தீண்டாதே தீயவை நூல் ஆசிரியர் கவிஞர் இரா இரவி நூல் மதிப்புரை பா ரம்ஜான், முழுநேரமுனைவர்பட்டஆய்வாளர்

தீண்டாதே தீயவை !

நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி !

நூல் மதிப்புரை : பா. ரம்ஜான், முழுநேரமுனைவர்பட்ட.ஆய்வாளர் !

வெளியீடு : வானதி பதிப்பகம், 23, தீனதயாளுதெரு, தி.நகர்,
சென்னை – 17.
தொலைபேசி : 044 2434 2810. பக்கம் : 60, விலை : ரூ.50.

பாத்திமாகல்லூரி (தன்னாட்சி), மேரிலேண்ட், மதுரை– 625 018.


******.

படைப்பாளர்களின் உணர்ச்சி அனுபவமும் படிப்பவரின் உணர்ச்சி அனுபவமும் கிட்டத்தட்ட ஒன்றாகுமாறு செய்யவல்லதே கவிதை.

கவிஞனின் உணர்ச்சி கவிதையில் சொற்களாகவும், சொற்பொருளாகவும், ஒலிநயமாகவும் வடிவம் கொண்டுள்ளது. இவற்றைப் பற்றுக்கோடாகக் கொண்டு படிப்பவர் கவிஞனின் அனுபவத்தைத் தாமும் பெறுபவராகிறார். சொற்கள் ஊடகங்கள் ஆகின்றன. சொற்கள் அனைத்தும் குறியீடுகளே!

தமிழ்ப்படைப்பாளர்கள் சமுதாயத்தைக் கூர்ந்து கவனித்து, சமூகத்திற்குப் பயன்படும் வகையிலும், மக்கள் விழிப்புணர்வு அடையும் வகையிலும் கருத்துக்களைப் புலப்படுத்தி வருகின்றனர்.

சமூகத்திற்கு நற்கருத்துக்கள் கூற எழுந்த பலருள் கவிஞர்களும் குறிப்பிடத் தகுந்தவர்கள். அந்த வகையில் தமிழ்க்கவிஞர்களுள் தமிழ்நாடு அரசுச் சுற்றுலாத் துறையின் உதவிச் சுற்றுலா அலுவலரான ஹைக்கூ திலகம் கவிஞர் இரா. இரவி அவர்களின் “தீண்டாதே தீயவை” என்ற தலைப்பில் தற்போது வெளிவந்துள்ள படைப்பான ஹைக்கூ புதுக்கவிதை நூல் போற்றுதலுக்குரியது.

“நாளைய சமுதாயம் இன்றைய இளைஞர்கள் கையில்” என்பது சான்றோர் கருத்து.

நாளைய சமுதாயத்தை நல்வழியில் வழிநடத்திச் செல்ல இளைஞர்களின் அழகிய நற்கரங்களில் தவழவேண்டியவை அறக்கருத்துக்கள் அடங்கியஅற்புத நல்ஏடுகளே தவிர, மது, புகையிலை மற்றும் குளிர்பதனக் குடுவைகளோ அல்ல...! என்பதைத் தனது கவிதைகளின் வாயிலாகக் கவிஞர் நயம்பட எடுத்தியம்பியுள்ளார்.

மனிதனின் மூளையையும் நரம்புமண்டலத்தையும் பாதித்து உடல்நலத்தைச் சீர்குலைக்கும் தன்மை உடையது மது. அத்தகைய தீயபழக்கவழக்கத்திற்கு அடிமையான மாந்தர்களுக்குச் சாட்டையடி தரும் வகையில்,

குடிப்பது நாகரிகம் மடையன் சொன்னது
குடிப்பது அநாகரிகம் நான் சொல்கிறேன்!

குடிக்கும் நண்பனைத் திருத்துவதுதான் நட்பு
கூடக் குடித்துக் கும்மாளமிடுவது தப்பு!

சிறப்புகள் இருந்தும் சிதைக்கப்படுவாய்
சிறிது குடித்தாலும் சீரழிந்து போவாய்!

என்று தனது சொல்லடிகள் வாயிலாகக் கவிஞர் இச்சமூகத்திற்கு உரக்கச் சொல்கிறார்.

ஆறறிவுள்ள மனிதனை ஐந்தறிவாக மாற்றும்.
ஆற்றலை அழித்து ஆண்மையைக் குறைக்கும்.
மதுவைத் தொடுபவரைத் தள்ளாடி விழவைக்கும்.
தரத்தைப் போக்கித் தன்மானத்தை இழக்கவைக்கும்.
பணத்தைப் பறித்துப் பண்பாட்டைச் சிதைக்கும் ஆற்றல் உள்ளது மது. கேட்டை விளைவித்துக் கேடுகெட்ட செயலைப் புரியவைக்கும்

என்றும்,

சமூகத்தில் உயர்ந்த மாமனிதராகத் திகழ்பவரின்
பாதையைத் தவறாக்கி போதையால் மூடனாக்கி விடும்.

குடும்பத்தைப் பிரித்துக் குழந்தைகளை வெறுக்க வைக்கும்.
சோகத்தில் ஆழ்த்தி சோம்பேறி ஆக்கும்.

சினத்தைக் கூட்டிச் சிந்தையைச் சீரழிக்கும்.
முன்னேற்றத்திற்குத் தடைபோட்டு முயற்சியையே முறியடித்துவிடும்

என்றும்,

தீங்கினும் தீங்குடைய மதுவானது

சாதனையின் பகைவனாகவும்
சாத்தானின் நண்பனாகவும்
திகழ்வதால் தீண்டாதே மது!

என்று கவிஞர் தனது கவிவித்தையால் வரிகள் படைத்துப் பாக்களால் மதுவிற்கு அடிமையான மனதுகளை மனிதனாக்கப் பாடுபட்டுள்ளார்.

இன்றைக்கு மட்டுமே என்று சொல்லி தொடங்குவர்
என்றைக்கும் என்றாகி என்றுமே வருந்துவர்

என்ற கவிதை வரிகளில் குடிப்பவர்களின் நிலையைப் படம்பிடித்துக் காட்டுவதாகக் கவி படைத்துள்ளார்.

அவர் குடிப்பார் இவர் குடிப்பார் என்று விளக்குவார்கள்!
எவர் குடித்தாலும் எனக்கு வேண்டாமென மறுத்திடு!

என்றாவது என்றால் தப்பில்லை என்றுதான் சொல்வார்கள்
என்றுமே எனக்கு வேண்டாமென உறுதியாய் இரு!

என்ற வரிகளில் கவிஞர் தனது மனிதநேய மாண்பை மிளிரச் செய்துள்ள விதம் அருமை...!

கோடை வெயிலுக்குத் தொண்டையை இதமாக்கும் குளிர்பானம் என்று நம்பி ஏமாறாமல் விழிப்புணர்வோடு மக்கள் இருக்கவேண்டும் என்பதை,

குளிர்பானத்தை ஒன்றில் ஊற்றி அதில்
மனித பல் ஒன்றைப் போட்டு வைத்தால்
பத்தே நாட்களில் கரைந்து விடும்
போட்ட பல் அவ்வளவு கொடிய நஞ்சு!

என்று குளிர்பானத்தின் நஞ்சுத்தன்மையை அறிவியல் நோக்கோடு ஆராயத் தூண்டும் வகையில் தனது கவியின் வாயிலாகக் கவிஞர் சாமானிய சமூகத்திற்கு விழிப்புணர்வு ஊட்டியுள்ளார்.

புகையிலைச் சிகரெட் என்பது உலகம் தோன்றிய ஆதிகாலத்தில் இல்லை, பாதியிலே வந்த தொல்லை என்றும், வெள்ளையன் கற்பித்த வெள்ளை உயிர்க்கொல்லி என்றும்,

புகையில் வளையம்
உனக்கான மலர்வளையம்
நடிகனைப் பார்த்துப் புகைக்காதே
உன்னை நீயே புகைக்காதே

என்றும் கவிஞர் தனது குறுகிய வரிகள் அடங்கிய குறும்பாக்கள் வாயிலாகக் குறிப்பிடுள்ளவற்றை அறிந்துகொள்ள முடிகின்றது.

காலம் காலமாகக் கல்வி அறிவுபெற்ற சமுதாயமாக நம் தலைமுறை மாற்றம் பெறவேண்டும் என்ற நோக்கில் எண்ணற்றப் படைப்புகளின் வாயிலாகப் படைப்பாளர்கள் விழிப்புணர்வை மக்களுக்கு ஊட்டினாலும், மதுவையே தேன் என்று கருதிக் கண்மூடித் தன் உதட்டிற்கு ஊட்டிக் கொண்டிருக்கும் மதுப்பிரியர்களின் ஞானக்கண்ணைத் திறந்து புத்துணர்வுடன் புதுஉலகைக் காணவைக்கும் நற்சிந்தையுடன் இந்நிலஉலகில் உதித்துள்ள ஹைக்கூதிலகம், கவியருவியாம் கவிஞர் இரா. இரவி அவர்களின் “தீண்டாதே தீயவை” என்னும் நூல், எல்லாம்வல்ல ஏக இறையின் நல்லருளால் இந்தச் சமூகத்தில் நல்ஏற்றம் பெற்றிட வேண்டும் என்று பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

வாழ்த்துக்கள் ஐயா!
தொடரட்டும் தங்கள் சமூகப்பணி...!

எழுதியவர் : கவிஞர் இரா. இரவி (8-May-22, 2:13 pm)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 30

சிறந்த கட்டுரைகள்

மேலே