பட்டாங்கே பட்டொழுகும் பண்புடையாள் – நான்மணிக்கடிகை 90
நேரிசை வெண்பா
பட்டாங்கே பட்டொழுகும் பண்புடையாள்; காப்பினும்
பெட்டாங்(கு) ஒழுகும் பிணையிலி; - முட்டினுஞ்
சென்றாங்கே சென்றொழுகும் காமம்; கரப்பினுங்
கொன்றான்மேல் நிற்குங் கொலை 90
= நான்மணிக்கடிகை
பொருளுரை:
நல்லியல்புடைய பெண் கற்புண்மைப்படியே ஒத்து ஒழுகுவாள்; மனம் பொருந்துதல் இல்லாதவள் கணவன் காவல் செய்யினும் தான் விரும்பியபடியே பிறரோடு மருவி யொழுகுவாள்; காமவியல்பு இடையூறு உண்டாயினும் முன்பு சென்றபடியே பின்புஞ் சென்று நிகழும்; கொலைப்பழி எவ்வளவு மறைத்தாலும் கொலை செய்தவன் மேலேயே நிலைபெறும்.
கருத்து:
நல்ல பெண் காவலில்லாவிடினும் கற்பொழுக்கத்தையே மேற்கொண்டு ஒழுகுவள்; நற்பண்பு இல்லாதவள் எத்தனை காவல் செய்யினுந் தான் விரும்பியவாறே பிறரைக் காதலித்து ஒழுகுவாள்; காமவியல்பு எவ்வளவு இடையூறுகள் நேர்ந்தாலும் முன் நிகழ்ந்தபடியே நிகழும்; கொலைப்பழி எவ்வளவு மறைப்பினும் கொன்றான் மேலேயே வெளிப்படும்.
விளக்கவுரை:
பட்டாங்கு - இயல்பு; இங்கே கற்பியல்பு, பண்பு - காதலெனல் பொருந்தும்:
பிணையிலிக்குக் காப்பினுமென வந்தமையின், பண்புடை யாளுக்குக் காவாவிடினும் என்றொன்று வருவித்துக் கொள்க;
உடையான் தொழிலை உடைமை மேலேற்றிக் காமமெனக் கூறப்பட்டது.