தெளிவிலார் நட்பின் பகைநன்று மற்றில்ல புகழ்தலின் வைதலே நன்று – நாலடியார் 219

நேரிசை வெண்பா

தெளிவிலார் நட்பின் பகைநன்று; சாதல்
விளியா அருநோயின் நன்றால்; - அளிய
இகழ்தலின் கோறல் இனிதே;மற் றில்ல
புகழ்தலின் வைதலே நன்று 219

- நட்பாராய்தல், நாலடியார்

பொருளுரை:

நம்பத் தகாதவரது நட்பைவிட அவரது பகை நலந்தரும்; அரியதும் கொடியதும் ஆகிய தீராத நோயினும் இறத்தல் நலமாகும்; பிறரை நெஞ்சு புண்ணாகும்படி இகழ்தலினும் அவரைக் கொல்லுதல் நல்லது; ஒருவரிடம் இல்லாதன கூறிப் புகழ்தலினும் அவரைப் பழித்தலே நன்மையாம்.

கருத்து:

நம்பிக்கையில்லாதவரிடம் நட்புச் செய்தல் ஆகாது.

விளக்கம்:

தெளிவிலார் பகையினும் நட்பில் இன்னல் மிகுதியாதலின் பகை நன்றென்றார். அவர் நட்பினால் உண்டாகும் மிக்க இன்னலை விளக்கும் பொருட்டுப் பகை நன்றென்றதல்லால் வேறில்லையாகலின், மற்று அத்தகையாரிடம் பகையுமில்லாதிருத்தலே நன்றென்க.

அதிகாரம் நட்பாராய்தலாகலின் ஏனை மூன்றையும் முன்னதற்கு உவமமாக உரைத்தலுமொன்று. வைதலே என்பதன் தேற்றேகாரத்தைப் பகை, சாதல், கோறல் என்பவற்றிற்குங் கூட்டுதல் பொருந்தும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (19-May-22, 8:39 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 20

மேலே