நிரப்பிடும்பை பல்பெண்டிர் ஆள னறியும் கரப்பிடும்பை கள்வன் அறிந்து விடும் – நான்மணிக்கடிகை 95

இன்னிசை வெண்பா

கள்ளின் இடும்பை களியறியும்; நீர்இடும்பை
புள்ளினுள் ஓங்கல் அறியும்; நிரப்பிடும்பை
பல்பெண்டிர் ஆள னறியும்; கரப்பிடும்பை
கள்வன் அறிந்து விடும் 95

- நான்மணிக்கடிகை

பொருளுரை:

கள்ளைப் பெறாமையால் வருந் துன்பத்தை கள்ளுண்டு களிப்பவன் அறிவான்;

நீரைப் பெறாமையால் வருந்துன்பத்தை பறவைகளுள் வானம்பாடிப் பறவை யறியும்;

பொருளில்லாமையால் வரும் வறுமைத் துன்பத்தை மனைவியர் பலரையுடைய கணவன் அறிவான்;

ஒன்றை ஓரிடத்து ஒளித்து வைப்பதன் துன்பத்தை திருடன் அறிவான்.

கருத்து:

கள் பெறாமையால் உண்டாகுந் துன்பத்தைக் கட்குடியன் அறிவான்;

நீர் பெறாமையால் உண்டாகுந் துன்பத்தை வானம்பாடிப்பறவை அறியும்,

பொருளில்லாமையால் உண்டாகும் வறுமைத் துன்பத்தை மனைவியர் பலரை யுடையவன் அறிவான்;

ஒன்றை ஒளித்து வைப்பதிலுள்ள துன்பத்தைத் திருடனறிவான்.

விளக்கவுரை:

புள்ளினுள் ஓங்கல் - வானம்பாடிப் புள். அது வானில் ஓங்கிப் பறத்தலால் வந்த பெயர்.

வானம்பாடிப்புள் மழைத்துளியைப் பருகி உயிர்வாழுமியல்பினதாகலின், அத் துளி கிடைக்கப் பெறாவிடத்து அது மிகவும் வருந்தும்.

நிரப்பு - குறைபாடு.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (7-May-22, 11:11 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 29

சிறந்த கட்டுரைகள்

மேலே