மர்மயோகியின் மர்மம்

எவ்வளவோ முயன்றாலும், வாழ்க்கை என்ற பதத்தை உபயோகிக்காமல் நாம் ஒன்றுமே பேசமுடிவதில்லை, எழுதவும் முடியவில்லை. சும்மா இருந்த சங்கை எடுத்து ஊதியது போல, ஒன்றுமே இல்லாமல் இருந்த இடைவெளியில், எங்கிருந்தோ தோன்றிய அல்லது எங்குமே தோன்றாத எதுவோ ஒன்று , சும்மா டைம் பாசிங் செய்வதற்கு, இந்த விவஸ்தை கெட்ட, தம்பிடிக்கும் உதவாத உலகத்தையும், அதை போல பல மடங்கு எதற்கும் உதவாத பிரபஞ்சத்தையும் உருவாக்கிவிட்டுவிட்டு, இப்போதும், எப்போதும் , ஒன்றும் தெரியாததுபோல் ஊமையாக, எங்கோ அல்லது எங்குமே ஒளிந்துகொண்டு திருதிருவென்று முழித்துக்கொண்டிருக்கிறது என்றுதான் சொல்வேன். இந்த 'ஏதோ' ஒன்றை நான் மர்மயோகி என்று இங்கு குறிப்பிடுகிறேன்.

எவரும் காணமுடியாத, புரிந்துகொள்ளமுடியாத மர்மயோகிக்கு, ஏன் இந்த வீண் வம்பு என்றுதான் தெரியவில்லை. எவன் கேட்டான், "என்னை இந்த உலகத்தில் ஒரு குடிசையில், ஒரு ரயில்வே பிளட்போர்மில், ஒரு பிரசவ ஆஸ்பத்திரியில், ஒரு வீட்டில், ஒரு தெருவில் பிறக்க விடு. கஷ்டமோ நஷ்டமோ நான் பார்த்துக்கொள்கிறேன்." என்று. நாமும் தான் வாழ்நாள் முழுவதும் பார்க்கிறோமே, இந்த பாழாய்ப்போன உலகத்தில் பிறந்து ஒவ்வொருவரும் படும் கஷ்டத்தையும், நஷ்டத்தையும் (உங்களையும் என்னையும் சேர்த்துதான்). சரி, படைத்தாகிவிட்டது. அப்படியேவிட்டிருக்கலாம்.

அப்படியில்லாமல், ஒரு சூரியன், ஒரு சந்திரன், எங்கோ ஆகாயத்திற்கு மேலாக இரவில் மட்டும் நம்மை பார்த்து நக்கலாக சிரித்துவிட்டுப்போகும் கணக்கிலடங்காத, வண்ணத்துப்பூச்சிகள் போன்ற நட்சத்திரங்கள் (இங்கே சினிமா நட்சத்திரங்களுக்கு உள்ள மதிப்பும் மரியாதையும் வானத்தில் சும்மா தோன்றி மறையும் இந்த எண்ணற்ற நட்சத்திரங்களுக்கு இல்லை. ஏனெனில் அவைகளுக்கு நடிக்கத்தெரியாது). இங்குள்ள போலி நட்சத்திரங்களால், மேலேயுள்ள நட்சத்திரங்கள் காலி ஆகிவிட்டது போல தோன்றுவதுதான், இயற்கையான நட்சத்திரங்களுடைய இப்போதைய நிலை.

இவை போதாதென்று, ஒரு பூமி, அதன் மேல் மாமா, மாமி, இவர்கள் கற்பனையில் உருவான சாமி. இவர்கள் எல்லோரும் வாழ்ந்துகொண்டு சாக, நீர் , காற்று , மரம். ஒரு அறிவை குறைவாக பெற்று நிம்மதியாக வாழட்டும் என்று மர்மயோகி உருவாகிவிட்ட விலங்குகள் படும் பாடு, அய்யய்யோ, சொல்லமுடியாது. ஏனெனில், இந்த ஆறறிவுப்படைத்த ஜந்துக்கள், எதையும் விட்டு வைப்பதில்லை. அது மீனாகட்டும், மானாகட்டும், வேறு மிருகமாகட்டும், நீயாகட்டும், நானாகட்டும்). சூரிய ஒளியில் (ஓசியில்தான்) உயிரை வளர்த்து, சந்திரனின் ஒளியை ஓசியில் ரசித்து, கண்ணுக்கு தெரியாமல் ஒளிந்துகொண்டிருந்தாலும், காற்றை தேடிப்பிடித்து, அதை தன்னுள் இழுத்து, அதை மாசுபடுத்தி, வெளியே விட்டு, மரம் செடி கொடிகளை இஷ்டம் போல வளரவிட்டு, பின்னர் அவைகளை அழித்துவிட்டு சும்மா இருந்தாலும் பரவாயில்லை என்றால், அதுவும் இல்லை. போஷாக்கு, உடல் நலம் என்ற பெயரில் கண்ணுக்கு தென்படும் எந்த விலங்கையும், நம்மை போல நடமாடும் ஒரு உயிரை கொள்ளுகிறோம் என்ற எண்ணம் இருப்பினும், அதை கண்டு கொள்ளாமல், கொல்லாமல் விடுவதில்லை. எவ்வளவு
அநியாயம் பார்த்தீர்களா? இதற்கு யார் காரணம்? மேலே சொன்னேனே அந்த ஒன்றும் தெரியாத, யாருக்கும் புரியாத, எவ்வளவு பெரிய டெலெஸ்கோப் கொண்டும் காணமுடியாத, நம்மை வாழ்நாள் முழுவதும், விரல் இல்லாமலே, விரலை விட்டு ஆட்டிக்கொண்டிருக்கிற அந்த மர்மயோகி தான் காரணம் சுற்றி வளைத்து , யார் ஒருத்தர் மீதாவது பழியை போட்டுத்தானே ஆகவேண்டும். பாவம், அந்த மர்மயோகிக்கு நிச்சயம் தெரிந்திருக்காது, இந்த மனித ஜென்மங்கள் ஏதோ அவையாகவே கொஞ்சம் அவைகளை பெருக்கிக்கொண்டு, ஜாலியாக வாழும் என்று நினைத்தது போக,. இப்போது, இவ்வளவு சின்ன பூமியில், 700 கோடிக்கு மேலாக தங்களை பெருக்கிக்கொண்டு (கல்யாணம் என்ற பெயரிலோ அல்லது சேர்ந்து வாழும் முறையிலோ, ஒரு ஆணும் பெண்ணும் அடிக்கும் லூட்டிகள் காரணமாக), நடமாடிக் கொண்டும், ஆடிக்கொண்டும், பாடிக்கொண்டும், தின்றுகொண்டும் (அதிகமாக, பணத்தினை), படுத்துக்கொண்டும், உறங்கிக்கொண்டும் (இதில் சிலர் குறட்டை விட்டுக்கொண்டு), அல்லாடிக்கொண்டும், தள்ளாடிக்கொண்டும், புகைத்துக்கொண்டும், குடித்துக்கொண்டும், பிறரை குற்றம்
சொல்லிக்கொண்டும், பலரை கெடுத்துக்கொண்டும், சிலரை கவிழ்த்துக்கொண்டும், கதை அளந்து கொண்டும், பொழுதுபோகாமல், குறுக்குத்தனமாக செயல்படவைக்கும் செல்போன் போன்ற ஏதாவது ஒரு கிறுக்குத்தனமான செயலிகளை கண்டுபிடித்துக்கொண்டும், பிடித்தவர்களை விட்டுவிட்டு, பிடிக்காதவர் பின்னால் அலைந்துகொண்டும், இன்னொருவரை பற்றி அவருக்கு பின்னால் சொல்லிக்கொண்டும், கிடைத்தவரை லாபம் என்று வாழ்ந்துகொண்டும், மற்றவர்களின் சேமிப்பை வாங்கி அதில் தான் மட்டும் அதிக லாபம் கொள்ளை அடித்துக்கொண்டும், சூதாட்டம், போதை மருந்து போன்ற போக்கற்ற வேலைகளில் ஈடுபட்டுக்கொண்டும், எதுவும் கிடைக்கவில்லை என்றால் மானம், ரோஷம், மரியாதை (அப்படீன்னா என்ன என்று நாமே கூடிய விரைவில் கேட்கப்போகிறோம்) இவைகளை
உதறித்தள்ளிவிட்டு, அடுத்தவரிடம் கேவலமாக கையேந்திக்கொண்டும், நான் சொல்வதுதான் சரி என்று 700 கோடி பேர்களும் சொல்லிக்கொண்டு, தினமும் பல தெரிந்த, தெரியாத லஞ்சம் மற்றும் ஊழல்களை செய்துகொண்டு, படித்தவன் படிக்காதவன், முட்டாள், மேதாவி எல்லோருமே மேற்கூறிய அனைத்து காரியங்களிலும் ஈடுபட்டுக்கொண்டிருக்கும், எல்லாவற்றிற்கும் மேலாக, நல்லது என்ன, கெட்டது என்ன என்பதை மனிதர்களே அவர்களுக்கு தோன்றியது போல் பகுத்துக்கொண்டு, அனைவரும் நேர்வழியில் அன்பும் கருணையும் கொண்டு அனைவருடனும் சகோதரத்துவமுடன் வாழவேண்டும் என்று ஊருக்கு உபதேசம் செய்து கொண்டு, ஆனால், அப்படி செய்கிறோமா என்று கொஞ்சமும் சிந்திக்காமல், பித்து பிடித்ததுபோல், பணம், உணவு, கேளிக்கை இவையே பிரதானம் என்று வாழ்கிற ஒரு மட்டமான உலகமாக, இதை இந்த மனிதன் மாற்றிவிட்டானே என்று அந்த மர்மயோகி தனக்குத்தானே புலம்பிக்கொண்டு தெருத்தெருவாக (எவர் கண்ணிலும் படாமல்) அலைந்துகொண்டு, எப்படி இந்த விவஸ்தைகெட்ட உலகத்தை, ஆதியில் ஒன்றும் இல்லாமல் வெற்றவெளியாக இருந்த ஒன்றாக மீண்டும் மாற்றிவிட்டு, தானும் ஒரேடியாக தப்பித்துக்கொள்ள வேண்டும் என்று
திட்டமிட்டுக்கொண்டிருப்பது, அந்த மர்மயோகியின் PA வுக்கு தெரியாமலா இருக்கும்? (இந்த மர்மயோகியின் PA யார்? அது தான் மர்மம்!!!)

முடிவில், எப்படி தொடங்கினோமோ அப்படியே முடித்துவைப்போம்.
(பணப்பை முடித்து வைப்பதை அல்ல). வாழ்க்கை என்றுதானே
தொடங்கினோம். இப்படியாக இவ்வுலகத்தில் நாம் வாழும் வாழ்க்கை, உண்மையிலேயே நமக்கு மனநிறைவும் மகிழ்ச்சியும் அமைதியும் தருகின்ற வாழ்க்கை தானா, இப்படி பட்ட அர்த்தமற்ற வாழ்க்கைக்கு பதில், உலகமும் அதை சார்ந்துள்ள அண்ட சராசரங்களும் பழையமாதிரி, ஒன்றும் இல்லாத வெற்றிடமாக இருந்துவிட்டால் அதுதான் உருப்படியான காரியமா?

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (19-May-22, 7:39 am)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 26

மேலே