நன்றியுடன்

கொடுத்தக் கடனைத் திருப்பித் தராமல்
மேலதிகமாக ஒரு பைசா கூட
கொடுக்க மாட்டேன் என்ற
வட்டிக்குப் பணம் கொடுத்தவனின் கண்டிப்பு.
*
வைத்த நகைக்கு வட்டிக் கட்டாத
வங்கியின் சிவப்பு எச்சரிக்கை.
*
நாளை பரீட்சைக் கட்டணம்
கட்டவேண்டிய கடைசி நாள்
என்று முனகும் பிள்ளைகள்
*
இந்த மாசமும் வீட்டுவாடகைக் கட்டாவிட்டால்
வேறு வீடு பார்த்துப் போயிடுங்க என்னும்
வீட்டு உரிமையாளரின் கனல் குரல்
*
மருந்துக்கு பணமென்று கேளாமல்
இருமலால் உணர்த்திக்காட்டும்
வயோதிப பெற்றோர்
*
முதுகைக் காட்டிப்படுத்துக் கொள்ளும்
தாரமென எல்லோரும்
காட்டிய வெறுப்புகளைக் கடந்து
சுமைகூடிய வாழ்க்கை வண்டியை இழுக்க
வீதிக்கு வரும் அவனை
வண்டியேறும்வரை வந்து
வழியனுப்பிவிட்டே வீடு
திரும்புகிறது
அவனின் நன்றிமிக்க நாய்
*மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (31-Jan-22, 2:11 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
Tanglish : nanRiyudan
பார்வை : 136

மேலே