நல்லவை செய்யத் தொடங்கினும் அல்லவற்றிற் கொண்டுய்க்கும் - நீதிநெறி விளக்கம் 92

நேரிசை வெண்பா
(’ய’ ‘ல’ இடையின எதுகை)

நல்லவை செய்யத் தொடங்கினும் நோனாமே
அல்லன அல்லவற்றிற் கொண்டுய்க்கும் - எல்லி
வியனெறிச் செல்வாரை ஆறலைத் துண்பார்
செலவு பிழைத்துய்ப்ப போல் 92

- நீதிநெறி விளக்கம்

பொருளுரை:

இரவிலே வழி பறிப்பவர்களாகிய திருடர்கள் மக்கள் போக்கு வரவுடைய பெருவழியிற் செல்லும் வழிப்போக்கர்களை (அந்நெறியில்) செல்வதை தப்புவித்து மக்கள் நடமாட்டமில்லாத தனி வழியிற் கொண்டு செல்லுதல் போல், நற்காரியங்களைச் செய்யத் தொடங்கினாலும், தீயூழானது அது பொறாமல் தீய காரியங்களில் கொண்டு போய்விடும்.

விளக்கம்:

'ஊழ்வலிது' என்பது இங்கு நோக்கற்பாலது.

கருத்து:

நற்காரியங்களைச் செய்ய நினைத்தாலும், ஊழ்வினை மாறாயின் அவை தீய காரியங்களாகவே முடியும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (24-Apr-22, 7:18 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 52

சிறந்த கட்டுரைகள்

மேலே