நம்மை வளர்த்த கல்வி
என்ன தவம் செய்தோமோ
மண்ணில் மனிதராய் பிறந்துவிட்டோம்
துள்ளி வளரும் பருவம் வரை
எள்ளளவும் பிரிவினை அறியவில்லை
பள்ளி நுழையும் காலத்திலே
குலத்தின் பிரிவினை அறிந்து கொண்டோம்
கல்வி என்னும் அருமருந்தை
அள்ளிப் பருக பயந்து நின்றோம்
கைபிடித்து அழைத்த ஆசிரியரை
கருநாகத்து கூட்டமென எள்ளி நகைத்தோம்
அறிவான பாடங்கள் அத்தனையையும்
புரிதலின்றியே விலக்கி சென்றோம்
ஆரம்பக் கல்வியை முடிக்கையிலே
அறிவில் விருத்தியின்றி கடந்து வந்தோம்
நடுநிலைக் கல்வியைப் பயில
நாடுகடந்த மனிதராய் தினம் விழித்தோம்
உளியென சில ஆசிரியர்கள்
தினமும் நம்மையே சிதைத்து செதுக்க
பளிரென்ற ஒளியினைக் கண்ட
காட்டு உயிராய் கூசியே நின்றோம்
தட்டு தடுமாறி நடுநிலைக்
கல்வியைக் விட்டுவிடாமல் கடந்தோம்
பல்வேறு இடர்பாடுக்கு இடையில்
நடுநிலைக் கல்வியை படிக்க முயன்றோம்
பருவக் குறும்புகள் மனதைப்பற்ற
அருவமிலா ஆசையால் கிறுகிறுத்தோம்
பள்ளியின் கல்வியை விடவும்
பணங்கட்டி வெளியில் பயிற்சிப் பெற்றோம்
விளங்காத பாடத்தை வீரியமாய்
மனப்பாடம் செய்து கற்று நிறைந்தோம்
எய்த அம்பாய் இறுதியில்
இலக்கில் சென்றே தடுமாறி விழுந்தோம்
உயர்நிலைக் கல்வியோ வாளோடு
வனப்பாய் நின்று நம்மை ஏளனிக்க
வலமிடம் எல்லாம் மறந்தே
வசமாய் சிக்கியதாய் தினமும் உணர்ந்தோம்
அறிவைச் சிதைக்கும் பருவத்தின்
எழுச்சியால் விதிர் விதிர்த்தே அல்லலுற்றோம்
நனி நண்பர்களின் நட்பினால்
துணிவாய் நற்கல்வியை நலமாய் முடித்தோம்
முடித்த பின்தான் தெரிந்தது
படித்த எல்லாம் மிகச் சிறிதென்று
தொழிற்கல்வி இளநிலை பட்டம்
மருத்துவம் பொறியியல் கணக்கியல் என்று
கணக்கிலா துறைகள் கோலோச்ச
கண்ணைக் கட்டி கடலில் இறங்கியதாய்
பணந்தான் அப்போது படிப்பை
தனதாக்க மிடுக்காய் வந்து நின்றதே
இல்லாத நிலையில் இருந்ததால்
நல்லதை விடுத்து கிடைத்ததை படித்தோம்
படித்ததற்கு உரிய பணியும்
கிடைக்காததால் கிடைத்த பணியில் உழன்று
அல்லல் களைந்தே வாழ்வை
நல்ல முறையில் வாழ்வது இறைச்செயலே
---- நன்னாடன்
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
