மறவாதே
நித்தமு மிறையொடு நிற்கிற மனமெடு
நித்திய வரமது தருவானே
நித்திரை யிலுமவ னுற்றுணை யெனவர
நெற்றியி லுளவிழி யருளாமே
சித்தமு மமைதியி லுட்படு கிறநிலை
செப்பிட வழிமுறை தருவானே
சுத்தமொ டுளமுரு கித்தொழு திடஇறை
சொக்கனு மதிலுரு கிடுவானே
புத்தியி லுறைகிற கெட்டவை விலகிட
விட்டெமை சுகமுற விடுவானே
புத்தக மவனது வித்தக மதைபெற
பக்தியி லொழுகுத லழகாமே
எத்தனை துயருனை யெட்டிய பொழுதிலு
மத்தனை யுமவன ருளினாலே
எட்டிடி விலகிடு தற்கொரு வழிதரு
விப்பவ னடிதொழ மறவாதே!