காமங் கதுவப்பட்டார் பழியோடு பாவமிஃ தென்னார் பிறிதுமற் றென்செய்யார் - நீதிநெறி விளக்கம் 79

இன்னிசை வெண்பா

கொலையஞ்சார் பொய்ந்நாணார் மானமும் ஓம்பார்
களவொன்றோ ஏனையவுஞ் செய்வார் - பழியோடு
பாவமிஃ தென்னார் பிறிதுமற் றென்செய்யார்
காமங் கதுவப்பட் டார் 79

- நீதிநெறி விளக்கம்

பொருளுரை:

காம உணர்வுக்கு அடிமைப்பட்டவர்கள் கொலை செய்யப் பயப்படமாட்டார்,

பொய் சொல்ல வெட்கப்பட மாட்டார்,

தம் பெருமையைப் பற்றியும் கவலைப்பட மாட்டார்,

களவு செய்தல் மட்டுமின்றி, அதற்கு மேலும் மற்றுமுள்ள பலவகையான தீச்செயல்களும் செய்வார்.

இக்காமம் பழியொடு பாவமாகும் என்றும் நினையார்,

அப்படியானால், அவர் வேறு என்னதான் செய்ய மாட்டார்? எல்லாத் தீச்செய்கைகளும் செய்வார்.

விளக்கம்:

'காமங் கதுவப் பட்டார்' காமம் என்பதற்கு அடிமையாயினார் என்பது பொருள்.

கருத்து:

காமச்சிந்தை யுடையோர் எல்லாத் தீச்செயல்களுஞ் செய்வர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (26-Mar-22, 8:36 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 33

சிறந்த கட்டுரைகள்

மேலே