தெரிந்தாள்வான் உண்ணாட்டம் இன்மையும் இல் – நான்மணிக்கடிகை 94

இன்னிசை வெண்பா

ஆசாரம் என்பது கல்வி அறஞ்சேர்ந்த
போகம் உடைமை பொருளாட்சி யார்கண்ணுங்
கண்ணோட்டம் இன்மை முறைமை தெரிந்தாள்வான்
உண்ணாட்டம் இன்மையும் இல் 94

- நான்மணிக்கடிகை

பொருளுரை:

நல்லொழுக்கம் என்பது கல்வியறிவின் பயனாகும்; அறவினைகளோடு சேர்ந்த இன்பநுகர்ச்சி செல்வத்தைக் கையாளுதலின் பயனாகும்; யாரிடத்திலும் கண்ணோட்டம் இல்லாமை நடுநிலையாக ஆளும் முறைமையாம்; பிறரோடு ஆராய்ந்து அரசாளுபவன் தன்னுள்ளத்தில் ஆராயாமையும் இல்லை.

கருத்து:

நல்லொழுக்கமென்பது கல்வியின் பயன்; அறஞ்செய்தலோடு இன்பத்தை நுகர்தலென்பது செல்வத்தை முறையாக ஆளுதலின் பயன்; யாரிடத்தினுங் கண்ணோட்டமில்லாமை நடுவு நிலையோடு அரசாளும் முறையாம்; தன்னுளத்தேயுந் தனியாக ஆராய்வோன் தெரிந்து அரசாளும் இயல்பினன்.

விளக்கவுரை:

தெரிந்தாள்வானென்றது, அமைச்சர் முதலாயினாரோடுந் தெரிந்தாளுதல்.

உள்நாட்டம் - தனக்குள் ஆராய்ச்சி;

அரசன் வெறுங் கேள்வியறிவினானேயே செய்வானல்லன், அதனைத் தன்னுள்ளும் வைத்துத் தனியே ஆராய்ந்துஞ் செய்வான்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (7-May-22, 11:03 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 30

மேலே