கால மறிதல் கருதுங்காற் றூதுவர்க்கு ஞால மறிந்த புகழ் – ஏலாதி 26

நேரிசை வெண்பா

மாண்டமைந்தா ராய்ந்த மதிவனப்பே வன்கண்மை
ஆண்டமைந்த கல்வியே சொல்லாற்றல் - பூண்டமைந்த
கால மறிதல் கருதுங்காற் றூதுவர்க்கு
ஞால மறிந்த புகழ் 26

- ஏலாதி

பொருளுரை:

ஒழுக்கத்தில் மாட்சிமைப்பட்டு பல நூல்களை ஆராயப்பெற்ற அறிவும், தோற்றப் பொலிவும், பகைவர்க்கு அஞ்சாமையும், பயின்று நிரம்பிய கல்வியறிவும், மாற்றாரையும் வழிப்படுத்துஞ் சொல்வன்மையும் தகுதி பொருந்திய காலமறிதலும் ஆராயுமிடத்து தூதர்களுக்கு உலகறிந்த புகழை விளைப்பனவாம்.

பொழிப்புரை:

மாட்சிமைப் பட்டமைந்து ஆராய்ந்த மதியுடைமையும், தோற்றப் பொலிவுண்டாதலும், தறுகண்மையும், தன்னால் ஆளப்பட்டமைந்த கல்வியுடைமையும், சொல்வன்மையும், பொருந்தியமைந்த காலமறிதலும் எனவிவை ஆராயுங்கால் தூதுவர்க்கு உலகறிந்த புகழாகும்.

கருத்து:

அறிவு அழகு முதலியன தூதுவர்க்கு இயல்பாவனவாம்.

தூதர் இருவகையர்: தாம் வகுத்துச் சொல்வோர், பிறர் சொல்லியதைச் சொல்லுவோர்.

ஞாலம், உயர்ந்தார் மேனின்றது

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (18-May-22, 11:41 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 20

சிறந்த கட்டுரைகள்

மேலே