வீடு
"இப்போ ஏன்பா நம்ம வீட்ட விக்கணும்?" புரியாமல் கொஞ்சம்
குழப்பமான தொனியில் கேட்டான்
சதீஷ்.
" ஆமாம் டா. இன்னும் எவ்வளவோ
செலவு இருக்கு".
" அதுக்கென்ன நம்மகிட்ட பணமா
இல்ல? எவ்வளவு செலவானாலும்
நான் உடனே அனுப்பறேன்."
" சரி தான். நீ அனுப்புவ. நாளைக்கு
உம்புள்ளைக்கு சேத்து வைக்க
வேணாமா?"
" அப்பா அவன் இப்போதான் எல்கேஜி. நீங்க என்ன பா இவ்வளவு
பிடிவாதம் பிடிக்கறீங்க?"
" த பாரு..! என்னால யாருக்கும்
எந்த தொந்தரவும் இருக்கக் கூடாது ன்னு நெனைக்கிறேன். அதுவும் போக மொதல்ல மாதிரி ஆறு தென்னைமரம், நெல்லிக்காய் மரம்,
பவளமல்லி, தோட்டம் ன்னு ஓடி ஓடி
தண்ணீர் ஊத்தி யார் பாத்துக்கறது?
எனக்கு ஒண்ணும் வீட்டு மேல
பெரிசா பற்று எல்லாம் இல்ல.
அடுத்த மாசம் ஆப்பரேஷன் முடிஞ்சு
டாக்டர் எந்த வேலையும் செய்யக்கூடாது ன்னு சொல்லபோறார்."
" அதுக்கு வீட்ட ஏம்பா...?"
" டேய் என்னடா? நான் திரும்ப திரும்ப
சொல்லிக்கிட்டே இருக்கேன். நீயும்
கேட்டுக்கிட்டே இருக்க? வீடு நான்
வாங்கினது. எனக்காக யாரும்
செலவு பண்ண வேணாம். நீ முடிஞ்சா
வா. இல்ல அமெரிக்கால இருந்து
வர செலவாகும் ன்னா வரக்கூட
வேணாம். எல்லாம் உங்க அம்மா
பாத்துக்குவா."
" இப்படி எல்லாத்துக்கும் பிடிவாதம் தான். யாரு எத சொன்னாலும் கோவப்பட்டு தான் பிபி ஜாஸ்தியாகி ஹார்ட் ஆப்பரேஷன்ல வந்து நிக்குது. உங்க இஷ்டம் என்னவோ பண்ணுங்க"என்று ஃபோனை வைத்தான் சதீஷ்.
ஃபோனை வைத்து விட்டு பாத்ரூம்
பைப்பில் இருந்து ஓஸ் பைப்
போட்டு தென்னை மரங்களுக்கு
நீர் பாய்ச்சிக் கொண்டே இருக்க,
மனதில் பெருமூச்சு ஏற்பட்டது.
இன்னும் சில நாட்களில் இந்த வேலையை யாரோ செய்யப்போகிறார்கள். எத்தனை தேங்காய், எத்தனை இளநீர், எத்தனை துடைப்பம் என்று தன்னால் இயன்ற வரை எங்களுக்காகவே
இருக்கும் உன்னை கூட பிரியப் போகிறேன். உன் சம்மதம் கூட
கேட்காமல்! என்று நினைத்தவருக்கு
மனம் கனத்தது. மெதுவாக மரத்தை
தடவிப் பார்த்தார். அப்போது
உள்ளே இருந்து வெளியே வந்த
அவரது மனைவி ஈஸ்வரி " என்னங்க
உடம்புக்கு ஏதும் முடியலையா?
அப்படியே நிக்கறீங்க? மித்த செடிக்கெல்லாம் நான் பாச்சறேன்
நீங்க போங்க" என்றாள்.
உடனே வேகமாக மறுத்தார் சாமிக்கண்ணு.
" அதெல்லாம் ஒன்னும் இல்ல.
இன்னும் எத்தனை நாளைக்கு
இந்த வேலை? சலிச்சி போச்சு. நாளைக்கே வீட்ட கை மாத்திட்டு
ஆபரேஷன் செலவு போக மிச்சத்தை
பேங்குல போட்டுக்கிட்டு, அந்த வட்டியும், என் பென்ஷன் ரெண்டையும் வச்சிக்கிட்டு நமக்கு புடிச்ச இடத்துல வாடகை
வீட்ல நிம்மதியா இருக்கலாம்.
ஏக்கமாக பார்த்தவளிடம், " ஈஸ்வரி!"
நமக்கு வயசாச்சி, அவன் எங்கேயோ
இருக்கான். நாம இந்த வயசுல
எந்த பொருள் மேலயும் ஆசையோட
இருக்கக்கூடாது. அது நல்லது இல்லை. என்ன கொண்டு வந்தோம்.
அதனால நமக்கு எதுவுமே சொந்தம்
இல்ல. அது புரிஞ்சிகிட்டு மனச
அமைதியா வச்சிக்கணும்." என்றார்.
அவர் பேசியதற்கு மனைவி ஈஸ்வரி எதிர்த்து பேசவில்லை. இதய அறுவை சிகிச்சை நல்லபடியாக முடிந்து
கணவர் நன்றாக இருந்தால் போதும் என்றது மனம். அவரைவிட ஏதும்
பெரிதாக தெரியவில்லை அவருக்கு.
வீட்டை விற்றால்தான், ஆபரேஷனுக்கு நாள் குறிப்பது
என்று பிடிவாதமாக இருந்தார்.
இருபத்தி ஐந்து நாட்கள் கழித்து
இவரது நண்பர் சொன்னதாக
ஒருவர் கிராமத்தில் இருந்து
வந்திருந்தார். நிலத்தை விற்று
வீடு வாங்க போவதாக சொன்னார்.
கிரைய பத்திரம் தயாரானதும் பாதி
பணத்தையும், பத்திர பதிவு செய்யும் போது மீதமுள்ள பணத்தையும்
கொடுத்து விடுவதாக சொன்னார்.
அவரைப் பற்றி நன்கு விசாரித்து
மகனிடமும் பேச சொல்லி விலையும்
திருப்தி ஆனபின் ஐந்து லட்சம்
முன் பணம் வாங்கி கொண்டார்.
அதன் பிறகு ஆபரேஷனுக்கு நாள் பார்த்து, மகனிடம் சொல்ல நான்கு நாள் முன்பாக வந்து விட்டு, அதன் பிறகு இருபத்தி ஐந்து நாட்கள்
இருப்பதாக சொன்னான்.
எல்லா பக்கமும் வேலைகள் மடமடவென நடந்தன. வீட்டை விற்க
ரெஜிஸ்டர் ஆஃபிஸில் காத்திருந்தார். கையில் ஆதார் அட்டை வைத்தபடி அமர்ந்திருந்த போது கண்கள் வீட்டு முகவரி
என்பதை பார்க்க, அந்த எழுத்துக்கள் மனதை பிசைந்தது. இனி இது
இல்லை. கண்களில் நீர் மறைக்க,
ஒருவர் வந்து டோக்கன் கொடுத்து விட்டு சென்றார். "இன்னும் ஆறு
பேர் தான் சார். நீங்க ரெடியா இருங்க"என்று சொன்னதும் மனதுக்குள் ஒரு போராட்டம்.
இப்போதும் ஒன்றும் கெட்டுப் போகவில்லை வேண்டாம் என்று
சொல்லி விடலாமா? என்று நினைத்தார்.
அப்போது "சாமிக்கண்ணு!"என்ற
குரல் அழைக்க படபடப்புடன்
உள்ளே செல்ல, அங்கே இருந்தவர்கள் பரபரப்பாக இங்க
ஒரு கையெழுத்து, அங்கே ஒரு
ஃபோட்டோ, இன்னோரு இடத்தில் ஒரு கைநாட்டு, இன்னும் சில
இடங்களில் பாஸ்போர்ட் ஃபோட்டோவின் மேல் கையெழுத்து
என்று இவரின் எண்ணத்தை மீறி
நடப்பவைகள் எல்லாம் வேகமாக
நடந்து முடிந்து, வீடு கைமாறியே
போனது.
அதே நேரம் மீதமுள்ள பணமும்
இவரது வங்கி கணக்கில் வந்து
சேர்ந்தது. வாங்கியவர் சாப்பிட
அழைக்க மறுத்து விட்டு மனைவியோடு வீட்டிற்கு கிளம்பினார். அவரிடம் " சார் சீக்கிரமா வீட்ட காலி பண்ணி
குடுங்க சார்!" என்று சொன்னதும்
வேர்த்தது. 'சரி' என்று மெதுவாக
சொல்லி விட்டு 'டவுன்ல வீடு
உடனே கிடைக்காது. நம்ம
ஏரியாவுலயே நாலாவது தெருவுல
ஒரு வீடு இருக்கு. அதுக்கே போவோம். அப்புறம் டவுன்ல
பாப்போம்' என்றார். மனைவியின் கண்களில் தெரிய, பாவமாக இருந்தது பார்க்க.
ஆனால், எல்லாவற்றுக்கும் "சரி, சரி" என்றே சொன்னார் மனைவி ஈஸ்வரி.
ஆயிற்று குடியும் வந்து, அறுவை சிகிச்சையும் நல்லபடியாக முடிந்து,
மகனும், மருமகளும், பேரனும்
வந்ததில் உடம்பு வேகமாக
தேறியது. சில நாட்களில் வாக்கிங்
செல்லலாம் என்று டாக்டர் சொன்னதும், சுறுசுறுப்பாக மகனுடன் கிளம்பினார்.
மெதுவாக நடந்து பழைய வீட்டின்
வழியே சென்றனர். அருகே செல்ல செல்ல மனதில் ஆவல் பீறிட்டது.
எப்படி இருக்கும்? எப்படி இருக்கும் என்று. தூரத்தில் வீட்டைச் பார்த்ததும்
கால்கள் ஓட துடிக்க கட்டுப் படுத்திக் கொண்டு மகனுக்கு முன்னால்
வேகமாக நடந்தார்.
வீட்டின் அருகில் சென்றதும், அவரால்
வீட்டை பார்க்கவே முடியவில்லை.
அத்தனை குப்பைகளோடு, சுத்தம்
செய்யப்படாமல், மரங்களும்,
செடி, கொடிகளும் தண்ணீர் இன்றி
காய்ந்து போய் இருக்க, மனம்
பதறியது. வீடு பூட்டி இருந்தது.
மகனிடம் திரும்பி " நம்ம வீடு தான்.
இப்போ எப்படி இருக்கு பாரு. நாம
எப்படி வச்சிருந்தோம். ஏதோ உடனே
குடி வர்றவன் மாதிரி காலி பண்ண
சொன்னான். இப்போ பாரு."
" சரி விடுங்க! அது அவங்க வீடு.
என்னமோ பண்ணிட்டு போகட்டும்.
நீங்க இதுக்கெல்லாம் கவலப்
படமாட்டீங்களே? உண்மையிலயே
நீங்க க்ரேட் பா. எனக்கு என் டேபிள்,
சேர் மேல் கூட ஒரு பாண்ட் இருக்கு.
ஆனா நீங்க? இத்தனை வருஷம்
வாழ்ந்தாலும் வீட்டு மேல உங்களுக்கு எந்த ஒரு அஃபெக்ஷன்
இல்லன்னு சொல்றது எனக்கு ஆச்சரியமா இருக்கு. வாங்க போகலாம்" என்றான்.
'யாருக்கு பற்றில்லை? எனக்கா?'
ஓலமிட்டது மனது. நான் இருக்கும் வரை என்னை நம்பி இருக்கும்
இந்த மரம், செடி, கொடிகளை பார்த்து கொள்ள வேண்டும் அது என்
கடமை என்று நினைத்தேன். எனக்கு
உடம்புக்கு முடியாமல் போனதும்
ஏனோ ஒரு மாற்றமும், உனக்கு
பணச்சுமையை கொடுக்க கூடாது என்று நினைத்தேன். அதனால் தான்
அந்த அவசர முடிவு. ஆனால் இப்போது இந்த வீட்டை..... என்னால்..
வார்த்தைகள் ஏதும் வெளிவரவில்லை.
ஒரு நிமிஷம் என்றவர், பக்கத்து
வீட்டில் ஓஸ் பைப் கேட்டு பின் புறம் உள்ள பைப்பில் செருகி மரம், செடி
கொடிகளுக்கு நீர் பாய்ச்ச, சோர்ந்து
இருந்த செடிகள் தாயைக் கண்ட
குழந்தைகள் போல உற்சாகமடைந்து.
குழந்தைகளுக்கு ஆகாரம் அளித்த
தாய் உள்ளம் போல் நிறைந்தது
சாமிக்கண்ணுவின் உள்ளம்.
"தினமும் இப்படி தண்ணீர் விடணும்.
யாருக்கிட்ட சொல்றது?"
" ஏன் நீங்களே விடுங்க"
" யாருப்பா தினமும் வர்றது?"
" அதுக்கு பதிலா நாமே இங்கே
இருந்தா?"
" என்னடா சொல்ற?"
" இப்பவும் இது நம்ம வீடு தான்."
என்றவன் நண்பர்கள் மூலம்
அனைத்து உதவிகளையும் பெற்று
ஒரு நண்பனின் தந்தை மூலம்
தானே பணத்தை கொடுத்து வாங்கியதை சொன்னதும், சிறு
குழந்தை போல் மகிழ்ந்து, மகனை
கட்டி அணைத்து கொண்டார்.
"உங்களுக்கு எதன் மேலும் பற்று
இல்லை என்ற போதிலும், எனக்கு
உங்கள் மேல் இருந்த பற்றும்,
இந்த தோட்டத்தின் மேல் உங்களுக்கு இருந்த பற்றும் என்னை கைபிடித்து
அழைத்து வந்து இதைக் காக்கச்
சொன்னது".
தந்தையின் இந்த மனமாற்றத்திற்காக வேண்டி
மூன்று நாட்கள் தண்ணீர் பாய்ச்சாமல் இருந்ததற்காக மனதார
மன்னிப்பு கேட்க, செடிகளும், மரக்கிளைகளும், இந்த மகிழ்ச்சிக்காக நாங்களும் தான் காத்திருந்தோம் என்பது போல்
தலையாட்டியது.
நன்றி.
லதா சேகர்.