பேசுவது நகைப்பே

கலிவிருத்தம்

சட்டம் என்றை செய்து அதனால்
திட்டம் ஒன்றை ஆக்கி அனைத்தையும்
வட்டத் திற்குள் நுழைத்து பயத்தால்
கட்டுப் படுத்தும் நடைமுறை தற்போது .

வீரமிலா மனிதரை தலைவராய் கொண்டே
போரினை செய்யா மலேயே நாட்டை
வீரியத் துடனே ஆளவும் செய்திட
கூரிய முறையில் வகுத்தனர் திட்டம்

மனிதன் என்னும் அறிவு கொண்ட
இனத்தை ஆளவே பலவகை வித்தையை
தனத்தின் தன்மையால் செய்துக் காட்டி
மனத்தை சிதைத்து வதைத்தனர் பேச்சால்

எழுத்தால் எல்லா வற்றையும் அமைத்து
அழுத்தம் பலவகை நிலையில் கொடுத்து
செழித்து நாடது வளர்வதாய் புளுகி
கொழுத்து வளர சிலரையும் செய்தனர்

அட்டவணை முறையில் பலவற்றை அமைத்து
கட்டுப் படுத்தும் வகையில் எதையும்
கட்டமைத் தவாறே மாற்றா நிலையில்
வட்டம் மாவட்டம் எனவும் செய்தனர்

இனமென மொழியென உயர்வு தாழ்வு
எனவும் பலவகை பிரிவினை குறிப்பிட்டு
முனையினை சீவிய ஆயுதமாய் சட்டத்துள்
புனைந்து ஒற்றுமை பேசுவது நகைப்பே
----- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (23-Feb-22, 9:02 am)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 44

மேலே