புரியா புதிர் வாழ்க்கை

எங்கிலும் என்னைச் சுற்றி இருட்டு
எதிலோ மிதக்கும் இனிய உணர்வு
எள்ளளவும் பயமில்லை எனது மனதில்
என்னைத் தாங்கும் அன்னையின் கருவறையில்

அன்னையின் கருவரையே எனது உலகம்
அதையும் தாண்டிய உலகை அறியேன்
அறிகிலேன் சாதிமத பேதம் என்பதை
அன்றைய கடமை தூங்குவது ஒன்றே

வாழ்க்கையின் அங்கமாய் முக்கிய நாளது
வெளியுலகில் புதிய உருவம் எடுத்தேன்
வெளிச்சம் என்பது புதிய உணர்வு
வேடிக்கை மனிதர்கள் புதிய காட்சிகள்

எனக்கென்று பெயரென்ற புதிய அடையாளம்
எழுத்தும் எண்ணும் அறியும் முன்னே
என்னுடைய சாதிமத அடையாளத்தை அச்சிட்டது
எனது சமுதாயம் எதிர்காலம் தீர்மானிக்க

பேதங்களை கருவறையில் அறியாத உள்ளம்
போகும் இடமெல்லாம் கூடவே சுமந்தது
பேதங்கள் பிணக்கமாய் உருவம் எடுத்தது
பிணக்கங்கள் பிரிவுகளாய் பரிமாணம் ஆனது

பேதமுள்ள மனங்கள் பகுத்தறிவை மறந்தது
பிணங்கள் மண்ணில் சரிய போரிட்டது
பெயர்கள் தரவில்லை வீழ்ந்த பிணங்களுக்கு
பிரிவாத சக்தியென்ற அவமானம் ஒன்றே

பின்னோக்கி செல்கிறேன் துவங்கிய வாழ்க்கைக்கு
பிறப்பா பேதங்களா பின்புத்தியா பிரிவினைக்கு
புரியாமலே புதிய உலகிற்கு புறப்பட்டேன்
பதிலொன்று கிட்டுமா அவ்வுலகை அடைந்து

எழுதியவர் : சி ராமகிருஷ்ணன் (25-Mar-22, 8:03 pm)
சேர்த்தது : ராமகிருஷ்ணன்
பார்வை : 175

மேலே