கள்ளத்த வல்ல கருதின் இவைமூன்றும் உள்ளத்த வாக உரை - ஏலாதி 27

நேரிசை வெண்பா

அஃகுநீ செய்ய லெனவறிந் தாராய்ந்தும்
வெஃகல் வெகுடலே தீக்காட்சி - வெஃகுமான்
கள்ளத்த வல்ல கருதின் இவைமூன்றும்
உள்ளத்த வாக உரை 27

- ஏலாதி

பொருளுரை:

பிறர் பொருள்கள் கவர விரும்புதலைக் குறைக்க சினத்தலை நீ விடுக; தீய காட்சிகளைக் காணற்க என்று அறிஞர் சொல்லுதலை எண்ணித் துணிந்தும் அவற்றை விரும்புவானாயின் வெகுளல் முதலிய இம் மூன்று செயல்களும் ஆராயுமிடத்து கரவுடையனவல்ல; உள்ளத்தின் அளவினவாக நீ சொல்வாயாக.

பொழிப்புரை:

வெஃகுதலை யஃகு வெகுடலை நீக்கு, தீக்காட்சியைக் கருதிச் செய்யல் என்றறிந்தான் ஒருவன் சொல்லி, நீடுநின் மனத்தின் கருதற் றொழிலாக வேண்டின் நினையாக் கள்ளத்தனவல்ல.

கருத்து:

சினத்தல் முதலான செயல்களை ஒருவன் தீயவென்று அறிந்துஞ் செய்வனாயின், அவன் அவற்றை ஒரு செயல் முடிதற் பொருட்டுச் செய்கின்றானாதலால் நன்மையாம்.

உள்ளத்தில் அறிந்தே வைத்திருக்கின்றான் என்றும், ஒரேதுவின் பொருட்டே செய்கின்றான் என்றும், எனவே அவை தீயவல்ல என்றுங் கொள்க வென்பது; ஆன்: ஆயின் என்பதன் மரூஉவென்க.

வெகுளலாகாது என்பது முதலான மூன்று கருத்துக்களும் உள்ளத்தின் அளவினவாக உள்ளனவென்று கொள்க.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (18-May-22, 11:56 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 25

சிறந்த கட்டுரைகள்

மேலே