எத்தனை கோடி இன்பம் கவிஞர் இரா இரவி

எத்தனை கோடி இன்பம்!
கவிஞர் இரா. இரவி!

எங்கள் மகாகவி பாரதி வறுமையில் வாடியபோதும்
எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா! என்றான்.
இல்லாதவற்றைக்கு ஏங்கித் தவிப்பதை விடுத்து
இருப்பதற்கு மனநிறைவு கொள்வது சிறப்பானது!
பக்கத்து வீடுகளில் கடன் வாங்கிய அரிசிகளை
பாரதி சிட்டுக்குருவிகளுக்கு பசியாற வைத்தான்!
சட்டையின் கழுத்தில் உள்ள கிழிசல் மறைக்கவே
சட்டைக்கு மேல் சின்னத்துண்டு அணிந்தான் பாரதி!
ஏழ்மையில் வாடி வதங்கிய போதும் பாரதி
என்றும் வருந்தியதில்லை மகிழ்வோடு வாழ்ந்தான்!
மன்னரைச் சந்தித்துவிட்டு வந்த போதும் கூட
மடி நிறைய நூல்களையே வாங்கி வந்தான்!
பொன் பொருள் மீது ஆசைகள் இல்லாதவன்
பொன்னுக்கும் மேலாக தமிழ்மொழியை நேசித்தவன்!
பன்மொழி அறிஞனான மகாகவி பாரதி
பைந்தமிழ் போல இனிமை மொழி இல்லை என்றான்!
வள்ளுவனை உலகிற்குத் தந்த தமிழென்று பாடி
வாயார வண்டமிழை வாழ்த்தி மகிழ்ந்தவன்!
கவலை என்றும் கொள்வதில்லை பாரதி
கன்னித்தமிழை கவலையின்றியே பாடி வந்தவன்!
விடுதலை அடையுமுன்பே தொலைநோக்கு சிந்தனையில்
விடுதலை அடைந்து விட்டோமென்று கூத்தாடியவன்!
பாரதிதாசன் என்ற புரட்சிக்கவிஞரை சீடராகப் பெற்றவன்
புரட்சிக்கவிஞரும் பாரதியாரை போற்றிப் புகழ்ந்தான்!
செல்லம்மாவிற்கு சிரமங்கள் பல தந்திட்ட பாரதி
செல்லம்மாளும் வருந்தாமலே வாழ்ந்து வந்தாள்!
பாஞ்சாலி சபதம் மூலம் பாட்டால் வீரம் விதைத்தவன்
பரங்கியர் நடுங்கிடும் வண்ணம் பாடல்கள் யாத்தவன்!
அச்சமில்லை அச்சமில்லை என்று நாட்டில் உரக்கப்பாடி
அச்சம் நீக்கி துணிவை துணைக்கொள்ள வைத்தவன்!
எத்தனை விதமாக வறுமைகள் வாட்டிய போதும்
எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா! என்றவன்.

எழுதியவர் : கவிஞர் இரா. இரவி (29-Mar-22, 8:57 pm)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 139

மேலே