இசைந்த சிறுமை யியல்பிலா தார்கண் பசைந்த துணையும் பரிவாம் – நாலடியார் 187

நேரிசை வெண்பா

இசைந்த சிறுமை யியல்பிலா தார்கண்
பசைந்த துணையும் பரிவாம் - அசைந்த
நகையேயும் வேண்டாத நல்லறிவி னார்கண்
பகையேயும் பாடு பெறும் 187

- பெருமை, நாலடியார்

பொருளுரை:

தமக்குப் பொருந்திய சிறுமைச் செயல்களையுடைய பண்பிலாதாரிடத்தில் நேயங்கொண்ட அளவுந் துன்பமேயாம்;

மாறிய செயல்களை விளையாட்டாகவும் விரும்பாத சிறந்த அறிஞர்களிடத்தில் பகைகொள்ளுதலுங் கூட மாட்சிமைப்படும்.

கருத்து:

பெரியோரிடத்துப் பகைசெய்தலினுஞ் சிறியோரிடத்து நட்புச் செய்தல் பெருந்தீங்கு பயக்கும்.

விளக்கம்:

இயல்பென்றார், உலகியல்புக்கேற்ப வொழுகும் பெருந்தன்மையாகிய பண்பை.1 பசைதல், உள்ளம் நெகிழ்ந்து சென்று பற்றுதல்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (26-Mar-22, 7:03 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 37

மேலே