வரை யாரோ இருந்திருப்பார்கள் போல.. ஓரளவுக்கு சுத்தமாகவே இருந்தது. அடிப்படைத் தேவைக்குத் தேவையான பொருட்களும் வீட்டில் நிறைந்திருந்தது. மூவருக்கும் பார்த்ததுமே பிடித்து விட்டது. வாடகைக்காகவே கட்டப்பட்டது என்பது புரிந்தது. வீட்டைப்பார்த்தபடியே பிருந்தாவிடமும் பேச்சுக் கொடுத்தனர்.



"பிருந்தா.. உன் பேரே இவ்ளோ தானா?"



"இல்லக்கா... முழுப்பேரு பிருந்தாவனம்"



"ஓ.. சூப்பர்.. பிருந்தாவனம்.. அழகானப் பார்.. உங்க அப்பா என்ன பண்றார்..?"



"அப்பா இல்ல.. நான் சின்ன வயசா இருக்கும் போதே.. அம்மாவோட சண்ட போட்டுட்டு எங்கள விட்டுட்டு எங்கேயோ போயிட்டார்.."



"ஓ.. சோ.. சேட்.."



"உங்களுக்கு வீடு ஓகேவா..! நான் கெளம்பவா?"



"ம்.. ஓகே தான்.. தண்ணி வசதியெல்லாம் எப்படி?"



"எங்க ஊருல தண்ணிப்பிரச்சனையா அப்படீனா என்னனு கேப்பாங்க.. எப்பவுமே தண்ணி வரும்"



"ஆகா.. செம‌"



"சரி.. வா.. நாங்க கீழ வந்து வீட்ட வாடகைக்கு எடுத்துக்கறோம்னு சொல்லிடறோம்.. நீ உங்க கடைக்கு கெளம்பு..."



"சரிங்க அக்கா"



அவர்கள் கீழே வந்து.. வாசலில் நின்றிருந்தவர்களிடம் மீண்டும் ஒரு புன்னைகையை சிந்தி..



"ரொம்ப நல்லா இருக்குங்க வீடு.. ஒரு பத்து நாள் நாங்க தங்க வேண்டிவரும்..", என இவர்கள் தெரிவிக்க.. மற்ற வாடகை விபரங்கள் பேசப்பட.. பிருந்தா இவர்களிடம் விடைபெற்று கிளம்பிச் சென்றாள், அவளுடன் வருணும் சென்றான்.



பொருட்களை, பைகளை, சூட்கேஸை எடுத்துவந்து வீட்டில் செட்டில் ஆனவர்களுக்கு, அடுத்து உடனே காட்டு பகுதிக்குச் செல்ல ஆசை பிறந்தது. தயாராகிக் கொண்டிருக்கும் போதே கதவு தட்டப்பட்டது.



வெளியே பிருந்தா நின்றிருந்தாள். கையில் ஒரு பை. அதில பல டிபன் பாக்ஸ்கள். மணம் அப்படியே அள்ளியது.



"அக்கா.. இந்தாங்க.. பிரேக்பாஸ்ட்.. அம்மா கொடுத்துட்டு வரச் சொன்னாங்க.. லஞ்ச், டின்னர் கூட கொடுக்கறதா சொன்னாங்க.. இது நீங்க தங்கி இருக்கறவரைக்கும் கிடைக்கும்னும் சொன்னாங்க‌"



"வாவ்.. சூப்பர்.. ரொம்ப நன்றி சொன்னோம்னு சொல்லுமா"



"ம்.. சரிக்கா... சாப்பிட்டுட்டு எப்படி இருக்குனு சொல்லுங்க"



"கண்டிப்பா பிருந்தா.. வாசனையே அள்ளுதே.. நீங்க எல்லாம் ரொம்ப நல்லவங்களா இருக்கீங்க‌"



"நீங்களும் தான் ரொம்ப அன்பா பழகறீங்க"



"வனமேடா.. மனமேடா.. இல்ல மணமேடா.. ஆரம்பம் அசத்தலா இருக்கு... ரொம்ப பிடிச்சுப்போச்சு.. இந்த ஊரும்... நீங்க எல்லாரும்.. ஆமா.. அந்தப் பையன்.. அதான் உன் மாமா பையன் வருண் என்ன பண்றார்?"



"டிகிரி முடிச்சிட்டு.. இப்ப வீட்ல சும்மா தான் இருக்கான்.. அப்பப்ப‌ வேலை தேடறதா பாவ்ளா பண்ணுவான்"



"ஓ.. சரி.. தேவைனா அந்த தம்பிய‌ எங்க கூட காட்டுக்குள்ள கூட்டிட்டுப் போலாம்னு பார்க்கறோம்"



"கண்டிப்பா கூட்டிட்டுப் போங்க.. சும்மா வெட்டியாத்தான் இருக்கான்.. அவனுக்கும் காட்டுல சுத்தறதெல்லாம் ரொம்ப பிடிச்ச விஷயம்.. ரொம்ப டைம் காலைலே காட்டுக்குள்ள கெளம்பி போயிட்டு சாயந்தரமா கூட வந்திருக்கான்.."



"அட.. அப்ப சரியான ஆள் தான் வருண்.. சரி பிருந்தா.. காட்டுத்தீ பத்தி எதாவது தெரியுமா?"



"அதப்பத்தி ஒன்னும் தெரியாதேக்கா"



"சரி... நீ கெளம்பு.. நாங்களும் சாப்பிட்டுட்டு கெளம்பறோம்..", என்றவர்கள் விறுவிறுவெனக் காலை உணவை சாப்பிட்டுவிட்டு கிளம்பி கீழே வந்தனர்.



வருண் வெளியே தான் நின்று கொண்டிருந்தான். இவர்களைப் பார்த்ததும் புன்னகைத்தான்.



"நான் உங்க கூட காட்டுக்குள்ள வர்ற ரெடி", என அவனாகவே சொன்னான்.



"ஓ.. பிருந்தா சொல்லிட்டாளா?"



"அப்ப‌.. சரி.. வாங்க போலாம்...", என அவனையும் அழைத்துக்கொண்டு கிளம்பினர்.



சரியான பாதை இல்லை.. கரடுமுரடான பாதையில் ஆரம்பமானது காட்டுத்தீயை எதிர்கொள்ளும் அவர்களது பயணம்.



அப்போது உடல் முழுதும் தீக்காயங்களுடன் ஒரு நரி.. அவர்கள் முன் மெல்ல மெல்ல நடந்து சென்று கொண்டிருந்தது.



வருண், திடுக்கிட்டுப் போனவனாய் நரியையே பார்த்துக் கொண்டிருந்தான்.



"என்னாச்சு.. இந்த நரிக்கு.. யாரு இதுக்கு தீவச்சா?", என அவனாகவே கத்தினான்..



தர்ஷினி தன் கேமராவுக்கு வேலை கொடுக்க ஆரம்பித்தாள்.



ஷாலினி தன் குரலை சரிபடுத்திக்கொண்டு ரெடியானாள்.



மேகலா.. காரை மெதுவாக அங்கேயே நிறுத்தினாள்.



(தொடரும்)


அ.வேளாங்கண்ணி



காட்டுத்தீயும் மூன்று ரோஜாக்களும் - 6


பாகம் ஆறு
============


இவர்களைக் கண்டதும் அரண்ட நரி.. காட்டுக்குள் ஓடி மறைந்தது. அதனை சிறிதளவாவது வீடியோ எடுத்துக்கொண்டோமே என்ற திருப்தி தர்ஷினிக்கு ஏற்பட்டது. அங்கிருந்து மீண்டும் ஆரம்பமானது பயணம்.



"நம்ம மேம் அவங்களோட ஒரு ப்ரண்டப் பத்தி சொன்னாங்களே, அவங்க நம்பர் இருந்தா ஒரு ரிங் பண்ணே", என்றாள் மேகலா.



"ஓ.. அவங்களா..! எனக்கும் இப்பத்தான் அவங்க கிட்ட பேசனும்னு தோணுச்சு.. இதோ பண்றேன்"



ரிங் அடித்த அடுத்த நொடியே எடுக்கப்பட்டது.



"யாரு தர்ஷினியா?"



"எஸ் மேம்.. எங்க மேம் உங்க நம்பர் கொடுத்து ஒரு டைம் கான்டக்ட் பண்ணச் சொன்னாங்க"



"ஓகே.. ஓகே.. நானும் உங்க கால் வரும்னு எதிர்பார்த்திட்டே இருந்தேன்.. இப்ப எக்சாக்டா எங்க இருக்கீங்க?"



'வனமேடு'ங்கற கிராமத்துல வந்து தங்கிட்டு அங்க இருந்து காட்ட நோக்கி போய்க்கிட்டு இருக்கறோம்"



"கிரேட்.. உங்க புரஜக்ட் சரியான இடத்துல இருந்து தான் தொடங்கி இருக்கு... இதுவரைக்கும் எதாவது அறிகுறி தெரிஞ்சுதா!"



"ம்கூம்.. இந்த ஊர் மக்களுக்கு இதப்பத்தி அவ்வளவா தெரில.. ஆனா உங்களுக்கு ரிங் பண்றதுக்கு முன்னாடி தான் நெருப்பால காயப்பட்ட ஒரு நரிய நாங்க பார்த்தோம்.."



"ஓ... அப்ப சரியான திசைல தான் உங்க பயணம் போகுது... சரி.. கலக்குங்க.. கவனமா இருங்க"



"ஓகே மேம்.. தேங்க்ஸ்.."



தர்ஷினி போனை வைக்க, ஷாலினி ஆரம்பித்தாள்.



"என்னடி சொல்றாங்க அவங்க?"



"சரியான திசையில் தான் நம்ம பயணம் இருக்குதாம்.. பத்தியா இப்பத்தான் ஞாபகம் வருது.. வீடு பார்த்து தங்கிட்டு சாரு மேம்க்கு போன் பண்றோம்னு சொன்னோம்.. மறந்துட்டோம்.. உடனே போன் பண்ணு ஷாலினி"



"அட ஆமால்ல.. இதோ இப்ப பண்றேன்.."



"ஹாய் மேம்.. காட்டுக்குள்ள போக ஆரம்பிச்சுட்டோம்..."



"ம்.. ஒரு வீடு கெடச்சுச்சு.. எஸ் மேம்.. ஒரு சின்ன க்ளிப் எடுத்தோம்.. அனுப்பிச்சிருப்பா பாருங்க"



"ஓகே மேம்.. தேங்க்ஸ்..", என போனை வைத்தவள்..



"ம்... சொல்லியாச்சு.. இப்ப தான் திருப்தியா இருக்கு..", என்றபடியே வருணிடம் பேச்சுக் கொடுத்தாள்..



"என்ன வருண், நீங்க எதுவும் பேசாம அமைதியா வர்றீங்க...! ஒரே பொண்ணுங்களா இருக்கவும் பயந்துட்டீங்களா?"



"ச்ச.. ச்ச.. அப்படியெல்லாம் இல்லங்க‌.. எல்லாரும் ஒரு பிரபல டிவில வேலை பார்க்கற பிரபலங்கள். டக்குனு எனக்கு என்ன பேசறதுனே தெரில.. என்னை ஹெல்ப்புக்குனு வேற‌ கூப்பிட்டிருக்கீங்க.. அந்த ஹெல்ப்ப நல்லா பண்ணி எப்படி நல்லப் பேர வாங்கறதுனு நான் யோசிச்சிட்டே வரேன்.. அதான் எனக்கு எதுவும் பேசத் தோணல.. சரி விடுங்க.. இப்பவாச்சும் நீங்க வந்த கரெக்டான ரீசனச் சொன்னீங்கனா.. நான் என்ன உதவி பண்ண முடியும்னு யோசிக்க முடியும்.."



"சரி.. மொதல்ல ஒரு சின்னக் கேள்வி.. அதுக்கு பதில் சொல்லுங்க"



"இல்ல... 'ங்க'வ விட்டுடலாம்.. ப்ரண்ட்ஸாவே பழகலாம்.. நீங்க எல்லாம் என்னைவிட பெரியவங்க தான்.. என்னை பேரச் சொல்லியே கூப்பிடுங்களேன்.."



"நைஸ் வருண்.. தெளிவான ஆள் தான் நீ.. சொல்லு.. இந்தப்பக்கமெல்லாம் 'காட்டுத்தீ'... இதப்பத்தி மக்கள் என்ன நினைக்கறாங்க..?"



"காட்டுத்தீயா!? ... எஸ் முன்னாடியே இதப்பத்தி கேட்டீங்க.. பிருந்தாகிட்டேயும் இதையே கேட்டதா அவ சொன்னா.. அப்பப்ப எங்கேயாவது காட்டுத்தீ பிடிச்சிருக்குனு யாராவது சொல்லுவாங்க.. பாரஸ்ட் டிபார்ட்மென்டுக்கு உடனே தகவல் போயிடும்.. அவங்க தேவையான நடவடிக்கைல உடனே இறங்கி அத கட்டுப்படுத்திடுவாங்க.."



"அப்பறம் நாம என்ன விஷயமா காட்டுக்குள்ள போறோம்? எதாவது வனவிலங்குகளோட வீடியோ எடுக்கப் போறீங்களா? நானே சிங்கம், புலி, சிறுத்தை, காட்டெருமை, யானை இன்னும் கணக்குவழக்கில்லாம மான், சோலைமந்தி குரங்கு அத சிங்கவால் குரங்குனு கூட சொல்லுவாங்க.., நரி, அப்பறம் தமிழகத்தின் மாநில விலங்கான 'வரையாடு' இதையெல்லாம் இந்தக் காட்டுக்குள்ள பார்த்திருக்கேன்... தெரியுமா?"



"வாவ்.. பல விஷய ஞானம் உனக்கு இருக்கு... கிரேட்.."



"தேங்க்ஸ்.. ஆனா இன்னும் எதுக்காக இந்தப் பயணம்னு நீங்க சொல்லவே இல்லையே..!"



"கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி ஒரு நரியப் பார்த்தமோ.. பார்த்தோன என்ன தோணுச்சு.."



"ஐயோ பாவம்னு தோணுச்சு.."



"ஒ.. அது எல்லாருக்கும் வர்ற மனிதாபிமான உணர்வு... ஓகே.. வேற என்ன தோணுச்சு..? யாரு அதுக்கு தீ வச்சிருப்பா? இப்படி எதுவும் தோணல?"



"இங்க இருக்கற மக்கள் அந்த அளவுக்கெல்லாம் மோசமில்ல.. கர்ப்பிணி யானைக்குத் தீ வைக்கறது.. நாய்க்குட்டிய பூனைக்குட்டிய மேல இருந்து தூக்கிப்போட்டு செல்பி எடுக்கறதுனு.. மனித இனம் ரொம்ப மோசமான இனமா ஆகிட்டு இருக்கு.."



"கரெக்ட் தான் வருண்.. அப்படித்தான்.. ஆனா இப்ப நரிக்கு தீக்காயம் இருந்துச்சே.. அது காட்டுத்தீயால கூட இருக்கலாமில்லையா.."



"ஹ.. காட்டுத்தீயா.. இப்படியெல்லாம் பெருசா இங்க பரவாதே!"



"ஆனா.. இப்ப பரவிட்டு தான் வருது.."



"அத எப்படி நீங்க சொல்றீங்க..? எப்படி உங்களுக்குத் தெரியும்? அதுக்கெல்லாம் வாய்ப்பே இல்ல.."



"அப்படியே கொஞ்சம் முன்ன பாரு"



அங்கே நாலைந்து சோலைமந்தி குரங்குகள் நின்று கொண்டிருந்தன. குரங்கென்றாலே குதித்து விளையாடிக் கொண்டிருந்தே பார்த்தவர்களுக்கு சோகமே உருவான குரங்குகளைக் கண்டதும் ரொம்ப பாவமாக இருந்தது. அவற்றின் உடம்பிலும் தீக்காயம்..



அவற்றிற்கே தெரியாமல் வீடியோ எடுத்துக் கொண்டிருந்தாள் தர்ஷினி..



அவற்றைக் கடந்ததும் மேகலா சொன்னாள்.



"ஆமா.. வருண்.. மிகப்பெரிய காட்டுத்தீ இந்தக்காட்டுல பரவிட்டு இருக்கு.. எங்களுக்கு எப்படியோ அந்த விஷயம் தெரிஞ்சிருச்சு.. அதுவும் தீப்பிடிச்சு ரெண்டு மூனு நாளாச்சு.. அரசாங்கத்தால அணைக்க முடியல.. ரொம்ப ட்ரை பண்றாங்க.. ஆன முடியல.. அதனால இன்னும் வெளிய கூட சொல்லாம இருக்காங்க... அதத்தான் நேரடியா படம்பிடிச்சு நாம டிவில காட்டப்போறோம்.. இப்ப புரிஞ்சுதா.. நாங்க சொல்ல வரது.. நாங்க செய்ய வந்திருக்கற வேலை.."



"காட்டுத்தீயா..! மிகப்பெரிய காட்டுத்தீயா..! இதுவரைக்கும் இப்படி இங்க வந்தது இல்லையே..! நீங்க சொல்றது கேட்டா எனக்கு ரொம்ப‌ பயமா இருக்கு.. இந்தக்காட்டுக்கு இது மிகப்பெரிய ஆபத்து.. நிச்சயமா இத வெளியுலகுக்கு தெரியப்படுத்தத்தான் வேணும்.."



"குட் வருண்.. நிச்சயமா இன்னும் கொஞ்சம் நேரத்துல நாடே அதிரப்போகுது பார்"



(தொடரும்)



அ.வேளாங்கண்ணி





காட்டுத்தீயும் மூன்று ரோஜாக்களும் - 7



பாகம் ஏழு

==========



(ஒரு புது புரஜக்ட்.. அதில் கலக்க மூவர் கிளம்பி செல்கின்றனர்.. வழியில் ஒரு புதுப்பிரச்சனை. அப்பிரச்சனையிலிருந்து வெளியேறி மிக மகிழ்ச்சியான நினைவுகளோடு தொடர்கிறது அவர்களது பயணம். ஒரு கிராமத்தில் தங்கி விட்டு காடு நோக்கிய தங்கள் பயணத்தைத் தொடங்கினர். வழியிலேயே காட்டுத்தீக்கான அறிகுறிகள் தெரிந்தது... இவர்கள் காட்டுத்தீயைக் கண்டறிந்தார்களா இல்லையா..? இவர்களது வீடியோ இளமதி தொலைக்காட்சியில் ஒளிபரப்பானதா? இல்லையா? அடுத்து என்ன? வாருங்கள் பார்க்கலாம்)



பயணம் தொடர்ந்த வேளை நெருப்பால் எழுந்த நெடி கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்துக் கொண்டே போனது.



"கொஞ்ச வருஷங்களுக்கு முன்னால், டிரக்கிங் போன சில காலேஜ் பசங்க ஒரு காட்டுத்தீயில மாட்டிக்கிட்டு முழுசா எரிஞ்சு போனாங்களே.. ஞாபகம் இருக்கா?", எனக் கேட்டாள் ஷாலினி.



"ம்.. என்ன ஒரு பயங்கரமான செய்தி.. அது என்னை எப்படி தாக்குச்சு தெரியுமா? அந்த சம்பவத்துக்கு ரெண்டு நாளைக்கு முன்னாடி தான் அதே மலைல... எங்க காலேஜ் என்சிசி சார்பா நாங்க மொத்தம் அம்பது பேர் டிரக்கிங் போனோம்.. அந்தக் காட்டையே ரொம்ப ரசிச்சு.. ரசிச்சு.. சிரிச்சு சிரிச்சு.. அத்தனை போட்டோ எடுத்து.. ஆகா.. மறக்கமுடியாத ஒரு பயணமா அது அமைஞ்சுச்சு.. ஆனா அந்த காட்டுத்தீ விபத்த கேட்டதுல இருந்து மனசு பாடா பட்டிடுச்சு..", என்ற மிகவும் அனுதாபப் பட்டுச் சொன்னாள் தர்ஷினி.



"ஆமா.. அது ஒரு மிக மோசமான நிகழ்வு"



"காட்டுக்குள்ள இங்கேயெல்லாம் எப்படி வழி அமைஞ்சு இருக்கு?", என்று கேள்வி எழுப்பிய மேகலாவிற்கு..



"ப்ராஸ்ட் டிபார்ட்மென்ட் கார்லாம் அடிக்கடி உள்ள சுத்துவாங்க இல்ல.. அதான் தானா ஒரு ரோடு மாதிரி இருக்கு.. இன்னும் எவ்வளவு தூரத்துக்கு இருக்கும்னு தெரியல..", என்றான் வருண்.



"இங்க பக்கத்துல எதாவது மேடான பகுதி இருக்கா வருண்?"



"ம்... இந்த பகுதியில எல்லாம் அலைஞ்சிருக்கேன்.. கொஞ்சம் இந்தப்பக்கமா போனா இருக்கும்னு நினைக்கறேன்"



"சரி.. நாம அந்த திசைல போவோம். அங்க போனா எந்த திசையில எந்த இடத்துல தீ... இல்ல தீயின் போக்கு இருக்குனு தெரிஞ்சுக்க முடியும்..."



"ஆமா.. மேகலா.. வருண் சொல்ற பக்கமாவே நீ கார‌ ஓட்டு"



கார் ஒரு மலையைத் தேடிப் புறப்பட்டது.



அடர்ந்து படர்ந்திருந்த பல செடி கொடிகளால், அவர்களால் ஊர்ந்து ஊர்ந்து தான் செல்ல முடிந்தது.



அப்போது எதோ உறுமல் சத்தம் கேட்டதும்.. வாயில் கை வைத்து 'கொஞ்சம் அமைதியா இருங்க' என சைகையால் சொன்னான் வருண்.



காரை மெதுவாக அணைத்தாள் மேகலா. உறுமல் சத்தம் மெல்ல மெல்ல அருகில் வருவதாகத் தோன்றியது.



அப்புறம் அது ஒரு உறுமல் அல்ல, பல உறுமல் எனப் புரிந்தது.



வரிசையாக ஏழெட்டுச் சிங்கங்கள் அவர்களது காரை நோக்கி வந்து கொண்டிருந்தன. நால்வரின் இதயத்துடிப்பும் ராக்கெட் வேகமெடுத்தது.



அவற்றை இன்னும் தீயின் தாக்கம் ஆக்கிரமிக்க‌வில்லை போல. வந்தவை காரைச் சுற்றிச் சுற்றி வந்தன. மெல்ல மோதிப்பார்த்தன. இரண்டு மூன்று முறை கர்ஜித்தன. பிறகு அவைகளாகவே தங்கள் வழியில் செல்ல ஆரம்பித்தன.



அவை சென்றும் ஒரு பத்து நிமிடம் வரை யாருமே பேசவில்லை. பிறகு தான்.. இதயத்துடிப்பு சீரானதாகத் தோன்றிய பிறகு தான்.. குரலே வெளியே வந்தது.



"என்னடி.. இவ்ளோ பயங்கரமா இருக்கு"



"நாம பார்த்தது எலி இல்ல.. சிங்கம்.. சிங்கம்னா இப்படித்தான் பிரமாண்டமா இருக்கும்"



"நாம காருக்குள்ள பத்திரமா இருக்கோம்னு எனக்குத் தோணவேயில்ல... ரெண்டு சிங்கங்கள் காரு மேல ஏறி ஒரு ஜம்ப் பண்ணா போதும் கார் நசுங்கியிருக்கும்"



"நான் அந்த சிங்கங்களப் பார்த்து 'பார்த்திருக்கியா பார்த்திருக்கியா.. பார்த்திருக்கியா.. நான் ஓங்கி அடிச்சா ஒன்ற டன் வெயிட்டுடா'னு கத்தலாம்னு இருந்தேன்.. ஆனா வெறும் காத்து தான் வந்துச்சு..", என்று சொன்ன வருணின் வசனத்திற்கு அனைவருமே மனம் விட்டுச் சிரித்தனர்.



"என்ன வருண்.. செமயா பேசற.. ஆனா ரொம்ப நல்ல புள்ளையாட்டம் அமைதியா வர்ற.. எப்படியோ சிங்கங்கங்கங்கள் போயிடுச்சு..."



"என்னது சிங்கங்கங்கங்களா?"



"ஆமாண்டி.. பல சிங்கம்ஸ் இருந்துச்சுல்ல.. அதான் அப்படி சொன்னேன்.. எதோ நல்ல மூடு போல.. வந்துச்சுங்க... சுத்துச்சுங்க... போயிருச்சுங்க"



"நல்ல மூடெல்லாம் இல்ல.. ஹெயியா இப்பத்தான் ஒரு கட்டு கட்டியிருக்கணும்... அதான் அமைதியா போயிருச்சுங்க.. சரி.. மறுபடியும் பயத்த தூக்கிப் போட்டுட்டு, பயணத்த தொடர்வோம்", எனச் சொன்ன மேகலா.. காரை ஸ்டார்ட் செய்து மெதுவாகவே இயக்க ஆரம்பித்தாள்.



அந்த மலையின் அருகில் சென்றதும் காரை ஓரிடத்தில் பார்க் செய்தாள்.



தேவையானவற்றை எடுத்துக் கொண்டே அம்மலைமீது ஏற ஆரம்பித்தனர். அவ்வளவு ஈஸியாக‌ இல்லை அந்த மலையேற்றம்.



ஏற்கனவே மலையேறும் அனுபவம் பெற்றிருந்த தர்ஷினியும் தடுமாறினாள்.



மிக நீண்ட நேரத்திற்குப் பின், பல தடுமாற்றத்திற்குப்பின் அவர்கள் மலை உச்சியை அடைந்தனர். இப்போது பரந்து விரிந்த வனம் அவர்கள் கண்ணுக்கு ஓரளவு தெரிந்தது.



தர்ஷினி கேமராவை எடுத்தாள். நன்றாக ஷூம் செய்து ஒரு நான்கு நிமிட நேரத்திற்கு ஒரு வீடியோ எடுத்தாள். பிறகு அதனை அனைவருக்கும் போட்டுக் காட்டினாள்.



தர்ஷினி எடுத்த வீடியோவைப் பார்த்ததும் சில விஷயங்கள் இவர்களுக்குப் பிடிபட ஆரம்பித்தன..



இவர்கள் நிற்கும் இடத்திலிருந்து மிகுந்த தொலைவில் புகைமூட்டம் காணப்பட்டது. அங்கு தீ பற்றியிருப்பது நன்றாகப் புரிந்தது. ஆனால் அது எந்த அளவு எந்த திசையில் பரவுகிறது என்பதைச் சரியாக் கணிக்க முடியவில்லை.



"ஒன்னு பண்ணு தர்ஷினி.. அந்த இடத்த மையமா வச்சு.. இதே மாதிரி ஷூம் பண்ணி இன்னும் ரெண்டு மூணு வீடியோ எடு.. அதுக்குப் பக்கத்துல எங்கேயாவது கொஞ்சம் பாதுகாப்பான மேட்டுப்பகுதி இருக்கானு பார்க்கலாம். அப்பறம் என்ன பண்ணலாம்னு முடிவெடுக்கலாம்"



"எஸ் மேகலா.. எனக்கும் அதே தான் தோணுச்சு...", என்று சொல்லிவிட்டு தனது ஷீட்டிங்கில் மும்முரமானாள் தர்ஷினி.



அதே நேரம் தனது மொபைலால் வீடியோ எடுத்துக் கொண்டிருந்தான் வருண்.



அப்போது வானத்திலிருந்து நல்ல சத்தம் கேட்டது.



சிறிது நேரத்தில் அவர்களது தலைக்கு மேல் ஹெலிகாப்டர் ஒன்று பறந்து சென்றது.



"அப்ப.. நீங்க சொல்றதெல்லாம் உண்மை தான்.. அரசாங்கம் தீய அணைக்கற முயற்சியில இறங்கிட்டாங்க.. ஆனா ரகசியமா.. அது தான் ஏன்னு தெரியல.. சொல்லிட்டே பண்ணலாம்.. சரி நாம எடுக்கப்போற வீடியோவால இந்த நியூஸ் வெளிய தெரியத்தானே போகுது. அதுக்கப்பறம் என்ன நடக்குதுனு பார்ப்போம்...", என்றான் வருண்.



தலையாட்டியபடியே அவனது பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்தனர் ஷாலினியும், மேகலாவும்.



இதற்குள் தர்ஷினி எடுத்த அடுத்த வீடியோவை அனைவரும் பார்க்க.. அதிலிருந்த புகைமூட்டத்திற்கு மிக அருகில் ஒரு மலை மாதிரி காணப்பட்டது.



"அதோ பாரு.. அங்க போயிட்டா போதும்.. நமக்கு ஒரு தெளிவான பிக்சர் கிடைக்கும்.. சரியா?"



"ஆமாண்டி.. அது இங்க இருந்து எவ்ளோ தூரம்னு ஒரு ஐடியா வச்சுக்க.. எந்த திசையில இருக்குனு நோட் பண்ணிக்க.. இந்த மலையவிட்டு இறங்கி அங்க போக முயற்சிக்கலாம். ஆனா காரெல்லாம் அங்க நிச்சயமா போகாது. நடந்து தான் போகணும்.. வழியில விலங்குகளால கூட நமக்கு ஆபத்து ஏற்படலாம்.. ரொம்ப கவனமா செய்ய வேண்டிய வேலை இது"



"கரெக்ட்.. அப்ப வாங்க இறங்கலாம்..", என்று சொல்லியவாறே நால்வரும் கிடுகிடுவென இறங்க ஆரம்பித்தனர்.



அவர்கள் வீடியோவில் கண்ட மலையை அடைய இன்னும் அதிக‌ நேரம் பிடித்தது. அதற்குள் அனைவருக்கும் பசியெடுக்க கொண்டு வந்திருந்த பிஸ்கெட், வாழைப்பழம் இதற்கு கை கொடுத்தது. தண்ணீர் பாட்டிலும் வெகு வேகமாக எடையிழக்க ஆரம்பித்தது.



வழியில் சில பழங்குடி மக்கள் கண்ணில் பட்டனர். அவர்கள் விழியெல்லாம் ஒரு வித பயம் இருந்ததை இவர்களால் உணர முடிந்தது.



அந்த மலையை அடைந்ததும்.. மீண்டும் ஒரு சிரமமான மலையேற்றம். பாதை கரடு முரடாக இருந்தது. காட்டின் சத்தம் காதை அடைத்தது. பறவைக்கூட்டமெல்லாம் திக்குத் தெரியாமல் தடுமாறி அங்குமிங்கும் பறந்து கொண்டிருந்ததைக் கண்ட தர்ஷினி.. நின்று நின்று இவற்றையெல்லாம் கேமராவில் சேமித்தாள்.



உச்சியை அடைந்ததும் மீண்டும் அந்த புகைமூட்டத்தினைச் சார்ந்த பகுதிகளை கேமராவுக்குள் அடைத்தாள்.

இப்போது ஒரு தெளிவு பிறந்தது.



இதுவரை தீ சில பல கிலோமீட்டர் காடுகளை அழித்திருக்கலாம். அது மத்தியிலிருந்து நான்கு அல்லது எட்டு திசைகளிலும் அப்படியே பரவிக் கொண்டிருப்பதாய் தோன்றியது.



இந்த தெளிவு கிடைத்ததும்.. தங்களது புரஜக்டின் முதல் வீடியோவை பதிவு செய்ய ஆரம்பித்தனர்.



பின் பாதுகாப்பாய் இறங்கி.. காரை நோக்கி நடந்து வந்து.. அவர்கள் தங்கியிருந்த வனமேட்டை மாலை வேளையில் அடைந்தனர்.



உடனே வீடியோவை எடிட் செய்து... ஷாலினியின் பிண்ணனிக் குரலுடன்... சாருமதிக்கு அனுப்பி வைத்தனர்.



அடுத்த சில மணித்துளிகளில் பற்றிக்கொண்டது அடுத்த நெருப்பு...



"என்ன தமிழகக் காடுகளில் கட்டுப்படுத்தமுடியா காட்டுத்தீயா?"



"அணைக்கமுடியாமல் தவிக்கும் இல்லை மூடி மறைக்கும் அரசாங்கம்"



"காடுகளுக்குச் சுற்றியிருக்கும் கிராமங்களுக்கும் ஆபத்தா?"



"தீ.. தீ.. காட்டுத்தீ... அணைக்க முடியுமா? இல்லை இது அணையா நெருப்பா?"



அடுத்தடுத்த செய்திகளில் அதிர்ந்தது தமிழ்நாடு..



சாருமதியை நோக்கிய வரிசையாக வர ஆரம்பித்தன மொபைல் கால்கள்.



(தொடரும்)



அ.வேளாங்கண்ணி





காட்டுத்தீயும் மூன்று ரோஜாக்களும் - 8



பாகம் எட்டு

============



(ஒரு புது புரஜக்ட்.. அதில் கலக்க மூவர் கிளம்பி செல்கின்றனர்.. ஒரு கிராமத்தில் தங்கி விட்டு காடு நோக்கிய தங்கள் பயணத்தைத் தொடங்கினர். இவர்கள் எடுத்து அனுப்பிய முதல் வீடியோ ஒளிபரப்பப்பட்டு தமிழ்நாடே அதிர்ந்து போய் இருந்தது. அடுத்தடுத்த போன் கால்களால் அசந்து போயிருந்தாள் சாருமதி.. அடுத்து என்ன? வாருங்கள் பார்க்கலாம்)



தொடர்ந்து கால் மேல் கால். அட்டன்ட் செய்தே துவண்டு போய்விட்டாள் சாருமதி. பல கால்கள் பாராட்ட வந்தாலும் மிரட்டல் கால்களுக்கும் குறைவில்லை. இதெல்லாம் எதிர்பார்த்துத்தானே இந்த புரஜக்டில் இறங்கினாள் சாருமதி.



இளமதி டிவியில் ஒளிபரப்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் அதிகமாகப் பகிரப்பட எங்கும் இதே செய்தியானது.



அடுத்து கொஞ்சம் இடைவெளி விட்டு.. தர்ஷினி அனுப்பியிருந்த தீயால் பாதிக்கப்பட்ட விலங்குகள் பற்றிய வீடியோவை இளமதி டிவி ஒளிபரப்ப.. அதில் பாவமாய் பேசிய ஷாலினியின் குரல் பார்த்தவர்களை உலுக்கிப் போட்டது.



ப்ளூகிராஸிலிருந்து சாருமதிக்கு கால் வந்தது.



இளமதி டிவியின் செய்தி சேகரிப்போர் எங்கு தங்கி உள்ளார்கள் என அவர்கள் கேட்க‌, அதன் விபரங்களை சாருமதி கொடுத்தாள்.



அடுத்த நிமிடம் ஷாலினிக்கு தொலைபேசி போனது.



"வணக்கம் மேம்.. நான் ப்ளுகிராஸ்ல இருந்து நீலாவதி பேசறேன்.."



"எஸ் சொல்லுங்க மேம்.. என்ன விஷயம்?"



"நீங்க அடுத்த முறை காட்டுக்குள்ள போகும் போது எங்க டீமும் உங்க கூட வருவாங்க.. தீக்காயம் பட்ட விலங்குகளுக்கு தகுந்த சிகிச்சை அளிப்பாங்க.. ஓகேவா"



"வாவ்.. ரொம்ப நல்ல விஷயம்.. நிச்சயமா வரச்சொல்லுங்க.. வேற எதுனா டீட்டெயில் வேணும்னாலும் எங்கிட்ட கேளுங்க‌ மேம்.."



"உங்க டீவில வந்த உங்களோட வீடியோ செம வைரலாப் போய்க்கிட்டு இருக்கு. கவர்மென்ட எல்லா டிவிச்சேனலும் கழுவிக் கழுவி ஊத்தறாங்க"



"ஓ.. நாங்களும் அத கவனிச்சிட்டுத்தான் மேம் இருக்கோம்!!!"



"ஓ அப்படியா.. எங்க டீம் வந்து விலங்குகளுக்கு முடிஞ்ச அளவு சிகிச்சை கொடுத்து, முதலுதவி செய்து காப்பாத்த முயற்சிப்பாங்க‌.."



"நல்லதுங்க.. ஆனா இப்படி தீயில கருகி வீணா அழிஞ்சு போற மரங்கள யாருங்க காப்பாத்தப்போறாங்க..!? யாரும் விதை போடாம, உரம் போடாம, தண்ணி ஊத்தாம.. இத்தனை மழை வெள்ளம் புயல் வெயில்னு எல்லாத்தையும் எதிர்த்து பிரமாண்டமா வளர்ந்து நிக்கற மரமெல்லாம் கருகி கரிக்கட்டையா, சாம்பலா ஆகற‌தப் பார்க்கும் போது ரொம்ப வேதனையா இருக்குங்க..."



"நிச்சயம் யோசிக்க வேண்டிய விஷயம். சீக்கிரம் இந்த தீய அணைக்க எல்லாரும் நடவடிக்கை எடுப்பாங்கனு நம்பலாம்.. இப்போதைக்கு என்னால இவ்ளோ தாங்க சொல்ல முடியும்..."



"சரிங்க.. எங்க மேம் கால் பண்றாங்க.. நீங்க எதுனா தெரிஞ்சுக்க கொஞ்சம் நேரம் கழிச்சு கூப்பிடறீங்களா!"



"ஓக்கே.. ஓக்கே.. நான் வைக்கறேன்.."



மிக மிக உற்சாகமாக பேசினாள் சாருமதி.



"சூப்பர் ஷாலினி.. தர்ஷினி.. மேகலா.. சரியான இடத்த தேர்ந்தெடுத்து வீடியோ எடுத்திருக்கீங்க.. இன்னும் இன்னும் வீடியோ எடுத்து அனுப்பிட்டே இருங்க.."



"ஸ்யூர் மேம்.. நாளைக்கு மட்டும் எத்தனை வீடியோ உங்களுக்கு வருதுனு பாருங்க.. இப்பத்தான் ப்ளூகிராஸ்ல இருந்து போன் பண்ணாங்க.. நாளைக்கு எங்க கூட அவங்க டீம் வந்து, கண்ணுல சிக்கர காயம்பட்ட விலங்களுக்கு சிகிச்சை அளிக்கப் போறதா சொன்னாங்க.."



"ஓ.. அப்படியா.. எங்கிட்ட தான் உங்க நம்பர் கேட்டாங்க.. நான் தான் கொடுத்தேன்.."



"எஸ் மேம்.. அவங்க கால் பண்ணும் போதே இதப் புரிஞ்சுக்கிட்டேன்"



"அரசாங்கத்துல இருந்து எனக்கு மிரட்டல் வந்துச்சு.. நாங்க பொய் சொல்லலையே.. உண்மை தானே சொல்றோம்னு எதோ பேசி சமாளிச்சேன்.."



"அதெல்லாம் உங்களுக்கு அத்துப்படி மேம்.. நீங்க திறமையா சமாளிப்பிங்கனு எங்களுக்குத் தெரியும்"



"ம்.. ஒன்னு ஆரம்பச்சிருக்கோம்.. இதனால யாரு யாருக்கெல்லாம் நன்மை கிடைக்கப் போகுதுனு மட்டும் பார்ப்போம்.. போகப் போக ஒவ்வொன்னா பார்க்கத்தானே போறோம்"



"எஸ் மேம்.. பார்க்கலாம்.."



"சரி.. பாத்து பத்தரமா இருந்துக்கோங்க.. தொடர்ந்து வாட்ஸ் அப்ல அப்டேட்ஸ் பண்ணிட்டே இருங்க‌"



"ஒகே மேம்.. ஸ்யூர்.. மேம் இன்னொரு விஷயம்.. நாங்க குடியிருக்கற வீட்டு ஓனர் பையன் வருண்னு ஒருத்தன். அவனும் எங்க கூட காட்டுக்கு வர்றான்.. எங்களுக்கு ஒத்தாசையா, பாதுகாப்பா இருக்கான்.. உங்ககிட்ட இந்த விஷயத்தச் சொல்லனும்னு நெனச்சுக்கிட்டே இருந்தேன்.."



"ஓ.. சூப்பர்.. நல்ல விஷயம்... அந்தப் பையனுக்கு என்னோட அப்ரிஷியேசனச் சொல்லிடுங்க"



"ஓகே மேம்.. பாய்"



அன்றைய இரவு நிம்மதியான தூக்கம் வந்தது. இரவுச்சாப்பாட்டை பிருந்தா கொண்டு வந்திருந்தாள். திருப்தியாய் சாப்பிட்டு, திருப்தியாய் வேலை பார்த்து இருந்ததால்.. திருப்தியான தூக்கம் கண்களைத் தழுவிக் கொண்டது.



அடுத்த நாள் அதிகாலையிலேயே எழுந்து தயாராயினர். சிறிது நேரத்திலேயே ப்ளூகிராஸ் எனச் சொல்லி ஒரு பெண் வந்தாள்..



"ஹாய்"



"ஹாய்.. நீங்க!"



"நான் நீலாவதி.. ப்ளூகிராஸ்"



"அட.. நேத்து பேசினீங்களே..! ஒரு டீம் வருவாங்கனு சொன்னீங்க, ஆனா நீங்களே வர்றதா சொல்லலையே..!"



"ம்.. சொல்லலை... இப்ப வந்துட்டேன். ஹேட்ஸ் ஆஃப் டு யூ ஆல்.. செம... கவர்மென்டையே கதிகலங்க வச்சிட்டீங்க!"



"ம்.. சரி வாங்க போலாம்.."



வெளியே தயாராகி வருண் வந்திருந்தான்.



ப்ளூகிராஸைச் சேர்ந்த பத்து, பதினைந்து பேர் வந்திருந்தனர், அவர்களுக்கான பிரத்தியேக வேனில். அந்த வேன் காட்டுக்குள் எவ்வளவு தூரம் போகும் என்று தெரியாது.



எல்லார் கையிலும் வாக்கி டாக்கி இருந்தது. அது போட்ட இரைச்சல் காதைத் துளைத்தது.



அந்த மலையுச்சிக்குப் போகும் வழியிலேயே.. இரண்டு மூன்று விலங்குகள் காயங்களுடன் அவர்கள் கண்ணில் பட.. ப்ளூகிராஸ் வேன் வரை அவற்றை தூக்கிச் சென்று அவற்றின் மருத்துவம் பார்க்கப்பட்டது.



விலங்குகளின் நிகழ்வுகளையும் தன் வயிற்றில் நிரப்பிக்கொண்டது தர்ஷினியின் கேமரா.



இவர்களுடன் பேசிக் கொண்டே வந்தாள் நீலாவதி. காயம் பட்ட விலங்குகள் கண்ணில் படும் போதெல்லாம் அதன் இடம், என்ன விலங்கு போன்ற விபரங்களை வாக்கி டாக்கி மூலம் அவர்களது சக நண்பர்களுக்கு கடத்திக்கொண்டே வ‌ந்தாள். உடனே அவர்களது டீம் ஆட்கள் வந்து அதற்கு அடுத்த கட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.



மலையின் உச்சியை அடைந்து இப்போது தீயின் பரவலைப் பார்த்த பொழுது.. நேற்றைய ராத்திரியில் மட்டும் மிக அதிக தொலைவு அது பரவி இருந்ததாகப் பட்டது. இரண்டு மூன்று ஹெலிகாப்டர்களில் இருந்து தண்ணீர் அங்கே கொட்டப்படுவது வீடியோவில் தெரிந்தது.



இதற்குள் வருண் தொலைபேசி மூலம் அவனது காலேஜ் நண்பர்கள் பலரை அழைந்திருந்தான். அனைவரும் ஒருவர் பின் ஒருவராக அங்கு வந்து சேர்ந்தனர்.



இவர்களிடம் சொல்லி விட்டு அவன் 'ஒரு வேலையிருக்கு' எனக் கூறி அவனது நண்பர்களையெல்லாம் அழைத்துக் கொண்டு எங்கோ சென்றான்.



(தொடரும்)



அ.வேளாங்கண்ணி





காட்டுத்தீயும் மூன்று ரோஜாக்களும் - 9



பாகம் ஒன்பது

==============



(ஒரு புது புரஜக்ட்.. அதில் கலக்க மூவர் கிளம்பி செல்கின்றனர்.. ஒரு கிராமத்தில் தங்கி விட்டு காடு நோக்கிய தங்கள் பயணத்தைத் தொடங்கினர். இவர்கள் எடுத்து அனுப்பிய முதல் வீடியோ ஒளிபரப்பப்பட்டு தமிழ்நாடே அதிர்ந்து போய் இருந்தது. அடுத்தடுத்த போன் கால்களால் அசந்து போயிருந்தாள் சாருமதி.. இளமதி டீமுடன் ப்ளூகிராஸும் சேர்ந்து கொண்டது. அவர்கள் விலங்குகளுக்கான உதவிகளை செய்தனர். கூடவே இருந்த வருண், அவனது காலேஜ் நண்பர்கள் பலரை அழைந்திருந்தான். அவர்களுடன் கிளம்பி எங்கோ சென்றான். அடுத்து என்ன? வாருங்கள் பார்க்கலாம்)



இளமதி டிவியின் காட்டுத்தீ வீடியோக்கள் எங்கெங்கும் வைரலானது. பலரும் அரசாங்கத்தை திட்ட, அரசாங்கமும் தனது தவற்றை உணர்ந்தது. அவர்கள் இன்னும் அதிக ஈடுபாட்டுடன் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சாருமதிக்கு சந்தோஷம் தாங்கவில்லை.



சமூகத்தின் நல்ல அந்தஸ்த்தில் உள்ள விஐபிக்கள் பலர் அவளுக்கு வாழ்த்து தெரிவித்தனர். தொடர்ந்து காட்டுத்தீயின் நிலவரத்தைப் பற்றி கேட்டு தெரிந்து கொண்டிருந்தனர்.



இளமதி டிவியில் காட்டுத்தீ பற்றியும், இதுவரை உலகில் பிடித்த காட்டுத்தீக்கள், அதற்கான காரணங்கள், மிகப்பெரிய காட்டுத்தீ, அதிக பாதிப்பை ஏற்படுத்திய காட்டுத்தீ, காட்டுத்தீயாய் பாதிப்படைந்த விலங்குகள், அதனால் முற்றிலும் தங்கள் வாழ்வாதாரம் இழந்த இனங்கள், பறிபோன உயிர்கள் என தொடர்ந்து அலசி ஆராய்ந்து வீடியோக்களாக போட்டுக் கொண்டே இருந்தனர்.



வீட்டிலுள்ள சிறார்க்கூட்டம் கூட.. "காட்டுத்தீயா?" "அப்படீனா என்னம்மா?" எனக் கேட்கும் அளவுக்கு இச்செய்தி பகிரப்பட்டது.



பத்திரிக்கைகள் சும்மா இருக்குமா? அவையும் பக்கம் பக்கமாய் எழுதித் தள்ளின.



இதுவரை எரிந்துள்ள காடுகளின் பரப்பு. உடனே கட்டுப்படுத்தாவிட்டால் எரியப்போகும் காடுகளின் பரப்பு. அதனால் பாதிப்படையப் போகும் கிராமங்கள், இப்போது கிராம மக்களின் மனவோட்டம் என பக்கத்து பக்கம் தீ, தீ, தீ.. தான்.. வெள்ளைத்தாள் கூட இத்தகைய தீச்செய்திகளால் மஞ்சள் தாளாக மாறிவிட்டதோ என்பதாய் காணப்பட்டது.



தனது கல்லூரித்தோழிக்கு போன் செய்து தன் மகிழ்வைப் பகிர்ந்து கொண்டாள் சாருமதி.



"ரொம்ப ரொம்ப தேங்க்யூடி.. உன்னால தான் இதுல இப்படி நாங்க இறங்க முடிஞ்சுது.."



"ம்.. ரொம்ப புகழாத.. உங்க டீமால இதச் சிறப்பா செய்ய முடியும்னு எனக்கு நல்லாத் தெரியும்.. ஏன்னா அவங்க முன்னமே சாதிச்சவங்க... இந்த விஷயத்தால நாட்டுக்கு நல்லது நடந்தா சரிதான். இது எப்படி உருவானது? யாராவது தெரிஞ்சே பத்தவச்சாங்களா? இப்படிங்கற ஆராய்ச்சியெல்லாம் நமக்கு வேண்டாம். இனி ஒரு முறை இப்படி அரசாங்கம் நடந்துக்காது. நம்ம யாரோ எங்கிருந்தோ கவனிச்சிட்டே இருக்காங்கனு அவங்களுக்கு இப்போ நல்லா புரிஞ்சிருக்கும். சீக்கிரமா தீ அணைக்கப்படும் நாளுக்காக‌ காத்திருக்கேன்டி"



"எஸ்.. நானும் அதுக்குத்தான் வெயிட்டிங்.. வருண்னு ஒரு பையன்.. அந்த வனமேடு கிராமத்தச் சேர்ந்தவன். அவனும் அவனோட நண்பர்கள் பலரும்.. இந்த தீயை அணைக்க படாத பாடு படறாங்கனு தர்ஷினி சொன்னா.. எப்படியோ சீக்கிரமா தீ அணைஞ்சா சரி..."



"பரவால்ல.. இந்தக் கால இளைஞர்களும் சமூக சேவைல ஈடுபாடு காட்டறது ரொம்ப நல்ல விஷயம்.. சரி எப்பவும் போல அப்டேட் கொடுத்துட்டே இரு.. பை டி"



"பை", எனச்சொல்லி புன்னகை முகத்துடன் போனை வைத்தாள் சாருமதி.



அப்போது தான் மேகலாவிடம் இருந்து ஒரு அதிர்ச்சி தரும் செய்தி அவளுக்கு வந்து சேர்ந்தது.



(தொடரும்)



அ.வேளாங்கண்ணி





காட்டுத்தீயும் மூன்று ரோஜாக்களும் - 10



பாகம் பத்து

===========



(ஒரு புது புரஜக்ட்.. அதில் கலக்க மூவர் கிளம்பி செல்கின்றனர்.. ஒரு கிராமத்தில் தங்கி விட்டு காடு நோக்கிய தங்கள் பயணத்தைத் தொடங்கினர். இவர்கள் எடுத்து அனுப்பிய முதல் வீடியோ ஒளிபரப்பப்பட்டு தமிழ்நாடே அதிர்ந்து போய் இருந்தது. அடுத்தடுத்த போன் கால்களால் அசந்து போயிருந்தாள் சாருமதி.. இளமதி டீமுடன் ப்ளூகிராஸும் சேர்ந்து கொண்டது. அவர்கள் விலங்குகளுக்கான உதவிகளை செய்தனர். கூடவே இருந்த வருண், அவனது காலேஜ் நண்பர்கள் பலரை அழைந்திருந்தான். தனது கல்லூரித் தோழியிடம் போன் பேசி மகிழ்வைப் பகிர்ந்த சாருமதிக்கு ஒரு அதிர்ச்சி தரும் போன் மேகலாவிடம் இருந்து வந்தது. அது என்ன விஷயமா இருக்கும்? வாருங்கள் பார்க்கலாம்)



"மேம்.. நாங்க மிரட்டப்படறோம்"



"என்ன சொல்ற மேகலா... உங்கள யாரு மிரட்டினா?"



"வனமேடு கிராமத்தைச் சேர்ந்த இன்ஸ்பெக்டர் ராம்கணேஷும், காட்டிலாக்கா அதிகாரி ரகுவரனும் எங்களைப் பார்க்க வந்திருந்தாங்க. தேவையில்லாம ஏன் நீங்க இதுல இவ்ளோ ஈடுபாடு காட்டறீங்க.. உடனே நீங்க திரும்பிப் போங்க.. இல்லேனா வேண்டாத விளைவுகளைச் சந்திக்க நேரும்னு சொல்லி மிரட்டிட்டுப் போனாங்க மேம்..."



"அப்படியா.. அரசாங்கமே இப்ப தப்ப உணர்ந்து தீய அணைக்கும் நடவடிக்கையில தீவிரமா ஈடுபாடு காட்டும்போது இவங்க ஏன் வந்து மிரட்டணும்? இவங்க மோட்டிவ் என்னனே புரியலையே! சரி.. அப்படி மிரட்டும் போது வேற யாரோட பேரயாவது அவங்க கோட் பண்ணாங்களா?"



"ம்.. கோட் பண்ணாங்களே.. இந்தத் தொகுதி எம்.எல்.ஏ. பேரையும் எம்.பி. பேரையும்..."



"ஒரு செகண்ட் இரு... இப்ப வரேன்..", என போனை ஹோல்டில் வைத்தாள் சாருமதி..



அவள் அடுத்து என்னச் சொல்லப்போகிறாள் என்பதை கேட்க ஆர்வமாக இருந்தாள் மேகலா.



"மேகலா..."



"எஸ் மேம்.."



"ஆக்சுவலா அந்த எம்.எல்.ஏ., எம்.பி. ரெண்டு பேருமே எதிர்க்கட்சிய சேர்ந்தவங்க.. இதுல எதோ உள்குத்து இருக்கமாதிரி தோணுது.. நீங்க கண்டுக்காத மாதிரி உங்க வேலைல தீவிரமா இருங்க.. நான் வேற ஆட்கள வச்சு அவங்களப்பத்தி தீர விசாரிச்சு என்னால என்ன முடியுமோ அத‍ப் பண்றேன்.. டோன்ட் வொர்ரி.. நான் இருக்கேன்.."



"எஸ் மேம்.. எப்பவுமே நீங்க கூட இருக்கீங்கங்கற தைரியம் எங்க எல்லார்கிட்டவும் ரொம்ப அதிகமாவே இருக்கு"



"ஓகே.. நான் பார்த்துக்கறேன்.."



"ஓகே மேம்.."



போனை மேகலா வைத்ததும் ஷாலினியும், தர்ஷினியும் அவளை ஆர்வமாகப் பார்த்தனர்.



"என்னடி சொல்றாங்க மேம்?"



"இவங்க மிரட்டினதுல எதோ உள்குத்து இருக்கற மாதிரி இருக்காம்.. நீங்க உங்க வேலையப் பாருங்க.. நான் வேற சிலர வச்சு... என்னானு பார்த்துக்கறேன்.. தைரியமா இருங்க.. நான் இருக்கேனு சொன்னாங்க"



"உள்குத்தா? என்னவா இருக்கும்?"



அப்போது இவர்களுக்கு பிருந்தாவனம் உணவு கொண்டு வந்தாள். கூடவே வருணும் வந்திருந்தான். சாப்பிட்ட படியே இதே விஷயங்களை அலசிக் கொண்டிருந்தனர்.



"எனக்கு தெரிஞ்ச ஒரு விஷயத்தை சொல்லட்டா?", என்றான் வருண்.



"சொல்லு வருண்"



"எங்க எம்.எல்.ஏ., எம்.பி. ரெண்டு பேருமே மாமா மச்சான் தான்.. இப்ப இருக்கற ஆளுங்கட்சிக்கு மிக மிக எதிரானவங்க... எக்கச்சக்க சொத்து சேர்த்து வச்சிருக்காங்க.. எல்லாமே எதோ இல்லீகல் விஷயத்துல ஈடுபட்டு தான் கிடைச்சிருக்குனு ஊருக்குள்ள பேசிக்குவாங்க.."



"அப்படியா?"



"ஆமா.. அவங்க.. பக்கத்துல இருக்கற எல்லாரையும் ரொம்ப நல்லா கவனிக்கறதால.. யாரும் இவங்க பண்ற இல்லீகல் வேலைகளை கண்டுக்கறது இல்ல.."



"இந்த இல்லீகல் இல்லீகல் அப்படீங்கறயே.. அது என்னானு கொஞ்சமாவது தெரியுமா?"



"ம்.. தெரியும்.."



"தெரிஞ்சா சொல்லேன்.. அவங்களுக்கு நீயும் பயப்படறியா?"



"பயமெல்லாம் இல்ல.. அரசல் புரசலா ஊருக்குள்ள பேசிக்குவாங்க.. இதுல எத்தன சதவீதம் உண்மை, எத்தனை சதவீதம் போய்.. இதெல்லாம் எனக்குத் தெரியாது"



"சரி.. தெரிஞ்சதச் சொல்லு.. அப்படி அவங்க என்ன தான் பண்றாங்க?"



"சீக்கிரமா காசு கெடைக்க வேற என்ன பண்ணுவாங்க.. கஞ்சா தான்.. காட்டுக்குள்ள யாருமே போக முடியாத இடத்துல பல ஏக்கர் பரப்புல கஞ்சா வளர்க்கறதாகவும்.. அங்க அதுக்கு தனியா பெரிய கொடவுனே கட்டி வச்சிருக்கறதாகவும் ஊருக்குள்ள பேசிக்குவாங்க.. ஏன் இப்ப இப்படி தீ பிடிச்சுதே... இதுவே கூட ஆளுங்கட்சியால இருக்கலாம்.. அந்த கஞ்சாத்தோட்டத்த குறி பார்த்தும் வச்சிருக்கலாம்.."



"அட.. இவ்ளோ விஷயம் இருக்கா?"



"ஆமா.. ஆனா எதுவுமே தெளிவா தெரிஞ்சுக்காம வெளிய சொல்ல வேண்டாம். நீங்க, உங்க டீம் நல்லா விசாரிச்சு கண்டு பிடிச்சா மட்டும் உங்க டீவில சொல்லுங்க"



"கண்டிப்பா வருண்.. தேவையில்லாத செய்தி, தெளிவில்லாத செய்தி, உண்மைக்குப் புறம்பான செய்தி, ஏமாற்றுச் செய்தி இப்படி எந்தச் செய்திக்குமே எங்க சேனல்ல இடமில்ல.. நிச்சயமா ஒரு தடவைக்கு பத்து தடவை தீர விசாரிச்சு.. உண்மைனு தெரிஞ்சா மட்டுமே சொல்லுவோம்..'



"ம்.. கரெக்ட் தான்.. இளமதி டிவிக்கு இருக்கற நல்ல பேரு எனக்கும் தெரியும்.. சரி சாப்பிட்டாச்சுனா உடனே கெளம்பலாம்.. எனக்கு ரொம்ப வேலை காட்டுக்குள்ள இருக்கு"



"ம்.. சும்மா உதவிக்கு வானு கூப்பிட்டோம்.. நீ உன்னை முழுமையா இதுல ஈடுபடுத்திக்கிட்ட.. எங்க மேம் கிட்ட உன்னைப் பத்திச் சொன்னோம். அப்ரிஷியேட் பண்ணாங்க.. எதுவா இருந்தாலும் உடம்புக்கு எந்த பாதிப்பும் இல்லாத மாதிரி நடந்துக்கோ.. சரியா?"



ஆனால் அன்று நடக்கப்போகும் பாதிப்பு என்னவென்று அவர்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அது அடுத்த அதிர்ச்சி தரும் செய்தியா என்று சீக்கிரமே தெரியத்தானே போகிறது.



(தொடரும்)



அ.வேளாங்கண்ணி





காட்டுத்தீயும் மூன்று ரோஜாக்களும் - 11



பாகம் பதினொன்று

===================



(ஒரு புது புரஜக்ட்.. அதில் கலக்க மூவர் கிளம்பி செல்கின்றனர். இவர்கள் எடுத்து அனுப்பிய முதல் வீடியோ ஒளிபரப்பப்பட்டு தமிழ்நாடே அதிர்ந்து போய் இருந்தது. இளமதி டீமுடன் ப்ளூகிராஸும் சேர்ந்து கொண்டது. அவர்கள் விலங்குகளுக்கான உதவிகளைச் செய்தனர். கூடவே இருந்த வருண், அவனது காலேஜ் நண்பர்கள் பலரை அழைந்திருந்தான். இளமதி டீம் மிரட்டப்பட்டதாய் சாருமதிக்கு மேகலா தெரிவித்தாள். அப்போது பல புது விஷயங்களை வருண் கூறினான். மீண்டும் காட்டுக்கு அவர்கள் கிளம்பினர். அடுத்து நடந்தது என்ன? வாருங்கள் பார்க்கலாம்)



போகும் வழியிலேயே சாருமதி ஒரு லிங்க் அனுப்பியிருந்தாள். அதனை க்ளிக் செய்த மேகலாவிற்கு அதிர்ச்சி. வருண் என்னவெல்லாம் இவர்களிடம் சொன்னானோ, அவையெல்லாம் செய்தியாக்கப் பட்டு ஒளிபரப்பத் தயாராக இருந்தது.



உடனே சாருமதிக்கு கால் செய்தாள்.



"ம்.. உன் கால் வரும்னு எதிர்பார்த்தேன்.."



"எப்படி மேம்.. இவ்ளோ சீக்கிரம்..! எவ்ளோ டீம் எங்கெங்கெல்லாம் வச்சிருக்கீங்க..? எல்லா கட்சிக் காரங்களும் தையத் தையனு குதிக்கப் போறாங்க.."



"குதிக்கட்டும் குதிக்கட்டும்.. ரொம்ப நாளாவே ஒருத்தர் இதப்பத்தி என்கிட்ட சொல்லிட்டே இருந்தார். அவர் சொன்ன தகவல்களையெல்லாம் சேர்த்து வச்சிருந்தேன். இப்ப நீங்க மிரட்டப்படவும், அதையும் இதையும் ரிலேட் செய்து பார்த்தேன்.. சரியா பொருந்தர மாதிரி இருந்துச்சு.. ஆளுங்கட்சிக்கு இத அனுப்பி இப்படி ஒரு செய்தி இருக்கு... தெரியுமா?னு கேட்டேன்.. மொதல்ல அவங்களும் அதிர்ச்சியடைஞ்சாங்க.. அப்படி இருந்தா சரியாத்தான் இருக்கும். எங்களுக்கும் அவங்க மேல பல நாளா சந்தேகம் இருந்துச்சு.. ஆனா காட்டுத்தீக்கும் எங்களுக்கும் தொடர்புனு மட்டும் சொல்லாதீங்க.. மத்தபடி கஞ்சா பிரச்சனைய ஒளிபரப்புங்க.. நாங்களும் உரிய நடவடிக்கைகள் எடுக்கறோம்னு சொன்னாங்க.. அப்பறமாத்தான் இன்னும் கொஞ்சம் எடிட் பண்ணி இத தயார் பண்ணோம்.. அடுத்த வைரல் செய்தி ரெடியாகிடுச்சு.. இனிமே யாரும் வந்து உங்கள மிரட்ட மாட்டாங்க.. அப்படி மிரட்டினா அவங்க பேரெல்லாம் செய்தியா வரும்னு சொல்லி வை.. சரியா?"



"சூப்பர் மேம்... இதுவே எவ்ளோ நல்ல நியூஸ்.. ரொம்ப ஓவராத்தான் பேசினாங்க ரெண்டு பேரும்.. இனி வரட்டும் அவங்களுக்கு இருக்கு.. இந்த நியூஸே பிரியாணி சாப்பிட்ட மாதிரி இருக்கு.. இன்னைக்கு இன்னும் ஹேப்பியா வொர்க் பண்ண முடியும்"



"என்ன நடுவுல பிரியாணியெல்லாம் சொல்ற?"



"ஒரு ப்ளோல வந்துருச்சு மேம்.."



"சரி சரி புரஜக்ட் முடிச்சிட்டு வாங்க.. செவன் ஸ்டார் ஓட்டல்ல டின்னர் பார்ட்டி வச்சிடலாம்"



"தேங்க்யூ மேம்.. சீக்கிரமா செவன் ஸ்டார் ஓட்டல நோக்கி நம்ம‌ பயணம் இருக்கும்"



"ஹ ஹ.. ஓகே.. நல்லா வொர்க் பண்ணுங்க.."



"ஓகே மேம்"



அடுத்த வைரல் நியூஸ் அடுத்த அரைமணி நேரத்தில் இளமதி தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது...



'மிரட்டப்பட்டனர் இளமதி டிவியின் காட்டுத்தீ டீம்..'



'காரணம் என்ன? அலசி ஆராய்ந்ததில் பல கோடி மதிப்புள்ள கஞ்சா செடிகளை காட்டுக்குள் பயிரிட்டு வளர்த்துவரும் மாமனும், மச்சானும்..'



'யார் அவர்கள்?'



'மூட்டை மூட்டையாக கஞ்சாக்கள் இந்தக் காட்டுத்தீயால் எரிந்து போனதா?'



'மீண்டும் பற்றிக்கொண்டது நாடு.. என்ன கஞ்சாத் தோட்டமா...? ஏற்றுமதி செஞ்சு பல மில்லியன் பில்லியன் கோடி டாலர்கள் சம்பாத்தியமா?'



'அரசே.. நடவடிக்கை எடு.. உடனே கிரிமினல் குற்றவாளிகளைக் கைது செய்..'



எங்கெங்கு பார்த்தாலும் காட்டுத்தீயுடன் சேர்ந்து இந்தச் செய்தியும் தீயாய் பற்றிக்கொண்டது.



==



காட்டுக்குள் தீயின் வேகம் வழக்கம் போலவே இருந்தது. காட்டுக்குள் சென்றதும் வருண் அவனது நண்பர்களுடன் சேர்ந்து கொண்டான். சில நண்பர்கள் இரவெல்லாம் அங்கேயே தங்கி இருப்பது அவனது பேச்சின் மூலம் தெரியவந்தது.



அவனது நடவடிக்கைகள், அவனது நண்பர்களது நடவடிக்கைகளை அவ்வப்போது வீடியோ எடுத்துவந்தாள் தர்ஷினி.



ப்ளுகிராஸ் டீமுக்கு வேலை அதிகமாகிக் கொண்டே போனது. அவர்கள் முடிந்த அளவு தீவிரமாக இயங்கிக் கொண்டிருந்தனர். நீலாவதி இவர்களுடன் நன்றாக பழகிக்கொண்டாள். அவள் கொண்டு வந்திருந்த உணவினை இவர்களுக்குப் பகிர்ந்து கொடுத்தாள்.



அப்போது ஒரு பெரிய சத்தம் காட்டுக்குள்ளிருந்து வந்தது.



அது பலர் கத்தும் சத்தம்..



நிச்சயம் அவர்கள் வருணின் நண்பர்களாகத்தான் இருக்கவேண்டும்.



என்ன ஏது என காத்திருந்தவர்களுக்கு ஒரு பேரதிர்ச்சி வந்து சேர்ந்தது.



ஒரு எரிந்து முடிந்திருந்த மரம்.. சாயாமல் நின்று கொண்டு தானிருந்தது. வலுவிழந்து விட்டது போல.. இவர்களது மேல், திடீரென விழுந்து விட்டது. பலருக்கும் காயம்.. வருணுக்கு காலிலும், கையிலும் பலத்த அடி.. அவனைத் தூக்கிக் கொண்டு தான் வந்தனர். உடனே மேகலா காருக்கு அழைத்துச் சென்றாள் அவனை..



நீலாவதி அடிபட்டவர்களுக்கு தன்னாலான முதலுதவிகளைச் செய்தாள். வருணை உடனே ஆஸ்பெட்டலில் அட்மிட் செய்ய வேண்டி இருந்ததால், அவர்கள் உடனே கிளம்பினர். அடிபடாத வருணின் நண்பர்கள் அவர்களது வேலையை தொடர்ந்து செய்து கொண்டிருந்தனர்.



(தொடரும்)



அ.வேளாங்கண்ணி





காட்டுத்தீயும் மூன்று ரோஜாக்களும் - 12



பாகம் பனிரெண்டு

==================



(ஒரு புது புரஜக்ட்.. அதில் கலக்க மூவர் கிளம்பி செல்கின்றனர். இவர்கள் எடுத்து அனுப்பிய முதல் வீடியோ ஒளிபரப்பப்பட்டு தமிழ்நாடே அதிர்ந்து போய் இருந்தது. இளமதி டீமுடன் ப்ளூகிராஸும் சேர்ந்து கொண்டது. அவர்கள் விலங்குகளுக்கான உதவிகளைச் செய்தனர். கூடவே இருந்த வருண், அவனது காலேஜ் நண்பர்கள் பலரை அழைந்திருந்தான். இளமதி டீம் மிரட்டப்பட்டதாய் சாருமதிக்கு மேகலா தெரிவித்தாள். அப்போது பல புது விஷயங்களை வருண் கூறினான். மீண்டும் காட்டுக்கு அவர்கள் கிளம்பினர். வருண் சொன்னதையெல்லாம் செய்தியாக சாருமதி வீடியோ செய்து அனுப்பியிருந்தாள். ஆனந்த அதிர்ச்சி அனைவருக்கும். அதே வைரல் செய்தி அடுத்து நாடு முழுவதும் ஒளிபரப்பாக இன்னும் பரபரப்பானது நாடு. இங்கே காட்டில் ஒரு மரம் விழுந்து வருணுக்கும், அவனது நண்பர்களுக்கும் காயமானது. இதில் வருணுக்குத்தான் பலத்த அடி. அவனை ஹாஸ்பிட்டலுக்கு கூட்டிச் சென்றனர். அடுத்து நடந்தது என்ன? வாருங்கள் பார்க்கலாம்)



உடனடியாக வருணை அருகிலிருந்த மருத்துவமனையில் சேர்த்தனர். அவனுடன் சில நண்பர்களையும் விட்டு வந்தனர். உடனே அவனது வீட்டிற்கு இந்த விஷயம் தெரிவிக்கப் பட அனைவருமே ஆஸ்பெட்டலுக்கு வந்தனர்.



கண்ணீருடன் தான் வந்தனர் நான்கு பேரும்..



"டாக்டர்.. டாக்டர்.. வருணுக்கு"



"பெரிய பிரச்சனை எதுவுமில்லைங்க.. முதலுதவி கொடுத்திருக்கோம். ரெண்டு மூனு நாள் ஆஸ்பிட்டல்ல இருந்து சிகிச்சை எடுத்துக்கிட்டா போதும்"



"அப்ப ரொம்ப மகிழ்ச்சி டாக்டர்.."



எல்லோரும் நார்மல் மூடுக்கு வந்தனர்.



உடனே பிருந்தா தன் அம்மாவிடம் அணத்த ஆரம்பித்தாள்..



"அம்மா.. அம்மா.."



"என்னடி?"



"நானே இங்க தங்கி இருந்து வருணப் பார்த்துக்கவா?"



"அடியே இவளே... அடிவாங்கப்போற எங்கிட்ட.. அவனோட அப்பா, அம்மா இருக்காங்க.. ப்ரண்ட்ஸ் இருக்காங்க.. அவங்க சிறப்பா பார்த்துப்பாங்க.. வந்தோமா ‍பார்த்தோமானு கெளம்பு.. நமக்கும் வீட்டுல வேலை இருக்கு... இவ்ளோ பசங்க கூட இருக்கும் போது நமக்கு என்னடி கவலை.? அப்பறம் பசங்கெல்லாம் இங்க இருக்கும் போது உன்னால எப்படி தங்க முடியும்.. டெய்லி ஒரு தடவ வந்து பார்த்துக்கலாம் வா.."



"ம்.. சரிமா.. எப்படியும் நீ ஒத்துக்க மாட்டேனு தெரியும்.. சும்மா கேட்டுப்பார்த்தேன்"



"சரி சரி.. வாய மூடிட்டு அமைதியா நில்லு"



தினமும் அவனை அங்கு சென்று பார்த்து வந்தனர். வலியெல்லாம் சரியாகி கொஞ்சம் தெளிவானதும் தனது நண்பர்களுடன் தொடர்ந்து போனில் சில விஷயங்களை தொடர்ந்து பகிர்ந்து கொண்டிருந்தான் வருண்.



ஒரு நாள் ப்ளூகிராஸ் டீம் கூட இவனைப் பார்க்க வந்தது. நீலாவதி தனது தம்பிக்கு ஏற்பட்ட வலியாய் இதை உணர்ந்து மிகவும் வருத்தப்பட்டாள்.



"வருண்.. சீக்கிரம் உனக்கு குணமாகிடும்.. கவலைப்படாத"



"இவ்ளோ அன்பா ன‌ அக்காவெல்லாம் இருக்கும் போது எனக்கு என்ன கவலை? அன்னைக்கே வருவீங்கனு எதிர்பார்த்தேன்.."



"அன்னைக்கு ஒரு மரமில்ல.. பல இடங்கள்ல இப்படி மரம் விழுந்திருக்கும் போல. எக்கச்சக்க விலங்குகளுக்கு அடி.. அதான் அந்தச் சிகிச்சையில ரொம்ப பிஸியாகிட்டேன்.. வீட்டுக்குப் போகறதுக்குள்ள நல்லா இருட்டிடுச்சு.. அதான் கெளம்பிட்டேன்.."



"இட்ஸ் ஓகே கா..."



வருணும் அவனது நண்பர்களும் நீலாவதியிடம் வாக்கி டாக்கியை எப்படி இயக்குவது என பயிற்சி பெற்றதோடு மட்டுமல்லாமல், சில வாக்கி டாக்கிகளை வாங்கி தங்களது நண்பர் வட்டத்துக்குள் பேசிக்கொள்ளவும் பயன்படுத்தி வந்தனர்.



வருணும் மிகுந்த பாசத்தோடு நீலாவதியிடம் பேசினான்.



==



இளமதி தொலைக்காட்சியின் காட்டுத்தீ அப்டேட், கஞ்சா அப்டேட்டெல்லாம் பல வெளிநாட்டு செய்தி நிறுவனங்களை மிகவும் கவர, அவர்கள் சாருமதிக்கு போன் செய்து தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.



உள்நாட்டு தொலைக்காட்சி நிறுவனங்களும் தங்களது பங்கிற்கு சாருமதிக்கு புகழ்மாலை சூடினர்.



எல்லோரும் இன்பத்தில் திளைத்திருக்க மீண்டுமொரு அதிர்ச்சி அளிக்கும் சம்பவம் நிகழ்ந்தது.



(தொடரும்)



அ.வேளாங்கண்ணி



==





காட்டுத்தீயும் மூன்று ரோஜாக்களும் -13



பாகம் பதிமூன்று

================



(ஒரு புது புரஜக்ட்.. அதில் கலக்க மூவர் கிளம்பி செல்கின்றனர். இவர்கள் எடுத்து அனுப்பிய முதல் வீடியோ ஒளிபரப்பப்பட்டு தமிழ்நாடே அதிர்ந்து போய் இருந்தது. இளமதி டீமுடன் ப்ளூகிராஸும் சேர்ந்து கொண்டது. கூடவே இருந்த வருண், அவனது காலேஜ் நண்பர்கள் பலரை அழைந்திருந்தான். காட்டுத்தீ, கஞ்சா செடி என அடுத்தடுத்த செய்திகளால் பலரது பேவரேட் சேனலானது இளமதி. அதே நேரம் வருணுக்கு அடிபட அவன் ஆஸ்பெட்டலில் அட்மிட் ஆகி குணமடைந்து வருகிறான். சாருமதிக்கு பல வெளிநாட்டு, உள்நாட்டு சேனல்கள் வாழ்த்து தெரிவித்தன. அப்போது மற்றுமொரு அதிர்ச்சி செய்தி அவர்களை வந்தடைந்தது. அது என்ன? வாருங்கள் பார்க்கலாம்)



என்ன தான் ஒருவருக்கு தொடர்ந்து வாழ்த்து மழை பொழிந்து கொண்டிருந்தாலும் சிலருக்கு மட்டும் அது உருத்தலாகவே இருக்கும் என்பது மனித இயல்பு.. அப்படித்தான் இளமதி நிறுவனத்தின் எதிரி நிறுவனம் ஒன்று இவர்களது டிவி மீது கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.



தீப்பற்றியிருக்கும் விபரம் தெரிந்தவர்கள் பொதுமக்கள், அரசாங்கத்தின் உதவியோடு அதனை அணைக்கும் முயற்சியினை மேற்கொள்ளாமல், தங்களது சுய நலத்துக்காக அதனை வீடியோவாக்கி வைரலாக்கி, அனைவருக்கும் பயத்தை ஏற்படுத்தி விட்டனர். இது முற்றிலும் சுய நலமே. பொது நலமில்லா ஒரு டிவியை இப்படி நாடே கொண்டாடுவது எவ்விதத்திலும் சரியில்லை. இப்படி ஜோடிக்கப்பட்ட பத்து பக்கங்களுக்கு மேல் இளமதி டிவி மேல் குற்றம் கூறி, இவ்வழக்கை உடனே விசாரிக்க வேண்டுமென்றும், அவர்கள் ஒளிபரப்பும், ஒளிபரப்ப இருக்கின்ற, இதுவரை ஒளிபரப்பான அனைத்து வீடியோக்களையும் தடை செய்ய வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டனர்.



வேலை வெட்டி இல்லாத பலருக்கும் உலகத்தில் இது தான் முக்கியமான வேலையே... யார் மீதாவது அடிப்படை இல்லாத குற்றம் சுமத்த வேண்டியது. அப்புறம் அதை நிரூபிக்கச் சாட்சிகளை ஜோடிக்க வேண்டியது. முடியாத பட்சத்தில் பல பொய்களுக்கு அழகாய் ஆடையுடுத்தி மேடையேற்ற வேண்டியது.



அப்படித்தான் ஆனது இங்கும்.. சில பத்திரிக்கைகள் இதை உடும்புப்பிடியாய் பிடித்துக் கொண்டன.



சில டுவிட்டுகள் இதே விஷயத்தை ஆக்கிரமித்துக் கொண்டன‌.



சில மணி நேரங்களில் மீண்டும் இளமதி டிவி டிரண்டானது. முன்பு வந்த நல்ல விஷயத்துக்கல்ல.. இப்போது புதிதாய் வந்து சேர்ந்த கெட்ட விஷயத்துக்கு...



பேன் இளமதி, தடைசெய் இளமதி டிவி வீடியோ, செல்பீஸ் இளமதி, டவுன் டவுன் சாருமதி என்பவை சட்டென தமிழக அளவில், இந்தியா அளவில், உலக அளவில் டிரண்டாக ஆரம்பித்தன.



இதையும் ரொம்ப நாட்களாகவே எதிர்பார்த்திருந்தாள் சாரு. தனது சட்ட ஆலோசகர்களை அழைத்து அடுத்த நாம் என்ன மாதிரியான நடவடிக்கைகளில் இறங்கலாம் என்பது பற்றி விவாதிக்க ஆரம்பித்தாள்.



சமூக வலைத்தளங்களில் நல்லதோ, கெட்டதோ.. பற்றிக்கொண்டால்.. எப்படி பரவும் என்றே தெரியாது.. அப்படித்தான் பரவியது செல்பிஸ் இளமதி என்ற செய்தியும்.



இளமதி டிவியின் காட்டுத்தீ டீமுக்கும் இச்செய்தி கவலையைக் கொடுத்தது.



கான்பரன்ஸ் போனில் நால்வரும் நீண்ட நேரம் விவாதம் செய்தனர்.



"இதெல்லாம் ஈசல் மாதிரி. நாளைக்கே காணாமல் போகக் கூடிய செய்தி தான். நல்ல பெயர் சம்பாதித்து வைத்திருக்கும் நம் மீது சேறு அள்ளி பூசும் செயல் இது. இதெல்லாம் கண்டு நாம் பயப்படத் தேவையில்லை", என சாரு சொல்லிக்கொண்டிருந்தாள்.



இதற்கிடையில் ஷாலினி, தர்ஷினி, மேகலா வீட்டிலிருந்தெல்லாம் கால் வந்துவிட்டது. முன்பு பாராட்ட கால் செய்தவர்கள்...



"இப்போது பேரு கெட்டுடும் போல இருக்கே... இத்தன நாளா சம்பாதிச்சு வச்சிருந்த நல்ல பேரெல்லாம் போனா நல்லவா இருக்கும். உடனே மன்னிப்பு கேட்டு ஒரு வீடியோ வெளியிட்டுட்டு கெளம்பி வீட்டுக்கு வாங்க..", போதும் உங்க புரஜக்ட் என பிரசர் கொடுக்க ஆரம்பித்தனர்.



சரி என ஒரு முடிவு எல்லோராலும் எடுக்கப்பட்டது.



"இதுவரை எடுத்த வீடியோக்கள் போதும். நாளை காலை நீங்க கிளம்பி வாங்க.. அடுத்து என்ன பண்ணலாம்னு யோசிச்சு முடிவெடுப்போம்", என்று சொல்லிவிட்டாள் சாருமதி.



இந்த விஷயத்தைக் கேள்விப்பட்டதும் மிகவும் வேதனையடைந்தது வருண் தான்..



"பல முயற்சி எடுத்துட்டோம். உலகுக்கே இத கொண்டு போயிருக்கோம்.. இன்னும் ரெண்டு மூனு நாள்ல தீ கூட தானா அணைய வாய்ப்பிருக்கு.. ப்ளீஸ் இப்படி பாதியிலேயே விட்டுட்டுப் போகாதிங்க...", எனக் கெஞ்சினான்.



பிருந்தாவும் அதையே தான் சொன்னாள்.



"வருண் சொல்லறக் கேளுங்க.. ஒரு ரெண்டு நாளைக்கு உங்க பயணத்த தள்ளிப்போடுங்க..", என தீவிரமாகக் கேட்டுக்கொண்டாள்.



சாருமதிக்கும் இந்த விபரங்களைத் தெரிவித்தனர்.



காட்டுக்குள் போகவில்லை.. ஆனால் நாங்கள் திரும்பி வருவதை மாத்திரம் ஒரு ரெண்டு நாள் கழித்து வரலாம் என்று நினைக்கிறோம் எனச் சொல்ல சாருவும் 'சரி'யென்றாள்.



அடுத்து வந்த ஒரு செய்தி அவர்களுக்கு ஆறுதலாக அமைந்தது.



(தொடரும்)



அ.வேளாங்கண்ணி



==





காட்டுத்தீயும் மூன்று ரோஜாக்களும் - 14



பாகம் பதினான்கு

=================



(ஒரு புது புரஜக்ட்.. அதில் கலக்க மூவர் கிளம்பி செல்கின்றனர். இவர்கள் எடுத்து அனுப்பிய முதல் வீடியோ ஒளிபரப்பப்பட்டு தமிழ்நாடே அதிர்ந்து போய் இருந்தது. இளமதி டீமுடன் ப்ளூகிராஸும் சேர்ந்து கொண்டது. கூடவே இருந்த வருண், அவனது காலேஜ் நண்பர்கள் பலரை அழைந்திருந்தான். காட்டுத்தீ, கஞ்சா செடி என அடுத்தடுத்த செய்திகளால் பலரது பேவரேட் சேனலானது இளமதி. அதே நேரம் வருணுக்கு அடிபட அவன் ஆஸ்பெட்டலில் அட்மிட் ஆகி குணமடைந்து வருகிறான். சாருமதிக்கு பல வெளிநாட்டு, உள்நாட்டு சேனல்கள் வாழ்த்து தெரிவித்தன. ஆனால் ஒரு உள்நாட்டு தொலைக்காட்சி இளமதி டிவி மீது வழக்குத் தொடர்ந்தது. நாடு முழுவதும் செல்பிஸ் இளமதி என்னும் செய்தி டிரண்டாக, இளமதி காட்டுத்தீ டீம் திரும்பி போக முடிவெடுத்தனர். அதையேத்தான் சாருவும் சொன்னாள். ஆனால் வருணும், பிருந்தாவும் இரண்டு மூன்று நாட்கள் கழித்துப் போகலாம் என்று கூற, இப்போது ஆறுதல் அளிக்கும் ஒரு செய்தி அவர்களை வந்து சேர்ந்தது. அது என்ன? வாருங்கள் பார்க்கலாம்)



இவர்களது வீடியோ மூலம் தான் எங்களால் சரியாக களப்பணியாற்ற முடிந்தது.அதனாலாயே அதிக எண்ணிக்கையிலான விலங்குகளைக் காப்பாற்ற முடிந்தது என 'ப்ளூகிராஸ்' ஒரு அறிக்கை வெளியிட்டது.



இந்த அறிக்கை வெளியிட்டதில் நீலாவதியின் பங்கு முக்கியமானது.



ஒரே ஒரு அறிக்கை தான். எதிரி நிறுவனத்தின் வழக்கு ஆட்டம் கண்டது.



அதுவரை இவர்களை எதிர்த்து வெளியிடப்பட்ட அத்தனை கருத்துக்களும் இந்த ஒரு அறிக்கையால் தவிடு பொடியானது.



டிரண்டிங் தனது பாதையை அப்படியே 180 டிகிரிக்கு திரும்ப ஆரம்பித்தது.



ஹெய்ல் இளமதி, புரொவ்டு ஆஃப் யூ இளமதி, வெல்டன்சாரு, ஹாட்சேனல்இளமதி, டாப்சேனல்இளமதி என்பவை இப்போது டிரண்டாக ஆரம்பிக்க அனைவருமே பெருமூச்சு விட்டனர்.



"தேங்க்யூ இளமதி டிவியின் த்ரீ ரோஸஸ் டீம்" என்று விலங்குகள் கண்ணீருடன் சொல்வது போல வெளியிட்ட மீம்ஸ்.. 80ஸ், 90ஸ், 2K கிட்ஸ் என அனைவருக்கும் அப்படிப் பிடித்துப்போக அது எங்கெங்கும் பரவியது. மீண்டும் புகழ் ஏணியின் உச்சியில் விஷ்வரூபம் எட்டினர் இளமதி காட்டுத்தீ டீம்.



அவர்கள் அங்கேயே இருந்தது நல்லதாய் போயிற்று. மீண்டும் காட்டுக்குள் சென்று பல பல வீடியோக்களை எடுத்து வந்தனர்.



ஓரளவு குணமாகிவிட்ட வருண் அவர்களுடனே சென்றான். கை கால்களில் சிறிது பேன்டேஜ் மட்டும் போட்டிருந்தான்.



இவர்கள் இப்படி எடுத்த அனைத்து முயற்சிகளும் வெற்றியில் முடிந்ததா? அடுத்த பகுதியில் முடியும்.



(தொடரும்)



அ.வேளாங்கண்ணி





காட்டுத்தீயும் மூன்று ரோஜாக்களும்‍ ‍15 (இறுதிப்பகுதி)



பாகம் பதினைந்து

=================



(ஒரு புது புரஜக்ட்.. அதில் கலக்க மூவர் கிளம்பி செல்கின்றனர். இவர்கள் எடுத்து அனுப்பிய முதல் வீடியோ ஒளிபரப்பப்பட்டு தமிழ்நாடே அதிர்ந்து போய் இருந்தது. இளமதி டீமுடன் ப்ளூகிராஸும் சேர்ந்து கொண்டது. கூடவே இருந்த வருண், அவனது காலேஜ் நண்பர்கள் பலரை அழைந்திருந்தான். காட்டுத்தீ, கஞ்சா செடி என அடுத்தடுத்த செய்திகளால் பலரது பேவரேட் சேனலானது இளமதி. அதே நேரம் வருணுக்கு அடிபட அவன் ஆஸ்பெட்டலில் அட்மிட் ஆகி குணமடைந்து வருகிறான். சாருமதிக்கு பல வெளிநாட்டு, உள்நாட்டு சேனல்கள் வாழ்த்து தெரிவித்தன. ஆனால் ஒரு உள்நாட்டு தொலைக்காட்சி இளமதி டிவி மீது வழக்குத் தொடர்ந்தது. நாடு முழுவதும் செல்பிஸ் இளமதி என்னும் செய்தி டிரண்டாக, இளமதி காட்டுத்தீ டீம் திரும்பி போக முடிவெடுத்தனர். அதையேத்தான் சாருவும் சொன்னாள். ஆனால் வருணும், பிருந்தாவும் இரண்டு மூன்று நாட்கள் கழித்துப் போகலாம் என்று கூற, இப்போது ஆறுதல் அளிக்கும் ஒரு செய்தியாக 'ப்ளூகிராஸ்' அவர்களது உதவியில்லாமல் இத்தனை விலங்குகளைக் காப்பாற்றியிருக்க வாய்ப்பே இல்லையென அறிக்கை வெளியிட.. மீண்டும் நல்ல செய்திக்காய் டிரண்டாக ஆரம்பித்தது இளமதி டிவி. அவர்கள் இதுவரை எடுத்த நடவடிக்கைகள் அவர்களுக்கு வெற்றியைக் கொடுத்ததா இல்லையா? முடிவு தான் என்ன? வாருங்கள் பார்க்கலாம்)



(இறுதிப்பகுதி)



முற்றும் முழுதாய் அழிக்கப்பட்டது காட்டுத்தீ. யாராலும் நம்ப முடியாத நிகழ்வாய் இது அமைந்தது.



இக்காட்டுத்தீயினால் பல ஏக்கர் பரப்பளவுள்ள கஞ்சாத்தோட்டங்கள் மொத்தமாய் அழிந்துவிட்டதாக அரசாங்கம் அறிக்கை வெளியிட்டது.



இன்னும் மிகத்தீவிரமாக பரவி இருந்தால் மிகப்பயங்கர ஆபத்தினை விளைவித்திருக்கும் என்பதை அனைவருமே ஒப்புக்கொண்டனர்.



இது எப்படிச் சாத்தியம் ஆனது என்று தமிழகத்தின், இந்தியாவின் அனைத்து டிவி நியூஸ் சேனல்களும், பல வித யூடியூப் சேனல்களும் ஆராய ஆரம்பித்தனர்.



அப்பொழுது மீண்டுமொரு வீடியோ 'இளமதி' சேனலில் ஒளிபரப்பாக உலகெங்கும் அது அடுத்த வைரலாக ஆனது.



அந்த வீடியோவின் மூலம் அந்தக்காட்டில் வாழ்ந்த ஆயிரத்துக்கும் அதிகமான பழங்குடி இன மக்கள் இந்த தீயை அணைப்பதில் முழு மூச்சாய் உதவி செய்தது தெரியவந்தது.



அவர்களை ஒருங்கிணைப்பதில் வருணின் பங்கே அதிகம். அவனும் அவனது கல்லூரி நண்பர்கள் சுமார் முப்பது பேரும் சேர்ந்து ஒரு பெரும்பணியை செய்திருந்தனர். அவர்கள் ஆற்றியது முற்கால போர் நடைமுறைகளுக்கு சிறிதும் குறைந்ததல்ல. அவர்கள் அனைவரும் சேர்ந்து பழங்குடி மக்களை முப்பது அல்லது நாற்பது பேர் கொண்ட குழுவாகப் பிரித்தனர். வெளியில் மலை மேலிருந்து கண்காணிக்கும் ஒரு மாணவர் குழு மூலம், எப்பகுதியில் தீ வேகமாகப் பரவுகிறது என்னும் செய்தி ப்ளூகிராஸ் நண்பர்கள் கொடுத்துதவிய 'வாக்கி டாக்கி' மூலம் தெரிவிக்கப்பட, அங்கு அதிக எண்ணிக்கையிலான குழு அனுப்பப்பட்டது.



அவர்களது முதல் பணி.. முடிந்தவரையில் தீ பரவும் இடத்திற்கு அருகில் செல்ல முடியும் தூரம் வரை சென்று அருகிலுள்ள மரங்களை வெட்டி அதன் பகுதிகளை அப்புறப்படுத்தி வேக வேகமாக வெற்றிடங்களை உருவாக்குவது தான். ஆரம்பத்தில் சுணக்கமாக‌ காணப்பட்ட அவர்களது பணி.. மாணவர்களின் கத்தல், விலங்குகளின் கதறல் இவற்றைக் கண்டபின் சூடுபிடிக்க ஆரம்பித்தது.



இடையில் வருணுக்கும் மற்றும் சிலருக்கும் ஏற்பட்ட காயத்தால் சிறுது இப்பணி தொய்வடைந்தாலும் வெகு சீக்கிரமாய் வேகமெடுத்தது. ஆஸ்பெட்டலில் இருந்தே நன்றாக ஒருங்கிணைத்துக் கொண்டிருந்தான் வருண்.



வெற்றிடங்கள் சுற்றிலும் அதிகமாக அதிகமாக அவ்விடங்களில் தீயின் வேகம் குறைந்தது. தீப்பரவல் முற்றிலும் தவிர்க்கப்பட்டது.



ஒரு இடத்தில் இப்பணி நிறைவேறியவுடன், அந்த குழுக்கள் அப்படியே வேறு இடங்களுக்கு அனுப்பப்பட்டன. குழுக்களின் எண்ணிக்கை ஒரு குறிப்பிட்ட பகுதியில் கூடக் கூட அங்கு மரங்களை வெட்டும் பணியும், மரங்களை அகற்றும் பணியும் அதிவேகமாக நடக்கவும் தீ மெல்ல கட்டுக்குள் வர ஆரம்பித்தது.

ஆரம்பத்தில் அதிர்ச்சயடைந்த அரசாங்கம், அடுத்தடுத்து வந்த இவர்களது வீடியோக்கள் கண்டும், தீயின் பரவல் பற்றியும், தீ கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் பற்றியும் அவ்வப்போது அப்டேட் கொடுக்க ஆரம்பித்தது.

முதலில் இளமதி டிவி மீது கோபமாக இருந்தவர்கள் பின்பு அதன் செயலை பாராட்ட ஆரம்பித்தனர்.

அவர்களது ஒவ்வொரு வீடியோவும் கோடிக்கணக்கான பேரால் பார்க்கப்பட்டது, பகிரப்பட்டது, பாராட்டப்பட்டது.

மூவரும் பாராட்டு மழையில் நனைந்தனர். வேறு வேறு டிவி சேனல்கள் கூட இவர்களது பேட்டியை எடுத்து ஒளிபரப்பி தங்கள் பார்வையாளர்களைப் பெருக்கிக் கொண்டனர்.



நாட்டிலுள்ள அத்தனை பத்திரிக்கைகளும் அவர்களது வீட்டை நோக்கிப் படையெடுத்தன. இவர்களது குடும்பங்களும் பாராட்டு மழையில் நனைந்தனர். இளமதி டிவியின் மதிப்பு இதன்மூலம் பன்மடங்கு அதிகமானது.



இதுவரை வேண்டாமென்று ஒதுக்கி வைத்திருந்த பங்குச்சந்தையில் இளமதி டிவியை இறக்க முடிவெடுத்தாள் சாருமதி.



இதன் மூலம் வரும் பணத்தின் ஒரு பகுதியை இந்த நிகழ்வில் பெரும் பங்காற்றிய பழங்குடி மக்களுக்கு செலவளித்து அவர்களது வாழ்வாதாரத்தை அடியோடு மாற்ற சபதம் செய்தாள் சாரு.



அவர்களது எல்லா வீடியோக்களையும் வாங்க டிஸ்கவரி பல கோடி பேரம் பேசி.. மிக மிக அதிக தொகையில் வாங்கிக்கொண்டது.



பிகைன்டுவுட்ஸ் நிறுவனம் அவர்களுக்கென்ற தனிப்பட்ட பாராட்டு விழாவிற்கு ஏற்பாடு செய்தது. பல முக்கியமான விஐபிக்கள் விழாவிற்கு அழைக்கப்பட்டனர். பல விஐபிக்கள் அவர்களாகவே விரும்பி இவ்விழாவில் பங்கேற்றனர். மூவருக்கும் "த்ரீ ரோஸஸ்" என்ற சிறப்பு விருது மக்கள் செல்வன் 'விஜய் சேதுபதி' கையால் வழங்கப்பட்டது.



அவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக சின்னவன், பூங்காவனம், மலர்விழி, பிருந்தாவனம், பிருந்தாவின் அம்மா, வருண், நீலாவதி ஆகியோர் இம்மூவரால் அழைக்கப்பட்டனர்.



இளமதியின் அதிபர் சாருமதிக்கு மிகுந்த பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டது.

அம்மேடையிலேயே இவர்களுக்கு "ஒரு வருட சம்பளம் போனஸ்" என அறிவித்தாள் சாருமதி.

மூவருக்கும் பதவி உயர்வு அளிப்பதாகவும் தெரிவித்தாள். கூடவே இருந்து தனது அளப்பரிய பணியால் எல்லோரையும் கவர்ந்து இன்று காயங்களுடன் உட்கார்ந்திருக்கும் வருணுக்கு இளமதி டீவியில் ஒரு நல்ல பதவி வழங்குவதாக சாருமதி அறிவித்தாள்.



இதற்கிடையில் அடிக்கடி மிஸ்டு கால் கொடுத்து கொடுத்து டிஸ்டர்ப் செய்து மெசேஜ் செய்ய ஆரம்பித்து இப்போது நன்றாக பழகவும் ஆரம்பித்திருந்த தர்ஷினியின் வருங்கால ஹஸ்பன்டையும் அவள் விழாவிற்கு அழைத்திருந்தாள். அவன் வாயெல்லாம் பல்லாக விழாவிற்கு வந்து முழுவிழாவிலும் மிக சந்தோசமாகக் கலந்து கொண்டான்.



இந்திய அரசாங்கம் ஆளுக்கு ஒரு கோடி பரிசு அறிவித்தது. தமிழக அரசு ஆளுக்கு 50 லட்சம் பரிசு அறிவித்தது.



ஒரு வெளிநாட்டுச் சுற்றுலா நிறுவனம் 15 நாள் ஐரோப்பா டூரை இவர்களுக்குப் பரிசாக அறிவித்தது.



விழாவின் முடிவில் கூட்டுப்பிரார்த்தனை நிகழ்வு அரங்கேறியது. மீண்டும் இப்படியொரு காட்டுத்தீ வேண்டாமென உருக்கமாக அனைவரும் வேண்டிக் கொண்டனர்.



காடுகள் பாதுகாக்கப்பட வேண்டியவை.



காடுகளில் வாழ்ந்த வரை மனிதன் மனிதாக வாழ்ந்தான்.



இப்போது வாழ்வை தொலைத்து விட்டு நிற்கிறான்.. மீண்டும் உலகமே காடுகளாலாக மாறினால் நல்லது தான்..



காடுகளைப் பாதுகாப்போம்



புதிதாய் காடுகளை உருவாக்குவோம்..



(முற்றும்)



(தொடர்ந்து படித்து ஆதரவு கொடுத்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் எனது மனப்பூர்வமான நன்றி..)



அ.வேளாங்கண்ணி

எழுதியவர் : அ.வேளாங்கண்ணி (21-Jan-22, 6:12 am)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 180

மேலே