ஆற்றும் இளமைக்கண் கற்க - பழமொழி நானூறு 60

நேரிசை வெண்பா

ஆற்றும் இளமைக்கண் கற்கலான் மூப்பின்கண்
போற்றும் எனவும் புணருமோ - ஆற்றச்
சுரம்போக்கி உல்குகொண்டார் இல்லையே இல்லை
மரம்போக்கிக் கூலிகொண் டார். 60

- பழமொழி நானூறு

பொருளுரை:

மிகவும் வழியைக் கடக்கவிட்டு தீர்வைப் பொருள் அடைபவர்கள் இல்லை. ஓடத்தைச் செலுத்தி நிறுத்தியபின் கூலியைப் பெறுபவர்கள் இல்லை.

அவைபோல, கல்வியைக் கற்றற்குரிய இளமைக் காலத்தில் கல்லாதவன் முதுமையடைந்த பின் கற்று வல்லவனாவான் என்று சொல்ல முடியுமா? உறுதியாகச் சொல்ல முடியாது!?

கருத்து:

கற்றற்குரிய இளமைப் பருவங் கழிவதற்கு முன்னே கல்வி கற்க வேண்டும்.

விளக்கம்:

மரம் - தன்னால் செய்யப்பட்ட ஓடத்தின் மேல் நிற்றலால் ஆகுபெயர்.

ஆற்றுதல் - செய்தல். கற்றலும் ஒரு செயலாதலால் 'ஆற்றும்' எனவும், அதற்குரிய காலம் இளமையே என 'ஆற்றும் இளமைக்கண்' எனவும் கூறப்பட்டது.

கற்கலான் - எதிர்மறை வினைப்பெயர்.

1. 'சுரம்போக்கி உல்குகொண்டார்இல்லை.'

2. 'மரம் போக்கிக் கூலிகொண்டார் இல்லை' - இவை இப் பாட்டில் வந்த பழமொழிகள்.

3. 'தும்பைவிட்டு வாலைப் பிடியாதே' என்பது இவற்றையொத்த பழமொழியாய் இக்காலத்து வழங்கி வருகின்றது.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (6-Feb-22, 3:23 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 705

மேலே