நல்குரவு சேரப்பட்டார் மூவர் – திரிகடுகம் 84

நேரிசை வெண்பா

வாய்நன் கமையாக் குளனும் வயிறாரத்
தாய்முலை யுண்ணாக் குழவியும் - சேய்மரபில்
கல்விமாண் பில்லாத மாந்தரும் இம்மூவர்
நல்குரவு சேரப்பட் டார் 84

– திரிகடுகம்

பொருளுரை:

நீர் வரும்வழி நன்றாக அமைந்திராத குளமும், தன் வயிறு நிரம்பும்படி தாயின் முலைப்பாலை உண்ணாத குழந்தையும், உயர்ந்த முறைமையில் நூல்களைக் கற்றலினது மாட்சிமைப்பட்ட அறிவு இல்லாத மனிதரும் ஆகிய இம்மூவரும் வறுமையால் பீடிக்கப்பட்டவராவர்.

கருத்துரை:

குளத்துக்கு நீர் இன்மையும், குழவிக்குப் பாலின்மையும்; மாந்தருக்கு அறிவின்மையும் நல்குரவு எனப்பட்டன.

வாய் - வழி, சேய் மரபில் - உயர்ந்த குலத்தில் எனவும், உயர்ந்த முறையில் எனவும் பொருள் கொள்ளலாம். இம் மூவரும் நல்குரவு அடைந்து வருந்துதல் உறுதியாதலால், துணிவு பற்றி நல்குரவு சேரப்பட்டார் என இறந்த காலத்தாற் கூறினார்.

சேய் மரபில் என்றதாவது நல்லாசிரியரிடத்து அவர் குறிப்பின்வழி ஒழுகி முன்னர் நிகண்டு கற்று ஆராய்ச்சி செய்து இலக்கணநூல் முதலியவற்றைக் கற்பது என்பதாம்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (22-Mar-22, 9:28 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 48

மேலே