எப்படியடி வந்தது
என் விழியோர நீரெடுத்து எழுதுகிறேன் - காரிகையே
உன் விழியோரப் பார்வைக்காய் ஏங்குகிறேன்.
உன் இதழோரச் சிரிப்புக்காய் பாடுகிறேன் - காதலியே
என் இதயத்து ஏக்கங்களை கூறுகிறேன்.
கருங் கூந்தல்தனை முடித்து - மல்லி
ஈராறு முழம் வைத்து
செந்தூரப் பொட்டுமிட்டு - இதழில்
செம்பவள நகையுமிட்டு
ஊஞ்சலிலே உன்மடியில் - நானும்
உள்ளத்தை கொடுத்துவிட்டு
ஊடலிலே என்பிடியில் - நீயும்
உறவுக்காய் ஏங்கவிட்டு
நீ நிற்க ....
உன் மீது நிலவின்
நிழல் பரவ
வெள்ளியில் வார்த்தெடுத்த
தேவதையாய்
மெல்ல...மெல்ல...
நீ நடக்க...
வெள்ளி கொலுசுகள்
உன் நடைக்கு சுதி சேர்க்க...
உன் இடை அதற்கு ஜதி சேர்க்க...
நமைச் சுற்றி
மெலிதாய் ஆர்ப்பரிக்கும் அலையோசை
மேலே நிலவு
கீழே மணற்படுக்கை
நீ....
நான்....
சுள்ளென்று சூரியன் சுட்டபோதுதானே
நீயும் நானும்...
நீயும் நானும் ஆனோம்.
அந்த இன்ப இரவு
ஓ...அது ஓர் விசித்திர நெருப்புதான்.
தொட்டால் சுடும்....நினைத்தால் சுடும்
வெளியில் தழும்புகள் தராமல்
உள்ளே வடுக்களை கொடுக்கும்
விசித்திர நெருப்புதான்.
வடுக்களை வருடும் பொது
இன்பமாயும் இருக்கிறது...
வேதனையாயும் இருக்கிறது.
அந்த இரவில்
'ம் ம் ....விடுங்கள்....' என்று
நீ முனகியபோது என்னுள்ளே
இனம்புரியாத ஓர் எரிமலை வெடித்ததே
அந்த ஒரு சொல்லுக்கு மாத்திரம்
அந்த சக்தி எப்படியடி வந்தது?