பான்மொழியார் இன்கண் பெருகின் இனம்பெருகும் – நான்மணிக்கடிகை 91
இன்னிசை வெண்பா
வன்கண் பெருகின் வலிபெருகும் பான்மொழியார்
இன்கண் பெருகின் இனம்பெருகும் சீர்சான்ற
மென்கண் பெருகின் அறம்பெருகும் வன்கட்
கயம்பெருகிற் பாவம் பெரிது. 91
- நான்மணிக்கடிகை
பொருளுரை:
அஞ்சாமை மிகுந்தால் வலிமையும் ஒருவனுக்கு மிகும்;
பால்போலும் இனிய சொல்லையுடைய மனைவியரிடம் இனிய கண்ணோட்டம் பெருகுமானால் நல்ல சுற்றத்தார் பெருகுவர்;
சிறப்பு மிக்க அருட்தன்மை மிகுமானால் அறவினைகள் மிகும்;
கொடுமையையுடைய கீழ்மைத்தனம் மிகுமானால் தீ வினைச்செயல் மிகுதியாம்.
கருத்து:
அஞ்சாமை மிகுந்தால் வலிமை மிகும்; மனையாளிடம் கண்ணோட்டம் மிகுந்தால் இனம் பெருகும்; அருளிரக்கம் மிகுந்தால் அறம் மிகும்; கீழ்மைக் குணம் மிகுந்தால் தீவினை மிகும்.
விளக்கம்:
வன்கண் – அஞ்சாமைப் பொருட்டாதல்: அஞ்சாமையென்னும் உள்ள வலிமை உடம்புக்கு வலிமையைத் தரும்.
கண் - கண்ணோட்டம்; கண்ணோட்டத்தினும் அருட்டன்மை யென்பது இரக்கவியல்பு மிக்கதாகலின், அதனை ‘மென்கண்' என வியந்தார்.