செவிசுடச் சென்றாங் கிடித்தறிவு மூட்டி வெகுளினும் வாய்வெரீஇப் பேரா அமைச்சு - நீதிநெறி விளக்கம் 45

நேரிசை வெண்பா

செவிசுடச் சென்றாங் கிடித்தறிவு மூட்டி
வெகுளினும் வாய்வெரீஇப் பேரா - கவிழ்மதத்த
கைம்மா வயத்ததோ பாகுமற் றெத்திறத்தும்
அம்மாண் பினவே அமைச்சு 45

- நீதிநெறி விளக்கம்

பொருளுரை:

பாகன் எவ்வகையாலும் பொழியும் மதத்தினையுடைய யானையின் வயத்தினன் ஆவனோ அதுபோல் அமைச்சர்கள் எவ்வகையாலும் அத்தன்மையரேயாவர்;

ஆகையால், அரசன் தன்நெறி தவறினால் அவனிடத்துப் போய் அவன் செவிகள் வருந்தும்படி அவன் குற்றங்களை எடுத்துக்காட்டி இடித்துரைத்து அவனுக்கு அறிவு வரச்செய்து அவன் தம்மைக் கோபிக்கினும் அவனுக்கு அஞ்சி அவனை விட்டு அகலார்.

விளக்கம்:

யானை தன்னியல்பிலிருக்கும் போது அதனைத் தம்வசப்படுத்தி நடத்தும் பாகர், அது மதங் கொண்டு தம்வசம் அடங்காமல் ஓடும்போதும் அதனை விடாது சென்று அதனை அங்குசம் இட்டு இடித்து அதன் மதத்தை அடக்கி மறுபடியும் அதனைத் தன்னியல்பிற்குக் கொண்டுவருவர்.

அது போல், அரசன் தன்னியல்பில் நின்றபோது அவன் மனம்போல் நடக்கும் அமைச்சர் அவன் வெகுண்டு தன்னிலை தவறுங்கால் அவன் செவிகளில் நன்மொழிகளை இடித்துரைத்து அவனுக்கு அறிவு புகட்டி அவனை மறுபடியும் தன்னியல்பிற்குக் கொணர்வர் என்று அழகாக உவமித்திருக்கின்றார் ஆசிரியர்.

கவிழ்மதம் - பொழியும் மதம், வயத்ததென்பதும் அத்தகையது.

கருத்து:

பாகனானவன் யானை மதங்கொண்ட போது அதனை நடத்தி நல்வழிக்குக் கொண்டு வருவது போல், அமைச்சர் அரசன் வெகுண்டபோது அவனை நல்வழிப்படுத்தி யொழுகுவர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (22-Jan-22, 9:31 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 16

சிறந்த கட்டுரைகள்

மேலே